காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

திவிநெகும: மு.கா. ஆடிய நாடகம்! 10 ஒக்ரோபர் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 10:03 முப

color-dot   மப்றூக்

EPC

திரும்பவும் ஓர் அரசியல் நாடகம் மேடையேறியுள்ளது. நாடகத்தின் பெயர் ‘திவிநெகும சட்ட மூலம்’! கிழக்கு மாகாணசபையில் கடந்த 02ஆம் திகதி மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பார் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார்கள். சிலர் நடிக்க வைக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் – தாங்கள் நடிக்கின்றோம் என்று தெரியாமலேயே நாடகத்துக்குள் வந்து போனார்கள். திவிநெகும சட்ட மூலத்தில் பிரச்சினைகளே இல்லை என்றால் – அதுகுறித்து இத்தனை வாதப் பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்திருக்க நியாயமில்லை.

திவிநெகும சட்ட மூலத்தினூடாக – மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகவும், கிராமிய மட்டத்திலான அபிவிருத்திகள், மாகாண மட்டத்திலிருந்து மத்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதே விமர்சனங்களை முன்வைத்து, கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு வாக்களித்துள்ளது.

இன்னொருபுறம், திவிநெகும சட்ட மூலம் நிறைவேறினால், சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைப்பது தடைப்பட்டு விடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். ஏழை மக்களுக்குப் பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்வதற்கு திவிநெகும சட்ட மூலத்தில் உத்தரவாதங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இப்படி ஏராளமான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகிவரும் திவிநெகும சட்ட மூலத்தினைத்தான் கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்திருக்கின்றது.

திவிநெகும சட்ட மூலம் குறித்தும், அதற்கு ஆதரவாக கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் வாக்களித்தமை தொடர்பிலும் அந்தக் கட்சிக்குள் ஒருமித்த கருத்துகள் இல்லை.

திவிநெகும சட்ட மூலமானது – வலது கையால் கொடுத்ததை இடது கையால் பறித்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகும். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசின் அமைச்சர் – திவிநெகும சட்டத்தினூடாக பிடுங்கிக் கொள்கின்றார். அந்த வகையில், அதிகாரப் பரவலாக்கலை விரும்பும் எவரும் இந்த சட்ட மூலத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார் மு.காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர். இவர் பிரபல்யமானதொரு சட்டத்தரணி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், திவிநெகும சட்ட மூலத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என்று மு.கா.வின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மு.காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டினை எடுக்கப் போகிறது? என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் – அரசியலை அப்பாவித்தனமாகப் புரிந்து வைத்திருப்போரிடையே இருந்தது. ஆனால், அந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாகவே மு.கா. வாக்களிக்கும் என்று – மு.கா. தலைவர் ஹக்கீமையும், அவரின் அரசியலையும் அறிந்தவர்கள் கணித்து வைத்திருந்தனர். அது அப்படியே நடந்தது!

திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஆதரவாக வாக்களிப்பதென்று மு.காங்கிரஸின் தலைமை ஏற்கனவே தீர்மானித்து விட்டது. ஆனாலும், அதை ‘எடுத்தாற்போல்’ நிறைவேற்றுவதற்கு ஹக்கீம் விரும்பவில்லை. அதனால்தான், வாக்களிப்பு விடயத்தில் இத்தனை கூத்துக்களும், கும்மாளங்களும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை – ‘ஒரு விபத்தினை’ப் போல் சித்திரித்துக் காட்டுவதற்கு மு.காங்கிரஸின் ‘தலை’கள் முயற்சிக்கின்றன. இதுதான் உண்மை என்கிறார் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரொருவர்!

திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு மாகாணசபையில் கால அவகாசம் கோருவோம் என்றார் மு.கா.வின் செயலாளர் ஹசனலி. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. அந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஏழு பேரும் வாக்களித்து விட்டனர்.

இந்தக் குளறுபடி எப்படி நடந்தது? மு.கா. செயலாளர் ஹசனலி இப்படி விளக்கம் தருகின்றார்ளூ ‘திவிநெகும சட்ட மூலத்தினை ஆராய்வதற்கு கால அவகாசம் கோருமாறு கிழக்கு மாகாணசபையின் Hakeem(7)மு.காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலிடம் – நாம் கூறியிருந்தோம். ஆனால், மு.கா. உறுப்பினர்களை ஜெமீல் பிழையாக வழி நடத்தி, திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிட்டார்’!

உண்மையில், கடந்த 02ஆம் திகதி கிழக்கு மாகாணசபை அமர்வின் போதுதான் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் – சபை அமர்வுக்கு முன்னதாக இடம்பெற்ற கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்திலேயே – மு.கா.வின் அமைச்சர்களான மன்சூர் மற்றும் ஹாபீஸ் நஸீர் ஆகியோர் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்திருந்தனர்.

திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சியின் தலைமைத்துவம் எந்தவிதமான விளக்கங்களையோ, அறிவுறுத்தல்களையோ மாகாணசபை அமர்வுக்கு முன்னதாக வழங்கியிருக்கவில்லை. கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் இதை உறுதி செய்தார்கள். ஏராளமான விமர்சனங்களையும், வாதப் பிரதிவாதங்களையும் எதிர்கொண்டுள்ள திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் – தனது மாகாணசபை உறுப்பினர்களுக்கு மு.கா. தலைமைத்துவம் போதிய விளக்கங்களையோ, அறிவுரைகளையோ வழங்கவில்லை என்பதிலிருந்தே, இந்த சட்டமூலம் தொடர்பில் மு.கா. தலைமைத்துவம் கொண்டிருந்த அசிரத்தை மனப்பாங்கினைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?!

திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணத்தில் ஏன் ஆதரித்தீர்கள் என்று கிழக்கு மாகாண மு.காங்கிரஸ் அமைச்சர் மன்சூரிடம் கேட்டோம். ‘திவிநெகும சட்ட மூலம் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொன்றாக இருந்தால், அது குறித்து கட்சித் தலைமை எமக்கு அறிவித்திருக்கும். ஆனால், அவ்வாறான அறிவுறுத்தல்கள் எவையும் தலைமையிடமிருந்து எமக்கு கிடைக்கவில்லை. அதேவேளை, திவிநெகும சட்ட மூலத்தினைப் படித்துப் பார்த்த போது அதில் சமூகத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் எவையும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் அந்த சட்ட மூலத்தினை ஆதரித்தோம். இவை தவிர, கிழக்கு மாகாணசபையில் அரசும், மு.கா.வும் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் அமர்விலேயே அரசுக்கு எதிராக வாக்களிப்பதென்பது தர்ம சங்கடமானதொரு விடயமாகவும் இருந்தது’ என்று அவர் பதிலளித்தார்.

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு – தனது மாகாணசபை உறுப்பினர்களுக்கு இச் சட்ட மூலம் குறித்து கருத்தரங்கொன்றினை நடத்தியது. அதன்போது, இச் சட்ட மூலத்திலுள்ள சாதக, பாதகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில், திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் வாக்களிக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. த.தே.கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அவ்வாறே செய்தனர். மு.கா.வும் இப்படியொரு கருத்தரங்கினை நடத்தியிருந்தால், அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் இது விடயத்தில் தெளிவுகளைப் பெற்றிருப்பார்கள், சரியான முறையில் – அவர்கள் செயற்பட்டிருக்கவும் கூடும்.

எது எவ்வாறிருந்தபோதும், திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணத்தில் ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் மு.கா. தலைமைக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்தினை ஆதரித்து வாக்களித்ததன் பின்னணியில் மு.கா. தலைவர் இருந்ததாகவும் சில கதைகள் உலவுகின்றன. திவிநெகும சட்ட மூலத்தினை எதிர்ப்பதென மு.கா. தலைமை முடிவு செய்திருந்தால், கடந்த 02ஆம் திகதி, கிழக்கு மாகாணசபையில் தனது 07 உறுப்பினர்களூடாகவும் அதைச் செய்து காட்டியிருக்க முடியுமல்லவா?!

திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டமைக்கான முழுப் பொறுப்பினையும், மு.காங்கிரஸின் தலைமைத்துவமே ஏற்க வேண்டும். இதை விடுத்து கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மீது – பழி சுமத்தும் வகையில் கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் பேசிவருவது ஏற்புடையதல்ல. இது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ‘அடுத்தவனை’ப் பலிகொடுக்கும் முயற்சியாகும்.

இன்னொருபுறம், சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதொன்றாக விமர்சிக்கப்படும் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக – மனச்சாட்சியின் அடிப்படையில், சுயாதீனமாக Hasanali02வாக்களிக்கும் திராணி – கிழக்கு மாகாணசபையின் எந்தவொரு மு.கா. உறுப்பினருக்கும் இருக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. தலைவருக்குத் தலை ஆட்டுகின்றவர்களாவும், ‘ஊர் ஓடும் போது ஒத்து ஓடுகின்றவர்களாக’வும்தான் கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள்.

‘இருப்பவன் சரியாக இருந்தால் சிரைப்பவன் நன்றாகச் சிரைப்பான்’ என்று கிராமங்களில் கூறுவார்கள். திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மு.கா. தலைமை – சரியாகச் செயற்பட்டிருந்தால், அந்தக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முறையாக நடந்திருப்பார்கள் என்கிறார் மு.கா.வின் முக்கிய பிரமுகரொருவர்.

அப்படிப் பார்த்தால், இங்கு இருப்பவனும் சரியில்லை, சிரைப்பவனும் சரியில்லை..!!

O

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும் இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s