காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிழக்கில் பலிக்காத கணக்குகள்! 15 செப்ரெம்பர் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 10:47 முப

color-dotமப்றூக்

MR(16)

பெரிதாக தலையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. கிழக்கு மாகாணசபையில் என்ன நடக்குமென்று பந்தயம் கட்டுமளவுக்கும் நிலைமைகளுமில்லை. ஆளும் ஐ.ம.சு.முன்னணி – மு.காங்கிரஸ் கூட்டிணைவில்தான் ஆட்சியொன்று அமையும். அதற்கான சாத்தியங்களும் பின்புலங்களும்தான் அதிமாகத் தெரிகின்றன.
இரண்டுவிதமான கூட்டிணைவின் மூலம் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளமையை நீங்கள் அறிவீர்கள். முலாவது: த.தே.கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் மற்றும் ஐ.தே.கட்சி ஆகியவை இணைந்து ஆட்சியொன்றை அமைத்தல். இரண்டாவது: ஐ.ம.சு.முன்னணி மற்றும் மு.காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தல். இதில், தே.சு.முன்னணியும் ஒட்டிக் கொள்ளும். இவற்றில் இரண்டாவது கூட்டணி அமைவதற்குரிய நிகழ்தகவுகள்தான் மிக அதிகமாக உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில்; ‘மத்திய அரசாங்கத்தில் மு.காங்கரஸ் இருந்து கொண்டு, கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முடிவு எடுப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும்’ என்று மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார். இவர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.கா. சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சிமைப்பதற்கு தம்முடன் இணையுமாறு மு.காங்கிரஸை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வற்றுபுறுத்தி வருகிறது. அப்படி இணைந்தால், முதலமைச்சர் பதவியினை மு.கா.வுக்கு சுழற்சி முறையில் வழங்கத் தயார் என்றும் சொல்கிறது. மு.கா. இதற்கு இணங்காது போனால், அது – வரலாற்றுத் துரோகமாகி விடும் என்று த.தே.கூட்டமைப்பு அச்சமூட்டுகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், த.தே.கூட்டமைப்புடன் இணைவதை விடவும் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதுதான் மு.கா.வின் கணக்கில் லாபமாகும். தவிரவும், இன்றைய நிலையில் பிணக்கு அரசியலை விடவும் இணக்க அரசியலிலேயே மு.கா. ஆர்வம் காட்டி வருகிறது. அதேவேளை, கிழக்கில் த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து கொண்டால் மத்திய அரசாங்கத்திலிருந்து அந்தக் கட்சி sampanthan(21)விலக வேண்டியேற்படும். எனவே, ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவதை விடவும், இரண்டையும் வைத்துக் கொள்வதையே மு.கா. விரும்பும். அதனால், கிழக்கில் மு.கா.வின் ஆதரவு ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்குத்தான் கிடைக்கும்.

திறந்து சொன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது லாபத்தினை முன்னிறுத்தியே கிழக்கு மாகாணசபையில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு மு.காங்கிரஸைக் கோரிக்கை விடுக்கின்றது. ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதைத் தவிர்த்து த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைவதென்பது மு.கா.வுக்கு நஷ்டமாகும்! அரசியல் என்று வரும்போது, இந்த லாப – நஷ்டக் கணக்கினை மு.கா. நிச்சயம் பார்க்கும். ‘சரி, நமக்கு லாபமில்லாது விட்டாலும் பரவாயில்லை, த.தே.கூட்டமைப்பின் நலனுக்காக ஆதரவு வழங்குவோம்’ என்று மு.கா. யோசிப்பதற்குரிய கள நிலைவரமும் இங்கு இல்லை! காரணம், அப்படி விட்டுக் கொடுக்குமளவு தமிழ் – முஸ்லிம் அரசியல் உறவு இங்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பது கசப்பான உண்மையாகும்!

முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தையும், அவர்களுக்கான தேசியத்தினையும் த.தே.கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், முஸ்லிம் சமூகத்தை ‘தமிழ் பேசும் மக்கள்’ என்கிற பொதுமைக்குள் வைத்துத்தான் த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவம் இற்றைவரை பேசிவருவதையும் முஸ்லிம் சமூகம் கடுமையான வெஞ்சத்துடனேயே பார்க்கிறது. கடந்த தேர்தல் மேடையொன்றில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது;  ‘முஸ்லிம்களின் தேசியத்தினை ஒளித்து மறைத்துப் பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்’ என்று கூறியதை மேற்சொன்ன வெஞ்சத்துக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆக, அரசியல் அரங்கில் தமிழ் – முஸ்லிம் உறவுக்குரிய அடித்தளமே இன்னும் இடப்படாததொரு நிலையில்தான், த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதுதான் யதார்த்தம்!

இந்த நிலையில், ஐ.ம.சு.முன்னணியுடன் மு.கா. இணைந்து ஆட்சியமைத்தால் அது வரலாற்றுத் துரோகமாக அமைந்து விடும் என்று த.தே.கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள். இவ்வாறான துரோகங்கள் வரலாறு முழுக்க நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தாமும் ஒரு தரப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தமிழ்த் தரப்பினால் தட்டிக் கழிக்கப்பட்டதையும்,  அதை த.தே.கூட்டமைப்பின் இதே தலைமைகள் ஆமோதித்து நின்றதையும் முஸ்லிம் சமூகம் தமக்கிழைக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் துரோகமாகவே இன்றுவரை பார்க்கிறது.

இப்படி எழுதுவது யாருக்கும் கசக்கக் கூடும். அல்லது, என்மீதும் இந்த எழுத்தின் மீதும் இனவாதச் சாயத்தை யாராவது எடுத்து விசிறவும் Hakeem132கூடும். அவ்வாறான விபத்துகளும் ஆபத்துக்களும் இப்படி எழுதுவதால் ஏற்படும் என்பதை நான் மிக நன்றாக உணர்கிறேன். ஆனாலும், இதை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை! ‘முன்னங்கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். முழங்கை நீளும் போது முன்னங்கை நீண்டே ஆகவேண்டும்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ் – முஸ்லிம் அரசியல் அரங்கில் முன்னங்கையும் நீளவில்லை, முழங்கையும் நீளவில்லை!

இது இவ்வாறிருக்க, கிழக்கில் ஐ.ம.சு.முன்னணிக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாயின், சில பேரம் பேசுதல்கள் இடம்பெறும். நிபந்தனைகளும் கோரிக்கைகளும் மு.கா.வினால் முன்வைக்கப்படும். ஆனால் அவை வெறும் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையாக மட்டும் இருந்து விடக்கூடாது! இதன்போது முஸ்லிம் சமூகத்தின் கனவாகவுள்ள முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றெடுத்தல் வேண்டும். கிழக்கில் நிலவும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை கோர வேண்டும். நிருவாக ரீதியான பிரச்சினைகள் குறித்துப் பேசுதல் வேண்டும். குறிப்பாக, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மாவட்ட செயலாளரொருவரைக் கேட்டுப் பெறுதல் வேண்டும். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதற்குரிய உறுதி மொழிகளை பெற்றெடுக்க வேண்டும். இப்படி, தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தே – மு.கா. தனது பேரம் பேசுதலைத் தொடங்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது!

சரி, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தால், அதில் யார் அமர்த்தப்படுவார் என்பது இங்கு முளைக்கும் அடுத்த கேள்வியாகும். அப்படியொரு நிலைவரம் உருவாகுமாயின் – அந்தப் பதவியினை அநேகமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாபீஸ் நஸீருக்கே மு.கா. தலைவர் கொடுப்பார் என்பதே நமது அனுமானமாகும். ஹக்கீம் – ஹாபீஸ் நஸீர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம், ஹாபீஸ் நஸீரை மு.கா. தலைவர் சில காலமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றமை என்று, நமது அனுமானத்துக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களைக் கூறலாம்!

இந்த அனுமானம் பலிக்குமாயின், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது இரண்டாவது முறையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சென்றடையும். இந்நிலையானது – ஏனைய மாவட்டங்களில் ஒருவகையான அதிருப்தியினை ஏற்படுத்திவிடவும் கூடும்.

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, மு.கா.வைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியினை ஹக்கீம் ஒருபோதும் பெற்றுக்கொடுப்பதற்கு விரும்பவே மாட்டார் என்கிறார்கள் எதிரணியினர். குறிப்பாக, கிழக்கில் மு.கா.வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவது ஹக்கீமுடைய தலைமைத்துவத்துக்கு HafisNazeer11ஆபத்தாக அமைந்து விடலாம் என்று ஹக்கீம் அச்சப்படுகிறார். அதனால், முதலமைச்சர் பதவியை ஹக்கீம் மு.கா.வைச் சேர்ந்த எவருக்கும் பெற்றுக் கொடுக்க மாட்டார் என்று தேர்தல் பிரசார மேடைகளிலேயே எதிர்த்தரப்பினர் கூறியதையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.

உண்மையாகவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸுக்குப் பெற்றுக் கொடுத்தல் என்பதில் மு.கா. தலைவரின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கும், எதிர்த்தரப்பினர் தெரிவித்துவரும் மேற்படி விடயத்திலுள்ள உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கும் ஓரிரு நாட்கள் நாம் காந்திருந்தே ஆகவேண்டும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐ.ம.சு.முன்னணியை கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் களத்தில் மு.காங்கிரஸ் தோற்கடித்தமை மு.கா.வுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். இப்போது ‘ஆட்சியமைப்போம் வாருங்கள்’ என்று அழைக்கும் ஐ.ம.சு.முன்னணியிடம் பேரம் பேசி – தோற்றுப் போன எதிராளியை தன்முன்னால் மு.கா. மண்டியிட வைத்திருக்கிறது. இது மு.கா.வுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகவும் தெரிகிறது!!

O

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும் இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s