காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சூரியனைப் பிரிந்த கதை! 10 நவம்பர் 2012

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 2:27 பிப

மப்றூக்

சூரியனில் நேற்றைய காற்று நிகழ்சியை பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்த காலமது. வழமைபோல் வேலைக்குச் சென்றேன். எனது வேலை நேரம் பிற்பகல் 4.00 மணியிலிருந்து இரவு 12.00 வரையாகும். அலுவலக வாயிலில்தான் வரவுப் பதிவேட்டுப் புத்தகம் இருக்கும். கையொப்பம் வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கையொப்பம் இடுவதற்காக புத்தகத்தை எடுத்தபோது பாதுகாப்பு உத்தியோகத்தர் வந்து, அலுவலகத்தின் மனிதவள முகாமையாளர் (HRM) தன்னைச் சந்திக்குமாறு கூறியதாகச் சொன்னார். வரவுப் பதிவேட்டை வைத்து விட்டு மனிதவள முகாமையாளரைப் பார்க்கச் சென்றேன்!

இப்போதும் ஞாபகமிருக்கிறது. நீல நிற ஷேட், அதற்குப் பொருத்தமான ‘டை’யுடன் HRM  தனது கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்தார். கதவைத் தட்டினேன் உள்ளே வருமாறு சைகை காட்டினார். நுழைந்தேன். உட்காருங்கள் என்றார். அவர் முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டேன்.

இந்த இடத்தில் எங்கள் அலுவலகத்தின் மனிதவள முகாமையாளர் பற்றி சொல்லியே ஆக வேண்டும். பெயர் சிந்தக டி அல்விஸ். கெட்டிக்காரர். எப்போதும் ஒரு மெல்லிய புன்னகையைச் சுமந்திருப்பார். பக்கத்தில் இடி விழுந்தால் கூட – அலட்டிக் கொள்ளாத மனிதர். நான் அவரை ‘சிந்தக’ என்றே அழைப்பேன். என்மீது அவருக்கு ஒரு பிடிப்பிருந்தது பற்றி நான் அறிவேன்.

“நேற்று இரவு என்ன பிரச்சினை”? – சிந்தக திடீரெனக் கேட்டார். வழமையான புன்னகை அவர் முகத்தில் இல்லை. புரிந்து கொண்டேன். நேற்று இரவு ஆடிய நாடகத்தை சோடனை செய்து சொல்லியிருக்கிறார்கள். “பிரச்சினை என்ன என்று உங்களுக்குச் சொல்லப்படதுள்ளது என்பதை நான் தெரிந்து கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். அவருக்குச் சொல்லப்பட்டிருந்ததை எனக்குக் கூறினார்.

இந்தக் கதைக்கு முன்னர், உங்களுக்கு ஒரு கிளைக்கதை சொல்ல வேண்டும். உண்மையில் அது கிளைக் கதையல்ல. நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கதைக்கான கருவே, நான் சொல்லப் போகின்ற கதைதான்!

சூரியன் வானொலியில் வெற்றிகரமான நிகழ்ச்சிகளிலொன்று  நேற்றைய காற்று! அந்த நிகழ்சியினை அப்போது நான்தான் செய்து வந்தேன் என்று மேலே சொல்லியிருக்கிறேன். எனக்கு முன்னர், ரஊப், வெள்ளையன், ரமணன் போன்றோரும் இந்த நிகழ்சியை பொறுப்பெடுத்துச் செய்து வந்துள்ளார்கள். இந்த நிகழ்சி  – வெற்றி பெறுவதற்கு அதை தயாரித்து வழங்கும் அறிவிப்பாளர்களின் திறமைதான் காரணமாகும். ஒவ்வொரு நேற்றைய காற்றுக்கும் – ஒரு பரீட்சைக்குத் தயாராகுவது போல் உழைத்திருக்கின்றேன். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே – பாடல்களை மட்டும் நம்பி கலையகத்துக்குள் நுழைவேன்!

ஆகக்குறைந்தது, வாரத்துக்கு ஒரு தடவையாவது ‘சிறப்பு நேற்றைய காற்று’ நிகழ்சிகளை வழங்குவேன். ஓர் இசையமைப்பாளர் பற்றி, பாடகர் பற்றி, கவிஞர் பற்றி, அல்லது கவிதைகள் பற்றி, அல்லது இவர்களில் ஒருவருடைய நேர்காணலைக் கொண்டு சிறப்பு நிகழ்சியினை அலங்கரிப்பேன்!

சிறப்பு நிகழ்சியை வழங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே – அந்த நிகழ்சி பற்றிய முன்னோட்ட விளம்பரத்தினை வழங்குவேன். ‘இந்த’ நாளில் ஒலிபரப்பாகும் நேற்றைய காற்று –  ‘இது’ அல்லது ‘இவர்’ பற்றிய சிறப்பு நிகழ்சியாக வருகிறது – கேளுங்கள் என்பது அந்த முன்னோட்ட விளம்பரத்தின் சாராம்சமாக இருக்கும். நேயர்களின் ஆர்வத்தினைத் தூண்டுவதற்காகவும், அந்த நேரத்தில் வானொலியருகே  நேயர்களைக் கொண்டு வருவதற்காகவும் இப்படிச் செய்வோம்.

இந்தக் காலப்பகுதியில் சூரியனின் நிகழ்சி முகாமையாளராக அந்த ‘ஆசாமி’ பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த ‘ஆசாமி’ மீது எங்கள் கம்பனியின் பெரியவருக்கு (நிருவாக இயக்குநர்) அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை. அவ்வாறு நம்பிக்கை இல்லாமல் போனமைக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் உள்ளன. அவற்றை பிறகு சொல்கிறேன். இதனால், சூரியன் வானொலியின் நிகழ்சிப் பிரிவை முகாமை செய்வதற்கு – ஆசாமியை தனியாக விடுவதில்லை என்கிற முடிவுக்கு நிருவாக இயக்குநர் வந்திருந்தார். எனவே, அப்போது சூரியன் செய்திப் பிரிவின் முகாமையாளராக இருந்த நடராஜா குருபரனிடம் சூரியன் நிகழ்சிப் பிரிவினை மேற்பார்வை செய்யும் பொறுப்பு மேலதிகமாக வழங்கப்பட்டது.

இந் நிலையானது ‘ஆசாமி’க்குப் பெருத்த அவமானமாகப் போயிற்று. சூரியன் நிகழ்சிப் பிரிவின் முகாமையாளர் என்கிற பெயரில் ‘ஆசாமி’ எந்தக் கடிதத்திலும் தனித்து கையொப்பம் இடுவதற்கு அனுமதியில்லை. குரு அண்ணாவும் (நடராஜா குருபரன்) சேர்ந்து கையொப்பம் இட்டால்தான் அந்தக் கடிதம் செல்லுபடியாகும் என்கிற நிலை வந்தது!

இது ஒருபுறமிருக்க, நமது ‘ஆசாமி’க்கு நேற்றைய காற்று நிகழ்சியினை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை  நீண்ட நாளாக இருந்து வந்திருக்கிறது. நான் விடுமுறை பெற்றுக் கொண்டால், நேற்றைய காற்றை செய்வதற்கு பழக்கப்பட்ட சில அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். ஆனாலும், நான் வராத சில நாட்களில் ‘ஆசாமி’யே நேற்றைய காற்றினைச் செய்தார். ஒரு நாள் “இன்று நான் நேற்றைய காற்று நிகழ்சியினைச் செய்யட்டுமா?  நீ விடுமுறை எடுத்துக் கொள்கிறாயா?” என்று ‘ஆசாமி’ என்னிடம் நேரடியாகவே கேட்டார். எனக்கும் லீவு கிடைத்தால் போதும் என்கிற மனநிலை. “சரி” என்றேன்!

நேற்றைய காற்று நிகழ்சியை இலக்கிய வாசனையோடு கட்டமைத்து வைத்திருந்தேன்! சரியாகச் சொன்னால், ‘வைத்திருந்தேன்’ என்று ஒருமையில் சொல்ல முடியாது, இதற்கு முன்பு நிகழ்சியை வழங்கியவர்களும் இலக்கிய வாசனையோடு இந்த நிகழ்சியைக் கொண்டு செல்வதற்கு உழைத்திருந்தார்கள்.

இதனால், ‘ஆசாமி’க்கு நேற்றைய காற்று நிகழ்சியினை வெற்றிகரமாக வழங்க முடியாமல் போயிற்று. இலக்கியம் அல்லது இலக்கிய வாசனையோடு பேசுவதற்குப் பதிலாக, நேற்றைய காற்றில் ‘ஆசாமி’ ‘கதை’ சொல்லிக் கொண்டிருந்தார். மட்டுமல்லாமல், இரவின் காதுகளில் மயிலிறகுகளால் வருடும் குரலும் ஆசாமிக்கு இல்லை. அவரின்  ‘கலகல’ குரலானது நேற்றைய காற்று நிகழ்சிக்கு ஒத்துவராதது. அது இரவின் மென்மையைக் காயப்படுத்தி விடும்!

இன்னொருபுறம், நேற்றைய காற்று நிழக்சியினை நான் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் ‘ஆசாமி’ தொந்தரவு தரத் தொடங்கினார். அதிலும், சிறப்பு நேற்றைய காற்று நிகழ்சியினை வழங்கும் நாட்களில் ‘ஆசாமி’ தவறாமல் தொந்தரவு செய்தார். தொந்தரவு என்றால் – அது வித்தியாசமாக இருக்கும். அறிவிப்பாளர்கள் பிரச்சினையற்ற, இலகுவான மனதுடன் பரபரப்பின்றி இருக்கும் போதுதான் நிகழ்சிகளைச் சிறப்பாக வழங்க முடியும்! இந்த உளவியல் ‘ஆசாமி’க்கும் தெரியும். அதனால், நான் நேற்றைய காற்று நிகழ்சிகளை குறிப்பாக, சிறப்பு நிகழ்சிகளை வழங்கும் போது என்னை ‘ரென்சனா’க்கும் முயற்சிகளில் ‘ஆசாமி ‘இறங்கி வந்தார்.

ஒரு நாள், சிறப்பு நேற்றைய காற்று நிகழ்சியொன்றினைச் செய்து கொண்டிருந்தேன். அப்போது சுமார் 10.00 மணியிருக்கும். கலையகத்தில் இருக்கும் பிரத்தியேக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்து ஹலோ சொன்னேன். மறுமுனையில் ‘ஆசாமி’! குரலை சீரியஸாக வைத்துக் கொண்டு “மப்றூக், ஏன் நீ 9.30 க்கு டைம் செக் (Time check) எடுக்கவில்லை” என்று கேட்டார். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் அப்போது சூரியனில் நேரம் சொல்வதற்கு விளம்பரதாரர்கள் அனுசரணை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால், அரை மணிக்கொருமுறை நேரம் சொல்வதை தவற விட முடியாது. விளம்பரதாரர்கள் கோபித்துக் கொண்டால் கம்பனிக்கு லட்சக் கணக்கில் நஷ்டமாகி விடும்.

‘ஆசாமி’ அப்படிக் கேட்டதும் நான் உசாராகி விட்டேன். 9.30 மணிக்கு நேரத்தைச் சொன்னது எனக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. தொந்தரவு செய்வதற்காகவே ‘ஆசாமி’  வந்திருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டேன். “9.30 மணிக்கு நீ வானொலி கேட்டாயா?” என்று ஆசாமியிடம் கேட்டேன். (ஆசாமியும் நானும் நீ, போடா – வாடா என்றுதான் பேசிக் கொள்வோம்) “இல்லை, 9.30 க்கு – நீ நேரம் சொல்லவில்லை என்று நண்பரொருவர் கோல் எடுத்துச் சொன்னார்” என்றார் ‘ஆசாமி’! “ஆட்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு, நான் நிகழ்சி செய்யும் போது என்னைத் தொந்தரவு செய்யாதே பிளீஸ்” என்றேன். “சொரி மச்சான். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ரேடியோ கேட்க ஆரம்பித்தேன். நிகழ்சி நல்லாயிருக்குடா. நீ செய்” என்று கூறிவிட்டு, ‘ஆசாமி’ தொடர்பைத் துண்டித்தார்.

இது ஓர் உதாரணம்தான், சிலவேளை, ‘கலையகத்தை விட்டு ஓடி விடுவோமா’ என்கிற நிலையினை ஆசாமியின் தொந்தரவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், நிகழ்சியை செய்ய வேண்டும் என்பதற்காக – ஆத்திரத்தினை மென்று விழுங்கியிருக்கின்றேன்.

சம்பவ தினம் நேரம் 10.30 இருக்கும். நேற்றைய காற்று நிகழ்சியினை வழங்கிக் கொண்டிருந்தேன். முன்பெல்லாம் நேற்றைய காற்று நிகழ்சியினை 9.30 மணிக்கு ஆரம்பித்து விடுவோம். 8.45 இல் இருந்து 9.00 மணிவரை இரவு நேரச் செய்தியறிக்கை. 9.00 மணிக்குப் பிறகு மரண அறிவித்தல்கள் இருக்கும். அவற்றினை வாசித்து முடிய எப்படியோ 9.30 ஆகி விடும். அதனால், 9.30இல் இருந்து 12 மணிவரை நேற்றைய காற்று என்று வைத்திருந்தோம்.

ஆனால், இடையில் சில காலம் சூரியனில் அரை மணிநேர நாடகமொன்று இடம்பெறத் தொடங்கியது. அப்படியொரு நாடகத்தினை ஒலிபரப்ப வேண்டும் என்பது  நிருவாக இயக்குநரின் விருப்பமாகும். அதற்குப் பொருத்தமானதொரு நேரம் எது என்று நிருவாக இயக்குநர் கேட்டபோது, நேற்றைய காற்றின் ஆரம்ப நேரத்தினை ‘ஆசாமி’ தெரிவு செய்து கொடுத்திருந்தார். அதனால், 9.30 இல் இருந்து 10.00 மணிவரை நாடகம்! 10.00 இல் இருந்து 12.00 மணிவரை நேற்றைய காற்று என்றானது.

பாடலொன்றினை நான் ஒலிபரப்பிக் கொண்டிருந்த வேளை, அலுவலக பிரத்தியேகத் தொலைபேசிக்கு ‘ஆசாமி’யின் அழைப்பு வந்தது. வழமைபோல் குரலை சீரியஸ் படுத்தியிருந்தார். “என்ன” என்று கேட்டேன். “இன்டைக்கு நாடகத்துக்கிடையில நீ ஏன் பாட்டுப் போடவில்லை” என்று கேட்டார்.

நாம் ஒலிபரப்பும் நாடகங்கள் 20 அல்லது 25 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். அந்த நாடகத்தினை 04 நிமிடங்கள் கொண்ட ஆறு துண்டுகளாகப் பிரித்திருப்பார்கள். நாடகத்தின் ஒவ்வொரு 04 நிமிடங்களைக் கொண்ட பகுதியும் நிறைவடையும் போது,  ஒரு பாடலை ஒலிபரப்ப வேண்டும். அதற்குப் பிறகுதான் நாடகத்தின் அடுத்த துண்டினை ஒலிபரப்ப வேண்டும். பாடலை முழுவதுமாக ஒலிபரப்பத் தேவையில்லை, பல்லவியுடன் அல்லது ஒரு சரணத்துடன் முடித்து வெட்டி விடலாம் என்றும் நமக்குக் கூறப்பட்டிருந்தது. அதுபோல்தான் நாமும் செய்து வந்தோம்.

ஆனால், குறித்த தினம் – நாடகத்துக்கிடையில் பாடல்களை ஒலிபரப்புவதற்குரிய நேரம் இருக்கவில்லை. அன்று அதிகளவான மரண அறிவித்தல்கள் இருந்தன. தவிரவும், விளம்பரங்களும் அதிகளவில் இருந்தன. இவை அனைத்துக்கும் அப்பால் நாடகம் 30 நிமிடங்களைக் கொண்டதாகவும்  இருந்தது. இதனால், நாடகத்தை நிறைவு செய்து, நேற்றைய காற்று நிகழ்சியினை ஆரம்பிக்கவே இரவு 10.10 ஆகி விட்டது. வழமைபோல் நாடகத்துக்கிடையே பாடல்களையும் ஒலிபரப்பியிருந்தால் நேரம் 10.20 ஆகியிருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் உரிய நேரங்களுக்கான நேர அறிவித்தல்கள், விளம்பரங்கள் தவற விடப்பட்டிருக்கும். பாடலை ஒலிபரப்புவது முக்கியமா? உரிய நேரத்தில் உரிய விளம்பரங்களை ஒலிபரப்புவது முக்கியமா என்று யோசித்ததில் – உரிய வேளையில் நேர அறிவித்தல்களையும், விளம்பரங்களையும் ஒலிபரப்புவதே எனக்கு முக்கியமாகப்பட்டது.

அதனால், நாடகத்துக்கிடையில் பாடல்களை ஒலிபரப்புவதைத் தவிர்த்து விட்டு, உரிய விளம்பரங்களை ஒலிபரப்பி விட்டு, 10.10 மணியளவில் நேற்றைய காற்று நிகழ்சியினை தொடங்கினேன். இதேவேளை, நாடகங்களுக்கிடையில் பாடல்கள் ஒலிபரப்ப முடியாமை குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் கலையகத்தினுள் இருந்த ‘லொக் புக்’ (Log book) இல் (தினசரி குறிப்புப் புத்தகம்) எழுதி வைத்தேன். இதன்போதுதான் ‘ஆசாமி’ தொலைபேசியில் வந்து ஏன் பாடல்களை ஒலிபரப்பவில்லை என்று கேட்டார்.

நான் விளக்கினேன். பாடல்களை ஒலிபரப்பியிருந்தால் ஒலிபரப்பு அட்டவணை குழம்பிப் போயிருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினேன். ‘ஆசாமி’ விடுவதாக இல்லை. நான் சொன்னது அவருக்குப் புரியாமலில்லை. ஆனால், என்னைத் தொந்தரவு செய்வதுதான் ‘ஆசாமி’யின் நோக்கமாக இருந்தது. ‘ஆசாமி’ பேசிக் கொண்டேயிருந்தார். இதனால், எனக்கு நிகழ்சியினை வழங்க முடியவில்லை. நேற்றைய காற்று என்ற பெயரில் அடுத்தடுத்து பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டே ‘ஆசாமி’க்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் ‘ஆசாமி’ தனது மனதில் இருந்ததை போட்டுடைத்தார். “நேற்றைய காற்று நிகழ்சி பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், நாடகத்துக்கிடையில் பாடல்களை நீ ஒலிபரப்பியே இருக்க வேண்டும்” என்றார். கிட்டத்தட்ட தொலைபேசியினூடாகத் துள்ளிக் குதித்தார். எனக்கென்றால் பொறுமை எல்லை தட்டியது. “நான் நிகழ்சி செய்யவேண்டும். இது தொடர்பில் விளக்கமாக ‘லொக் புக்’ இல் எழுதியிருக்கின்றேன். மிகுதியை நாளை பேசிக் கொள்வோம்” என்று கூறிவிட்டு தொலைபேசியை கட் பண்ணினேன். ‘ஆசாமி’ விடுவதாக இல்லை. மீண்டும் தொலைபேசினார். தான் பொறுப்பதிகாரியென்றும், தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்றும் வார்த்தைகளால் கூத்தாடினார். தவிர்த்திருக்க வேண்டிய சில வார்த்தைப் பிரயோகங்களை என்மீது விசிறினார். ஆதற்கு மேல் என்னால்  பொறுமை காக்க முடியவில்லை. ‘ஆசாமி’யைக் கொச்சைப்படுத்தும் மிக மோசமானதொரு வார்த்தையைக் கூறிவிட்டு தொலைபேசியை அடித்து வைத்தேன்!

பிறகு, கலையகத்தில் இருந்தவாறே குரு அண்ணாவுக்குக் ‘கோல்’ எடுத்து – நடந்தவை அனைத்தையும் கூறினேன். பாடல்களை ஏன் ஒலிபரப்ப முடியாமல் போயிற்று என்பதை அவருக்கு விளக்கினேன். “நாளை அலுவலகத்துக்கு வா பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்றார் குரு அண்ணா.

“நேற்றிரவு என்ன நடந்தது”? என்று என்னிடம் கேட்ட, எனது கம்பனியின் மனிதவள முகாமையாளர் சிந்தக்கவிடம் ஒன்று விடாமல் நடந்தவற்றினைக் கூறினேன். சிந்தக்க என்னிடம் ஒரு கடிதமொன்றினை நீட்டியினார். வாங்கிப் பார்த்தேன். ‘ஆசாமி’யும் குரு அண்ணாவும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தார்கள். அது எனக்கு எதிரான முறைப்பாட்டுக் கடிதம் என்பதை வாசித்த போது புரிந்து கொண்டேன். அந்தக் கடிதத்தில் என்மீது ஏராளமான குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. நான் மிக மோசமான செயல் திறன் கொண்டவர். வேண்டுமென்றே பாடல்களை ஒலிக்க விடாமல் நாடகத்தினை ஒலிபரப்பியிருந்தேன். அதைச் சுட்டிக் காட்டிய நிகழ்சி அதிகாரியிடம் கீழ்படிவின்றி நடந்து கொண்டேன். நிகழ்சி அதிகாரியை மோசமான வார்த்தைகளால் திட்டினேன் என்று என்மீதான குற்றச் சாட்டுகள் அந்தக் கடிதத்தில் நீண்டிருந்தன.

நிதானமாக வாசித்து விட்டு கடிதத்தினை சிந்தகவிடம் கொடுத்தேன். “இப்படியொரு கடிதத்தினை நான் எதிர்பார்த்தேன். ஆனால், குரு அண்ணாவின் கையொப்பம் அதில் இருக்கும் என்பதை நான் துளியளவும் எதிர்பார்க்கவில்லை சிந்தக்க” என்றேன். சிந்தக்க பதிலெதுவும் பேசவில்லை! எனது நிகழ்சிகளின் போது ‘ஆசாமி’ செய்யும் தொந்தரவு பற்றி HRM இடம் விளக்கினேன். அந்தத் தொந்தரவின் ஓர் அங்கம்தான் இது என்றேன். புரிந்து கொண்டது போல் தலையசைத்தார்.

பிறகு, சிந்தக கேட்டார்; “என்ன செய்வதாக உத்தேசம் மப்றூக்”?. “புரியவில்லை” என்றேன். “உங்கள் தரப்பு நியாயங்கள் எனக்குப் புரிகிறது. ஆனால், நிகழ்சி பொறுப்பதிகாரி சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டியுள்ளது. எனவே, அவரோடு நீங்கள் அனுசரித்துத்தான் போக வேண்டும்” என்றார். “என்னால் இனி அதற்கு முடியாது. ‘ஆசாமி’ என்னை ‘வெட்டு’வதில் குறியாக இருக்கின்றார். எனவே, இனி ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றி முறைப்பாடுகள் வந்து கொண்டேயிகுக்கும். எனவே, அவரின் கீழ் எனக்குப் பணியாற்ற முடியாது. நான் நேரடியாக MD இன் (நிருவாக இயக்குநர்) கீழ் பணியாற்றவே விரும்புகிறேன். எனது பிரச்சினைகள், தேவைகளை MD யிடம் நேரடியாகப் பேசவே விரும்புகிறேன” என்றேன். “அப்படி முடியாது” என்றார் HRM!

என்னுடன் பேசிக் கொண்டே – இரண்டு பக்கங்களைக் கொண்ட இன்னுமொரு கடித்தினையும் என் முன் வைத்தார் சிந்தக. அது எங்கள் கம்பனியுடைய கடிதத் தலைப்பைக் கொண்டதாக இருந்தது. என்ன என்று புரிந்து கொண்டேன். சிந்தக பேசினார்;  “அப்படியென்றால், உங்கள் மீதான குற்றச் சாட்டுகளை நாம் விசாரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதுவரை நீங்கள் நிகழ்சிகள் செய்ய முடியாது. விசாரணை எப்போது என்பதை நாங்கள் பின்னர் அறிவிப்போம். அதைத்தான் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளோம். இரண்டு பிரதிகள் இருக்கின்றன. கையொப்பமிட்டு ஒரு பிரதியை எடுத்துக் கொள்ளுங்கள்”! அதாவது, ‘ஆசாமி’யை அனுசரித்து வேலை செய்! அல்லது வெளியே போ!! என்கிறார்கள்.

எதையும் யோசிக்கவில்லை. மேசையிலிருந்த கடிதப் பிரதியொன்றில் கையொப்பம் இட்டுக் கொடுத்து விட்டு, எனக்கான பிரதியை எடுத்துக் கொண்டேன். இனி, இங்கு வேலை இல்லை என்பது புரிந்தது. இந்த வேலைதான் எனது வருமானத்தின் வழியாகும். இந்த வருமானத்தினை நம்பியே கொழும்பில் தனியாளாக வாழ்ந்து வருகிறேன். இந்த வேலை இல்லாது விட்டால் எனது அடுத்த கணங்கள் சூனியமாகி விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனாலும், இரண்டு, நான்கு, எட்டு, எட்டிரண்டு பதினாறாக – ‘ஆசாமி’ முன் வளைந்து முறிந்து சமரசம் செய்து கொள்ள என்னால் முடியவேயில்லை. தொழிலை இழப்பதை விடவும், அனுசரித்துப் போவதுதான் சாதுரியமான முடிவாக மற்றவர்களால் பார்க்கப்படும். எனது இந்த முடிவை – எனக்கு நெருக்கமானவர்களே ‘மடத்தனமானது’ என்றும் விமர்சிப்பார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆயினும், ‘ஆசாமி’கள் போன்றோர் முன்பாக வளைந்து போகத் தெரியாத முள்ளந்தண்டினை எனக்குள் வைத்துப் படைத்த அந்த இறைவனை மட்டுமே நம்பி – ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 35 ஆவது மாடிலிலிருந்து நான் வெளியேறினேன்!

ஆனாலும், மிகச் சரியாக 19 நாட்களில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வேலை கிடைத்தது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடகவியலாளரானேன். சரியாகச் சொன்னால், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ் இணையத்தளத்தினை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்!

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இணைந்த பிறகு, சூரியன் வானொலியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டேன். எனது ராஜிநாமாக் கடிதத்தினை – சூரியனின் இப்போதைய திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளர் நண்பர் அஷ்ரப்பிடம் அப்போது அனுப்பி வைத்தேன்!

காலம் இப்படி ஓடிக்கொண்டிருந்த போதுதான் ஒரு நாள் மீண்டும் சூரியனுக்கு வருமாறு அழைக்கப்பட்டேன். அஷ்ரப் மூலமாகவே அந்த அழைப்புக் கிடைத்தது. உடனடியாக  “சரி” என்றேன். காரணம், அப்போது, சூரியனில் ‘ஆசாமி’ இல்லை! சூரியன் சிலகாலம் தடைசெய்யப்பட்டு இருந்தபோது, ‘ஆசாமி’ வேறொரு வானொலிக்குச் சென்று விட்டார்.

தனது சேவல் கூவாமல் பொழுது விடியாது என்று நம்பிக் கொண்டிருந்த கிராமத்தவனைப் போல – ‘தான் இல்லாத வானொலிகள் வாழாது’ என்றுதான் ஆசாமியும் எண்ணிக் கொண்டிருந்தார்.  ஆனால், அது  இரண்டாவது முறையாகவும் பொய்த்துப் போனது. முன்பை விடவும், வீறு கொண்டு எழுந்தது சூரியன்.

‘ஆசாமி’க்கு எதிர்ப் பாசறையில் இருந்து கொண்டு மீண்டும் நேற்றைய காற்றில் எனது சிறகுகளை விரிக்கத் தொடங்கினேன்!!
o

Advertisements
 

6 Responses to “சூரியனைப் பிரிந்த கதை!”

 1. munas Says:

  வாவ் உங்கள் சொந்தக்கதையினை ஒரு சிறந்த கட்டுரையாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள் ஆனால் இவ்வளவு கூறிய நீங்கள் ஏன் அந்த ஆசாமி யார் என்று கூறவில்லை, மீண்டும் சூரியனுக்கு சென்றீர்கள்……. என்ன நடந்தது கதை தொடருமா..? இன்று வரை…

 2. mohamed fouzan Says:

  கடந்த வந்த பாதையின் நீங்கள் சுமந்த ஒரு வலியினை சுவாரஸ்யமாய் இறக்கியுள்ளீர்கள்.. ஒவ்வொருவருக்கும் இது போன்ற ரணங்கள் நிறையவே இருக்கும்…. அவற்றினை மீட்டும் வீணையிண் நாதமாய் உங்கள் சுவடு.. பீனிக்ஸ் போல் மீண்டெழுந்த உங்களுக்கு .. இறை துணையாகட்டும்…

 3. saihana kamarudeen Says:

  இது போன்ற ஆசாமிகள் இருந்தாலென்ன அவர்களுக்கு ஆப்படிக்கும் சாமிகளும் உலகில் இருக்கத்தான் செய்வார்கள்

 4. Mansoor A. Cader Says:

  I like your style of presentation.

 5. shalim Says:

  நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த ஒரு விடயத்தை பதிவிட்டுள்ளீர்கள். ரொம்ப நன்றி. சில காலங்களுக்கு முன்னர் நான் இவ்வாறு ஏதோ நடந்திருக்கலாம் என ஊகித்திருந்தேன். மீண்டும் நீங்கள் சூரியனை பிரிந்த காரணத்தை தெரிவிக்கவில்லையே…. உண்மையல் நான் மீண்டும் கேட்க விரும்பும் குரல்களுள் உங்கள் குரலும் ஒன்று…. அதுவும் சூரியனில்…. ஆசா மிக்கு அனுதாபத்தை தான் சொல்லலாம்…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s