காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிழக்குத் தேர்தலும் அதாவுல்லாவால் நின்றுபோன திருமணமும்! 30 ஜூலை 2012

Filed under: அரசியல் — Mabrook @ 1:32 பிப

color-dotமப்றூக்

Athaullahதாலி கட்டும் கடைசி நிமிடத்தில் – நின்று போகும் திருமணங்களை ஆகக்குறைந்தது திரைப்படங்களிலாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள்! நமது அரசியல் அரங்கிலும் அவ்வாறானதொரு காட்சியினை அண்மையில் காணக் கிடைத்தது! கிழக்கு மாகாணத் தேர்தலை முன்வைத்து மு.கா. – ஆளும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றுக்கிடையில் இடம்பெறவிருந்த ‘திருமணமே’ அதுவாகும்! ‘பெண்’ – ‘மாப்பிள்ளை’ தரப்பாருக்கிடையிலான ‘கொடுக்கல் – வாங்கலில்’ ஏற்பட்ட இழுபறியானது, கடைசியில் – திருமணத்தினையே பலி கொண்டு போயிற்று! இங்கு ‘கொடுக்கல் – வாங்கல்’ என்பது ஆசனப் பங்கீடு ஆகும்!

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியோடு இணைந்துதான் மு.கா. போட்டியிடும் என்று கடைசிவரை நம்பப்பட்டது. வெற்றிலைச் சின்னத்தில் மு.கா.வுக்கான ஆசனப் பங்கீடு குறித்தும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும், கடையில் அந்த கூட்டிணைவு சாத்தியமாகாமல் மு.கா. தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நிஜத்தைச் சொன்னால், மு.கா. தனித்துப் போட்டியிடும் முடிவோடு களத்தில் குதித்த பிறகுதான், கிழக்குத் தேர்தல் சுவாரசியப்பட்டுள்ளது. ஆளும் அரச தரப்போடு இணைந்து மு.கா. போட்டியிட்டிருந்தால், தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்காது. எப்படிப் பார்த்தாலும், மு.கா. – ஐ.ம.சு.மு அணிதான் வெற்றி பெறும் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஆனால், இப்போது கிழக்குத் தேர்தல் ஒரு சூதாட்டம் மாதிரி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்து எந்த அணியும் ஆட்சியமைக்க முடியாததொரு சூழ்நிலை ஏற்படும் என்பதே – மிகக் கணிசமானோரின் கருத்தாகும். இதனால், கிழக்குத் தேர்தல் சூடு பிடிக்கும்!

ஆளும் ஐ.ம.சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென்றால், தமக்கு அம்பாறை மாவட்டத்தில் 06 ஆசனங்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 03 ஆசனங்களையும் வழங்க வேண்டுமென்று மு.காங்கிரஸ் நிபந்தனையொன்றினை முன்வைத்திருந்ததும், அந்த நிபந்தனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் நாம் அறிந்த விடயங்கள்தான்.

ஆனால், அமைச்சர் அதாவுல்லா இந்தக் கதைக்குள் புகுந்த பிறகுதான் எல்லாமே தலைகீழாக மாறிப் போயின!

ஆளும் ஐ.ம.சு. முன்னணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் மு.கா.வுக்கு ஆறு ஆசனங்கள் கிடைப்பது அந்தக் கட்சிக்கு மிகவும் சாதகமாகும். குறித்த ஆறு வேட்பாளர்களையும் வென்றெடுப்பதற்கான திட்டமொன்றினையும் அந்தக் கட்சி வகுத்து வைத்திருந்தது. அது சாத்தியமானதொரு திட்டமும் கூட! அவ்வாறு தனது 06 அபேட்சகர்களையும் மு.கா. வென்றெடுக்குமாயின், அமைச்சர் அதாவுல்லாவின் அணியினைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே வெற்றிபெற முடியும்!

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே. கட்சியுடன் இணைந்து போட்டியிட்டிருந்த மு.காங்கிரஸ் தனது அணி சார்பாக 04 உறுப்பினர்களை வென்றெடுத்திருந்தது. அமைச்சர் அதாவுல்லா – ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் 03 உறுப்பினர்களை வென்றிருந்தார்.

ஆனால், இம்முறை – மு.கா.வுக்கு அம்பாறை மாவட்டத்தில் 06 அபேட்சகர்கள் வழங்கப்படும் என்று ஆளும் ஐ.ம.சு. முன்னணி உறுதியளித்திருந்த அதேவேளை, அமைச்சர் அதாவுல்லாவுக்கு 02 ஆசனங்களையே வழங்குவதாகத் தெரிவித்திருந்தது.

மேற்படி நிலைவரத்தில் மு.கா.வுக்குள்ள சாதகங்களையும், தனக்கு ஏற்படப் போகும் நஷ்டத்தினையும் கணக்குப் போட்டுப் பார்த்த அமைச்சர் அதாவுல்லா, உடனடியாக அரச உயர் மட்டத்தாரைச் சந்தித்து – நிலைமையினை விளக்கினார். மு.கா.வுக்கு அம்பாறை மாவட்டத்தில் 06 ஆசனங்களை வழங்கக் கூடாதென்றும், அதேவேளை – தனக்கு 03 வேட்பாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கோரினார். இதன்போது தனது சகாவான அமைச்சர் றிஸாத் பதியுதீனையும் அதாவுல்லா – கையோடு கூட்டிச் சென்றிருந்தார்.

இதற்குப் பிறகுதான் மு.கா.வுக்கு அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களை மட்டுமே வழங்க முடியும் என்று அரச தரப்பு திடீரென அறிவித்தது.

ஆக, மு.கா. – ஐ.ம.சு. முன்னணி திருமணத்துக்கு தாலிகட்டும் கடைசி நேரத்தில் வேட்டு விழக் காரணமானவர் அமைச்சர் அதாவுல்லாதான்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு – மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை விடவும், அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிஸாத் பதியுதீன் போன்றவர்களே தேவையானவர்களாகவும் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் உள்ளனர்.

‘எது’ நடந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் – மேற்படியார்கள் இருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு துரும்பினைக் கூட பயன்படுத்த மாட்டார்கள் என்பது நாமறிந்த உண்மையாகும். இதற்கு கடந்த காலங்கள் சாட்சியாகவும் உதாரணங்களாவும் இருக்கின்றன.

எனவே, மு.கா.வை பலப்படுத்தி – அதன் மூலமாக அதாவுல்லா மற்றும் றிஸாத் ஆகியோரின் அரசியலை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியினையும் மஹிந்த தரப்பு அனுமதியாது! இதற்கான காரணம் என்ன என்பதை இன்னும் ‘புட்டு’ச் சொல்லத் தேவையில்லை. நீங்கள் அறிவீர்கள்!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணியுடனான கூட்டு Hakeemமுயற்சி சரிவராமையினால், மு.கா. தனித்துக் களத்தில் இறங்கியது. அதேவேளை, அமைச்சர் அதாவுல்லாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னம் சார்பாக 05 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. பிறகு அது 04 ஆக மாறியது!

கவனமாக நோக்கினால், அமைச்சர் அதாவுல்லாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர் ஆசனங்கள் கிடைக்கின்றமைதான் மிகவும் சாதகமாகும். கடந்த கிழக்குத் தேர்தலிலும் அதாவுல்லா 03 அபேட்சகர்களைப் பெற்று மூவரையும் வென்றெடுத்தார். ஆனால், இம்முறை அதாவுல்லாவுக்கு தனது கட்சி சார்பாக நான்கு வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டியதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களின் தொகை மூன்றுக்கு மேற்பட்டுள்ளதால் நிச்சயமாக அவர்கள் பெறும் விருப்பு வாக்குகள் சிதறிப் போகும். இதனால், அதாவுல்லா 01 அல்லது 02 ஆசனங்களையே இம்முறை பெறக்கூடும்!

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஒவ்வொரு அணியும் 17 வேட்பாளர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அந்தவகையில், ஐ.ம.சு. முன்னணி 07 சிங்களவர்களையும், 07 முஸ்லிம்களையும், 03 தமிழர்களையும் களமிறக்கியுள்ளது.

இதற்கிணங்க மு.கா.வும் தனது வேட்பாளர்களை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியுள்ளது. சில பிரதேசங்களில் ஒரு வேட்பாளரையும், வேறு சில பிரதேசங்களில் 02 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ள மு.காங்கிரஸ் – அமைச்சர் அதாவுல்லாவின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் 03 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

ஆனால், அமைச்சர் அதாவுல்லாவோ தனது சொந்த ஊரில் வேட்பாளர் எவரையும் களமிறக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது! இந்த நிலைவரமானது அமைச்சர் அதாவுல்லாவுக்கு அவருடைய பிரதேசத்தில் பாதகமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவித்தே ஆகும்!

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அமைச்சர் அதாவுல்லா அவருடைய சொந்த ஊரான அக்கரைப்பற்றில் தனது கட்சி சார்பாக வேட்பாளர் எவரையும் நிறுத்தியிருக்கவில்லை. அப்போது அக்கரைப்பற்றில் மு.கா.வும் பலவீனமாக இருந்தது. எனவே, அந்தத் தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து வெறும் பெயருக்கு ஒரு வேட்பாளரை மு.கா. நிறுத்தியிருந்தது.

ஆனால், இப்போது நிலைமை அங்கு மாற்றமடைந்துள்ளது. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மு.கா. புத்துயிர் பெற்றுள்ளதாகவே தெரிகிறது. சில காலங்களுக்கு முன்பு அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸுக்கு வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதே மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது. ஆனால், தற்போது – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மு.கா. சார்பாக 03 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், அமைச்சர் அதாவுல்லா அணி சார்பாக அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவர் களமிறங்கியிருந்தனர். ஆனால், அதாவுல்லா – அந்தத் தேர்தலில் தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் யாரையும் வேட்பாளராக களமிறக்கவில்லை. இதனால், அக்கரைப்பற்றிலுள்ள அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் – தமது மூன்று விருப்பு வாக்குகளையும் அதாவுல்லா அணியில் களமிறக்கப்பட்ட ஏனைய பிரதேச வேட்பாளர்கள் மூவருக்கும் வழங்கினார்கள். இதனால்தான் கடந்த முறை அமைச்சர் அதாவுல்லாவினால் கிழக்கு மாகாணசபைக்கு 03 உறுப்பினர்களை பெற்றெடுக்க முடிந்தது.

இந்த நிலையில், அமைச்சர் அதாவுல்லா, தனது சொந்தப் பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்பாளர்களை கடந்த முறையும் இந்த முறையும் களமிறக்கவில்லை என்பது – பல்வேறுபட்ட விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது. அதாவது, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் தனது நிகழ்காலத்தின் போது, அரசியல் அதிகாரத்தினை வேறொருவர் பெற்றுக்கொள்வதை அமைச்சர் அதாவுல்லா விரும்பாததன் காரணத்தினாலேயே இப்படிச் செயற்படுகிறார் என்பது கணிசமானோரின் குற்றச்சாட்டாகும்.

அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல்வர் பதவியிலும் அமைச்சர் அதாவுல்லா தமது மகனையே அமர்த்தியிருப்பது – இந்தக் குற்றச்சாட்டினை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது!

இவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்றில் தற்போது மு.காங்கிரஸ் சார்பாக மூன்று உறுப்பினர்கள் போட்டியிடுவதனாலும், அமைச்சர் அதாவுல்லாவின் அணியில் வேட்பாளர் எவரும் களமிறங்கவில்லை என்பதனாலும், அக்கரைப்பற்று மக்கள் – தமது பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கே யோசிக்கக் கூடும்!

அதாவது, தமது வாக்குகளை மற்றைய பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்குவதை விடவும், தமது பிரதேசத்தில் களமிறங்கியுள்ளோருக்கு வழங்கி, தமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மாகாணசபை உறுப்பினர்களாகப் பெற்றெடுக்க வேண்டுமென்றுதான் சாதாரணமான வாக்காளர்கள் விரும்புவார்கள்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணசபை இருந்தபோது, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் ஒரே தடவையில் உறுப்பினர்களாக அங்கு பதவி வகித்திருந்தார்கள். அதன் பிறகு அக்கரைப்பற்றுக்கு மாகாணசபைப் பிரதிநிதித்துவங்கள் கிடைக்கவேயில்லை. எனவே, இந்தத் தேர்தலில் தமது பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, மீண்டும் தாம் இழந்த மாகாணசபைப் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் ஊர்ப்பற்றுள்ளவர்கள் சிந்திப்பார்கள். இவ்வாறு யோசிப்பது இயல்பானதொரு விடயமாகும்.

இவ்வாறானதொரு சிந்தனை அக்கரைப்பற்று மக்களிடம் உருவாகும் போது, அவர்கள் தவிர்க்க முடியாமல் தமது பிரதேசத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலை – அமைச்சர் அதாவுல்லாவின் வியூகத்தில் பாரியதொரு ‘இடி’யை வீழ்த்தும்!

இதே சமயம், அமைச்சர் அதாவுல்லா – அம்பாறை மாவட்டத்தில் நான்கு பிரதேசங்களில் மட்டும் 04 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமையினால், ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், அமைச்சர் அதாவுல்லாவின் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதேசங்கள் மு.காங்கிரஸின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Mahinda - 01இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, மு.காங்கிரஸ் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் – அமைச்சர் அதாவுல்லா அணியினால் எத்தனை பிரதிநிதித்துவங்களை வென்றிருக்க முடியுமோ, அது போலானதொரு தொகையினை அல்லது அதற்கும் குறைவானதொரு தொகையினைத்தான் – தற்போதைய நிலையிலும் அதாவுல்லா பெறுவார் என்பதே அவதானிகளின் கணிப்பீடாகும்.

இதேவேளை, அதாவுல்லா அணியினருக்கு தற்போதைய கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிடைக்கும் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை – அமைச்சர் அதாவுல்லாவின் சொந்த அரசியலிலும் தாக்கங்களைச் செலுத்தப் போகின்றன.

அதனால், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர் அதாவுல்லாவும் ஒரு வேட்பாளரைப் போல் மடித்துக் கட்டிக் கொண்டு களமிறங்கியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், கோவிந்தாதான்!!

o

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும் இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s