காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அரசியல் திருவிழாவும் நமது மிட்டாய்க் கடைக்காரர்களும்! 20 நவம்பர் 2007

Filed under: அரசியல் — Puthithu @ 2:40 பிப

color-dot.gifமப்றூக்
rauf-hakeem-00.jpg

திருவிழாக் காலங்களில் நம்மூர்களிலுள்ள மிட்டாய்க் கடைக்காரர்கள் கல்லா நிறையக் காசு பார்ப்பார்கள். வியாபாரம் அப்படி ஓகோ என்றிருக்கும்! அதுபோலத்தான் இந்த வரவு – செலவுத் திட்டமும். சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது திருவிழாக் காலம்தான்!

வடிவேல் பாணியில் ”கௌம்பிட்டாங்கய்யா கௌம்பிட்டாங்க” என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அரசியல் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. யார், எப்போது, எந்தத்தரப்பில் உட்காருவார் என்று எவராலும் கூற முடியாத குழப்ப நிலை!

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக் கிழமையன்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்; ”அதோ வருகிறார்… அதோ வருகிறார்” என்று ஆரவாரத்தோடு சத்தமிட்டார். இதன்போது வாய்மொழி மூலமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல எழுந்து நின்ற அரச தரப்பு அமைச்சர் ஒருவருக்கோ வியர்த்து விருவிருத்து விட்டது. குழம்பிப்போன அவர் அங்குமிங்கும் பதட்டத்தோடு பார்த்ததைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தமது பக்க எம்.பி. எவராவது திரும்பவும் எதிர்க்கட்சிப் பக்கம் போய் அமரப் போகிறாரோ எனும் சந்தேகம்தான் அந்தப் பதட்டத்துக்குக் காரணம்! பின்னர், அது ஐ.தே.க. எம்.பி.யின் தமாஷ் என்று தெரியவர, அமைச்சரின் முகத்தில் கிலோக் கணக்கில் அசடு!

இந்த வேளையில், ஞாயிறு தினக்குரலின் நமது கடந்த வாரக் கட்டுரையில் பா.உ. களின் ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேரம் பேசுதல்கள் நிகழும் என்பதை நாம் தொட்டுக் காட்டியிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

ஆக – இந்தத் திருவிழாக் காலத்தில் நமது முஸ்லிம் பாரளுமன்றப் பிரதிநிதிகளின் சதுரங்க விளையாட்டுக்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்றும், குறிப்பாக முஸ்லிம் காங்கிரசின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதையும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

news-11.jpg
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே, அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து முஸ்லிம் பா.உ. களின் ஆதரவும் கிடைக்கும் என்பது தற்போது உறுதியாகி விட்டது. ஆனால், மு.கா.வின் முடிவுதான் சற்றுத் தளம்பல் நிலையிலுள்ளது. இதுபற்றி மு.கா. என்ன முடிவெடுக்கும் என்பது ஒருபக்கமிருக்க அந்த முடிவுகளின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்!

நமது கடந்த வாரக் கட்டுரையில் மு.காங்கிரஸ் அரசை விட்டு விலகுவதற்கு சாத்தியங்கள் குறைவாகவே இருப்பதாகவும், அவ்வாறு விலகும் போது, அக்கட்சியின் தலைமை எதிர்கொள்ளலாமென நாம் கணிப்பிட்ட சில விடயங்களையும் தெரிவித்திருந்தோம். ஆனால், இப்போது மு.கா. தலைவருக்குச் சாதகமான சில மாற்றங்கள் அரசியலில் நிகழ்ந்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது! சரி, என்னதான் அந்த மாற்றங்கள்? பார்ப்போம்!

ஒலி பெருக்கிப் பாவனைக்கான நேரக் கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டு மீயுயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தடையொன்றைப் பிறப்பித்துள்ளதல்லவா? இதனால், பள்ளிவாசல்களில் அதிகாலை நேரம் சுபஹ் தொழுகைக்கான பாங்கு சொல்லுவதில் பிரச்சினை எழுந்துள்ளது. உண்மையாகவே இந்தத் தடைக்கும் அரசுக்கும் தொடர்பெதுவும் இல்லை. இது நீதித்துறை சார்ந்த நடவடிக்கையாகும்.

இது இவ்வாறிருக்க, ”மஹிந்த அரசு ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்ல முடியாது” என்று கடந்த ஜனாதி தேர்தல் காலத்தின் போது, மு.கா. தலைவர் ஹக்கீம் பாரியதொரு பிரசாரத்தை முஸ்லிம் மக்களிடையே முன்னெடுத்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இப்பிரசாரம் முஸ்லிம் மக்களிடையே ஏதோவொரு வகையில் பாதிப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், குறித்த நீதிமன்றத் தீர்ப்புக்கும், அதற்கு முன்னரான ஹக்கீமின் பிரசாரத்துக்குமிடையே தற்போது முஸ்லிம் மக்களில் பலர் முடிச்சுப் போட்டுப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, இந்த ஒலிபெருக்கிப் பாவனைத் தடை மூலம் முஸ்லிம்களின் சமய நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்றும், எனவே குறித்த சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருமாறும் கோருகின்ற விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் புதன் கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

மட்டுமன்றி, பசு கொல்வதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தண்டம் மற்றும் தண்டனை ஏற்பாடுகளும் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. ஆக – பாங்கு சொல்வதற்கு ஏற்பட்டுள்ள தடை மற்றும் பசு கொல்வதைத் தடுக்கும் ஏற்பாடு என்பதெல்லாம், ஏதோ ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிகழ்சி நிரலின் செயற்பாடுகள் என்றே முஸ்லிம் மக்களில் அதிகமானோர் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

இந்த வேளையில், முஸ்லிம் மக்கள் திருப்தி கொள்ளும் வகையில், குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அரசு விரைவில் வழங்காது போகும் பட்சத்தில், மு.கா. இதைக் காரணமாகக் கூறி, வரவு – செலவுத் திட்டத்தின் போது, அரசாங்கத்திலிருந்து விலகி, ஆளும் தரப்புக்கெதிராக வாக்களிக்கும் தீர்மானமொன்றை மேற்கொள்ளலாம். அதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை! மேலும், முஸ்லிம் சமூகத்துக்காகவும் அதன் நலனைக் கருத்திற் கொண்டுமே இந்த முடிவினைத் தாம் மேற்கொண்டதாக மக்கள் மத்தியில் மு.கா. பிரசாரம் செய்யவும், அதை மக்கள் நம்பவும் கூட நிறையவே வாய்ப்புகளுள்ளன!

ஆக, அரசைப் பழி தீர்க்க இது மு.கா.வுக்கு மிகப் பொருத்தமான சர்ந்தப்பம் என்றே அவதானிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பழி தீர்த்தலால் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழும் என்கின்ற கதைக்கெல்லாம் சாத்தியமேயில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு அரசிலிருந்து விலகும் போது, கட்சியிலிருக்கும் சில பா.உ.கள் தொடர்ந்தும் அரசோடு இணைந்திக்கும் நிலையொன்று தோன்றும் என்றும் நாம் கடந்த வாரம் கூறியிருந்தோம். அவ்வாறு நிகழுமானால் கட்சியின் தலைவர் ஹக்கீம் சூழ்நிலைக்கேற்ப அவ்விடயத்தை நிச்சயமாகக் கையாளத் தொடங்குவார்!

parliament-1.jpg
எவ்வாறெனில், அரசோடு இணைந்திருக்கும் மு.கா.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை சமூக மற்றும் சமயத் துரோகிகள் எனும் தோரணையில் ஹக்கீம் மக்களுக்கு அடையாளம் காட்டுவார்! மட்டுமன்றி, ‘ஒலி பெருக்கிப் பாவனைக் கட்டுப்பாடு மற்றும் பசுமாடு அறுப்பதற்கான தடை ஆகியவைகளை விதித்து, முஸ்லிம்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியுள்ள அரசோடு சேர்ந்திருக்கும் முஸ்லிம் பா.உ. கள் அனைவருமே சமூகத் துரோகிகள்’ என்னும் தோரணையில் மு.கா. தலைவரால் குற்றஞ்சாட்டப் படுவார்கள்! இதன்போது, அரசியல் மற்றும் மத விடயங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படும் நமது மக்கள் ஹக்கீம் தரப்பையே சார்ந்தும் நிற்பார்கள்!

சரி, அரசாங்கத்தை விட்டுப் பிரியும் ஒரு நிலைப்பாட்டை மு.கா. எடுக்குமானல், கட்சியின் பா.உ. களில் யார் யாரெல்லாம் அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவு கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதென பார்ப்போம்!

தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள மு.கா.வின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சருமான பாயிஸ் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு வழங்குவார். அடுத்தவர் பிரதியமைச்சர் நிஜாமுத்தீனாக இருக்கலாம் என்கிறார்கள் நமது அரசியல் ஆருடவியலாளர்கள்! இதற்கான சாத்தியம் பற்றிப் பார்ப்போமா?

மு.கா. சார்பாக 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நிஜாமுத்தீன் போட்டியிட்டார். இருந்த போதிலும் அவரால் பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியவில்லை. பின்னர், அவர் மு.கா.வின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தார். இதன் பிறகு காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தது. இதன்போது நிஜாமுத்தீன் தவிர்ந்த, கட்சியின் பா.உ. கள் எல்லோரும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றனர். இந்தவேளையில் ஹக்கீமால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நிஜாமுத்தீன் அறிக்கைகள் விட்டதும், ஹக்கீமுடன் மோதியதும் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. அதன் பிறகு நிஜாமுத்தீன் பிரதியமைச்சு ஒன்றைப் பெற்றுக் கொண்டார். ஆனாலும், தலைவரை நேரடியாகப் பகைத்துக் கொண்ட காரணத்தால் இவர் பழி தீர்க்கப்படலாம் என்று மு.கா.வின் அடி, முடி அறிந்த ஒருவர் கூறுகிறார்.

இந்தவகையில், அடுத்த தேர்தலொன்று வரும் போது, நிச்சயமாக பிரதியமைச்சர் நிஜாமுத்தீனுக்கு அதில் போட்டியிட மு.கா. தலைவர் சந்தர்ப்பம் வழங்கவே மாட்டார் என்றே உள்ளிருக்கும் பலர் கூறுகின்றனர். இதனால், பாராளுமன்றத்துக்கு இனி தெரிவாகும் சர்ந்தப்பம் இவருக்கு அரிதாகவே காண்படுகிறது. இவைகளை நிஜாமுத்தீனும் நன்கறிவார். எனவே, தொடர்ந்தும் அமைச்சராக இருந்து, தனக்குக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை எல்லா வகையிலும் முழுமையாக பயன்படுத்தவே அவர் விரும்புவார். இந்தவகையில் இவரும் அரசுக்கு ஆதரவு வழங்க நிறைய சாத்தியம் உண்டென்றே கணிப்புகள் கூறுகின்றன.

இவர்கள் தவிர இன்னும் ஒரு சிலர் அரசுடன் ஒட்டுவதற்கான வாய்ப்புக்களும் இல்லாமலில்லை!

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவான மு.கா. உறுப்பினர்கள் எவரும் தலைமைத்துவத்தின் தீர்மானங்களுக்கு எதிராக எந்தவித முடிவினையும் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அவர்களின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிப் போகும் நிலைகளும் ஏற்படலாம். காரணம், மு.கா. சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டதனாலேயே இவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்களே தவிர, இவர்களுடை தனிப்பட்ட மக்கள் செல்வாக்கினால் அல்ல! இதை குறித்த பா.உ. களும் நன்கறிவர்.

முஸ்லிம் காங்கிரசில் பாராளுமன்றம் சென்ற பின்னர் அக்கட்சியை விட்டு விலகி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எவருமில்லை என்பதே இன்று வரையிலான வரலாறாகும்!

இந்த வரலாற்றுக்கு இருவர் மட்டும் விதிவிலக்கு!

ஒருவர் – பேரியல் அஷ்ரப்

அடுத்தவர் – அமைச்சர் அதாஉல்லா!

(இந்தக் கட்டுரையை 18 நொவம்பர் 2007 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் ‘மு.கா.வின் முடிவு என்ன’ எனும் தலைப்பில் காணலாம்)

 

2 Responses to “அரசியல் திருவிழாவும் நமது மிட்டாய்க் கடைக்காரர்களும்!”

  1. மப்றூக்,
    தினக்குரலில் அருமையாக எழுதுகிறீர்கள். உங்களின் தினக்குரல் கட்டுரையை கடந்த சில வாரங்களாக படித்து வருகின்றேன். சளப்பல் இல்லாத நடையினால் அது எனக்கு பிடித்துப் போயிருக்கிறது. ஒரு முறை முரண்பாடுகளின் தொகுப்பு என்னும் தலைப்பில் அரசியல்வாதி ஒருவரிடம் நீங்கள் கண்டிருந்த பேட்டியை அந்த தலைப்புக்காக வாசித்தேன்.

    அதன் பிறகு தொடர்ந்து வாசித்து வருகின்றேன். இருந்தாலும் இறுதி வாரம் சிறிது சுவாரசியம் குறைந்தது போல் தெரிகின்றது. எனவே நீங்கள் ஒவ்வொரு வாரமும் எழுதாமல் விசயம் தட்டுப்படும் போது மாத்திரம் எழுதலாம் என்பது எனது கருத்து.

    உங்களின் கவிதைகளும் நன்றாக இருக்கும் என எனது நண்பர் சொல்லுவார். இனிமேல் தான் அவற்றை படிக்க போகின்றேன். தொடர்ந்து எழுதுங்கள்!

    – கோசலன்-

    //
    நன்றி கோசலன்!
    உண்மைதான், எல்லா வேளைகளிலும் எழுத்து நமக்கு வசப்படுவதில்லை. அதனால், கடந்த வாரக் கட்டுரை அப்படி இருந்திருக்கலாம். அல்லது உங்கள் ரசனைக்கு அது ஈடுகொடுக்காமலிருந்திருக்கலாம்!

    விசயம் கிடைக்கும் போது மட்டும் எழுதுங்கள் என்றீர்கள். நமது அரசியலிலா விசயத்துக்குப் பஞ்சம்?! இருந்தாலும் வலிந்து எழுதுவதை நான் முடிந்தவரை தவிப்பதுண்டு!

  2. saboor Says:

    மப்றூக் நானும் உங்கள் ஆக்கங்களை விடாது படித்து வருபவனும்கூட, இந்த வகையில் என்னைப் பொருத்த மட்டில் விசயம் என்பது அது பலதரப்பட்ட நிலையில் இருக்கும் வாசகர்களை பொருத்து அமைந்து விடும், ஆகவே உங்கள் ஆக்கங்களை இடைவிடாது தர வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

    அரேபியாவிலிருந்து
    சபூர் ஆதம்
    அக்கரைப்பற்று


பின்னூட்டமொன்றை இடுக