காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிழக்கு முதலமைச்சர் காய்ச்சலும் தொடரப் போகும் தலைவலியும்! 29 மே 2012

Filed under: அரசியல் — Mabrook @ 6:57 பிப

color-dotமப்றூக்

லங்கையை ஒரு ஜனநாயக நாடு என்பார்கள்! ஜனநாயகம் என்பதை Eastern Flagமிக இலகுவாக நாம் இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது, பெரும்பான்மை விருப்புகளுக்கு மதிப்பளித்தல் – ஜனநாயகமாகும். இந்த நிலையிலிருந்து பார்த்தால், இப்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது ஒரு சிக்கலான விவகாரமேயல்ல!

தேர்தல் என்பதே பொதுமக்களின் பெரும்பான்மை விருப்பினை அடையாளம் காண்பதற்கானதொரு முறைமையாகும். அப்படியாயின், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய பிரதிநிதிகளைப் பெறும் கட்சி முதலமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொள்ளும். பின்னர், அந்தக் கட்சியில் அதிமான விருப்பு வாக்குகளைப் பெறுகின்ற நபர் – குறித்த பதவிக்கு நியமிக்கப்படுதல் வேண்டும். இதுவே ஜனநாயகமாக அமையும்.

விடயம் இவ்வளவு இலகுவாக இருக்க, கிழக்கின் அடுத்த முதலமைச்சர் பதவியை – ஏன் நமது அரசியல்வாதிகள் இடியப்பச் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்கின்றீர்களா? அவ்வாறு நீங்கள் நினைப்பீர்களாயின் – இந்தக் கட்டுரை உங்களுக்கானது! தொடர்ந்து வாசியுங்கள்!!

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைசர் பதவி குறித்து முன்வைக்கப்பட்டு வரும் ஒட்டு மொத்தக் கோசங்களையும், நாம் – இரண்டு வகைகளுக்குள் அடக்கிப் பார்க்கலாம்.

1.    இன ரீதியானது
2.    கட்சி சார்ந்தது.

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே நியமிக்கப்படுதல் வேண்டும் என்றும், அதற்கான நியாய, தர்மங்கள் குறித்தும் ஒரு கூட்டத்தார் பேசி வருகின்றனர். அதேபோன்று, கிழக்கு முதலமைச்சர் பதவியை தமிழ் தரப்பினரே வென்றெடுக்க வேண்டும் என்று இன்னொரு கூட்டத்தார் முழக்கமிடுகின்றனர். இது – கிழக்கு முதலமைச்சர் குறித்து முன்வைக்கப்படும் இனரீதியான விருப்பங்களாகும்.

இவைகளுக்கப்பால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு போன்ற பிரதான அரசியல் கட்சிகள் – முதலமைச்சர் பதவியானது தமது கட்சி சார்பான ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று வாதிடுகின்றன. இது – கட்சி சார்ந்த கோசங்களாகும்.

மேற்சொன்ன இரண்டு வகையான கோசங்களும் எழுவதற்கான காரணங்கள் மற்றும் பின்னணிகள் குறித்து நாம் – நிறையவே பேச முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்கள் தமிழர்களின் தாயகம், அதன் T M V P Leader Pilleyanஆட்சிப் பொறுப்பு தமிழ்த் தரப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவானதே – ‘தமிழ் முதலமைச்சர்‘ என்கிற வாதமாகும்.

கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். அப்படிப் பார்த்தால், கடந்த முறை முஸ்லிம்களுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை முஸ்லிம் சமூகம் தமிழர்களுக்காக விட்டுக் கொடுத்தது. எனவே, அடுத்த முதலமைச்சர் பதவி – கட்டாயமாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கே வழங்கப்படுதல் வேண்டும் என்பது – ‘முஸ்லிம் முதலமைச்சர்‘ என்கிற வாதத்தில் முன்வைக்கப்படுகின்ற பிரதானமான விடயமாகும்.

சரி, இந்தக் கட்டுரையை தொடர்ந்தும் விளங்கிக் கொள்வதற்காக கிழக்கு மாகாணசபை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில தரவுகளை உங்களுக்கு இந்த இடத்தில் வழங்க வேண்டியுள்ளது.

அதாவது, கிழக்கு மாகாண சபையின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையானது 37 ஆகும். இதில் 35 ஆசனங்களுக்கான உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனைய 02 ஆசனங்கள் அதிக பிரதிநிதிகளைப் பெறும் கட்சிக்கு போனசாக வழங்கப்படும்.

அந்தவகையில், கடந்த தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஆளும் ஐ.ம.சு. முன்னணி 18 ஆசனங்களை வென்றது. ஐக்கிய தேசியக் கட்சி (இதில் மு.காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டது) 15 ஆசனங்களையும், ஜே.வி.பி மற்றும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியவை தலா ஓர் ஆசனத்தினையும் கைப்பற்றிக் கொண்டன. எனவே, இந்தக் கட்சிகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐ.ம.சு. முன்னணிக்கு போனஸாக 02 ஆசனங்கள் கிடைக்க – அதன் மொத்த பிரதிநிதிகள் தொகை 20 ஆக உயர்ந்தது. இது கட்சி ரீதியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆசனங்களின் விபரமாகும்.

கிழக்கு மாகாணசபையின் மொத்த உறுப்பினர்களை – இன ரீதியாக நோக்கும் போது, 17 முஸ்லிம்களும், 12 தமிழர்களும், 07 சிங்களவர்களும் அங்கு உள்ளனர்.

இதேபோல், ஆளும் ஐ.ம.சு. முன்னணி சார்பில் தெரிவான 20 உறுப்பினர்களில் 08 முஸ்லிம்களும், 07 தமிழர்களும், 05 சிங்களவர்களும் அடங்குகின்றனர்.

Hizbullahஇப்படிப் பார்த்தால் ஐ.ம.சு. முன்னணியிலும் முஸ்லிம் பிரதிநிதிகளே அதிகமாக இருக்கின்றனர்.

இதனைக் காரணமாகக் காட்டித்தான் – முஸ்லிம் தரப்புக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லா போன்றவர்கள் ஒற்றைக் காலில் நின்றனர்.

இருந்தபோதும், பிள்ளையான் என்றழைக்கப்படுகின்ற சிவநேசத்துறை சந்திரகாந்தன் – கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

நியாயமாகப் பார்த்தால் சந்திரகாந்தன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டமையானது, சரி என்பதே நமது வாதமாகும். எப்படி என்கிறீர்களா?

ஆளும் ஐ.ம.சு. முன்னணி சார்பில் பல கட்சிகள் ஒன்றிணைந்தே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிருந்தமை பற்றி நீங்கள் அறிவீர்கள். அந்தவகையில், கிழக்கு மாகாணசபைக்கு 08 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த போதும், அவர்கள் அனைவரும் ஒரே கட்சியினைத் சேர்ந்தவர்களாக இல்லை. அமைச்சர்களான அதாவுல்லா, றிசாத் பதியுதீன் போன்றோருடைய – கட்சி உறுப்பினர்கள் அந்த 08 பேரில் அடங்குகின்றனர். ஆனால், ஐ.ம.சு. முன்னணி சார்பில் கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான 07 தமிழ் உறுப்பினர்களும் சந்திரகாந்தனின் ரி.எம்.வி.பி. எனும் ஒரே கட்சி  சார்பானவர்களாக இருந்தனர்.

அந்தவகையில், ஐ.ம.சு. முன்னணி சார்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை வென்றெடுத்த கட்சியான ரி.எம்.வி.பி.க்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜனநாயக ரீதியான பார்வையில் இது சரியானதே!

இன்னொரு புறம், முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்கான சந்தர்ப்பமொன்றும் அங்கு காணப்பட்டது. அதாவது, ஐ.ம.சு. முன்னணி சார்பில் தெரிவான 08 உறுப்பினர்களும் ஐ.தே.கட்சியுடன் இணைந்து ஓர் ஆட்சியினை உருவாக்கி – முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றெடுத்திருக்கலாம். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படாது போனால் – தாம் எதிர்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக, அப்போது லண்டன் பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியொன்றில் ஹிஸ்புல்லாவும் கூறியிருந்தார். ஐ.தே.கட்சியும் இதற்குத் தயாராகவே இருந்தது. ஆனால், அரசோடு இணைந்திருந்த அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோர் தமது அரசியல் நலன் கருதி அப்போது, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கத் துணியவில்லை!

கதை இப்படியிருக்க, தமிழ் சமூகத்துக்காக கிழக்கு முதலமைச்சர் பதவியினை ஏதோ தியாக மனப்பான்மையோடு – தாம் விட்டுக் கொடுத்ததாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூக்குரலிடுவதானது சிறுபிள்ளைத்தனமானதாகும்!

சரி, இப்போது சமகாலக் கதைக்கு வருவோம்.

மாகாண சபையொன்றின் ஆட்சிக் காலம் ஐந்து வருடங்களாகும். அந்தவகையில், கிழக்கு மாகாணசபையின் ஆட்சி நிறைவடைய இன்னும் ஒரு வருடமிருக்கிறது. ஆனாலும், கிழக்கு மகாணசபையானது முன்னதாகவே கலைக்கப்படலாம் என்கிற கதையொன்று பரவலாக அடிபட்டுவருகின்றமை குறித்து நாம் அறிவோம்!

இதனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றை முகம் கொள்வதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. போதாக் குறைக்கு, கிழக்கின் முதலமைச்சர் பதவியினை தமது கட்சி சார்பாக வென்றெடுக்க வேண்டுமென்கிற கோசங்களையும் பிரதான அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இதில் முக்கியமாக நமது கவனத்தை ஈர்த்திருப்பது முஸ்லிம் Basheerகாங்கிரஸின் கோசமாகும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் ஒன்று நடைபெற்றால், மு.கா. எவ்வாறு களத்தில் இறங்கும் என்கிற பல்வேறு வகையான ஊகங்கள் – ஊடகங்கள் வாயிலாகப் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவை மு.கா.வின் உத்தியோகபூர்வமான அறிவிப்புகளில் இருந்து பிறந்தவையல்ல.

இந்த நிலையில், மு.காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கடந்த வாரம் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலொன்றில் – கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலொன்று இடம்பெறுமாயின் மு.காங்கிரஸ் எவ்வாறு களமிறங்கும் என்பதை விபரித்திருக்கின்றார்.

அந்த வகையில், மு.கா.வுக்கு 03 தெரிவுகள் உள்ளதாக அவர் கூறுகின்றார். அவை;
1.    ஆளும், ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது. இது நிறைவேறாமல் போகும் பட்சத்தில்;
2.    மு.காங்கிரஸ் தனது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது. அல்லது
3.    சிறுபான்மைக் கட்சிகளுடன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவைகளுடன்) இணைந்து போட்டியிடுவது

இவ்வாறு மூன்று தெரிவுகள் தம்மிடம் உள்ளபோதும், ஆளும் ஐ.ம.சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதையே தாம் பெரிதும் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் பார்த்தால், ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து மு.கா. போட்டியிடுவதாயின் முதலமைச்சர் பதவியினை மு.காங்கிரஸ் கோரும். ஆனால், மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி போய்ச் சேருவதை – அரசோடு இணைந்திருக்கும் அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோர் விருப்பப்படமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தமது விருப்பமின்மையை ஜனாதிபதிக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்துவார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, ரவூப் ஹக்கீமை நம்பி – தன்னுடன் இருக்கின்ற அதாவுல்லாவையோ, றிசாத் பதியுதீனையோ ஒருபோதும் கைவிடமாட்டார் என்பது நமது அனுமானமாகும்.

எனவே, கிழக்குத் தேர்தலுக்கு முன்னதாக – ‘மு.காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியினை வழங்குவேன்’ என்கிறதொரு உறுதிமொழியினை ஒருபோதும் ஜனாதிபதி வழங்க மாட்டார்.

எனவே, முதலமைச்சர் பதவி மு.கா.வுக்கு வழங்கப்படும் என்கிற உறுதிமொழி ஜனாதிபதியிடமிருந்து கிடைக்காத பட்சத்தில், அரசாங்கத்தோடு இணைந்து தேர்தலில் குதிப்பதற்கு மு.கா. விரும்பாது!

எனவே, பஷீர் சேகுதாவூத் கூறிய மூன்று தெரிவுகளில் – எஞ்சியுள்ள இரண்டில் மு.கா. எதை நோக்கி நகரும் என்பது குறித்தே நாம் பார்க்க வேண்டியுள்ளது!

அரசாங்கத்தோடு இணைந்து தேர்தலில் களமிறங்க முடியாது போனால் – அடுத்து, தனது மரச் சின்னத்தில் தனித்துத்துப் போட்டியிடுவதென்கிற முடிவொன்றினையே மு.கா. எடுக்கும். தமிழ் – முஸ்லிம் உறவு குறித்து எவ்வளவுதான் நாம் வாய் கிழியப் பேசினாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இரண்டு சமூகங்களும் ஒன்றையொன்று குரோத மனதுடன்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்! எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து போட்டியிடுவதென்பது – ‘சறுக்கு மரம்’ ஏறுவதற்கு ஒப்பானதொரு விடயமாகும்!

இது இவ்வாறிருக்க, சில வேளைகளில், மு.காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கூட, அந்தக் கட்சியின் தலைமையானது இரண்டு விடயங்களில் பாரிய நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும். அவை;
1.    வேட்பாளர்களைத் தெரிவு செய்தல்
2.    முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்துதல்

Athaulla 2முதலில், வேட்பாளர்களைத் தெரிவு செய்தலில் ஏற்படும் நெருக்கடிகள் எவை எனப் பார்ப்போம். அதாவது, ஆளும் ஐ.ம.சு. முன்னணியுடன் மு.கா. கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் போது, மு.கா.வுக்கு குறிப்பிட்டதொரு தொகை வேட்பாளர் ஆசனங்களே வழங்கப்படும். ஏனெனில் வெற்றிலைச் சின்னத்தில் சுதந்திரக் கட்சி, முஸ்லிம் கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகள் எனப் பங்காளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதனால் – வேட்பாளர் ஆசனப் பங்கீட்டில் மு.காங்கிரஸ் கேட்கின்ற தொகை கிடைக்காது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பலர் இப்போதே தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் – ஒரு சிலருக்கு மட்டுமே போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டியதொரு அசௌகரியமான நிலைக்கு மு.கா. தலைவர் தள்ளப்படுவார். இது – மு.கா. தலைவரை பாரிய இக்கட்டுக்குள் தள்ளிவிடும். தேர்தலில் குதிக்கும் ஆசையோடு உள்ள பல மு.கா. முக்கியஸ்தர்களின் கோபங்களுக்கு மு.கா. தலைவர் ஆளாகுவார். இதனால், கட்சி மாறும் காட்சிகள் நிறையவே அரங்கேறும்!

அடுத்த சிக்கல், முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்தலாகும். மு.கா.விலுள்ள பலருக்கு இப்போதே முதலமைச்சர் கனவுகள் வந்துபோகத் தொடங்கியுள்ளன. கிழக்கின் அடுத்த முதலமைச்சர் – தான்தான் என்கிற தொனியில் இப்போதே பலர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால், முதலமைச்சர் வேட்பாளராக குறித்த ஒருவரைத் தெரிவு செய்து நிறுத்துவதில் மு.கா. தலைவர் பாரிய தலையிடிகளை முகம்கொள்வார். ‘சரி, முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிறுத்தாது விட்டாலும் பரவாயில்லை ஆனால், ‘குறித்த’ நபருக்கு அந்த சந்தர்ப்பத்தினைக் கொடுக்கக் கூடாது’ என்கின்ற வகையறாக்கள் இன்னொரு புறம் முனகுவார்கள். இதனால் – நிலைமை இன்னும் மோசமாகும்.

இவ்வாறானதொரு நிலையில், முதலமைச்சர் வேட்பாளராக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமே களத்தில் குதிப்பது குறித்தும் யோசிக்கக் கூடும்!

அரசாங்கத்தோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடப் போவதாகவும், அதன்போது முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீமே களத்தில் இறங்கப் போவதாகவும் அண்மையில் பரபரப்பானதொரு செய்தி ஊடகங்களில் பேசப்பட்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இருந்தபோதும், காத்தான்குடியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து இந்த விடயத்தினை ரவூப் ஹக்கீம் மறுத்திருந்தார். இது அரசாங்கம் வேண்டுமென்றே உருவாக்கி விட்ட கட்டுக் கதை என்றார். ஆயினும், அந்தப் பேச்சின் இடையே மு.கா. தலைவர் ஹக்கீம் சுற்றி வளைத்து, வார்த்தை ஜாலங்களோடு சொன்ன இன்னுமொரு விடயம்தான் இங்கு அடிக்கோடிட்டுக் கூற வேண்டியதாகும்.

‘கிழக்கு மாகாணத் தேர்தலில் நான் போட்டியிடுவதென்கிற ஒரு முடிவு எடுக்கப்படமாட்டாது என்றும் சொல்ல மாட்டேன்! கிழக்கு மாகாணத்தில் நான் போட்டியிடுவது என்கிற தீர்மானத்தினை எவ்வளவு தூரம் ஓர் ஆயுதமாகப் பாவிக்க முடியுமோ அந்தளவு பாவிப்பேன்’ என்று மு.கா. தலைவர் ஹக்கீம் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

ஆக, மேற்சொன்ன ஆயுதத்தை மு.கா. தலைவர் ஹக்கீம் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன.

கிழக்குத் தேர்தலில் – முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் களமிறங்கலாம் என்று – நாம் சொல்வதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. கிழக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவாரேயானால், ‘இலங்கையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர்’ என்கிற பெருமையோடு – குறித்த நபரின் பெயர் வரலாற்றில் பதியப்படும். இது மிகப் பெரும் கௌரவமாக பிற்காலத்தில் பார்க்கப்படும்!

எனவே, இவ்வாறானதொரு கௌரவத்தினைப் பெற்றுக் கொள்வதில் மு.கா. தலைவர் நிச்சயமாக முனைப்புக் காட்டுவார். முன்பொரு முறை கட்டுரையொன்றில் மு.கா. தலைவர் குறித்து நாம் இப்படி எழுதியிருந்தோம். அவர் பெருமைகளைச் சேகரித்துக் கொள்வதில் ஆர்வமுடையவர். ‘கல்யாண வீடென்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். சாவு வீடென்றால் நான்தான் பிணமாகவும் இருக்க வேண்டும். மாலையும் மங்களமும் எனக்குத்தான் கிடைக்க வேண்டும்’ என்று ஒரு திரைப்படத்தில் நெப்போலியன் கூறுவது போல் – முதன்மையும், பெருமையும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் மு.கா. தலைவரும் பெரு விருப்புடையவர். இதை – பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் கண்டு Hakeem132வைத்துள்ளோம்.

எனவே, இலங்கையின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்று – வரலாற்றில் தனது பெயர் பெருமையோடு பதியப்படுவதற்கான வாய்ப்பினை மு.கா. தலைவர் அவ்வளவு இலகுவில் தட்டிக் கழிக்கவும் மாட்டார்.

இவைகளுக்கெல்லாம் அப்பால், முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றெடுத்து விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம். அதன் பிறகு என்ன? முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி தங்கக் கோலால் திருத்தி எழுதப்பட்டு விடுமா? இல்லை, பாலாறும்  தேனாறும் நமது தெருக்கள் எங்கும் ஓடத்தான் போகிறதா?

அதிகாரங்களற்ற மாகாணசபையில் இருந்து கொண்டு – மிஞ்சி மிஞ்சிப் போனால் சில கொங்றீட் வீதிகளையும், கட்டிடங்களையுமே நிர்மாணித்துக் கொண்டிருக்கலாம். இப்போதுள்ளவர்களும் இதைத்தானே செய்து கொண்டிருக்கின்றார்கள்!

சிங்கத்தின் வாலாக இருப்பதை விடவும், எலியின் தலையாக இருப்பதே மேல் என்பார்கள்!

ஆனால், துரதிர்ஷ்டவசமாக – நம்மில் அதிகமானோர், வாலாக இருப்பதற்கே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்!!

o

(இந்தக் கட்டுரை http://www.tamilmirror.lk எனும்இணையத் தளத்தில் 25 மே 2012 அன்று வெளியிடப்பட்டது)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s