காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஏவி விடப்பட்டுள்ள காவி அரசியல்! 5 மார்ச் 2013

Filed under: அரசியல் — Mabrook @ 9:49 பிப

color-dotதம்பி
BBS - 01கொழும்பு தெமட்டகொட பகுதியில் முஸ்லிம் நபரொருவர் சட்டவிரோதமாக மாடுகளை அறுக்கும் தொழுவமொன்றினை நடத்தி வருவதாகக் கூறி, பொது பல சேனா அமைப்பினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து அந்த இடத்துக்கு பொலிஸார் வருகை தந்தனர். அதன்போது, சட்ட விதிகளுக்கு அமைவாகவே குறித்த நபர் – மாடுகளை அறுக்கும் தொழுவத்தினை நடத்தி வருவதாக அறிய முடிந்தது. இதனையடுத்து பொது பல சேனாவினர் கலைந்து சென்று விட்டனர்.

முதல் வாசிப்பில், இந்தச் செய்தியானது சாதாரண நிகழ்வொன்று போல உங்களுக்குத் தோன்றலாம். ‘நல்லவேளை, பிரச்சினையொன்றும் நிகழவில்லை‘ என்று நீங்கள் ஆசுவாசப்படவும் கூடும். ஆனால், சற்றே கூர்ந்து கவனித்தால் இதிலுள்ள மிகப்பெரும் ஆபத்தினை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஓர் உதாரணத்துக்கு, சட்டவிரோதமாவே ஒருவர் மாடுகளை அறுத்து விற்பனை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியோர் யார்? பொலிஸார். அப்படியென்றால், பொலிஸாரின் கடமையினை பொது பல சேனா என்கிற ஒரு அமைப்பு எப்படி கையிலெடுக்க முடியும்? பொலிஸாரின் அதிகாரத்தினை பொது பல சேனாவிடம் கொடுத்தவர்கள் யார்? பொலிஸாரின் அதிகாரத்தினை ஒரு தனிநபரோ, அமைப்பினரோ கையிலெடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்லவா?

உண்மையில், காக்கி உடையணிந்தவர்களின் கைகளில் இருக்க வேண்டிய அதிகாரமானது, இன்று – காவி உடையணிந்தவர்களின் கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டு வருகிறது. காக்கிகளின் வேலைகளை காவிகள் செய்வதற்கு முயற்சிக்கின்றன. காவிகள் செய்வதையெல்லாம் காக்கிகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானதொரு நிலைவரமாகும்.

நம்மைப் போன்ற சாதாரணமான நபரொருவர் – இவ்வாறு சட்டத்தினைக் கையில் எடுக்க முடியுமா? அதை பொலிஸார்தான் அனுமதிப்பார்களா? ஆனால், பொது பல சேனா எனும் அமைப்பினர் சட்டத்தைக் கையில் எடுப்பதைப் பொலிஸார் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், பொது பல சேனாவின் பின்னணியில் பொலிஸாரையே கட்டுப்படுத்தும் அதிகாரம்மிகு சக்தியொன்று உள்ளமையானது – திரும்பத் திரும்ப தெளிவாகிக் கொண்டே வருகிறது.

பொது பல சேனாவின் பின்னணியில் இருக்கும் அந்த அதிகாரம்மிக்க சக்தியினர் வேறு யாருமல்லர். இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்தான் என்கிறார் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத்சாலி. சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதன் மூலம் இந்த அரசாங்கத்தின் ஆயுளை இன்றும் சில காலம் நீடிக்க வெண்டும் என்பதற்காக, ஆட்சியாளர்களே நாட்டில் இவ்வாறானதொரு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என ஆஸாத்சாலி விபரிக்கின்றார்.

ஆரம்பத்தில் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுகளைப்Asad saali - 01 புறக்கணிப்பதற்கான தமது உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்ட பொது பல சேனா அமைப்பினர், தற்போது – இலங்கையில் ஹலால் முத்திரையிடும் நடைமுறையே இருக்கக் கூடாது என்று கோசமெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, ஹலால் என்பதை – பொது பல சேனா ஒரு பிரச்சினையாகப் பேசத் துவங்கியதையடுத்து, ஹலால் சான்றிதழ் வழங்குவதை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்தது. ஆயினும், அரசாங்கம் அதை ஏற்க மறுத்து விட்டது.

மத விவகாரங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மனிதனை மதம் இலகுவில் உணர்ச்சிவசப்படுத்தி விடும். அரசியலில் பிளவுபட்டு நிற்பவர்களும் – தமது மதம் என்று வரும் போது ஒன்றுபட்டு நின்றுவிடுவார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பொது பல சேனாவினர் மத விவகாரங்களினூடாக முஸ்லிம்கள் மீது ‘போர்’ ஒன்றினைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தானதொரு சூழ்நிலையாகும். பொது பல சேனாவினரின் சண்டித்தனங்களுக்கு – முஸ்லிம் தரப்பிலிருந்து அதே பாணியில் எதிர்வினைகள் உருவாகுமாயின் அது ஓர் இனக்கலவரத்தைக் கூட உருவாக்கி விடக் கூடிய அபாயமுள்ளது.

எனவே, இந்த விடயத்தினை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியதுதான் பொறுப்புள்ள ஓர் அரசாங்கத்தின் முதல் வேலையாகும். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அதை செய்யவேயில்லை. பொது பல சேனாவிடம் மகிந்த அரசு ‘செல்லம் கொஞ்சி’ விளையாடிக் கொண்டிருக்கிறது.

ஹலால் விடயமாக – அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் சந்தித்தார்கள். அப்போது, ‘ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி விடாதீர்கள். ஹலால் முத்திரையற்ற உணவுப் பொருட்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அது நாட்டின் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும்’ என்று பஷில் கூறியிருந்தார்.

பிறகு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உலமா சபையினர் சந்தித்தனர். அப்போது, ‘முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழை வழங்குங்கள், மற்றவர்களுக்கு வேண்டாம்‘ என்று கோட்டாபய கூறினார். ஆனால், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் பேசவில்லை.

ஆட்சியாளர்களின் இந்த மாறுபட்ட கூற்றுக்களும், அரசின் தேவையற்ற மௌனமும் முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான வெஞ்சினத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. முஸ்லிம்கள் மீது பொது பல சேனாவை அரசு – ஏவி விட்டு ரசித்துக் கொண்டிருப்பதாக நேர்மையுள்ள சிங்கள மக்களே கூறுகின்றார்கள்.

இதேவேளை, தற்போதைய நிலைவரம் குறித்து அரசாங்கம் போதியளவு, காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும், அரசாங்கம் இவ் விவகாரங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதையும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். ஆனாலும், ஆட்சியாளர்களை நோவினைப்படுத்தி விடக் கூடாது என்கிற கவனத்தில் – சுற்றி வளைத்து, வார்த்தை ஜாலங்களினூடாகவே ஹக்கீம் இதை கூறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு காட்டுத் தீயை உருவாக்கி விடுவதற்கு ஒரு சிறிய நெருப்புப் ‘பொரி’யே போதுமானதாகும். 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள – முஸ்லிம் இனக்கலவரத்துக்கு காரணமாக இருந்ததும் ஒரு சின்ன ‘தீப்பொரிதான்’.

BBS - 02மதஸ்தலங்கள் அனைத்தும் மரியாதைக்குரியவையாகும். ஆனால், சிங்களவர்கள் தமது பெரஹர நிகழ்வொன்றின் போது, முஸ்லிம்களின் பள்ளிவாயலொன்றின் முன்பாக பறையடித்துக் கொண்டு சென்றார்கள். அவ்வாறு செய்ய வேண்டாமென அங்கிருந்த முஸ்லிம்கள் கூறினார்கள். அது பறையடித்தவர்களுக்கு கோபத்தினை ஏற்படுத்தியது. அந்தக் கோபம்தான் 1915 ஆம் ஆண்டின் சிங்கள – முஸ்லிம் கலவரமாக மாறியது.

அப்படியொரு அசம்பாவிதம் இடம்பெற்று விடக் கூடாது என்பதே நல்ல மனிதர்களின் விருப்பமாகும். ஆனால், ‘பித்தம் தலைக்கேறிய ஒரு பிராணி’ போல் முஸ்லிம் சமூகத்தை, பொது பல சேனா தொடர்ந்தும் துரத்திக் கொண்டே வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று ஹிஜாப் ஆடையணித்து சென்ற மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து தாக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும், நாட்டில் முஸ்லிம்களுக்கென்றுள்ள காதி சட்டம் குறித்தும் – தாம் கவனம் செலுத்தப் போவதாகவும் பொது பல சேனா கூறியுள்ளது.

இந்த விவகாரத்தினை முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை சொரணையுடன் கையாளவில்லை என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த கவலையாகும். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பேசுவதற்குத் தயங்குகிறார்கள். பேசினால், எங்கே – தம்முடைய ‘கதிரை’ காலியாகி விடுமோ என்று பயப்படுகின்றார்கள். அதனால், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றில் – அடக்கி வாசிக்கின்றார்கள் அல்லது ‘பொத்தி’க் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில், முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள இந்த விவகாரம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ்தான் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறு எதிர்பார்ப்பதற்கு ‘ஆயிரத்தெட்டு’ நியாயங்கள் உள்ளன. ஆனால், ‘இது முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சி – தனியாகக் கையாளுகின்ற விடமல்ல’ என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பி.பி.சி.க்கு கூறியிருக்கின்றார். மு.கா. தலைவர் இவ்வாறு தெரிவித்தமையின் ஊடாக, தமக்குள்ள தார்மீகப் பொறுப்பினை பங்கு போடுவதற்கு அல்லது அந்தப் பொறுப்பின் கனதியினைக் குறைந்தளவில் சுமப்பதற்கு முயற்சிக்கின்றார் என்பது புரிகிறது.

இது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
அரசிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால், இந்த விவகாரத்தில் மிக எளிதாக வெற்றி கண்டு விட முடியும். ஆனால், அவ்வாறு நடப்பதென்பது குதிரைக் கொம்பாகும். இந்த விவகாரத்தில் பொது பல சேனாவுக்கு சார்பாகவே அரசாங்கம் நடந்து வருகிறது. இது விமர்சனத்துக்குரியது – தட்டிக் கேட்க வேண்டியது. ஆனால், ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எத்தனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசையும், ஆட்சியாளர்களையும் தட்டிக் கேட்பதற்குத் தயாராக உள்ளார்கள்? சிங்கள ஆட்சியாளர்களின் விருப்பத்துக்குரியவர்களாக இருந்தால் மட்டுமே, அரசிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசியல் செய்ய முடியும். எனவே, அதாஉல்லா, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுத்தீன் மற்றும் அஸ்வர் உள்ளிட்டோர் அடக்கியே வாசிப்பர்.

ஆனால், முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த நிலையில்லை. கட்சியை நடத்துவதற்கோ, நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கோ ஆட்சியாளர்களின் தயவு வேண்டும் என்கிற தேவை மு.கா.வுக்கு இல்லை.

எனவே, முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள ‘காவி அரசியல்’ குறித்து – முஸ்லிம் காங்கிரஸ் உரத்து குரல் கொடுக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறே நடந்து வருவார்களாயின் மு.கா.வின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகலாம். பின்னர் – மக்களுடன் Hakeem - 005இணைந்து தமது ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறானதொரு முடிவுக்கு மு.கா. வருமாயின் மிதவாத சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள சமூகத்திலுள்ள நேர்மையுள்ள புத்திஜீவிகளும் மு.காங்கிரசோடு கைகோர்ப்பார்கள்.

அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகுவதாக முடிவொன்றினை எடுக்கும் போது, அந்தக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் அதற்கு ஒத்துழைப்பார்கள் என்று தெரியாது. ஆனால், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் – கட்சியின் முடிவுக்கு ஒத்துழைக்காமல் போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகம் நிச்சம் தண்டித்தே தீரும்.

இதைவிடுத்து, இன்றைய சூழ்நிலையில் மௌனமாக இருப்பதும், ஆட்சியாளர்களை நோகடித்து விடக் கூடாது என்கிற எத்தனங்களை எடுப்பதும் – மு.காங்கிரசுக்கு அரசியல் ரீதியில் வீழ்ச்சியினையே ஏற்படுத்தும். ஏற்கனவே, மு.கா. எடுத்த அரசியல் தீர்மானங்களால் அந்தக் கட்சி மீது மக்கள் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கின்றார்கள். இந்த நிலையில், மு.கா. மேலும் மௌனிப்பதானது அந்தக் கட்சியினை ‘அரசியல் புதை குழி’க்குள் வீழ்த்தி விடும்!

பொன்னால் கொடிப்பறந்து

புகழ்வீசி நிண்டாலும்                                      

அல்லாட கட்டளைக்கு – என்றும்

அழிவு இல்ல நிச்சயங்கா

அல்லாட செல்லுக்கு

அடிபணிஞ்சி போனமென்டா 

நன்மை கிடைக்கும் – அதில்

நலவிரிக்கும் பார் ராசா.

(கிழக்கு மாகாண முஸ்லிம் நாட்டார் பாடல்)

(இந்தக் கட்டுரையை  03 மார்ச் 2013 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

One Response to “ஏவி விடப்பட்டுள்ள காவி அரசியல்!”

  1. marx prabagar Says:

    idaikkidai sinhala paththirihahalukkum moli peyarthu anuppalame??????????


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s