காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சூது கவ்வும்! 29 ஒக்ரோபர் 2013

Filed under: அரசியல் — Mabrook @ 3:27 பிப

color-dotமப்றூக்
Casino‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்’

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சூதாட்டம் குறித்து வள்ளுவர் சொல்லி வைத்த குறள்தான் மேலே நீங்கள் படித்தது. ‘கீழ்நிலை அடைந்து, சீரழிந்து வறுமை பெருகுவதற்கு – சூதாட்டத்தை விட, வேறொன்றும் இல்லை‘ என்பது – அதன் பொருளாகும்.

சூதாட்டத்துக்கு ஆயிரத்தெட்டு முகங்களும், பெயர்களும் உள்ளன. மகாபாரதத்தில் பகடைக் காய்களால் உருட்டி ஆடப்பட்டது, இன்று – கசினோவாக நவீனமடைந்து நிற்கிறது.

சூதாட்டத்தினை அநேகமாக – அனைத்துச் சமயங்களும் எதிர்க்கின்றன. ‘சூது விளையாடுகின்றவனுக்கு’ சமூகத்தில் மரியாதை கிடையாது. இப்படியிருந்தும், நமது நாட்டில் சூதாட்டத்துக்கு வரிச் சலுகையளித்து, சூதாட்ட வலயமொன்றையே உருவாக்கும் கோதாவில் அரசு குதித்துள்ளமையானது ஆச்சரியத்தினையும் – கூடவே, வெட்கத்தினையும் தருகின்ற செய்தியாகும்.

கசினோ என்பது சூதாட்டத்தின் ஒரு நவீன வடிவமாகும். இந்த வகையான சூதாட்டத்துக்கு உலகில் பல நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. இலங்கையிலும் அனுமதிபெற்ற கசினோ நிலையங்கள் உள்ளன. கசினோ என்கிற இந்த சூதாட்டமானது – உலகில் ஒரு வர்த்தகமாகவே மாறியுள்ளது.

ஜேம்ஸ் டக்ளஸ் பாக்கர் –  அவுஸ்ரேலியாவிலுள்ள முன்னணி வர்த்தகர்களில் ஒருவராவார். அந்த நாட்டின் மூன்றாவது இடத்திலுள்ள பணக்காரர். இவரின் சொத்து மதிப்பு அண்ணளவாக 06 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 47 வயதான ஜேம்ஸ் பாக்கர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். ‘கிறவ்ன் லிமிடட்’ என்பது என்பது ஜேம்ஸ் பாக்கரின் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். சூதாட்டம் மற்றும் கேளிக்கை வர்த்தகங்களை ‘கிறவ்ன் லிமிடட்‘ மூலம் – ஜேம்ஸ் பாக்கர் நடத்தி வருகின்றார்.

ஜேம்ஸ் பாக்கர் – தற்போது இலங்கையிலும் தனது சூதாட்ட வர்த்தகத்தினை தொடங்கவுள்ளார். இதற்காக சுமார் 385 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை முதலீடு செய்யவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்பொருட்டு, ஐந்து நட்சத்திர சூதாட்ட மற்றும் கேளிக்கை விடுதியொன்றினை ஜேம்ஸ் பாக்கர் – கொழும்பில் நிர்மானிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அந்த ஐந்து நட்சத்திர சூதாட்ட விடுதியானது 36 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

இலங்கையில் பெருந்தொகைப் பணத்தினை இவ்வாறு சூதாட்ட வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு ஜேம்ஸ் பாக்கர் தயாராகவுள்ளார். ஆயினும், அவருடைய தொழில்துறைக்கு வரிச் சலுகை வேண்டுமென அரசிடம் கோரியுள்ளார். அரசும் ‘சரி’ என்று சொல்லி விட்டது. அதனால், இலங்கையில் கசினோ போன்ற சூதாட்ட வர்த்தகத்துக்கு வரிச் சலுகை வழங்கும் சட்டமொன்றினை நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.இதற்காக, ‘உபாய மார்க்க அபிவிருத்தி திட்ட சட்டத்தில்‘ இரண்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

james packer

ஜேம்ஸ் பாக்கர்

இதற்கமைய, கசினோ போன்ற சூதாட்டத்துக்கு – வரிச் சலுகையளிக்கும் வகையிலான சட்ட மூலங்களை 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (இன்றும், நாளையும்) பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து – நிறைவேற்றிக் கொள்வதென அரசு தீர்மானித்திருந்தது. ஆயினும், இந்த சட்ட மூலங்களை குறிப்பிட்ட திகதிகளில் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப் போவதில்லை என்றும், ஒரு மாதத்தின் பின்னர் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரசு நேற்று முன்தினம் திடீரென அறிவித்துள்ளது.

சூதாட்டத்துக்கு வரிச் சலுகையளிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த மேற்படி சட்ட மூலத்துக்கு எதிராக – பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆளும் தரப்பிலுள்ள சில அரசியல் கட்சிகளும் இந்த சட்ட மூலத்தினை எதிர்ப்போம் எனக் கூறியுள்ளன.

குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய போன்ற ஆளுந்தரப்புக் கட்சிகள் இதனை எதிர்த்து வருகின்றன. ஐ.தே.கட்சியும் இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதென தீர்த்மானித்துள்ளது. இந்த நிலையிலேயே – குறித்த சட்ட மூலத்தினை இப்போதைக்கு சமர்ப்பிக்காமல் அரசு பின்வாங்கியுள்ளது.

ஜேம்ஸ் பாக்கர் – இலங்கையில் இப்படியொரு சூதாட்ட வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டுக்கு வருமானமும், இளைஞர் – யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது. நல்ல வருமானம் கிடைக்கும் என்பதற்காக, எல்லாத் தொழிலையும் அனுமதிக்க முடியாது என்பது – இதை எதிர்ப்போரின் வாதமாகும். உண்மையில், நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ, ஜேம்ஸ் பாக்கரை சூதாட்ட வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதிப்பதனூடாக – நமது நாட்டிலுள்ள பெரிய்ய்ய தலைகளின் கஜனாக்களுக்கு சுளையாக பெரும் தொகைப் பணம் – வந்து சேரத்தான் போகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு தூய்மையான பௌத்தராக தன்னைக் காட்டிக் கொள்வதில் எப்போதும் பெரு விருப்புடையவர். பௌத்த மக்களின் தலைவனாக – தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைபவர். அவ்வாறான ஒருவர் சூதாட்ட வர்த்தகத்தை உற்சாகமூட்டும் வகையிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதானது முரண் நகையாகும்.

‘சூதாட்டம், விபச்சாரம், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர் கீழ்தரமானவராக மாறிவிடுவார்’ என்று புத்தர் கூறியுள்ளார். ஆனால், தன்னை ஒரு தூய்மையான பௌத்தனாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி ராஜபக்ஷ – இந்த நாட்டில் சூதாட்ட வலயமொன்றினை ஏற்படுத்துவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்பது முரண்நகையன்றி வேறென்ன?!

Anura kumara desanayaka - 01

அனுரகுமார திஸாநாயக்க

பௌத்தத்தைப் போலவே, இஸ்லாம், இந்து சமயங்களும் சூதாட்டத்தினை வெறுக்கின்றன.

‘ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ என்கிறது அல்குர்ஆன்.

‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்கிறார் அவ்வை. திருக்குறளின் பொருட்பாலில் சூதாட்டத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து, ‘சூது’ என்கிற அதிகாரமொன்றினையே எழுதி வைத்துள்ளார் வள்ளுவர். இப்படி, சமயங்களும் – நல்ல மனிதர்களும் வெறுத்தொதுக்கிய சூதாட்டத்தினை நமது ஆட்சியாளர்கள் – இப்படி, விழுந்து விழுந்து வரவேற்பதன் பின்னணியில் ‘ஒன்றுமில்லை’ என்று நீங்கள் நம்புகிறீர்களா?

சூதாட்டத்துக்கு வரிச் சலுகையளித்து, அதற்கென ஆரம்பர விடுதியொன்றினையும் அமைக்கும் திட்டத்துக்கு, ஆட்சியாளர்களே ஆதரவு தெரிவித்து விட்டதால், சூதாட்டத்துக்கு ஆதரவாக சில அரசியல்வாதிகளும் கோசமிடத் தொடங்கியுள்ளனர்.

கசினோ விளையாட விரும்புகின்றவர்கள் அதனை விளையாடுவதில் என்ன தவறு இருக்கிறது. அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதனால் – அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது‘ என்று ஆட்சியாளர்களின் திட்டத்துக்கு வக்காளத்துக்கு வாங்குகின்றார் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க.

இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் ஆபத்தானவர்கள். நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதற்காக நாளை, இவர்கள் – ‘விபச்சாரத்துக்கும் வரிச் சலுகை வழங்கி, அனுமதிக்கப்பட்ட தொழிலாக ஆக்குங்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்கள் – ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படி சூதாட்டம் குறித்தும் அதன் பிரதிபலன்கள் குறித்தும் – யார், எப்படி தொண்டை கிழியக் கூக்குரலிட்டாலும், இந்த அரசு நினைத்தபடி, குறித்த சட்டத்தினை நிறைவேற்றியே தீரும். ஜேம்ஸ் பாக்கரின் முதலீட்டினையும், அதனால் – கிடைக்கும் ‘கொமிசன்’களையும் ஆட்சியாளர்கள் கையிழக்க மாட்டார்கள். ஆக, கொஞ்சம் பிந்தியேனும், சூதாட்டத்துக்கு வரிச் சலுகையளிக்கும் சட்ட மூலம் – பாராளுமன்றுக்கு வந்தே தீரும்.

Sarath ekanayaka

சரத் எக்கநாயக்க

இதற்கு எதிரான குரல்கள் – அரசுக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கப் போவதில்லை. மிஞ்சிப் போனால் – ஐ.தே.கட்சியும், ஜே.வி.பி.யும் தனித்தனியாக நின்று – சூதாட்ட வரிச் சலுகைச் சட்ட மூலத்துக்கு எதிராக, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்னால் அல்லது ரொறிங்டன் சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும். ஆட்சியில் இருந்து கொண்டு மு.காங்கிரஸ் போன்ற கட்சிகள் காட்டும் எதிர்ப்பு – ‘சீலைக்கு மேலால் சொறிவதற்கு’ ஒப்பானதாகும். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஜேம்ஸ் பாக்கரின் சூதாட்ட மற்றும் கேளிக்கை விடுதியானது – இந்த நாட்டின் கலாசாரங்களுக்கும் பண்பாடுகளுக்கும் மிகப்பெரும் ஆபத்தினைக் கொண்டு வந்து குவிக்கப் போகின்றது. குறித்த சூதாட்ட விடுதி அமைவதன் மூலமாக நாட்டிலுள்ளவர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால், ‘கிராமத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு – கசினோ சூதாட்ட விடுதிகளிலே பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள்தான் வழங்கப்படுகின்றன‘ என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டுகின்றார்.

இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஜேம்ஸ் பாக்கரின் சூதாட்ட வர்த்தகத்தில் நமது நாடு தோற்றுப் போவது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

எனவே, ஜேம்ஸ் பாக்கரின் சூதாட்ட வர்த்தகத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள், வரிச் சலுகை வழங்கியவர்கள், அதை ஆமோதித்தவர்கள், அதற்காக வாக்காளத்து வாங்கியவர்கள், அவ்வாறானவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்தவர்கள், அதற்கு எவ்வித எதிர்வினைகளையும் காட்டாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என்று – எல்லோரும் பாவிகளாவர்.

பாவத்தைச் செய்வதைப் போல், பாவத்துக்குத் துணைபோவதும் பாவமாகும். சமயங்களும், தர்மங்களும் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால், பௌத்தவாதம் பேசிக் கொண்டு அரசியல் செய்யும் நமது ஆட்சியாளர்களுக்கு இவை பற்றிக் கவலைகள் எதுவுமில்லை.
புத்தரின் போதனைகளில் ‘அட்டசீலம்’ என்பது முக்கியமானது.

‘அட்டம்’ என்றால் எட்டு என்று அர்த்தமாகும். துன்பத்தினை ஒழிப்பதற்கும், ஆசைகளைக் கைவிடுவதற்கும் எட்டு வகையான வழி முறைகளை ‘அட்ச சீலம்’ கூறுகிறது.

அவை:
SLMC flag1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.
2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.
3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.
4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.
5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.
6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.
8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

புத்தர் போதித்த அட்ட சீலங்களில் 05 ஆவதினை மட்டுமே நமது ஆட்சியாளர்கள் துரதிஷ்டவசமாக கடைப்பிடித்து வருகின்றார்கள் என்று சிரித்துக் கொண்டு சொன்னார் நமது நண்பரொருவர்.

என்ன என்று கேட்கிறீர்களா?

வெளிநாடுகளில் பிச்சை எடுப்பது!
o

(இந்தக் கட்டுரையை 24 ஒக்டோபர் 2014 அன்றைய ‘விடிவெள்ளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s