காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மந்தையிலிருந்து விலகும் ஆடுகள்! 16 மார்ச் 2014

Filed under: அரசியல் — Mabrook @ 10:06 முப

color-dot மப்றூக்

‘ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்போது மந்தையிலிருந்து

Ziras - 001

சிராஸ்

விலகிக் கொள்கின்றன’ என்பது கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற வாசகமாகும்.

அண்மைக் காலமாக, அரசியல் கட்சிகள் என்கிற மந்தைகளிலிருந்து சில ஆடுகள் அடுக்கடுக்காக விலகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவ்வாறு மந்தைகளிலிருந்து விலகும் ஆடுகள் – உண்மையாகவே, தம்மை ஆடுகள் என்பதை உணர்ந்து கொண்டனவா என்று புரியவில்லை. ஏனெனில், தாங்கள் ‘யார்’ என்பதை உணர்ந்து கொண்டு, மந்தையிலிருந்து வெளியேறும் ஆடுகள் – இன்னுமொரு மந்தைக் கூட்டத்துடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியங்கள் குறைந்ததொரு செயற்பாடாகும்.

இருந்தபோதும், கடந்த வாரங்களில் தேசிய காங்கிரசிலிருந்து விலகிக் கொண்ட கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார். அ.இ.மக்கள் காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுத்தீன் மீளவும் தன்னுடைய தாய்க்கட்சியான மு.கா.வோடு சங்கமித்துள்ளார். மு.காங்கிரசிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் – அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், இந்த ஆடுகளின் ஆசைகளும், அவாக்களும் – அவை இருந்த கூட்டத்தில் நிறைவு செய்யப்படாமை காரணமாகவே, தத்தமது மந்தைகளிலிருந்து விலகிக் கொள்கின்றன. தாம் எதிர்பார்க்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான், இந்த ஆடுகள், மற்றைய மந்தைக் கூட்டத்தில் போய்ச் சேர்கின்றன.

சரியாகச் சொன்னால், இக்கரையிலிருக்கும் ஒவ்வொரு ஆடும் – அக்கரையைப் பச்சையாகவே பார்க்கிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால், எந்தக்கரையும் பச்சையில்லை.

அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசின் முக்கிஸ்தராக இருந்த – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் – சில வருடங்களாகவே அதாஉல்லாவால் ஒதுக்கப்பட்டார். அவமானப்படும் வகையில் நடத்தப்பட்டார். அந்த ஆத்திரமும் ஆக்ரோசமும்தான் – பாயிஸை மு.கா.வில் இணைத்து விட்டிருக்கிறது.

ஆனால், முன்னாள் பிரதியமைச்சர் நிஜாமுத்தீனின் கதை வேறு. இவர் – அரசியலின் நெளிவு சுழிவு தெரியாத மனிதர். முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்தவர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும், அந்தமுறை நிஜாமுத்தீனை மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்கிப் பார்த்தது.

ஆனால், 2007 ஆம் ஆண்டு அரசாங்கத்தோடு இணைந்திருந்த மு.காங்கிரஸ் எதிரணிக்கு மாறிய போது, நிஜாமுத்தீன் தனது கட்சியின் தீர்மானத்துக்கு மாறு செய்தார். ஆட்சியில் பிரதியமைச்சராக தொடர்ந்திருந்தார். பின்னர், அந்தப் பாராளுமன்ற காலம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடைய கட்சியில் நிஜாமுத்தீன் இணைந்தார். திரும்பவும் ஒரு தடவை பாராளுமன்ற உறுப்பினராகிப் பார்க்கலாமென்று தலைகீழாக நின்று பார்த்தார் – பலிக்கவில்லை. இறுதியாக, கடந்த பொதுத் தேர்தலின்போது, கேகாலை மாவட்டத்தில் அரசின் வெற்றிலைச் சின்னம் சார்பாகப் போட்டியிட்டுத் தோற்றுப்போய் – அரசியல் ஜோக்கராகிப் போனார்.

மஹிந்த அரசிலிருந்து 2007 ஆம் ஆண்டு மு.காங்கிரஸ் வெளியேறியபோது, நிஜாமுத்தீனும் கட்சியின் கூடவே எதிரணிக்குப் போயிருந்தால் – மு.கா.வில் நிஜாமுத்தீன் இன்றுவரை ஒரு செல்வாக்குமிகுந்த நபராக இருந்திருப்பார்.

ஆனால், அரசியலில் தன

HMM. Fais

பாயிஸ் மற்றும் ஹக்கீம்

க்கிருந்த எல்லா சந்தர்ப்பங்களையும் இழந்த நிலையில், நிஜாமுத்தீன் மு.காங்கிரசிடம் தற்போது சரணடைந்துள்ளார். மு.காங்கிரசில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு நிஜாமுத்தீன் கொடுத்த தொந்தரவினைத் தாங்க முடியாத நிலையில்தான், அவரை – ஹக்கீம் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்று, மு.கா.வின் முக்கியஸ்தரொருவர் நம்மிடம் கூறினார். கட்சியில் பதவிகள் கேட்கக் கூடாது, தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு தொல்லைபடுத்தக் கூடாது என்கிற உறுதிமொழிகளையெல்லாம் நிஜாமுத்தீனிடம் கட்சித் தலைமை பெற்றுக் கொண்ட பின்னர்தான் – அவரை மு.கா.வில் இணைத்துக் கொள்வதற்கு சம்மதித்ததாக அறிய முடிகிறது.

‘முதலில் கட்சியில் இணைந்து கொள்வோம், பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டு – மு.கா. தலைமையின் நிபந்தனைகளுக்கெல்லாம் நிஜாமுத்தீன் தலையை ஆட்டியிருக்கக் கூடும். ஆனால், அந்தப் பருப்பு மு.கா. தலைவர் ஹக்கீமிடம் வேகாது.

மு.காங்கிரஸில் ஹக்கீமை விடவும், நிஜாமுத்தீன் சிரேஷ்டமானவர். நிஜாமுத்தீனுக்குத் தெரிந்த கட்சியின் வரலாறு ஹக்கீமுக்குத் தெரியாது. இதுவே – நிஜாமுத்தீனை ஹக்கீம் ஓரங்கட்டுவதற்குப் போதுமானதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், மீளவும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டபோதும் இதுவே நடந்தது. சேகு இஸ்ஸதீன் என்பவர் – முஸ்லிம் காங்கிரசில் மறைந்த தலைவர் அஷ்ரஃப்புக்கு சமனாகவும் – சமாந்தரமாகவும் கட்சியின் ஆதரவாளர்களால் மதிக்கப்பட்டவர். அஷ்ரஃப் அவர்களுக்கும் – சேகு இஸ்ஸதீனுக்குமிடையிலான கருத்து முரண்பாடு காரணமாக, மு.கா.விலிருந்து சேகு இஸ்ஸதீனை அஷ்ரப் விலக்கிய கதையெல்லாம் நாம் அறிவோம்.

இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர், சேகு இஸ்ஸதீன் மு.கா.வில் மீளவும் இணைந்து கொண்டபோதும், அவருக்கான எவ்வித அந்தஷ்த்தினையும் கட்சிக்குள் ஹக்கீம் வழங்கவில்லை. இஸ்ஸதீன் போன்ற ஜாம்பவான்கள் மு.கா.வுக்குள் தலையெடுத்தால், தனக்கும் தனது தலைமைப் பதவிக்கும் ஆபத்து நேர்ந்துவிடும் என்கிற அச்சம் ஹக்கீமுக்குள் இருப்பதாக கட்சிக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். மு.கா.வில் சேகு இஸ்ஸதீன் இப்போது இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.

கட்சியின் ஸ்தாபகத் தவிசாளருக்கே இந்த நிலையென்றால், நிஜாமுத்தீன் பாவம். முஸ்லிம் காங்கிரசில், அவர் – இலவு காத்த கிளியாக இருந்திருந்து பார்ப்பார். ஓன்றுமே ஆகாது. பிறகென்ன, ஆடு – வேறொரு மந்தையைத் தேடிச் செல்லத் துவங்கும்.

மந்தைகளிலிருந்து பிரியும் ஆடுகளின் கதைகள் அநேகமாக இப்படித்தான் இருக்கின்றன.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசியலில் இவர் கற்றுக் குட்டியாகக் குதித்தவர். மு.காங்கிரசில் இவருக்கிருந்த அடையாளத்தை இப்போது தொலைத்து விட்டு நிற்கின்றார். சிராஸ் – தன்னுடைய அரசியல் வாழ்வில் எடுத்த இரண்டு சமயோகிதமற்ற முடிவுகள்தான் அவரை இன்றைய நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது. அவை;

1.    கல்முனை மாநகரசபையின் மேயர் பதிவியை பங்குபோடுவற்கு சம்மதித்தமை.
2.    பங்கு போடுவதற்குச் சம்மதித்த மேயர் பதவியை – ராஜிநாமாச் செய்து கொடுப்பதற்கு, முதலில் மறுத்தமையும், அதற்காக அவர் நடத்திய கூத்துக்களும்.

இந்த இரண்டு விடயங்களிலும், அரசியல் நெளிவு சுழிவுடன் சிராஸ் நடந்திருந்தால், மு.கா.வுக்குள் அவரின் எதிர்காலம் ஒளிமயமானதாகவே இருந்திருக்கும்.

Nijamudeen - 002

எஸ். நிஜாமுத்தீன்

ஆனாலும், சிராஸுக்கு அதன் பின்னர் நடந்த கதை என்ன என்று நாம் அறிவோம். மேயர் பதவியிலிருந்து சிராஸ் ராஜிநாமாச் செய்தால், பலவிதமான வரப்பிரசாதங்களை வழங்குவதாக மு.கா. தலைவர் ஹக்கீம் சிராஸுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், ஹக்கீம் அவற்றினை கடைசிவரை நிறைவேற்றவில்லை என்றும், ஆகக்குறைந்தது, கல்முனை மாநகரசபையின் பிரதி மேயராகக்கூட தன்னை நியமிக்கவில்லை எனவும் சிராஸ் குறைபட்டுக் கொள்கிறார்.

இவ்வாறானதொரு நிலையில்தான், மு.காங்கிரசிலிருந்து – தான் விலகிக் கொள்ளப்போவதாக, சிராஸ் அறிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசில் சிராஸ் இணையவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சிராஸ் – சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். சாய்ந்தமருதுப் பிரதேசம் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ளது. கல்முனைத் தொகுதி என்பது மு.காங்கிரசின் கோட்டையாகும். மு.காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில், அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியில் இணைந்துகொண்டு, கல்முனைத் தொகுதிக்குள் சிராஸால் வெற்றிகரமானதொரு அரசியலைச் செய்ய முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம்தான்.

சாய்ந்தமருதுப் பிரதேசமானது கல்முனை மாநகர சபைக்கு உட்பட்டதாகும். ஆனாலும், சாய்ந்தமருது மக்கள் தமக்கென தனியான உள்ளுராட்சி சபையொன்றினை நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர். இந்த நிலையில்தான் – சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ், கல்முனை மாநகரசபையின் மேயரானார். இதனால், சாய்ந்தமருது மக்கள் – அரசியல் ரீதியாக ஓரளவு ஆறுதலடைந்தனர். தமது பிரதேசத்துக்கு தனியானதொரு உள்ளுராட்சி சபை கிடைக்கவில்லை என்றாலும், தமது ஊரைச் சேர்ந்த ஒருவர் – கல்முனை மாநகரசபையின் மேயராகப் பதவி வகிக்கின்றார் என்பதுதான், அந்த ஆறுதலுக்கான காரணமாகும்.

ஆனால், சிராஸின் மேயர் பதவியை இடைநடுவில் எடுத்துக் கொண்டமையானது, சாய்ந்தமருது மக்களுக்கு கடுமையானதொரு ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்ச வாக்குகளால் தாம் தெரிவு செய்த மேயர் பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தட்டிப்பறித்தெடுத்து விட்டதாக சாய்ந்தமருது மக்களில் கணிசமானோர் நம்புகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான் சிராஸுடைய அரசியல் கட்சி மாற்றம் நிகழவுள்ளது.

அமைச்சர் அதாஉல்லா – உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சராக பதவி வகிக்கின்றார். அதாஉல்லாவுடன் சிராஸ் இணையும் பொருட்டு, சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது. அவற்றில் முதன்மையானது, சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு தனியானதொரு உள்ளுராட்சி சபையொன்றினை உருவாக்கித்தர வேண்டும் என்பதாகும்.

இதை நிறைவேற்றிக் கொடுப்பதென்பது அமைச்சர் அதாஉல்லாவுக்கு சிரமமானதொரு காரியமாக இருக்காது. அவ்வாறு சாய்ந்தமருதுக்கென தனியானதொரு உள்ளுராட்சி சபையொன்றினை அதாஉல்லாவிடமிருந்து சிராஸ் பெற்றெடுத்தால், சாய்ந்தமருதில் – அரசியல் ரீதியாக சிராஸ் ஹீரோவாகி விடுவார். உதாரணமாக, சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேசசபை கிடைக்குமாயின் அதன் தவிசாளராக சிராஸையே அந்த ஊர் தெரிவு செய்யும் நிலை உருவாகும். இன்னொருபுறம், சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொடுத்தார் என்கிற வகையில், அதாஉல்லாவுக்கான செல்லாக்கும் அந்தப் பிரதேசத்தில் அதிகரிக்கத் தொடங்கும். இதனால், சாய்ந்தமருதை மு.கா. இழக்கும்.

இருந்தபோதும், இந்த அரசியல் நிலைவரத்தை வைத்துக் கொண்டு, அதாஉல்லாவின் அணியில் இணைந்து, ஒரு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகலாம் என்று சிராஸ் நினைத்தால் அது தப்பாகி விடக்கூடும்.

ஒவ்வொரு பொது தேர்தலிலும் அதாஉல்லா, தனது அணி சார்பாக வெற்றிலைச் சின்னத்தில் சம்மாந்துறை மற்றும் கல்முனைத் தொகுதிகளில் இரண்டு பேரை களமிறக்குவது வழமையாகும். இவ்வாறு சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதிகளில் அதாஉல்லாவால் களமிறக்கப்படுகின்றவர்கள், அதாஉல்லாவுக்கு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்களே தவிர, தேர்தலில் வெற்றியடையவில்லை. மு.காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று அதாஉல்லாவோடு இணைந்து பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்ட – தற்போதைய மு.கா.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூட, அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனார் என்பது இங்கு நினைவு

Ziras + Hakeem

சிராஸ் மற்றும் ஹக்கீம்

கொள்ளத்தக்கது.

வரலாறுகளும், அவற்றிலிருந்து கிடைக்கும் அனுபவங்களுமே பாடங்களாகும். ஆதாஉல்லாவோடு இணைந்து கொள்ளும் அரசியலை – சிராஸ் எவ்வாறு தனக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்ளப் போகிறார் என்பதை கொஞ்சக்காலம் பொறுத்திருந்தால் – கண் குளிரக் காணலாம்.

சிலவேளை, சிராஸை தனது கட்சிக்குள் எடுத்து விட்டு, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுக் கொடுக்காமல், அந்தக் கோரிக்கையினை அமைச்சர் அதாஉல்லா தட்டிக் கழிப்பாராயின், சிராஸின் அரசியல் அவ்வளவுதான். மீண்டுமொரு மந்தையைக் கூட்டத்தை சிராஸ் தேடவேண்டியிருக்கும்.

இன்னுமொரு விடயத்தையும் நினைவில் வைத்திருங்கள். ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும்போது மட்டும் மந்தையிலிருந்து விலகிக் கொள்வதில்லை. தங்களை சிங்கங்களாக நினைத்துக் கொண்டிக்கும் ஆடுகளும், தவிர்க்க முடியாததொரு தருணத்தில் தங்களை ஆடுகளாக உணரும் போது – மந்தையிலிருந்து விலகிக் கொள்கின்றன அல்லது விலக்கி விடப்படுகின்றன.

(இந்தக் கட்டுரையை 13 மார்ச் 2014 அன்றைய விடிவெள்ளி பத்திரிகையிலும்,  http://www.vidivelli.lk/epaper/13-03-2014/Page07.html எனும் விடிவெள்ளி ஈபத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s