காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மேய்ப்பர்களின் கூத்துமேடை! 24 மார்ச் 2014

Filed under: அரசியல் — Mabrook @ 11:09 முப

color-dotமப்றூக்

Voting‘நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்’ என்பார்கள். ஆனால், சிலர் வேஷம் போடாமலேயே குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் குரைப்பதற்காகவே நாய் வேஷங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இந்த வேஷங்களை நிஜம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். வேறுசிலர் – நமது வீடுகளைக் காப்பதற்காகவே, இந்த ‘நாய்’கள் குரைத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், நாடகம் முடியும் போது, தமது வேஷங்களை இந்த ‘நாய்கள்’ கலைத்து விட்டு, குரைப்பதை நிறுத்தி விடும் என்பதுதான் இங்குள்ள பெரும் உண்மையாகும்.

தென் மாகாண சபையை விடவுவும் மேல் மாகாணசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு முஸ்லிம், தமிழ் மக்களும் செறிவாக வாழுகின்றமையினால், மேல் மாகாணமானது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஆடுகளமாகவும் மாறியிருக்கிறது.

இதில் புதினம் என்னவென்றால், அரசோடு இணைந்து கூட்டுக் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்ற பல கட்சிகள் இந்தத் தேர்தல்களில் தமது சொந்தச் சின்னத்தில் – தனித்துப் போட்டியிடுகின்றன. குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் இ.தொ.காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்துக் களமிறங்கியுள்ளன. இதிலும், றிசாத்தின் கட்சி – முதன் முதலாக தமது மயில் சின்னத்தில் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது.

மேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை சேகரிப்பதற்கு இரண்டு விதமான திட்டத்தினை அரசாங்கம் வகுத்திருக்கிறது.

முதலாவது திட்டம்: தமது வெற்றிலைச் சின்னத்தில் முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்குவது. இதன் மூலம், அரசுக்கு ஆதரவான முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று விடமுடியும்.

இரண்டாவது திட்டம்: தமது கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சிகளைத் தனித்துப் போட்டியிடுமாறு களத்தில் இறக்கி விடுவது. இதன் மூலம், அரசுக்கு எதிரான முஸ்லிம்களின் வாக்குகளையும், ஐ.தே.கட்சிக்கு ஆதரவான முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்றுக் கொள்வதாகும்.

இரண்டாவது திட்டத்தின்படி களமிறக்கப்பட்ட கட்சிகளிலொன்று – றிசாத் பதியுத்தீனின் அ.இ.மக்கள் காங்கிரசாகும். மேல் மாகாணத்தில் றிசாத்தின் கட்சிக்கு ஏதாவது ஆசனங்கள் கிடைத்தால், வழமைபோல் அவை அரசுக்குத் தாரை வார்க்கப்படும்.

முஸ்லிம் காங்கிரசும் இந்தத் ‘தாரை வார்க்கும்’ வேலையைத்தான் கடைசியில் செய்யும் என்பது பலரின் அனுமானமாகும். மேல் மாகாண சபைத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுகிறது. ஆட்சியாளர்களை ‘தூள்’ பறக்கும் வகையில் விமர்சிக்கிறது. அதன் மூலம் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளவும் கூடும். ஆனால், கடைசியில் தாம் பெற்றுக் கொண்ட ஆசனங்களை எடுத்துக் கொண்டுபோய், அரசோடுதான் மு.கா. சங்கமித்து விடும் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. ஏனெனில், Rishad 001கிழக்கு மாகாணசபையிலும் மு.கா. இதைத்தான் செய்தது.

கிழக்கு மாகாணசபைக்கான பிரசாரக் கூட்டங்களில், ஆட்சியாளர்களையும், இந்த அரசையும் மு.கா. தலைவர் மிகவும் கேவலமாக விமர்சித்தார். தம்புள்ளை பள்ளி உடைப்பு விவகாரத்தினைத்தான் தேர்தல் பிரசாரத்தின் பிரதான பேசுபொருளாக்கினார். இதனால், உணச்சிவசப்பட்ட மக்களில் கணிசமானோர் மு.கா.வுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இதன் மூலம் 07 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட மு.காங்கிரஸ் – கடைசியில், அரசோடு இணைந்து ஆட்சியமைத்தது.

மேல் மாகாணசபையிலும் இதுதான் நடக்கும். கடந்த மேல் மாகாணசபையில் இருந்த மு.கா.வின் இரண்டு உறுப்பினர்களும் – அரசின் ‘தலையாட்டி பொம்மைகளாவே’ செயற்பட்டனர். 13 ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்கிற பிரேரணையானது, மேல் மாகாணசபையில் கொண்டுவரப்பட்டபோது கூட, மு.கா.வின் இரண்டு உறுப்பினர்களும் அதனை ஆதரித்தே கைகளை உயர்த்தியிருந்தனர் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

ஆக, இம்முறையும் – மேல் மாகாணத்தில் மு.கா. பெற்றுக் கொள்ளும் ஆசனம் அல்லது ஆசனங்கள் ஆளுந்தரப்புக்கே விலைபேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னொருபுறம் அரசைத் திட்டித் தீர்த்து, ஆட்சியாளர்களை விமர்சித்தால்தான் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஆட்சிக்குள்ளிருப்பவர்களான மு.கா. தலைவர் ஹக்கீம், மயில் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் போன்றோர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். அந்தவகையில், மு.கா. தலைவர் ஹக்கீம் தனது தேர்தல் பிரசார உரைகளிலெல்லாம் – அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றமையை நாம் அறிவோம். இப்போது, போட்டிக்கு அமைச்சர் றிசாத்தும் ஆட்சியாளர்களை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்.

அதாவது, ‘அரசும், ஆட்சியாளர்களும் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், அதன் காரணமாகவே மேல் மாகாணசபைத் தேர்தலில் தாம் தனித்துப் போட்டியிடுவதாகவும்’ அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்திருக்கின்றார். இதில் உச்சகட்டப் பகிடி என்னவென்றால், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தாங்கள் தனித்துத்தான் போட்டியிடவுள்ளதாகவும் றிசாத் கூறியிருக்கிறார்.

றிஸாத்தை அப்படி என்னதான் ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள்? அவரே விளக்கமளிக்கிறார். ‘அதாவது, கிழக்கு மாகாணசபையில் அமீரலிக்கு முதலமைச்சர் பதவியை வழங்குமாறு ஆட்சியாளர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை. இதுதொடர்பில் அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் எங்களிடம் பேசினார்கள். கிழக்கு  முதலமைச்சர் பதவியில்லாது போனாலும், அமீரலியை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்கி, அப்படியே அவரை பிரதியமைச்சராக்குவதாக மேற்படி அமைச்சர்கள் வாக்குறுதியளித்தனர். ஆனால், இதுவரை அவர்கள் – அதனை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றி விட்டனர்’ என்கிறார் அமைச்சர் றிசாத் பதியுத்தீன்.

அரசு தம்மை ஏமாற்றி விட்டதாக றிசாத் கூறியதும், ஏதாவது  சமூகப் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில்தான் – றிசாத்தை hakeem 8ஆட்சியாளர்கள் நம்ப வைத்து ‘கழுத்தறுத்து’ விட்டனரோ என்று ஆரம்பத்தில் எண்ணியிருப்பீர்கள். ஆனால், அமீரலி என்கிற தனிநபரொருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், கூடவே பிரதியமைச்சுப் பதவியும் கொடுக்கவில்லை என்பதுதான் றிசாத் அணியினருக்கு ஆட்சியாளர்கள் செய்த ‘துரோகம்’ ஆகும். இத்தனைக்கும், அமீரலி கிழக்கு மாகாணசபையில் உறுப்பினராக இருக்கின்றார். அதில் இருந்துகொண்டே – றிசாத் மற்றும் ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களுக்கு எவ்வளவோ சேவைகளைச் செய்ய முடியும். ஆனால், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள்தான் தேவையாக இருக்கின்றன.

‘ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றி விட்டமையினால்தான் நாங்கள் – மேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்’ என்று றிசாத் கூறுகின்றமையானது, காதில் பூச்சுற்றும் கதையாகும். ஆட்சியாளர்கள் ஏமாற்றியிருந்தால், அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமாக இருந்திருந்தால், வடக்கு மாகாணசபைத் தேர்தலிலேயே றிசாத் அணியினர் தனித்துப் போட்டியிட்டு, தமது அதிருப்தியை அரசுக்குத் தெரிவித்திருக்க முடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு, இவ்வாறான கதையளப்பதன் மூலம் – தங்கள் கோமாளித்தனத்தினை அவர்களாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொருபுறம், இந்த அரசையும் – ஆட்சியாளர்களையும் மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றார். மு.கா. நினைத்தால்தான் அடுத்தமுறை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆக முடியும் என்கிறார். மு.காவை அரசிலிருந்து வேண்டுமானால் விலக்கி விடுங்கள் என்று ஆட்சியாளர்களுக்கு ஒருவிதமான மறைமுக சவாலினை விடுக்கின்றார். அப்படி மத்திய அரசிலிருந்து ஆட்சியாளர்கள் எங்களை வெளியேற்றி விட்டால், கிழக்கு மாகாணத்தில் அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்து வரும் ஆதரவினை விலக்கிக் கொள்ள நேரிடும் என்று ஆட்சியாளர்களை பயம் காட்டிவருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில், மு.கா. தலைவரின் கருத்துகளுக்கு மாற்றமாகவும், அவற்றினை மறுதலிக்கும் வகையிலும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது – கட்சிக்குள்ளும் வெளியிலும் அதிர்வுகளையும், அதிருப்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹாபிஸ் நஸீர் அப்படி என்னதான் சொன்னார்? ‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அரசாங்கத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது. அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்கிற நோக்கம் மு.கா.வுக்குக் கிடையாது.  அரசிலிருந்து மு.கா.வை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணமும் அரசாங்கத்துக்கும் கிடையாது’ என்று ஹாபிஸ் நஸீர் கூறியிருக்கின்றார்.

பிரச்சினை இங்குதான் எழுகிறது. அது என்ன பிரச்சனை? அதை விளங்கப்படுத்துவதென்றால் உங்களை 1992 ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. பிரதம அதிதியாக அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ வருகை தந்திருந்தார். மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் விசேட அதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், அஷ்ரப் உரையாற்றினார். Ameer aliஅதன்போது ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவை குறிப்பிட்டு அஷ்ரப் இவ்வாறு கூறினார். ‘ஜனாதிபதி பிரேமதாஸ நல்லவர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடும்போது, முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவு வழங்கும். மேலும், மீண்டும் நீங்கள் ஜனாதிபதியாக வெற்றிபெற வேண்டுமென்று எனது சார்பிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ என்றார்.

அஷ்ரப்பின் இந்தக் கூற்றானது, கட்சிக்குள் அப்போது விமர்சனத்துக்குள்ளாகத் தொடங்கியது. எனவே, இவ்விடயம் குறித்து மு.கா.வின் அப்போதை தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை வழங்கினார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அடுத்த முறையும் பிரேமதாஸ ஜனாபதியாக வரவேண்டுமென அஷ்ரப் கூறிய விடயமானது, முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு அல்ல. ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. அரசியலைப் பொறுத்தவரை 02 வருடங்கள் என்பது மிக நீண்ட தூரமாகும். எனவே, அந்தவேளை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்போது, முஸ்லிம்களுக்கு யார் அதிக நன்மை செய்வார்களோ, அவர்களில் ஒருவரைத்தான் மு.காங்கிரஸ் ஆதரிக்கும். அதற்கு முன்னர் இவ்வாறானதொரு முடிவை அறிவிப்பதற்கு மு.காங்கிரஸ் பருவமுறாத கட்சியல்ல. மேலும், அஷ்ரப் அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால், அது அவருடைய தற்சமயத்து ஆசைகளின் எதிரொலி என்று எடுத்துக் கொள்வதே சிலாக்கியமானதாகும்’.

மு.கா.வின் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் இவ்வாறானதொரு அறிக்கையினை வெளியிட்டமையினையடுத்து, அஷ்ரப்புக்கும் சேகுவுக்குமிடையில் ‘போர்’ மூண்டமை பற்றியும், இறுதியில், தவிசாளர் சேகுவை – தலைவர் அஷ்ரப் கட்சியிலிருந்து வெளியேற்றியமை குறித்தும் நீங்கள் அறிவீர்கள்.

சேகு – அஷ்ரப் விவகாரத்தில் உண்மையாக, சேகு இஸ்ஸதீன் பக்கமே நியாயமிருந்தது. ஆனாலும், அஷ்ரப்பினால், சேகு அநியாமாகத் தண்டிக்கப்பட்டார் என்பது – வேறு கதை.

சரி, இப்போது சமகாலத்துக்கு வருவோம். மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது சிறுபான்மையினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சியாளர்களின் நிழல்களில் வசித்து வருகின்ற பௌத்த பேரினவாதக் கும்பல்கள்தான், முஸ்லிம்களின் பள்ளிவாயில்களைத் தாக்கி வருகின்றனர் என்கிற பகிரங்க விமர்சனங்களும் இருந்து வருகின்றன. இதனால், மஹிந்த அரசை விமர்சித்தால்தான் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற முடிவுக்கு – றிசாத் போன்றவர்களே வந்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், ‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்’ என மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்திருப்பதானது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்’ என ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளமையானது மு.காங்கிரசின் நிலைபாடா? அல்லது ஹாபிஸ் நஸீருடைய நிலைப்பாடா? என்பதை மு.காங்கிரஸ் தெளிவுபடுத்துதல் வேண்டும். ஹாபிஸ் நஸீன் இந்தக் கூற்று மு.கா.வின் நிலைப்பாடுதான் என்றால், அவ்வாறானதொரு முடிவுக்கு வரும் முன்னர் – மு.காங்கிரஸ் தனது உயர்பீடத்தினை அழைத்து தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அந்தவகையில் பார்த்தால், ‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்’ என்பது ஹாபிஸ் நஸீருடைய தற்சமயத்து ஆசைகளின் எதிரொலி போலவே தெரிகிறது.

எனவே, கட்சியின் தீர்மானமின்றி இவ்வாறானதொரு அறிவிப்பினை பகிரங்கமாக வெளியிட்ட மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் மீது, மு.கா. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கட்சியின் மூத்த உயர்பீட உறுப்பினரொருவர்.

Hafees‘தண்ணிக்கொரு பக்கமும், தவிட்டுக்கொரு பக்கமுமாக’ மு.கா.வின் தலைவரும் – பிரதித் தலைவரும் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் இழுத்துக் கொண்டு திரிவதென்பது ஏமாற்று வேலையாகும். சிலவேளை, நான் ஆட்சியாளர்களை ஏசுகிற மாதிரி ஏசுகின்றேன், நீங்கள் தடவிக் கொடுங்கள் என்று, பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் போன்றவர்களிடம் மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லிருக்கவும் கூடும். நடப்பவற்றினைப் பார்க்கும்போது, ஏராளமானவை நாடகங்கள் போலவே தெரிகின்றன.

அரசியல் என்பது தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்தான் உணர்வுபூர்வமான விடயமாகும். அரசியல்வாதிகளுக்கு அது லாபம் தரும் வியாபாரமாகும்.

ஒரு சில்லறைக் கடை வியாபாரத்தினை நடத்துவதற்குக் கூட – உற்பத்தியாளர், மொத்த வியாபாரி, இடைத்தரகர் என்று ஆயிரத்தெட்டுத் தரப்பார் தேவையாக உள்ளபோது, அரசியலை நடத்துவதற்கு ஹக்கீமுக்கு மஹிந்தவும், றிசாத்துக்கு அதாஉல்லாவும், ஹிஸ்புல்லாவுக்கு ஹக்கீமும் தேவையாக இருக்கின்றனர்.

நாடகம் என்று வரும்போது, தங்களுக்கான வேஷங்களைப் போட்டுக் கொண்டு, ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ‘குரைத்து’க் கொண்ருக்கின்றார்கள். அதனை சண்டையென தொண்டர்கள் நம்பி விடுகின்றார்கள்.

ஆனால், நாடகம் நிறைவடைந்ததும் தங்கள் வேஷங்களைக் கழற்றியெறிந்துவிட்டு, திரைகளுக்குப் பின்னால், இவர்கள் கட்டித் தழுவிக் கொண்டிருப்பது பற்றி – பார்வையாளர்களில் பலருக்குத் தெரிவதில்லை!

(இந்தக் கட்டுரையை 20 மார்ச் 2014 அன்றைய விடிவெள்ளி பத்திரிகையிலும்,  http://www.vidivelli.lk/epaper/20-03-2014/Page09.html எனும் விடிவெள்ளி ஈபத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s