காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முகமூடிகளை அணிந்து கொண்டவர்களின் கதை! 2 மார்ச் 2012

Filed under: அரசியல் — Mabrook @ 10:16 பிப

மப்றூக்
முகமூடிகளை அணிந்து கொள்வோர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிலவேளை உங்களில் சிலரும் முகமூடிகளை அணிந்து பார்த்திருக்கக் கூடும். ஆகக்குறைந்தது 03 நோக்கங்களுக்காக முகமூடிகள் அணியப்படுகின்றன.

1. தமது அடையாளத்தை மறைத்துக் கொள்வதற்காக
2. மற்றவரை அச்சமூட்டுவதற்காக
3. கோமாளித்தனம் புரிவதற்காக

அரசியலில் இருப்போரும் முகமூடிகளை அணிந்து கொள்கின்றார்கள். ஆனால், அவை ஆண்டாண்டு காலமாக நாம் அறிந்து வைத்திருக்கும் முகமூடிகளல்ல! பல சந்தர்ப்பங்களில், முகங்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவையே அவர்களின் முகமூடிகளாக இருந்து விடுகின்றன.

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா இல்லையா என்பது இன்றைய அரசியல் அரங்கில் சூடுபறக்கும் விவாதமாக மாறியிருப்பது பற்றி நீங்கள் அறிவீர்கள்! மேற்படி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு ஒருபோதும் வழங்கப் போவதில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ! ஆனால் – காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கியே ஆகவேண்டும் என்கின்ற பிடிவாதமான குரல்கள் இன்னொரு புறமாக ஒலித்தும் வருகின்றன. குறிப்பாக – கிழக்கு மாகாணசபையானது மேற்குறித்த அதிகாரங்களை தமக்கு வழங்கியே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் – காணி, பொலிஸ் அதிகாரங்காரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்கின்றனர். இவ்வாறு உரத்துக் குரல் கொடுக்கும் கிழக்கு மாகாண அமைச்சர்களில் – அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பையும் ஒருவராவார்!

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கூறிவரும் வரும் அதேவேளை, அவரின் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவோ – காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படக் கூடாது எனக் குரலெழுப்பி வருகின்றார். குறித்த அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டால், அது – இனங்களுக்கிடையே தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும் என்பது அமைச்சர் அதாஉல்லாவின் வாதமாகும்!

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள் மாறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்றமை பற்றி நாம் அறிவோம். இந்த இடத்தில் அந்த விவாதம் குறித்து நாம் பேசப்போவதில்லை! ஆனால், தேசிய காங்கிரஸ் எனும் ஒரு கட்சியின் தலைவரான அமைச்சர் அதாஉல்லா – காணி, பொலிஸ் அதிகாரம் குறித்து ஓர் அபிப்பிராயத்தினையும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சர் அதாஉல்லாவின் வலது கை என அறியப்பட்டவருமான கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – அதாஉல்லாவின் அபிப்பிராயத்துக்கு எதிரானதொரு கருத்தினையும் தெரிவித்து வருவகின்றமை குறித்தே – இங்கு நமது கவனம் திரும்புகின்றது!

ஏன் இந்த முரண்பாடு? ஒரே கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கிடையில் – ஒரு விடயம் குறித்து ஏன் இந்த இரண்டுபட்ட நிலை என்பது குறித்து நாம் பேச வேண்டுமல்லா?!

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து தேசிய காங்கிரசின் தலைவரான அமைச்சர் அதாஉல்லா – கிழக்கு மாகாணத்தினுள்ளே ஒரு முகத்தினையும், கிழக்குக்கு வெளியே வேறொரு முகத்தினையும் காட்டி வருகின்றார். இதை இன்னும் உரித்துச் சொன்னால், சிங்கள மக்களிடையே ஒரு முகத்தினையும் – தமிழ்பேசும் மக்கள் மத்தியில் வேறொரு முகத்தினையும் அதாஉல்லா வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாகப்பட்டது, மேற்படி முரண்பட்ட இரண்டு கருத்துகளினதும் சொந்தக்காரர் அமைச்சர் அதாஉல்லாதான்! கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – அமைச்சர் அதாஉல்லாவின் இன்னொரு குரல், அவ்வளவுதான்!

அப்படியென்றால், மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்த விவகாரத்தில் அமைச்சர் அதாஉல்லா – ஓரிடத்தில் முகத்தோடும், இன்னோரிடத்தில் முகமூடியோடும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்!

இதில், அதாஉல்லாவின் முகம் எது? முகமூடி எது? என்பது குறித்து நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் என்கிறதொரு விடயம் பற்றி அண்மைக் காலங்களில் நீங்கள் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தத் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து அங்கீகாரம் பெறுவதற்கு முன்னர், நாட்டிலுள்ள அனைத்து மாகாணசபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதனால், இந்தச் சட்ட மூலத்துக்கு ஒவ்வொரு மாகாணசபையினதும் பெரும்பான்மை அங்கீகாரத்தினை ஆளும் அரசு வேண்டி நிற்கிறது.

மேற்படி சட்ட மூலத்தில் சிறுபான்மையினருக்குப் பாதகமான பல விடயங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நறுக்கென்று சொன்னால், இலங்கையிலுள்ள எந்தவொரு நிலத்துண்டினையும் பௌத்த மத விவகார அமைச்சானது தனக்குத் தேவையெனக் கருதும் பட்சத்தில் சுவீகரித்துச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு இந்தச் சட்டத்தில் தாராளமாக இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்தத் திருத்தச் சட்ட மூலத்துக்கு தாம் அங்கீகாரம் வழங்கப்போவதில்லை என – கிழக்கு மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதம் பாராமல் தமது எதிர்ப்பினை ஏகமனதாகத் தெரிவித்து விட்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணசபையில் மிகக் கடுமையாக எதிர்த்தது. சிறுபான்மை மக்களுக்கு தீங்கினை ஏற்படுத்தும் ஒரு சட்ட மூலத்தினை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மைக் குரலாக ஒலிக்கும் மு.காங்கிரஸ் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று – கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விட்டனர்.

போதாக்குறைக்கு – எதிர்வரும் 28 ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் இச் சட்ட மூலம் தொடர்பில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின்போது, மு.காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதில் பகிடி என்னவென்றால் – முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை அரசியல் குரல் என மார்பில் அடித்துக் கொள்ளும் இதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மேற்படி நாடு, நகர திட்டமிடல் சட்ட மூலத்துக்கு ஆதரவாக மேல் மாகாணசபையில் வாக்களித்துள்ளது.

மு.கா. என்பது அதன் தலைவர் ரஊப் ஹக்கீமின் ஆளுகைக்குட்பட்டதொரு அரசியல் கட்சியாகும். ரஊப் ஹக்கீமின் விருப்பு வெறுப்புகளுக்கிசைவாகவே அந்தக் கட்சியில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது சிறு குழந்தையும்
அறிந்த விடயமாகும். அப்படிப் பார்த்தால் – நாடு, நகர திருத்த சட்ட மூலம் தொடர்பில் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கூட – கிழக்கில் ஒரு முகத்தைனையும், வெளியே இன்னொரு முகத்தினையும் காட்டியிருப்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், மு.காங்கிரசின் இந்த இரண்டு பட்ட நிலைப்பாடு குறித்து – பலரும் தமது விமர்சனங்களினை முன்வைத்தபோது – மு.கா.வின் செயற்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்த கருத்து – கோமாளித்தனமானதும், வடிவேலுவின் நகைச்சுவைகளுக்கு ஈடானவையுமாகும் என்கின்றார் நமது ஊடக நண்பரொருவர்!

அதாவது, ‘சிறுபான்மையினருக்கு பாதகமான விடயங்களைக் கொண்டுள்ள நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலத்தை மு.காங்கிரஸ் ஒரு போதும் அங்கீகரிக்காது. ஆனால், தொடர்பாடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மேல் மாகாணசபையில் – குறித்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்து விட்டார்கள்’ என்றார் ஹசனலி!

‘தொடர்பாடலில் ஏற்பட்ட சிக்கல்’ என்கின்ற வாக்கியத்தினூடாக இங்கு மு.கா. செயலாளர் ஹசனலி தெரிவிக்க விரும்பும் விடயம் என்னவென்றால், ‘மேற்படி சட்ட மூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மு.கா.வின் தலைமைப்
பீடத்திலிருந்து கூறப்பட்ட விடயத்தினை, மேல் மாகாணசபையிலுள்ள மு.கா. உறுப்பினர்கள் பிழையாக விளங்கிக் கொண்டு விட்டார்கள். அதாவது – ஆதரித்து வாக்களியுங்கள் என்று விளங்கி விட்டார்கள். அதனால்தான், மேல் மாகாணசபையில் நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக மு.கா. வாக்களிக்க நேர்ந்து விட்டது என்பதாகும்.

அப்படியென்றால் – சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு விடயத்தைக் கூடப் புரிந்து கொண்டு செயற்பட முடியாத ‘விளங்கா மணிமாலை’களையா மேல் மாகாணசபையில் உறுப்பினர்களாக மு.காங்கிரஸ் வைத்துக் கொண்டிருக்கிறது என்று கேட்கின்றார் மு.காங்கிரசின் தீவிர ஆதரவாளரான நமது நண்பரொருவர்!

இப்படித்தான், சில காலங்களுக்கு முன்பும் ஒரு முசுப்பாத்தி நடந்தது. மு.காங்கிரஸ் தலைமையோடு அப்போது முரண்பாடு கொண்டிருந்த அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினரான கே.எம். அப்துல் ரசாக் (ஜவாத்) என்பவர் கிழக்கு மாகாணசபையில் – தனது கட்சியின் அறிவுரைகளையும் மீறி – குறித்ததொரு விடயத்துக்கு எதிராக வாக்களித்து விட்டார்.

இந்த வாக்களிப்பு விவகாரமானது அப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது. மு.கா. தலைமையின் கட்டளைகளையும் மீறி – மாகாணசபை உறுப்பினர் ஜவாத் செயற்பட்டமையானது அந்தக் கட்சியின் தலைமைக்கு கடுமையான கௌரவச் சிக்கல்களை ஏற்படுத்தியது. அதனால், இவ்விவகாரத்தினைச் சமாளிப்பதற்காக அப்போதும் மு.கா. தலைமைப்பீடமானது – ‘தொடர்பாடலில் ஏட்ட சிக்கல் காரணமாக ஜவாத் எதிராக வாக்களித்து விட்டார், வேறொன்றுமில்லை’ என்றது!

எது எவ்வாறிருந்த போதிலும், நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் எனும் விடயம் தொடர்பில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – இரண்டு முகங்களோடு செயற்பட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகிறது. இதில் – ஹக்கீமின் முகம் எது? முகமூடி எது?

சிலவேளைகளில் முகமூடிகள் – அவை அணியப்படும் நோக்கங்களுக்கு எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தித் தொலைப்பதுண்டு!

ஒரு திரைப்படத்தில், பொலிஸ்காரராக வரும் நடிகர் வடிவேலு மற்றவர்களை அச்சப்படுத்தி அடக்கியாள நினைப்பார். அதற்காக தனது முகத்தை எப்பொழுதும் வடிவேலு ‘கர்ண கடூரமாக’ வைத்துக் கொண்டிருப்பார். அதாவது – தனது முகத்தை அவ்வாறு விறைப்பாகவும் கடுமையாகவும் வைத்துள்ளதாக வடிவேலுதான் நினைத்துக் கொள்வாரே தவிர, உண்மையில் அப்படியல்ல! தனது முகத்தை கடுமையாக்கிக் கொள்ளவதாக நினைத்து வடிவேலு செய்யும் செயற்பாடுகளெல்லாம் – அவரை மற்றவர்களுக்கு ஒரு சிரிப்புப் பொலிஸாகவே காட்டும்!

அதுபோல், நமது அரசியல்வாதிகள் – சிலவேளைகளில், தமது நிஜத்தினையும், நேர்மையற்ற செயற்பாடுகளையும் மறைத்துக் கொள்வதற்காக அணிந்து கொள்ளும் முகமூடிகள் – அவர்களை ஒரு நிலையில் அரசியல் கோமாளியாகக் காட்டக் கூடும்!

அப்போது, இவர்களைப் பார்த்து – சமூகம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கும்!!

(இந்தக் கட்டுரையை  25 பெப்ரவரி 2012 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s