காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஊதி அணைக்க வேண்டிய நெருப்பு! 22 பிப்ரவரி 2014

Filed under: அரசியல் — Mabrook @ 6:00 பிப

color-dotமப்றூக்

ட்டத்துக்கு கருணையில்லை என்பார்கள். சட்டத்தின் வழியாக Tharvai roadவழங்கப்படும் நீதியும் அப்படித்தான். ஆனால், நியாயம் – வேறு விதமானது. அது – மனச்சாட்சியின் அடிப்படையில் செயற்படும். நியாயத்துக்கு கருணையிருக்கின்றது. நீதி என்பது சட்டப் புத்தகத்துக்குள் மட்டுமே நின்று செயற்படும். நியாயத்தின் எல்லை விசாலமானது.

கல்முனை மநாகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு பெயர் சூட்டுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றியும், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிகச் சாதாரணமான, வீதி விவகாரமொன்று – அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம், நியாயத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய இந்த விடயத்தினை, சட்டம் – நீதியின் அடிப்படையில் கையாள நினைத்ததால், விவகாரம் – விகாரமடைந்திருக்கிறது.

மாநகரசபையொன்று – தனது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள எந்த வீதிக்கும் பெயர் சூட்டும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. உதாரணமாக, குறித்த மாநகரசபையின் ஆதிக்கத்திலுள்ள பிரதேசத்தின் வீதியொன்றுக்கு பெயர் சூட்ட வேண்டுமாயின், அந்த மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில், அது தொடர்பான பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, சபையின் பெரும்பான்மை அனுமதி பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். இதுதான் சட்டம்.

கல்முனை பிரதேசத்திலுள்ள வீதியொன்றுக்கு ‘கடற்கரைப் பள்ளி வீதி’ என பெயர் சூட்டும் பிரேரணையொன்று, கல்முனை மாநகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான பெரும்பான்மை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த வீதிக்கு ‘தரவைக் கோயில் வீதி’ என்கிற பெயர் ஏற்கனவே உள்ளதாகவும்,  இப்போது புதிதாக கடற்கரைப் பள்ளி வீதி என்கிற பெயரை சூட்ட முயற்சிப்பது நியாயமற்ற செயற்பாடு எனவும் – கல்முனை மாநகரசபையின் தமிழ் பிரதிநிதிகள் வாதிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வீதி விவகாரம், இன ரீதியான சமாச்சாரமாகப் பார்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வீதி – எங்கே அமைந்திருக்கிறது என்று தெரியாத பலரும் – இது பற்றி ஊடகங்களில் அறிக்கை விடத் தொடங்கினர். கடைசியில் 950 மீற்றர் நீளமான வீதி விவகாரம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

Temple - 01முன்னொரு காலத்தில், கல்முனையின் உள்ளுராட்சி அதிகாரம் – பிரதேச சபை மட்டத்தில் இருந்தது. 2000 ஆம் ஆண்டு மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டது. இதன்போது, கல்முனை மாநகரசபையின் வீதிகள் அடையாளம் காணப்பட்டு, பட்டியலொன்று தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில், சர்ச்சைக்குரிய வீதியானது ‘தரவைக் கோயில் வீதி’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும், பல நூற்றாண்டுகளாவே ‘தரவைக் கோயில் வீதி’ எனும் பெயரால்தான் குறித்த வீதி அழைக்கப்பட்டு வருகின்றது என்கின்றனர் – தமிழ் தரப்பினர்.

‘இந்த வீதிக்கு பெயர் சூட்டும் பிரேரணையொன்றினை கல்முனை மாநகரசபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, இவ் விடயம் தொடர்பில், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உள்ளுர் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கோயில் நிருவாகத்தினருடன் கல்முனை மாநகரசபையின் மேயர் – பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுவே, இவ்  விடயத்தில் நியாயமான நடைமுறையாக அமைந்திருக்கும். ஆனால், மேயர் அதைச் செய்வில்லை’ என்று கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் கூறுகின்றார்.

தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து என்னதான் தொண்டை கிழிய பேசப்பட்டாலும், இரண்டு சமூகங்களுக்கிடையிலும் பகைமை உணர்வு – இன்னும் இருக்கிறது என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும். இந்த இரண்டு சமூகங்களுக்கிடையிலும் ஆத்மார்த்தமான நட்புறவு இருக்குமாயின், ஒரு வீதிக்காக, இந்த இரண்டு சமூகங்களும் இப்படிக் கட்டிப் புரண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், இந்த வீதி தொடர்பிலுள்ள வேறு சில உண்மைகளைப் பேசுதலும் இங்கு அவசியமாகிறது.
சர்ச்சைக்குரிய வீதியானது ‘தரவைக் கோயில் வீதி’ என அறியப்பட்டாலும், இந்த வீதியில் கோயில்கள் எவையும் இல்லை. ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் கோயிலானது இந்த வீதிக்கு எதிரே மேற்குப் புறமாக உள்ளது. சர்ச்சைக்குரிய வீதியானது, கிழக்குப் புறமாகச் செல்கிறது. கோயிலுக்கும் சர்ச்சைக்குரிய வீதிக்குமிடையில் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ளது.

சர்ச்சைக்குரிய வீதியில் கிட்டத்தட்ட நூறு வீதம் முஸ்லிம் குடும்பங்களே வசிக்கின்றன. இந்த வீதியின் முடிவில்தான் கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இதனால், மிக நீண்ட காலமாக, முஸ்லிம் மக்கள் – மேற்படி வீதியை ‘கடற்கரைப் பள்ளி வீதி’ என்றுதான் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வீதியின் பெயரை ‘கடற்கரை பள்ளி வீதி’ Nizam kariyappar - 01என பதிவு செய்து தருமாறு  வீதியின் இரு புறங்களிலும் வசித்து வரும் 259 பேர் கையொப்பமிட்ட கடிதமொன்று கல்முனை மாநகரசபைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை வைத்துக் கொண்டுதான் கல்முனை மாநகரசபையானது குறித்த தெருவுக்கு ‘கடற்கரைப் பள்ளி வீதி’ என்கிற பெயரைச் சூட்டும் தீர்மானத்தினை நிறைவேற்றியது.

தடாலடியாக, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ‘கல்முனை சிவில் சமூகம்’ என்கின்ற அமைப்பானது, ‘ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் கோயில் வீதியின் பெயர் மாற்றலுக்கான ஆட்சேபம்’ எனும் தலைப்பில் – கல்முனை மாநகரசபையின் மேயருக்கு விலாசமிட்டு, கடிதமொன்றினை மாநகரசபையில் கையளித்திருந்தது.

ஏட்டிக்குப் போட்டியாக, இவ்வாறு நடந்து கொள்வதால், இரண்டு சமூகங்களுக்குமிடையில் பகைமைதான் வளரப் போகிறது. இரண்டு சமூகங்களிலும் ‘உச்சாப்பு மடையர்கள்’ இருப்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஒரு கட்டத்தில் யாரோ ஒரு முட்டாள், இந்த விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு – ஒருவன், மற்றைய சமூகத்தவனைத் தாக்கத் தொடங்கினால், அதன் பிறகு ஏற்படும் விபரீதம் ஆபத்தானதாக மாறிவிடக் கூடும்.

சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் ‘தரவைக் கோயில் வீதி’தான் என்று தமிழ் தரப்பினர் கூறுகின்றபோதும், அந்த வீதியில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும், தமது நிருவாகத் தேவைகள் உள்ளிட்ட அத்தனை விடயங்களுக்கும் ‘கடற்கரைப் பள்ளி வீதி’ என்கிற பெயரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், சர்ச்சைக்குரிய வீதிக்கு பெயர் சூட்டும் செயற்பாட்டினை கல்முனை மாநகரசபையின் மேயர் – இப்போதைக்கு கையில் எடுத்திருக்கத் தேவையில்லை. இப்படி அவசர அவசரமாக வீதிக்கு பெயர் சூட்டுவதால் மக்களுக்கு ஒன்றும் நன்மைகள் ஆகிவிடப் போவதுமில்லை.

இன்னொருபுறம், சர்ச்சைக்குரிய இந்த வீதி விவகாரத்தினை வைத்துக் கொண்டு, இதனோடு எந்தவகையிலும் தொடர்புபடாத சிலர் – குளிர்காய முயற்சித்து வருகின்றமை குறித்து, தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உதாரணமாக, கல்முனை பௌத்த விகாராதிபதி ரண்முத்துகல

சங்கரத்ன தேரர், இந்த வீதி விவகாரத்தில் தமிழர் தரப்பின் அனுதாபியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வருகின்றமை கவனத்துக்குரியது. குறித்த வீதிக்கு ‘கடற்கரைப் பள்ளி வீதி’ எனப் பெயர் சூட்டுவதை எதிர்ந்து தமிழர் தரப்பினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கல்முனை பௌத்த விகாராதிபதி கலந்து கொண்டார். இதேவேளை, தமிழ் தரப்பினரும் – தேரரின் அனுதாபத்தினை தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

Amithalingamஆனாலும், தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மேற்படி வீதி தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை, ஊதி எரிய வைப்பதைத் தவிர, வேறு நல்ல நோக்கங்கள் எவையும் – மேற்படி அனுதாபிகளிடம் இருக்கப் போவதில்லை.

‘வீதிகளுக்கு பெயர் சூட்டுவது இப்போதைக்கு அவசியமில்லை. கல்முனை பிரதேசத்தில் மேயர் ஆற்ற வேண்டிய எத்தனையோ பணிகள் உள்ளன. அவற்றினையெல்லாம் விட்டுவிட்டு, வீதிக்கு பெயர் சூட்டுவதற்கு மேயர் எடுத்து வரும் அவசர முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்கிற அர்த்தப்பட, சர்ச்சைக்குரிய வீதி விவகாரத்தினை முன்னிறுத்தி – கல்முனை பௌத்த விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் அண்மையில் கருத்தொன்றினை வெளியிட்டிருந்தார்.

ஆனால், இதே விகாராதிபதிதான் கடந்த டிசம்பர் மாதம் கல்முனை மாநகரசபையில் கடிதமொன்றினை கையளித்திருந்தார். அது ஒரு கோரிக்கைக் கடிதமாகும். கல்முனை பொதுச் சந்தை வீதியினை ‘விகாரை வீதி’ என்று பெயர் மாற்றம் செய்யுமாறு ரண்முத்துகல சங்கரத்ன தேரர் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

‘வீதிகளுக்கு பெயர் சூட்டுவது இப்போதைக்கு அவசியமில்லை’ என்று தமிழர்கள் சார்பாகப் பேசும் பௌத்த விகாரதிபதிக்கு – கல்முனை பொதுச் சந்தை வீதியினை ‘விகாரை வீதி’யாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி எழுந்தது என்கிற கேள்விக்கான விடையினைப் புரிந்து கொள்பவர்களுக்கு – விகாராதிபதியின் ‘அரசியலை’ப் புரிந்து கொள்தல்,  அத்தனை சிரமமாக இருக்காது.

தங்களிடமிருந்த அப்பத்தினைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக, குரங்கிடம் சென்ற பூனைகளின் கதையை, தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் இந்த இடத்தில் நினைத்துப் பார்த்தல் பொருத்தமாகும்.
இந்த வீதி விவகாரத்தினை சுமுகமாகத் தீர்ப்பதொன்றும் சீன வித்தையல்ல. நட்புறவும், விட்டுக் கொடுக்கும் மனமும் இருந்தால் போதும். விடயம் முடிந்து விடும்.

நியாயப்படி பார்த்தால், சர்ச்சைக்குரிய வீதியில் தமிழர்கள் எவருமில்லை. அங்கு வசிப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். அந்த வீதியிலுள்ளவர்களே, தாங்கள் வசிக்கின்ற வீதிக்கு ‘கடற்கரைப் பள்ளி வீதி’ என்கிற பெயரைச் சூட்டுமாறு கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்கள். அப்படி முஸ்லிம்கள் விரும்புவது போல், அந்த வீதிக்குப் பெயர் சூட்டப்படுவதால், தமிழ் மக்கள் எதையும் இழந்து விடப்போவதுமில்லை. இதுதான் யதார்த்தம்.

தமிழர் தரப்பு இப்படி விட்டுக் கொடுப்பதால், இப் பிரதேசத்தில் தமிழ் Signatures - 01மக்களுக்கு முஸ்லிம்கள் கடமைப்பட்டவர்களாக மாறி விடும் நிலையொன்று உருவாகும். இதை வைத்து, தமிழ் மக்கள், கல்முனை மாநகரசபைக்குட்பட்ட தங்களுடைய பகுதிகளில் இவ்வாறு சர்ச்சைக்குரிய வீதிகள் இருந்தால், அவற்றுக்கு முஸ்லிம்களின் விட்டுக் கொடுப்புடன் தமக்கு விருப்பமான பெயரொன்றினை சூட்டி விட முடியும்.

ஒன்றை விட்டுக் கொடுத்து – மற்றொன்றினைப் பெற்றுக்கொள்ளும் கொள்கையைக் கடைப் பிடித்தால் – ஏராளமான சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

கொழும்பு வெள்ளவத்தை 57 ஆம் ஒழுங்கைக்கு ‘தமிழ் சங்க வீதி’ எனும் பெயரினைச் சூட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளையும், அதற்கு ஏற்பட்ட முட்டுக் கட்டைகளையும் தமிழர் தரப்பு இந்த இடத்தில் நினைத்துப் பார்த்தல் பொருத்தமாகும்.

வெள்வத்தை என்பது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் பிரதேசமாகும். அங்குள்ள ஒரு வீதிக்கு, அதுவும் கொழும்பு – தமிழ் சங்க அலுவலகம் அமைந்துள்ள வீதியொன்றுக்கு, ‘தமிழ் சங்க வீதி’ எனப் பெயரிடுவதில் ஏராளமான நியாயங்கள் உள்ளன. போதாதற்கு, அந்த வீதியில் கணிசமான தமிழ்க் குடும்பங்களும் வசித்து வருகின்றன.

ஆனால், ‘தமிழ் சங்க வீதி’ எனப் பெயர் சூட்டப்படுவதை, சிங்கள இனவாதிகள் இதுவரை அனுமதிக்கவேயில்லை. இத்தனைக்கும், கொழும்பு மாநகரசபையில், ‘தமிழ் சங்க வீதி’ என்று பெயர் சூட்டுவதற்கான அனுமதியும் கிடைந்திருந்தது.

ஆக, கொழும்பு ‘தமிழ் சங்க வீதி’ விவகாரமும், கல்முனை ‘கடற்கரைப் பள்ளி வீதி’ விவகாரமும் ஒத்த விடயங்களாகும். ‘தமிழ் சங்க வீதி’ விவகாரத்தில் தமக்கு என்ன வகையான நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழ் தரப்பு விரும்புகின்றதோ, அதை ‘கடற்கரைப் பள்ளி வீதி’ விடயத்தில் கொடுத்து விட்டுப் போகலாம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

இந்தக் கட்டுரையானது, எவ்விதமான பக்கச் சார்பு மனநிலையோடும் எழுதப்படவில்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இரண்டு சமூகங்களுக்கிடையில், ஒரு வீதியின் பெயரால் புகையத் தொடங்கியிருக்கும் நெருப்பினை ஊதி எரிய வைக்க வேண்டுமென சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால், அந்த நெருப்பினை அணைத்து விட வேண்டுமென இந்தக் கட்டுரை ஆசைப்படுகிறது!

(இந்தக் கட்டுரையை 20 மார்ச் 2014 அன்றைய விடிவெள்ளி பத்திரிகையிலும், http://www.vidivelli.lk/epaper/20-02-2014/Page07.htmlஎனும் விடிவெள்ளி ஈபத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s