காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

இமைகளுக்கிடையில் வசிக்கும் கதைகள்! 20 ஒக்ரோபர் 2012

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 12:52 பிப

color-dotமப்றூக்

(சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின சிறப்புக் கட்டுரை
With white cane‘அப்போது என்னோட மகனார் அப்துல் சலாமுக்கு 04 வயது. ஒரு நாள் காலை நேரம். பிள்ளையை காலைக் கடன் முடிப்பதற்கு வெளியில் கொண்டு போய் விட்டேன். திடீரென பிள்ளை கூட்பிட்டது. என்ன என்று போய்க் கேட்டேன். ‘உம்மா எனக்கு ஒண்டும் தெரியுது இல்ல. பார்க்க இயலாமல் இருக்குது’ என்று மகன் கூறினார். பிள்ளைக்கு திடீரென்று கண்பார்வை இல்லாமல் போயிற்று.

மகனை எடுத்துக் கொண்டு – ஊர் ஆசுபத்திருக்கு போனோம். அங்கு கொஞ்ச நாள் வச்சிருந்து சிகிச்சை பண்ணினாங்க, ஒண்டும் ஆகல. பிறகு அம்பாறை, பதுளை, கண்டி, கொழும்பு ஆசுபத்திகளுக்கு மாத்திக் கொண்டேயிருந்தாங்க. நாலஞ்சு மாசம் ஆனது. ஆனா – பிள்ளைக்கு பார்வை கிடைக்கல. அவரோட கண் நரம்புகள் செத்துப் போச்சுதாம். இனி பார்வை வராதாம் என்றார்கள்’!அப்துல் சலாமுடைய தாயார் சொல்லி முடித்த போது – அவரின் கண்கள் ஈரமாகி இருந்தன. எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஒக்டோபர் 15 – சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம். விழிப்புலனற்றவர்களின் அடையாளமாக வெள்ளைப் பிரம்பு பார்க்கப்படுகின்றது. பார்வையற்றவர்களின் திறமைகளை பாராட்டிக் கௌரவிப்பதற்கும், அவர்கள் தொடர்பில் சமூக கவனத்தை ஈர்ப்பதற்கும் வெள்ளைப் பிரம்பு தினம் உதவுகிறது.சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தில் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டும் என்பதற்காக நாம் அப்துல் சலாமை – சம்மாந்துறையிலுள்ள அவருடைய இருப்பிடத்துக்குச் சென்று சந்தித்தோம்.

அப்போது, அப்துல் சலாமுடைய சகோதரர்கள், நண்பர்கள், அவருக்குக் கற்பித்த ஆசிரியர் மற்றும் அவரின் தாயாரையும் சந்தித்துப் பேசக் கிடைத்தது. அப்துல் சலாம் – பிறவியில் பார்வையை இழக்கவில்லை. சின்ன வயதில்தான் – அவருக்கு கண் பார்வை இல்லாமல் போயிருக்கின்றது. திடீரென அப்துல் சலாமுக்கு பார்வை எப்படி இல்லாமல் போனது? என்று அவரின் தாயாரிடம் நாம் விசாரித்தோம். அப்போது, அவர் கூறிய கதையைத்தான் ஆரம்ப வரிகளில் நீங்கள் படித்தீர்கள்.

அப்துல் சலாமுக்கு இப்போது 23 வயது. அழகான இளைஞர். சிரித்த முகத்துடனேயே இருக்கின்றார். கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதி – சிறந்த சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கின்றார்.நான்கு வயதில் பார்வையை திடீரென இழந்ததால், தன்னுடைய ஆரம்பக் கல்வியை அப்துல் சலாம் 13ஆவது வயதிலேயே தொடங்கினார்.

‘மகனை திஹாரியிலுள்ள மாற்றுத் திறனாளிகள் பாடசாலையில் சேர்க்குமாறு பலரும் கூறினார்கள். எங்களுக்கென்றால் விருப்பமிருக்கவில்லை. கண் தெரியாத பிள்ளையை தனியாக பாடசாலையில் விட்டால் கஷ்டப்படும் என்று நினைத்தோம். ஆனால், மகன் அப்துல் சலாம் – படிக்க வேண்டும் என்றார். தன்னை திஹாரிய பாடசாலையில் சேர்க்குமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். அரை மனதுடன்தான் அவரை – அங்கு சேர்த்தோம்’ என்றார் அப்துல் சலாமுடைய தாயார்.

‘திஹாரிய பாடசாலையை என்னால் மறக்க முடியாது. 2003ஆம் ஆண்டு அந்தப் பாடசாலையில் சேர்ந்தேன். எனக்கு தமிழ், ஆங்கில மொழிகளையும், கணிதத்தினையும் கற்றுத் தந்தார்கள். ‘பிரெய்ல்’ வடிவத்தில் எழுதுவதற்கும் சொல்லித் தந்தார்கள். சில மாதங்களிலேயே நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. என்னிடமிருந்த ஆர்வத்தினைக் கண்டு, பாடசாலையில் சேர்ந்த நான்காவது மாதத்திலேயே முதலாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு என்னை உயர்த்தி விட்டார்கள். 2008ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தினை திஹாரிய பாடசாலையில் எழுதினேன்’ என்று – அப்துல் சலாம் தனது பாடசாலை அனுபவத்தினை நினைவு கூர்ந்தார்.

With mother

தாயாருடன் அப்துல் சலாம்

அப்துல் சலாம் ஓர் ஆச்சரியக் குறியீடாகவே நமக்குத் தெரிந்தார். பார்வை இல்லாமையால் வாழ்வில் அவர் எதையும் இழக்கவில்லை என்பதை உணர முடிந்தது. தனது மடிக் கணினியை வைத்துக் கொண்டு மிகவும் லாவகமாக தட்டச்சு செய்கின்றார். கையடக்கத் தொலைபேசியில் தனக்குத் தேவையானவர்களின் பெயர்களைத் தேடியெடுத்து – பேசுகின்றார். பார்வையற்றவர்களுக்கான ‘குரல் மென்பொருளை’ மேற்படி சாதனங்களில் நிறுவி வைத்துள்ளதால், அவற்றினைக் கையாள்வது அவருக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் அப்துல் சலாம் பேசுகின்றார், எழுதுகின்றார்.

திஹாரிய பாடசாலையை முடித்துக் கொண்டு, அப்துல் சலாம் சம்மாந்துறைக்கு வந்தார். உயர் தரம் படிப்படிக்க வேண்டும் என்கிற விருப்பம் உருவானது. சம்மாந்துறை மத்திய கல்லூரியில் சேர்ந்தார். கலைப் பிரிவைத் தேர்வு செய்து படித்தார். 2011ஆம் ஆண்டு எழுதிய உயர்தரப் பரீட்சையில் சிறப்பான சித்தி கிடைத்தது. இப்போது – பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார்.

அப்துல் சலாம் – குடும்பத்தில் கடைசிப் பிள்ளை. 06 சகோதரர்களும், 02 சகோதரிகளும் உள்ளனர். தந்தையார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மரணித்து விட்டார். தனது சகோதரியின் வீட்டில்தான் அப்துல் சலாம் இப்போது தாயாருடன் வசித்து வருகின்றார்.

அப்துல் சலாமைச் சந்திக்கச் சென்றிருந்த போது, அவருடைய சகோதரர் ஒருவருடனும் பேசக் கிடைத்தது. அதன்போது, ஒரு விடயத்தினை உறுதி செய்துகொள்ள முடிந்தது. அப்துல் சலாமுடைய பலம் – அவரின் குடும்பம்தான்.

‘தமது அங்கயீனமான பிள்ளைகளை பல பெற்றோர் – அவமானமாகக் கருதுகின்றார்கள். அவ்வாறான பிள்ளைகளை வெளியில் காட்டுவதற்கே வெட்கப்படுகின்றார்கள். ஆனால், எங்கள் தம்பி அப்துல் சலாமை நாங்கள் ஆர்வத்துடன் கவனித்தோம். அவர் பார்வையில்லாதவர் என்பதால், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அப்துல் சலாமை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததில் எங்கள் தந்தையாரின் பங்கு உயர்வானது. தயவு செய்து, அங்கயீனமான பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தவர்கள், உங்கள் பிள்ளைகளை வெளியில் கொண்டு வாருங்கள். சமூகத்தில் அவர்களையும் சாதாரணமானதொரு பிரஜையாக்குவதற்கு உழையுங்கள்!’ என்று – அப்துல் சலாமுடைய சகோதரர் உருக்கமான தொனியில் பேசினார்.

நமது சந்திப்பின்போது, அப்துல் சலாம் கூறிய ஒரு விடயம் அதீத கவனத்துக்குரியதாக இருந்தது. ‘மாற்றுத் திறனாளிகள் அழகாக ஆடையணிய வேண்டும். அது அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தினைப் பெற்றுத் தரும். அநேகமாக, மாற்றுத் திறனாளிகள் சுயமாக இயங்க முடிவதில்லை. தமது நிலையை எண்ணி அவர்கள் கவலையாலும், மனச் சோர்வுகளாவும் பீடிக்கப்பட்டுடிருப்தால் – ஆடை விடயத்தில் ஆர்வம் செலுத்தாமல், கிடைத்ததை அணிந்து கொண்டு செல்வதுண்டு. இது கூடாது. நேர்த்தியாகவும், அழகாகவும் மாற்றுத் திறனாளிகள் ஆடை அணியும் போது, அவர்களைத் தரக்குறைவாகப் பார்ப்போர் கூட, தமது எண்ணத்தினை மாற்றிக் கொள்வார்கள். நான் எப்போதும், அழகாக ஆடை அணிவதில் ஆர்வமுடையவன். எனது இந்தப் பழக்கம் குறித்து மற்றவர்கள் சிலாகித்துப் பேசியதை நான் கேட்டிருக்கின்றேன்’ என்கிறார் அப்துல் சலாம். யோசித்துப் பார்த்த போது – இந்த விடயத்திலுள்ள பெறுமானம் புரிந்தது.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதுளூ ‘அப்துல் சலாம் நன்றாக துவிச்சக்கர வண்டியோட்டுவார் தெரியுமா?’ என்று கேட்டார் அங்கிருந்த அவரின் நண்பரொருவர். நாம் ஆச்சரியத்தோடு பார்த்தோம். உடனே, களத்தில் இறங்கினார் நண்பர். அங்கிருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகளை வீதிக்குக் கொண்டு சென்றார். அதில் ஒன்றை அப்துல் சலாமிடம் கொடுத்து விட்டு, இன்னொரு வண்டியில் நண்பர் ஏறி உட்கார்ந்தார். இருவரும் பயணிக்கத் தொடங்கினார்கள்.

Laptop

கணணியில் தட்சச்சு செய்கிறார்

அப்துல் சலாம் துவிச்சக்கர வண்டியினை ஓட்டும் போது, மற்றைய வண்டியினை ஓட்டும் அவருடைய நண்பர் – தனது வலது கையினை அப்துல் சலாமுடைய இடது கையில் வைத்துக் கொள்கிறார். அவ்வளவுதான், இருவரும் உல்லாசமாகப் பயணிக்கின்றார்கள். நாம் – இமை வெட்டாமல் அந்தக் காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘இது எப்படி?’ நாம் கேட்டோம். அப்துல் சலாமுடைய நண்பர் புன்னகை மாறாமல் பேசத் தொடங்கினார். ‘அப்துல் சலாம் என்னுடைய இளவயது நண்பர். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அப்துல் சலாம் முக்கியமானவர். நாங்கள் போகுமிடமெல்லாம் அப்துல் சலாமையும் அழைத்துச் செல்வோம். தூர இடங்களுக்கு துவிச் சக்கர வண்டியில்தான் செல்வோம். எங்களிடமிருப்பது ‘லேடிஸ்’ பைக்தான். அவ்வகையான துவிச்சக்கர வண்டிகளில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, அப்துல் சலாமை எங்களுடன் அழைத்துச் செல்வதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டது. இதன்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்துல் சலாம் ஏன் துவிச்சக்கர வண்டியோட்டக் கூடாது?

அப்துல் சலாமிடம் கேட்டபோது, ஆரம்பத்தில் தயங்கினார். நான் கூட இருந்தேன். அப்துல் சலாம் துவிச்சக்கர வண்டியினை ஓட ஆரம்பித்தார். அதன்போது, இன்னொரு வண்டியில் நானும் அருகில் பயணித்தேன். அவருக்கு சமிக்ஞைகளை வழங்க வேண்டியிருந்தது. எனவே எனது கையை அவரின் கையொன்றின் மீது வைத்தேன். எனது கைகளால் நான் வழங்கும் மில்லிய சமிக்ஞைகளைப் புரிந்து கொண்டு வண்டியினை ஓட்ட தொடங்கினார். உதாரணமாக, அவருடைய கைகளை நான் மெதுவாக இறுக்கிப் பிடித்தால், ‘பிரேக்’ போடுங்கள் என்று அர்த்தமாகும்’! அப்துல் சலாமுக்கு நண்பர்களும் வாய்த்திருக்கின்றார்கள்!!

இப்படி அப்துல் சலாமுக்கு வாய்த்த நண்பர்களில் குறித்துச் சொல்லத்தக்க இன்னுமொருவர் மிஸ்தாக். பிறப்பிலேயே பார்வையினை இழந்தவர். சொந்த இடம் அட்டாளைச்சேனை. திறந்த பல்கலைக்கழகத்தினூடாக தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் நிலையிலுள்ளார். அப்துல் சலாமை நாம் சந்திக்கச் சென்றிருந்த போது இவரும் உடனிருந்தார்.

மிஸ்தாக் உள்ளிட்ட பார்வையற்ற நண்பர்களை இணைத்துக் கொண்டு – ‘Green flowers’ எனும் பெயரில் விழிப்புலனற்றோருக்கான அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளார் அப்துல் சலாம். மேற்சொன்ன அமைப்பின் இந்த வருடத்துக்கான தலைமைப் பொறுப்பும் இவரிடமே வழங்கப்பட்டுள்ளது.

‘உங்கள் ‘Green flowers’ அமைப்புப் பற்றிச் சொல்லுங்களேன் அப்துல் சலாம்?’

‘திஹாரிய பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருந்த போது, விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவேன். அவ்வாறானதொரு காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு எனக்கு தோன்றிய யோசனைதான் இந்த அமைப்பாகும். எங்கள் பகுதிகளிலுள்ள விழிப்புலனற்றவர்களை ஓர் அமைப்பின் மூலம் ஒன்றிணைத்து – அவர்களின் வாழ்வினை வெளிச்சம் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நானும், விழிப்புலனற்ற எனது நண்பர்களான மிஸ்தாக், சியாத் மற்றும் ஜலூத் ஆகியோரும் இணைந்து ‘Green flowers’ அமைப்பினை உருவாக்கினோம்.

இந்த அமைப்பில் இணைந்து கொண்ட பலருக்கு – கணினி, பிரெய்ல் எழுத்துப் பயிற்சிகளையும், சுயதொழில் பயிற்சிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

பார்வையற்ற சகோதரர்கள் எங்காவது இருப்பதாகக் கேள்விப்பட்டால் அவர்களைத் தேடிச் செல்வோம். எமது அமைப்பில் அவர்களை இணைத்து – அவர்களுக்கும் இவ்வாறான பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அவாவாகும். ஆனால், நாங்கள் தேடிச் செல்லும் சிலரை – அவர்களின் குடும்பத்திலுள்ளவர்கள் காட்டவே மாட்டார்கள். தங்கள் பிள்ளை விழிப்புலனற்றவராக இருப்பதை அவர்கள் வெட்கக்கேடாக நினைக்கின்றார்கள். தேடிப்போன எங்களை – சிலர் திட்டி, திருப்பியனுப்பிய சம்பவங்களும் உள்ளன’ என்று கவலைப்பட்டார் அப்துல் சலாம்.

இந்த வருடம் – தனது தாயாருடன் ‘உம்றா’ கடமையினை நிறைவேற்றிவிட்டு வந்துள்ளார் அப்துல் சலாம். சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள கஃபதுல்லா பள்ளிவாசலைத் தரிசிப்பதென்பது முஸ்லிம்களின் பெரு விருப்பமாகும். அது அப்துல் சலாமுக்கு இவ்வருடம் உம்றா எனும் மதக் கடமை மூலமாகக் கிடைத்துள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள அப்துல் சலாமின் சகோதரர் – இதற்காக உதவி செய்திருக்கின்றார்.

கஃபதுல்லா பள்ளிவாசலில் வைத்து உளப்பூர்வமாகக் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.

‘அப்துல் சலாம் – கஃபதுல்லாவில் வைத்து பார்வை கிடைக்கப் பிரார்த்தித்தீர்களா’ என்று கேட்டோம். சிரித்துக் கொண்டே ‘இல்லை’ என்றார். தாங்க முடியாத ஆச்சரியத்தோடு, ‘வேறு எதற்காகப் பிரார்த்தித்தீர்கள்’?

Bike riding

நண்பருடன் துவிக்சக்கர வண்டியோடும் போது…

‘இறைவா, என்னுடைய மரணம் மிக இயல்பாக நிகழ வேண்டும். என்னுடைய மரணத்தின் போது எனது உயிர் மிகவும் இலகுவாகப் பிரிய வேண்டும் என்பதே என்னுடைய முதலாவது பிரார்த்தனையாக அமைந்தது. இரண்டாவதாகவும், எனது பார்வைக்காக நான் பிரார்த்திக்கவில்லை.

அதன் பிறகுதான், ‘இறைவா… கண்கள் தெரிவதில் ஏதாவது நன்மைகள் இருந்தால் – எனக்குப் பார்வையை வழங்குவாயாக என்று பிரார்த்தித்தேன்’ என்றார்.

‘பார்வை கிடைக்க வேண்டும் என்பது – உங்கள் முதல் விருப்பமாக ஏன் இருக்கவில்லை அப்துல் சலாம்? ‘ என்று – வியப்பும், கவலையும் நிறைந்த குரலில் கேட்டோம்.

‘எனக்குப் பார்வையில்லை என்பதை நான் ஒரு பிரச்சினையாகவே நினைக்கவில்லையே’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அப்துல் சலாம்!

o

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும்இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s