காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பலிபீடம்! 29 மார்ச் 2010

Filed under: அரசியல் — Puthithu @ 10:15 பிப

மஹிந்த ராஜபக்ஷ

மப்றூக்

னாதிபதித் தேர்தலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க இரண்டு விதமான மனமாற்றங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் முதலாவது,
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவரும் நல்லதொரு உறவு நிலை. இரண்டாவது, சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டுள்ள பேரினவாதச் சிந்தனைகளாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை – சிறுபான்மையினக் கட்சிகளில் அதிகமானவையும், சிறுபான்மை மக்களில் பெரும்பாலானோரும் ஆதரித்தனர். இதனால், மற்றைய வேட்பாளர் – தனக்கான ஆதரவை பெரும்பான்மையின மக்களிடம் மட்டுமே வேண்டி நிற்க வேண்டிய நிர்ப்பந்த நிலையொன்று ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களும் யார் என்பதை அறுத்து – உரித்துக் கூற வேண்டியில்லை. சிங்கள மக்களின் மேய்பராகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார் என்பதையும், தமிழ் பேசும் மக்களின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் எவர் என்பதையும் நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள்!

இது பௌத்தர்களின் நாடு. பௌத்தர்களை பௌத்தர்களே ஆள வேண்டும். இந்த நாட்டில் கிட்டத்தட்ட 80 வீதமான பௌத்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நமது நாட்டில் ஆட்சியொன்றை அமைப்பதென்றால் தமிழர்களிடமும், முஸ்லிம்களிடமும் பௌத்தர்களாகிய நாம் கையேந்தி நிற்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்”. இவைபோலான இனவாதச் சிந்தனைகளை, போதும் – போதும் என்கிற அளவுக்கு, பௌத்த மக்கள் மத்தியில் சமீப காலமாக – பெரும்பான்மையின அரசியல்வாதிகளில் ஒரு கூட்டம் வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவுகள் பாரதூரமானவை. உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தின் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு சுவரொட்டி முளைத்திருக்கின்றது. அதிலுள்ள வாசகங்கள் உச்சபட்டப் பேரினவாதமாகும். ‘நீலமோ, பச்சையோ, சிவப்போ – இங்கு சிங்களவர்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும், சிங்களவர்களுக்கு மட்டுமே இங்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதே அந்தச் சுவரொட்டி சொல்லுகின்ற சேதியாகும்.

இந்த இடத்தில், இரண்டு கேள்விகளை நாம் முன்வைக்க முடியும்.
01) இதற்கு முன்னர் நமது நாட்டில் பேரினவாதச் சிந்தனைகள் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கவில்லையா?
02) அதேவேளை, தமிழ் – முஸ்லிம் மக்களிடம் இனவாதச் சிந்தனை இல்லையா?

சரத் பொன்சேகா

கால காலமாக பேரினவாதச் சிந்தனைகள் இந்த நாட்டில் இருந்து கொண்டே வருகின்றன. அப்படியில்லையென்றால், 30 வருடகால
ஆயுத முரண்பாடு மற்றும் 1915 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரம் போன்றவைகளெல்லாம் நிகழ்ந்தேயிருக்காது.

ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் இப்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பவை ‘நவீன பேரினவாதச் சிந்தனைகளாகும். அரசியல், சட்டம், மனித உரிமை போன்ற அடையாளங்களினூடாக இந்தச் சிந்தனைகள் தற்போது உருப்பெற்று வருகின்றன. அதேவேளை இந்நவீன பேரினவாதச் சிந்தனைகள் சிங்கள மக்களிடம் மிக மிக நுணுக்கமாகக் கொண்டு சேர்க்கவும் படுகின்றன.

இதேவேளை, தமிழ் – முஸ்லிம் மக்களிடமும் இனவாதச் சிந்தனைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இச் சமூகங்களிடம் இனவாதச் சிந்தனைகள் உருவாகப் பிரதான காரணம் – சிங்களப் பேரினவாதம்தான்.

குறிப்பாக, அரசியல் ரீதியாய் பரப்பிவிடப்பட்டுள்ள சிங்களப் பேரினவாதம் மீது, தமிழ் – முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள பயம்தான் – அவர்களிடையே இனவாதம் தோன்ற முக்கிய காரணமாகும். பேரினவாதங்களால் ஏற்படக் கூடிய ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஆயுதமாக அல்லது அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாகத்தான், தமிழ் – முஸ்லிம் மக்கள் இனவாதத்தை அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக, இந்த நாட்டில் எந்தவொரு இடத்தில் வேண்டுமானாலும், இந்த நாட்டுப் பிரஜையொருவர் வாழ்வதற்கு உரிமையிருக்கிறது. ஆனாலும், யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு தமிழ்ப் பிரதேசத்திலோ, அல்லது அம்பாறை மாவட்திலுள்ள முஸ்லிம் பிரதேசமொன்றிலோ – சிங்களவர்கள் யாராவது குடியேறும்போது, அப்பிரதேச சிறுபான்மையின மக்கள் அச்சம் கொள்கிறார்கள். குறித்த சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்க்கிறார்கள், தேவையாயின் அதனைத் தடுக்க இனவாதம் பேசுகின்றார்கள். இதுதான் இன்றைய
நிலைவரமாகும்.

ஆனால், தமிழ் – முஸ்லிம் மக்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் – சிங்களப் பேரினவாதச் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் மீது, அம்மக்கள் கொண்டுள்ள அச்சமாகும்.

உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 62 ஆயிரம் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள். அப்போது – தமிழ் மக்களின் எண்ணிக்கை 50 ஆயிரம். முஸ்லிம்களின் தொகை 98 ஆயிரமாகும்.

ஆனால், இவ்வினங்களின் மேற்படி தொகைகள் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, பின்வருமாறு மாற்றமடைந்துள்ளன. சிங்களவர்கள் – 02 லட்சத்து 29 ஆயிரம், தமிழர்கள் – 01 லட்சத்து 12 ஆயிரம். முஸ்லிம்கள் – 02 லட்சத்து 69 ஆயிரமாகும்.

அதாஉல்லா

இந்த மாற்றத்தை வேறொரு வகையிலும் சொல்லலாம். அதாவது – 1963 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 29 வீதமாகவும், தமிழர்கள் 23 வீதமாகவும், முஸ்லிம்கள் 46 வீதமாகவும் இருந்தனர். ஆனால் 2007 இல், சிங்களவர்கள் – 37.5 வீதம், தமிழர்கள் – 18 வீதம், முஸ்லிம்கள் 44 வீதமாக மாற்றமடைந்தார்கள்.

சிங்கள மக்களின இந்த இன அதிகரிப்புக்குக் காரணம், அரசியல் ரீதியாக, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட – திட்டமிட்ட கள்ளக் குடியேற்றங்களாகும். இதனால், இன்று தமிழர்களின் இனவீதாசாரம் வீழ்ச்சிடைந்துள்ளது. முஸ்லிம்களின் பெரும்பான்மையை – சிங்களவர்கள் முந்தக் கூடியதொரு சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலைவரமானது, அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களில் வீழ்சியை ஏற்படுத்தக் கூடியதொரு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விகிதாசாரத் தேர்தல் முறைமையின் அடிப்படையில், சிங்களப் பிரதிநிதித்துவங்கள் அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கப் போகின்றன.

நவீன பேரினவாதச் சிந்தனையும், அதன் விளைவுகளும் – நாளடைவில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்நிலையை ஏற்படுத்தி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பௌத்த பேரினவாதத்தின் நவீன கொள்கை வகுப்பாளர்களான பற்றாலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் ‘பௌத்த பெருந்தேசியவாதக் கனவு – இவ்வாறானதொரு நிலைவரத்தை நாடு முழுவதும் உருவாக்கி விடுவதே ஆகும்.

இவ்வாறான தமது பேரினவாதச் சிந்தனைகளைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான், சிறுபான்மை அரசியல்வாதிகளை இன்று சிங்களப் பெருந்தேசியவாதிகள் பிரித்து வைத்து சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் – எப்படியாவது – தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, அமைச்சர் அதாஉல்லா – ஆளுந்தரப்பின் வெற்றிலைச் சின்னத்தோடு இணைந்தார். அதற்குப் பகரமாக, தனக்கு 03 வேட்பாளர்களை களமிறக்குவதற்குச் சந்தர்பம் தர வேண்டும் என்று ஜனாதிபதியைக் கேட்டார். நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு, அந்தச் சந்தர்ப்பம் அதாஉல்லாவுக்குக் கிடைத்தது.

வெற்றிலைச் சின்னத்தில் அம்பாறை மாவட்டம் சார்பாக தன்னுடன் இன்னும் இருவரைச் சேர்ந்துக் கொண்டு மூவராகக் களமிறங்குவது. மூவரும் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களின் அனைத்து வாக்குகளையும் சேர்த்துப் பொறுக்குவது. அதன் மூலமாக எப்படியாவது – தான் மட்டுமேனும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விடுவது. இதுவே, அமைச்சர் அதாஉல்லாவின் கணக்காகும்.

பேரியல் அஷ்ரப்

ஆனால், இந்தக் கணக்கில் மண்ணை வாரிக் கொட்டினார் ஜனாதிபதி
ராஜபக்ஷ! தன்னுடைய நுஆ கட்சியைக் கையிழந்து விட்டு, சுதந்திரக்
கட்சியில் போய்ச் சேர்ந்த அமைச்சர் பேரியல் அஷ்ரப்புக்கும், மற்றுமொரு கட்சி மாறியான – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நௌசாத்துக்கும் – இரண்டு ‘டிக்கட்’களைக் கொடுத்து, அம்பாறையில் போட்டியிடுமாறு அனுப்பி வைத்திருக்கின்றார். இதனால், வெற்றிலை சார்பான முஸ்லிம் வேட்பாளர்களின் தொகை அம்பாறையில் 05 ஆகியிருக்கிறது.

இந்நிலை, அதாஉல்லாவுக்குப் பேரிடி! அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வெற்றிலைக்கான வாக்குகள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 50 ஆயிரத்தைத் தாண்டாது. இந்த 50 ஆயிரமும், 05 வேட்பாளர்களிடையேயும் சிக்கிச் சின்னா பின்னா பின்னமடையப் போகின்றன. காரணம், விருப்பு வாக்குப் போட்டி! ஆக, குரங்கு அப்பம் பிரித்த கதைதான்!

நவீன சிங்களப் பேரினவாதம் – இப்படி ஆயிரமாயிரம் இழப்புக்களை சிறுபான்மையினரிடையே ஏற்படுத்தித்தான் வருகிறது. ஆனால், நமது அரசியல்வாதிகளோ, தங்கள் சின்னத்தனங்களுக்காக, சமூகத்தின் நலன்கள் அனைத்தையும் பலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

(இந்தக் கட்டுரையை  28 மார்ச் 2010 ஆம் திகதிய ஞாயிறு சுடர் ஒளி  பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

 

பின்னூட்டமொன்றை இடுக