காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கழன்று விழும் முக மூடிகள்! 13 ஜனவரி 2013

Filed under: அரசியல் — Mabrook @ 11:40 முப
Rizana Passport

றிசானாவின் கடவுச் சீட்டு

color-dotமப்றூக்

ஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிணக்கினைத் தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றம் செல்வதை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்களோ – அப்படித்தான் றிசானா நபீக் விவகாரத்தினை என்னால் பார்க்க முடிகிறது.

கஞ்சா வியாபாரம் என்பதே சட்டவிரோதமானது. அப்படியானதொரு தொழிலில் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிணக்கினைத் தீர்த்துக் கொள்வதற்காக, அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு நீதிமன்றம் எதைச் செய்ய வேண்டும்? சட்ட விரோதமான தொழிலைச் செய்த இருவரையும் முதலில் பிடித்து சிறையில் போட வேண்டும். ஆனால், றிசானா விடயத்தில் ‘கஞ்சா’ வியாபாரத்தைக் கணக்கில் எடுக்காமல், அந்தத் தொழிலில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் ‘பிணக்கி’னைத் தீர்த்திருக்கிறது சஊதி அரேபிய நீதிமன்றம்!

நான் சொல்லும் இந்த உதாரணத்தினை உங்களில் சிலருக்கு எடுத்தாற்போல் புரிந்து கொள்ள முடியாமல் போகக் கூடும். அதனால், இதனைப் படிமுறையாக உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சஊதி அரேபிய தேசம் – தனது நாட்டுச் சட்டமாக ஷரீஆ சட்டத்தினைக் கொண்டுள்ளது. ஷரீஆ என்பது இஸ்லாமிய சட்டமாகும். குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது ஷரீஆ சட்டம்!

இதை இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, இலங்கையானது – பிருத்தானியர்களின் ஆங்கிலேயச் சட்டம், ஒல்லாந்து நாட்டின் டச்சுச் சட்டம் உள்ளிட்டவற்றினை தனது சட்டங்களாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. இதைப் போன்று, ஒரு நாடு விரும்பினால் இஸ்லாமியச் சட்டத்தினை தனது நாட்டுச் சட்டமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

அப்படி, ஷரீஆ சட்டத்தினை – தனது நாட்டுச் சட்டமாகக் கொண்டுள்ள சஊதி அரேபிய அரசாங்கமானது, இலங்கையிலிருந்து சென்ற பணிப் பெண் றிசானா மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்கான தண்டனையை இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்கிணங்க வழங்கியுள்ளதாகக் கூறுகிறது.

இங்கு இஸ்லாமிய ஷரீஆ சட்டம் மீது நமக்கு எவ்விதமான விமர்சனங்களோ மாற்றுக் கருத்துக்களோ இல்லை. ஆனால், றிசானா விவகாரத்தினைக் கையாண்ட நீதிமன்றத்தின் மீதும், அதன் செயற்பாடுகள் மீதும் ஏராளமான கேள்விகளும், விமர்சனங்களும் உள்ளன.

றிசானாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையிலானது என்று சஊதி அரேபிய நீதிமன்றம் கூறுகின்றமையினால், றிசானா தொடர்பான அனைத்து விடயங்களையும் நாம் இஸ்லாமிய அடிப்படையிலேயே ஆராய வேண்டியதொரு தவிர்க்க முடியாத தேவை இங்கு எழுகிறது!

முதலில் ஷரீஆ சட்டத்தினை ஓரளவேனும் நாம் – தெளிவாக விளங்கிக் கொள்தல் வேண்டும். ஷரீஆ சட்டம் என்பதை – குற்றங்களுக்கான தண்டனைகளைப் பட்டியலிட்டுச் சொல்லுகின்றதொரு புத்தகமாக அல்லது குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவை போன்றதொன்றாக இஸ்லாமியரல்லாத சில நண்பர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால், அப்படியல்ல. ஷரீஆ என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறுகின்றது. அந்த வாழ்க்கை முறையினை மீறுகின்றவர்களுக்கான தண்டனைகள் குறித்தும் ஷரீஆ விளக்குகின்றது.

சரி இப்போது, விடயத்துக்கு வருவோம். இஸ்லாமிய சட்டப்படி, வயது வந்த பெண்ணொருவர் தனக்கான பாதுகாலவர் இன்றி நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாது. பாதுகாவலர் என்பவர் குறித்த பெண்ணுடைய கணவர் அல்லது ‘மஹ்ரமி’களாக இருத்தல் வேண்டும். ‘மஹ்ரமி’கள் என்போர் திருமணம் செய்வதற்கு ஹராமாக்கப் பட்டோர் (தடுக்கப்பட்டோர்) என்று பொருள்படும். ஒரு பெண்ணுக்கு அவருடைய தந்தை, தந்தையின் தந்தை, தாயின் தந்தை, தன்னுடைய ஆண் சகோதரர்கள், தாயின் சகோதரர்கள் மற்றும் தந்தையின் சகோதரர்கள் உள்ளிட்டோர் ‘மஹ்ரமி’களாக் கொள்ளப்படுகின்றனர்.

SRI LANKA-SAUDI-EXECUTION-RIGHTSஅதனால், சஊதி அரேபியாவுக்கு ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு, வெளிநாடுகளிலிருந்து செல்லுகின்ற பெண்கள் யாருடன் வருகின்றார்கள் என்பதை சஊதி அரேபிய அரசு மிகக் கவனமாக ஆராய்கிறது. தனியாகவோ, தனது கணவர் அல்லது ‘மஹ்ரமி’களின் துணை இன்றியோ ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகின்ற பெண்களை – சஊதி அரேபிய அரசு தன்னுடைய நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை. காரணம், சஊதி அரேபிய அரசு – ஷரீஆவை சட்டமாகக் கொண்ட நாடாகும்.

ஆனால் பாருங்கள், ஹஜ் மற்றும் உம்றா கடமைகளுக்குச் செல்லும் பெண்கள் யாருடன் வருகிறார்கள் என்பதைப் பூதக்கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கும் சஊதி அரேபிய அரசாங்கமானது, தன்னுடைய நாட்டுக்கு – வெளிநாடுகளில் இருந்து வீட்டுப் பணிப் பெண்களாக உரிய பாதுகாவலர்களின் துணையின்றி தனித்து வரும் பெண்களை எதுவித கேள்விகளுமின்றி உள்வாங்கிக் கொள்கின்றது. இதன்போது, இஸ்லாமிய சட்டம் குறித்து சஊதி அரேபிய அரசு அலட்டிக் கொள்வதேயில்லை.

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட ஆண் துணையின்றி வந்த றிசானாவை சஊதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டுக்குள் அனுமதித்தமையானது ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். ஷரீஆ எனப்படுகின்ற இஸ்லாமிய சட்டத்தினை சஊதி அரேபிய அரசு இப்படித்தான் பயன்படுத்தி வருகிறது.

இப்போது, ஆரம்ப வரிகளில் நாம் எழுதியிருக்கும் கஞ்சா வியாபாரக் கதையோடு, றிசானாவின் நீதிமன்ற விவகாரத்தினை பொருத்திப் பார்ப்போம். றிசானாவை கொலைக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்த போது, ஷரீஆவைப் பின்பற்றுகின்ற அந்த நீதிமன்றம் முதலில் என்ன செய்திருக்க வேண்டும்? ஷரீஆவுக்கு முரணாக றிசானாவை நாட்டுக்குள் அனுமதித்த சஊதி அரேபிய அரசாங்கத்தையும், றிசானாவின் எஜமானர்களையும தண்டித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அதைச் செய்யாமல் – ‘கஞ்சா’ வியாபாரத்தினை அங்கீகரித்துக் கொண்டு, அதில் ஏற்பட்ட ‘பிணக்கு’க் குறித்து அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இதை விளங்கிக் கொள்ள முடியாத அல்லது இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தினை விமர்சிப்பதற்கும், தூற்றுவதற்கும் முயற்சித்து வருகிறது. ஒரு அப்துல்லாவை அல்லது கந்தசாமியை வைத்துக்கொண்டு – இஸ்லாத்தினையும், ஹிந்து மதத்தினையும் எடைபோடுவதற்கு ஒப்பான செயற்பாடுதான் – சஊதி அரேபியாவின் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு, ஷரீஆவை விமர்சிக்க முற்படுவதாகும். ஒரு முஸ்லிம் மது அருந்துவதை இஸ்லாத்திலுள்ள குறைபாடு என எப்படிக் கூற முடியும்?

இன்னொருபுறம், இந்த விவகாரத்தினை வைத்துக் கொண்டு, ஷரீஆ சட்டத்தின்படி வழங்கப்படும் மரண தண்டனைகளுக்கு எதிராகவும் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். இஸ்லாத்தில் கொலைக்கான இறுதிநிலைத் தண்டனையாகவே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவர் கொலையொன்றினைப் புரிந்து விட்டார் என்றவுடன் எழுந்தமானமாக மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.
ஷரீஆவின் அடிப்படையில் கொலைக் குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர், அந்தத் தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஏற்பாடுளும் ஷரீஆவில் உள்ளன.

இதன் அடிப்படையில், கொலையானவரின் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளியை மன்னிப்பார்களாயின் குற்றவாளி மரண தண்டனையிலிருந்து விடுபட முடியும். குறித்த மன்னிப்பினை கருணையின் அடிப்படையில் அல்லது இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு உறவினர்கள் வழங்க முடியும். இது – ஷரீஆ சட்டத்திலுள்ள மிக அற்புதமானதொரு அம்சமாகும். இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் குற்றவாளியொருவருக்கு எதிராக நீதிமன்றமொன்றினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்னிப்பளித்தாலும், குற்றவாளி தனக்குரிய தண்டனையிலிருந்து விடுபட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையினை அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால், ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் மன்னிப்பாராயின் குற்றவாளிக்கு தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவர் விடுதலை பெற்றுக் கொள்ள முடியும்!

ஆக, ஷரீஆ தொடர்பில் நுனிப்புற்களை மேய்ந்து விட்டு, அதை விமர்சிப்பதும் அதற்கெதிராகக் கோசமிடுவதும் எவ்வகையிலும் நியாயமில்லை.

இது தவிர, ஷரீஆ சட்டத்தில் மட்டுமே மரண தண்டனை இருப்பது

றிசானாவின் தாய், தந்தையும் குடியிருக்கும் வீடும்

றிசானாவின் தாய், தந்தையும் குடியிருக்கும் வீடும்

போல் சிலர் சித்திரங்களைத் தீட்டுவது அபத்தமான முயற்சிகளாகும். இலங்கை சட்டத்திலும் மரண தண்டனை இருக்கிறது. உலகில் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்று கூறப்படும் இந்தியாவிலும் மரண தண்டனை உள்ளது. இந்தியாவின் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட அஜ்மல் கசாப் என்பவருக்கு மிக அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், மரணம் என்பது வலி மிகுந்தது. மரணங்களைக் கொண்டாட முடியாது. றிசானாவின் மரணம் துயரமானது. றிசானா வீழ்ந்திருந்த மரணப் படுகுழியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பது எல்லோரினதும் பிரார்த்தனையாக இருந்தது. ‘றிசானாவும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தாள்’ என்கிறார் டொக்டர் கிபாயா.

சஊதி அரேபியாவில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட றிசானாவின் நலன் கருதி, கருணை அடிப்படையில் 2006 ஆம் ஆண்டிலிருந்து கடைசிவரை தனி மனுஷியாக செயற்பட்டு வந்தவர் டொக்டர் கிபாயா. அவரை வியாழக்கிழமை இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதுதான் றிசானாவின் நம்பிக்கை குறித்து நம்மிடம் பேசினார்.

‘எப்போதும் போல் அன்றைய தினமும் றிசானாவைப் பார்ப்பதற்காக அவள் சிறைவைப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றிருந்தேன். பகல் 12 மணிக்கு வருமாறு அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். அதுவரை காத்திருக்க முடியாது என்பதால் பிறிதொரு நாளில் வந்து பார்கலாம் என நினைத்து எனது வேலைத்தளத்துக்குத் திரும்பினேன். வந்த பிறகுதான் அந்தச் செய்தி கிடைத்தது. றிசானாவுக்கு அன்றைய தினம் மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அதிர்ச்சியாக இருந்தது. அவள் அழகான பிள்ளை. அவளின் முகம் இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறது. அவளைச் சந்திக்கும் போதெல்லாம், ‘என்னை எப்போது விடுவிப்பார்கள். நான் எப்போது ஊருக்குப் போக முடியும்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டேயிருப்பாள். இதிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்குமென்று அவள் நம்பினாள். கடைசியில் இப்படியாயிற்று’ கனத்த மனதோடு பேசினார் டொக்டர் கிபாயா.

றிசானாவின் மரணம் இலங்கைக்குப் புதிது அல்ல. சுமார் 05 ஆண்டுகளுக்கு முன்பும் அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நயீம் எனும் இளைஞர் ஒருவர் குவைத் நாட்டில் இதேபோன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நிகழ்ந்த அந்த மரணம் குறித்து உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்தும் தெரியாமலும் இப்படி ஏராளமான உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.

றிசானாவின் மரணம் ஆயிரத்தெட்டு கேள்விகளையும், வாதப் பிரதிவாதங்களையும் நம்மிடையே உருவாக்கி விட்டிருக்கின்றது. ஏராளமான கன்னங்களில் ஓங்கி அறைந்திருக்கிறது. சில முகமூடிகளைக் கழன்று விழச் செய்திருக்கிறது. இவை அனைத்துக்கும் அப்பால் கோடிக்கணக்கான கருணை மனங்களின் கண்ணீரைச் சொந்தமாக்கியிருக்கிறது.

றிசானாவின் மரணம் குறித்து நாம் எதையெதையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக பேசவேண்டியவை குறித்து நம்மில் அதிகமானோர் பேசுவதற்குத் தயங்குகின்றோம் என்பதுதான் இங்கு கவலைதரும் விடயமாகும்.

றிசானாவை, மரணக் குழிவரை தள்ளி விட்டது எது அல்லது யார் என்கின்ற கேள்விகளினூடாக எமது சகோதரிகளினதும் சமூகத்தினதும் எதிர்காலத்தை நாம் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.

வறுமைதான் – றிசானாவை மரணத்திடம் பலிகொடுத்திருக்கிறது. நமது சமூகத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் றிசானாக்களின் வறுமைக்கு காரணமாகும். நமது ‘ஸக்காத்’ கடமைகளை நாம் ஒவ்வொருவரும் மிகச் சரியாக நிறைவேற்றிருந்தால் – சிலவேளை நமது றிசானாவை நாம் இழந்திருக்காமல் இருந்திருக்கலாம்.

றிசானா விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகள்தான். ஆனால், குற்றவாளிகளை நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கின்றோம். றிசானாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், அது வழங்கப்பட்ட முறை குறித்தும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

பஷில் பெர்னாண்டோ

பஷில் பெர்னாண்டோ

மிக வெளிப்படையாகச் சொன்னால்,  தனது குழந்தையைப் பராமரிக்க முடியாமல் – பாசை தெரியாத தேசமொன்றுக்கு வேலைக்காரப் பெண்ணாக அனுப்பி வைத்த றிசானாவின் தந்தையில் தொடங்கி ஏராளமானவர்களை – றிசானா விடயத்தில் குற்றவாளிகளாகப் பட்டியலிட முடியும்.

குறிப்பாக, றிசானாவின் வயதை அதிகமாகக் காட்டும் நோக்குடன் போலிக் கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைத் தயாரித்து, றிசானாவை சஊதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த வேலைவாய்ப்பு முகர்வர்கள், உப முகவர்கள் அனைவரும் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. சஊதி அரேபிய நீதிமன்றத்தில் றிசானா கொலைக் குற்றம் சுமத்தப்பட்டபோது, றிசானா சார்பாக நாம் முன்வைத்துப் பேசிய பிரதான விடயம் – றிசானா 18 வயதை அடையா ஒரு பிள்ளை. அவரின் வயதை அதிகரித்து போலிக் கடவுச் சீட்டு மூலம் முகவர்கள் அனுப்பி வைத்து விட்டார்கள் என்பதாகும். ஆனால், அந்த நீதிமன்றத்தில் இந்த விடயம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உண்மையில், சம்பந்தப்பட்ட முகவர்களை நீதிமன்றத்தில் அப்போதே நிறுத்தி, இலங்கை அரசாங்கம் தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தால் சிலவேளை – றிசானாவின் கடவுச் சீட்டு போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை சஊதி அரேபிய நீதிமன்றம் ஏற்றிருந்திருக்கலாம். ஆனால், ஆமை வேகத்தில் அரசாங்கம் செயற்பட்டதால், அந்த சந்தர்பமும் இழக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு றிசானா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தும், 2011 ஆம் ஆண்டுதான் இலங்கையில் அவரை அனுப்பி வைத்த முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இதுபோலதான் றிசானாவின் விவகாரத்தில் அரசாங்கத்தின் அத்தனை முயற்சிகளும் அலட்சியத்தன்மையோடும், பொய் முகம் கொண்டதாகவும் இருந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

உதாரணமாக, றிசானாவின் உயிரைக் காப்பாற்றத் தவறியமைக்கான பொறுப்புகளை இலங்கை அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களுமே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பஷில் பெர்ணான்டோ குற்றம் சாட்டியிருக்கின்றார். றிசானாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெற்றோருடன் நேரடியாகப் பேசி, அவர்களின் மன்னிப்பைப் பெற்றிருந்தால் மட்டுமே றிசானாவைக் காப்பாற்ற முடியும் என்கிற சூழ்நிலை இருந்தபோது, இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் சஊதி அரேபியாவுக்கு வந்து வெறுமனே தங்கியிருந்து விட்டுப் போனார்களே தவிர, இறந்த குழந்தையின் பெற்றோருடன் நேரடியாகப் பேசவேயில்லை என்று பஷில் பெர்ணான்டோ குற்றம் சுமத்துகின்றார்.

றிசானாவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசவில்லை என்கிற இந்தக் குற்றச்சாட்டினை – இதுவரை (வெள்ளிக்கிமை மாலை 6.00 மணிவரை) இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் நேரடியாக மறுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே போன்று றிசானா விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் நடந்து கொண்ட சில விடயங்களை வைத்துப் பார்க்கின்றபோது, றிசானாவை தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசும், ஆட்சியாளர்களும் மனது வைத்துத்தான் செயற்பட்டார்களா என்பதில் சந்தேகம் உள்ளது என்கிறார் நமது நண்பரான ஊடகவியலாளர் ஒருவர்.

நண்பரின் சந்தேகத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. றிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

தூதுவர் அஹமட் ஏ. ஜவாட்

தூதுவர் அஹமட் ஏ. ஜவாட்

வகையில் இலங்கை அரசாங்கம் – சஊதி அரேபியாவுக்கான தனது தூதுவரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக மறுநாள் அறிவித்தது. ஆனால், இதற்குப் பின்னால் இருந்த இலங்கையின் கேவலமான அரசியலை தெரிந்தோ தெரியாமலோ அன்றைய தினமே பி.பி.சி. செய்திச் சேவையில் போட்டுடைத்தார் சஊதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஹமட் ஏ ஜவாட்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் அழைக்கப்படவில்லை என்றும், தனது 03 ஆண்டு காலக் கடமை ஜனவரி 09 ஆம் திகதியுடன் முடிவடைந்ததால்தான் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆக, றிசானா விடயத்தில் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் நமது காதுகளில் ஏகத்துக்குப் பூச்சுற்றியிருக்கிறார்கள். நல்லவர்கள் என்கிற முகமூடிகளை அணிந்து கொண்டு நம்முன்னே நடனமாடியிருக்கிறார்கள்.

ஆனால், றிசானாவின் மரணம் – அந்த முகமூடிகளையெல்லாம் கழன்று விழச் செய்திருக்கிறது!

(இந்தக் கட்டுரையை  13 ஜனவரி 2013 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

8 Responses to “கழன்று விழும் முக மூடிகள்!”

 1. உங்களின் இந்தக் கருத்துக்களை இன்ஷா அழ்ழாஹ், வரும் 20.01.2013ம் திகதி வெளிவரும் ‘வார உரைகல்’ அச்சு ஊடகத்தில் நன்றியுடன் மறுபிரசுரம் செய்ய நாடியுள்ளேன்.

 2. Azeen. M. Aboobacker Says:

  Great & Different view

 3. nawas Says:

  றிசானா விடயம் சர்வதேச அளவில் கொண்டு சென்றும் பலனில்லை .ரிசானாவிற்கு அங்கு உற்றார் உறவினர் ,தாயார் எல்லாம் அந்த டாக்டர் கிபாயாதான் .
  ரிசானாவை பற்றி அந்த டாக்டர் நன்கு அறிந்து இருப்பார்.றிசானா நிரபராதி என்று

 4. ZULFAN Says:

  UNMAI ORUNALUM OLINDIRUKKATHU

 5. nafla Says:

  ரோசம் கெட்ட அரசியல் வாதிகளுக்கும் சமுகவாதிகளுக்கும் ரோசமான கட்டுரை

 6. உண்மையை லாவகமாக எடுத்துரைக்கும் கட்டுரை.

  // “மிக வெளிப்படையாகச் சொன்னால், தனது குழந்தையைப் பராமரிக்க முடியாமல் – பாசை தெரியாத தேசமொன்றுக்கு வேலைக்காரப் பெண்ணாக அனுப்பி வைத்த றிசானாவின் தந்தை” // ???

  இதுதான் உண்மை. இதுதான் எனது ஆதங்கமும்….

 7. Dharshani Says:

  இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். றிஷானா குறித்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு செவி மடுத்து வந்த எனக்கு ஒரு இஸ்லாமியர் என்ன சொல்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இது ஒரு தரமான கட்டுரை, பல்வேறு மட்டங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டியது. தயவுசெய்து இதனை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்து ஏனைய ஊடகங்களில் எடுத்து செல்வது எல்லோரையும் சிந்திக்கவைக்கும்.

 8. siraj Says:

  ungalai poll elutharkalal unmaiyai veli kondu vara mudium,good article


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s