காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முஸ்லிம் காங்கிரசும் – மூத்த தலைவர்களின் முக்காடுகளும்! 11 மார்ச் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 12:53 முப

மப்றூக்

முழுக்க நனைந்த பிறகு முக்காடு தேவையில்லை’ என்கிறதொரு முதுமொழி உண்டு! மழை பெய்கிறது, அதில் நனைந்து விடக் கூடாது என்பதற்காக தலையை மூடி போர்த்திக் கொண்டு சென்றால் அதில் ஒரு நியாயமுண்டு. ஆனால், மழையில் தெப்பமாக – நனைந்து விட்ட பிறகும், மூடி முக்காடு போட்டுக் கொண்டு செல்வதில் அர்த்தமும் இல்லை, பலனும் இல்லை! இதைத்தான் – அறுத்து உரித்துச் சொல்கிறது மேலேயுள்ள முதுமொழி!

ஆனால், நமது அரசியல் அரங்கில் – போதும் போதும் என்கிற அளவுக்கு நனைந்து விட்ட பிறகும் – சிலர் முக்காடுகளை மட்டும் கழற்றியபாடில்லை!

இதற்கு மிகச் சிறந்த அரசியல் உதாரணமாக – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சொல்லலாம்!

அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதற்கு முன்னர் அரசின் போக்குகளை விமர்சித்து வந்த மு.காங்கிரசார் – அரசோடு ஐக்கியமான பிறகும் அந்தப் போக்கிலிருந்து முழுமையாக மாறவில்லை என்பது ஆட்சியாளர்களின் கோபமாகும்.

இதன் காரணமாக, ஆட்சியாளர்கள் – மு.காங்கிரசை ஓர் எதிர்க்கட்சி போலவே இன்னும் நடத்தி வருகின்றார்கள்!

அதனால்தான், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மு.காங்கிரசின் செயலாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலி சமர்ப்பித்த அபிவிருத்தி வேலைகளுகளுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் – முகத்தில் அடித்தாற்போல் நிராகரிக்கப்பட்டது. கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் – குறித்த கூட்டம் இடம்பெற்றது.

மு.காங்கிரசுக்கு இந்த நிகழ்வானது – வெட்கம், வேதனை, அவமானமாகும்!

அதாவது, ‘நாங்களும் அரசாங்கத்தில்தான் இருக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் மு.காங்கிரசின் செயலாளருக்கே இந்த நிலை என்பது – அவமானமின்றி வேறென்ன?!

அதிலும், அரசுக்கு வாக்காலத்து வாங்குவதற்காக மு.காங்கிரசின் தலைவர் ஜெனீவா சென்றிருந்த நேரத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தமையானது – அந்தக் கட்சியினருக்கு வெட்கம் நிறைந்த வேதனைதான்!

சரியாகச் சொன்னால், இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை வைத்துக் கொண்டு மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு துரும்பினைக் கூட தூக்கி வைக்க முடியாமல் உள்ளது என்பதே உண்மை நிலைவரமாகும்!

மு.கா.வுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அந்தக் கட்சியின் செயலாளர் போன்றவர்களே காரணம் என்கிறார் மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர்! அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் – குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்த மு.காங்கிரசின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அதாவது, ‘மக்களுக்கு ஏதாவது அபிவிருத்திகளைச் செய்யலாம் என்று எண்ணித்தான் இந்த அரசாங்கத்தோடு நாம் இணைந்தோம். அப்படியென்றால் அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அவ்வாறாயின் ஆட்சியாளர்களை ஓரளவேனும் நாம் அனுசரித்துச் செல்ல வேண்டுமல்லவா! இதை விட்டு விட்டு, ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தும் விதத்தில் ஊடகங்களில் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தங்களில்லை’ என்று – அந்த நாடாளுமன்ற உறுப்பினர் சினந்து கொண்டார்.

இந்தக் கோபத்தில் நியாயங்கள் இல்லாமலுமில்லை. அதாவது, ‘நாங்கள் ரோசக்காரர்கள், யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம், எதைப் பேசுவதற்கும் தயங்க மாட்டோம்’ என்கிற வீராய்ப்பு உள்ளவர்கள் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு அதைச் செய்ய வேண்டும்!

‘அரசாங்கத்தோடு நாங்கள் இணைந்தும் இருப்போம், அதேவேளை ஆட்சியாளர்களைக் காரசாரமாக விமர்சித்து அறிக்கைகளையும் விட்டுக் கொள்வோம்’ என்கிற – ஹசனலியாரின் பாணியானது அரசியல்
சாணக்கியமுடையதாக – அவரின் கட்சிக்குள்ளேயே
பார்க்கப்படவில்லை என்பதுதான் இன்றின் நிலைவரமாகும்!

அரசையும், ஆட்சியாளர்களையும் மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி விமர்சிப்பதென்பதில் தப்பில்லை. பல வேளைகளில் அவ்வாறு விமர்சிப்பது நியாயமாகவே படுகிறது! ஆனால், அந்த விமர்சனத்தினை அவர் எங்கிருந்து கொண்டு செய்கிறார் என்பதே கவனத்துக்குரியதாகும்!

கக்கூசுக்குள் இருந்து கொண்டு சாப்பிடக் கூடாது, சாப்பிடும் போது பேசக் கூடாது, மற்றவர் பேசும் போது குறுக்கிடக் கூடாது என்கிற பொது நடைமுறைகள் தெரிந்த நம்மில் சிலருக்கு – அரசியலில் கூட்டு வைத்தால் – இணங்கிப் போக வேண்டும் என்றும், இணங்கிப் போக முடியாது போனால் விட்டெறிந்து விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரியாமல் போனது மட்டும் எப்படி?

மு.காங்கிரசில் உள்ள சிலரின் இந்த இரண்டுங்கெட்டான் நிலைப்பாடு காரணமாக, ஆட்சியாளர்களிடமிருந்து அந்தக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய ஏராளமான வரப்பிரசாதங்கள் தவறிக் கொண்டே செல்கின்றன. இதனால், அந்தக் கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களுமே மிகக் கடுமையாகப் பாதிப்கப்படுகின்றார்கள்!

அம்பாறையில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டம்

‘நமது கட்சி எதிரணியில் இருக்கிறது. அதனால் இந்த ஆட்சியில் எதையும் நமக்கு அனுபவிக்க முடியாது என்று – மு.கா. ஆதரவாளர்கள் முன்பு தம்மைத் தேற்றிக் கொண்டார்கள். ஆனால், ஆட்சியில் எமது கட்சி அங்கம் வகிக்கின்றது. இருந்தும் அந்த அதிகாரத்தினை வைத்துக் கொண்டு ஒரு புல்லைக் கூட புடுங்க முடியவில்லையே’ என்கின்ற அவர்களின் வேதனைக்கு மு.காங்கிரசும், அதன் தலைமையும் பதில் சொல்லியே ஆக வேண்டும்!!

மு.கா.வின் மறைந்த தலைவரும், அமைச்சருமான அஷ்ரப்புக்குப் பிறகு – மு.காங்கிரசுக்கு ஆதரவுள்ள பிரதேசங்களிலாவது தற்போதைய தலைவர் ஹக்கீம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அபிவிருத்திகள் எதனையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை!

தலைவரின் இந்தப் போக்கு மு.காங்கிரசின் தொண்டர்களுக்கே ‘கடுப்பினை’ ஏற்படுத்தியுள்ளது. அதனால், தலைவர் ரஊப் ஹக்கீமிடம் மு.கா. ஆதரவாளர்கள் தமது கோபத்தினை பல சந்தர்ப்பங்களும் நேரடியாக வெளிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் ஒரு விழா நடைபெற்றது. மு.காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குத் தெரிவானவர்களைக் கௌரவிப்பதற்காக அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் பிரதம அதிதி மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம். மு.காங்கிரசின் அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழாவுக்குச் சமூகமளித்திருந்தனர்.

அதன்போது, விழா மேடையில் ஓர் அதிர்ச்சி கலந்த சுவாரசியம் நிகழ்ந்தது. அதாவது, மு.காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகச் செயலாளரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் விழாவில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். மனிதர் தைரியசாலி. மு.கா. தலைவர் ஹக்கீமைப் பார்த்து அவர் இவ்வாறு பேசினார்;

”மு.காங்கிரசை இன்று வெற்றிபெற வைத்து அந்தக் கட்சியினைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் பிரதேசங்களில் அட்டாளைச்சேனையும் ஒன்று! ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மு.காங்கிரசினால் இந்தப் பிரதேசத்துக்கு சொல்லிக் கொள்ளுமளவு எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. எனவே, தொடர்ந்தும் மு.காங்கிரஸ் தலைவர் இந்த விடயத்தில் கண்டும் காணாதது போல் நடந்து கொள்ள முடியாது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் தலைவர் ரஊப் ஹக்கீம் கணக்கு விட முடியாது” (கணக்கு விடுதல் என்றால் ஒரு விடயத்திலிருந்து தப்பித்தல் என்று பொருள்படும்) என்றார்.

இதேவேளை, மு.காங்கிரஸ் ஆதரவாளர்களும் அந்த விழாவில் மு.கா. தலைவருக்கு தமது அதிருப்தியினைப் பல்வேறு விதங்களில் வெளிக்காட்டினார்கள்.

இவற்றினால், சற்றே ஆடிப்போன மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – அந்த விழா மேடையில் ஒரு வாக்குறுதியினை வழங்கினார். அதாவது, ‘அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குத் தேவையான அபிவிருத்திகளை மு.காங்கிரஸ் விரைவில் மேற்கொள்ளும். இந்தப் பிரதேசத்துக்கான தேவைகளை நாம் துரிதமாக நிறைவு செய்வோம். அட்டாளைச்சேனை வரலாறு காணாத அபிவிருத்தி பெறும்’ என்றார்.

அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு சுமார் ஒரு வருடமாகிறது. போன தலைவரை இன்னும் காணவேயில்லை என்று கூறி ஆதங்கப்படுகிறார் – மு.கா.வின் அட்டாளைச்சேனைப் பிரதேச முக்கியஸ்தர் ஒருவர்!

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. மு.கா. தலைவர் அபிவிருத்திகளை மேற்கொள்வதில் எப்போதும் மந்தமாவனவர்தான்! சந்திரிக்கா மற்றும் ரணில் விக்ரமசிங்க காலத்தில் பாரிய அமைச்சுக்களைப் பொறுப்பெடுத்துக் கொண்டு, பெரும் செல்வாக்குடன் பவனி வந்த காலங்களிலும் – மு.கா. தலைவரால் மு.காங்கிரசின் செல்வாக்குள்ள பகுதிகள் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள மு.கா.வின் கோட்டைகளே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்தன.

எனவே, ‘எல்லாம் கிடைத்த காலங்களில் ஒன்றுமே செய்யாத தலைவர் ஹக்கீம், ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படும் இன்றைய ஆட்சியில் இருந்து கொண்டு, எதைத்தான் செய்து விடப் போகிறார்’ என்று வேதனைப்படுகிறார் மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரொருவர்!

சரியாகச் சொன்னால், மு.கா. ஆதரவாளர்கள் அவர்களின் கட்சியின் மூலம் தமது பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளையும், தங்களுடைய இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்பினையும்தான் இப்போதைக்கு எதிர்பார்க்கின்றார்கள். இருந்தும், அவை கிடைத்தபாடில்லை! ஆனால், மு.கா.வின் எதிர்க்கட்சியினர் தங்கள் கட்சி ஆதரவாளர் பகுதிகளுக்கும் சிலவேளைகளில் அதற்கு அப்பாலும் சென்று நிறையவே செய்கின்றார். இது – மு.கா. ஆதரவாளர்களுக்கு கடுமையான கௌரவப் பிரச்சனையாகவும், இரட்டிப்புத் தலைவலியாகவும் மாறிவருகிறது.

மு.கா. தொண்டர்களுக்கு – தமது தலைவர் ஹக்கீம் எந்தவித அபிவிருத்திகளையும் செய்கிறாரில்லை என்கிற கவலையும், வேதனையும் ஒருபக்கமாக உள்ளது! அதேவேளை, தமது கண்முன்னாலேயே தங்களுடைய அரசியல் எதிராளிகள் அபிவிருத்திகளைச் செய்வதும், அதற்கான திறப்பு விழாக்களை மேற்கொள்ளவதும், அவை பற்றிப் பெருமையடித்துக் கொள்வதுமான அசௌகரியம் இன்னொரு பக்கம்! இது பரிதாபத்துக்குரியதொரு நிலையாகும்!!

சரி, மு.காங்கிரசின் தலைமையால் இப்போதைய நிலையில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு அபிவிருத்திகளைத்தான் செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால் – அந்த மக்களின் வாழ்வியல் உரிமைகளோடு தொடர்புபட்ட பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்க முடியாமல் உள்ளமையானது வேதனையாகும்.

உதாரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஆலிம்சேனை (அஷ்ரப் நகர்) பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் காணிகளில் ராணுவத்தினர் முகாம்களை அமைத்து வருவதாக, சம்பந்தப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். அதேவேளை, அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களின் இருப்பிடங்களும் இரவோடிரவாக தடயங்கள் இன்றி அழிக்கப்பட்டு வருவதாககவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மு.கா. தலைவர் ஹக்கீமிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நிறையவே புகார்களைத் தெரிவித்து விட்டார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாநகரசபை மேயருக்கு நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஹக்கீம், ஆலிம்சேனைக்கும் போய்ப் பார்த்து விட்டுப் போனார். ஆனாலும், அந்த மக்களுக்கு இதுவரை எந்த விதமான தீர்வுகளும் கிடைக்கவேயில்லை! அந்தக் கிராமத்து மக்கள் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனேயே கழித்து வருகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் விடுதலை, உரிமை, சுதந்திரம் போன்றவைகளுக்காகக் குரல் கொடுப்பதே தமது இலட்சியம் என்கிற கோசங்களுடன் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு சென்ற

மு.காங்கிரஸ் தலைவருக்கு – ஆலிம்சேனை விவகாரம் ஓர் உரிமைப் பிரச்சினையாகத் தெரியவேயில்லையா? சமூகம், உரிமை, விடுதலை போன்ற கோசங்களால் உசுப்பேற்றப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்களா? என்று கேட்கிறார் – ஆலிம்சேனை வாசியொருவர்!

எது எவ்வாறாயினும் இப்போதைய அரசியல் நிலைவரத்தில் மு.காங்கிசின் உயர் தலைவர்கள் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டியிருக்கிறது! அதாவது, மக்களுக்குத் தேவையான
அபிவிருத்திகளை அரசோடு இணங்கிப் போய் செய்ய வேண்டும். அது முடியாது போயின் – அரசை விட்டு வெளியேறி அடுத்த கட்ட நகர்வு பற்றித் தீர்மானிக்க வேண்டும் என்பதே மு.கா. ஆதரவாளர், தொண்டர்கள் தொடக்கம் – உயர் மட்டத்தவர்கள் பலரின் நிலைப்பாடாக உள்ளது!

இதை விட்டு விட்டு, முழுக்க நனைந்த பிறகும் முக்காடுகளோடு இருப்பதென்பது மு.கா. தலைவர்களுக்கு ஆரோக்கியமாக அமையாது! அப்படி இருப்பதானது அரசியல் ரீதியாக தடிமன், காய்ச்சல், தலைவலி என்று – ஆயிரத்தெட்டு நோய் நொம்பலங்களை மு.கா.வுக்குள் உருவாக்கி விடக்கூடும்!

(இந்தக் கட்டுரையை  10 மார்ச் 2012 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s