காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கடாபி: பிழையாக வாசிக்கப்படப்போகும் சரித்திரம்! 30 ஒக்ரோபர் 2011

Filed under: அரசியல் — Mabrook @ 6:35 பிப

color-dotமப்றூக்

  Gaddafiலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமானால், கப்பல் அனுப்பி வைத்து முஸ்லிம் மக்கள் அனைவரையும் கடாபி தன்னுடைய நாட்டுக்கு எடுத்து விடுவார் என்று எங்களூர் பெரிசுகள் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் பேசிக் கொண்ட கதைகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.

பச்சை நிறத்திலான அரபு எழுத்துக்களுடன் லிபியத் தலைவர் கடாபியின் (அவரின் சரியான முழுப் பெயர் முஅம்மர் முஹம்மது அபு மின்யார் அல் – கதாஃபி என்பதாகும்) உருவம் கொண்ட வெள்ளை நிற ரீ சேட்களை எங்கள் கிராமத்தின் அப்போதைய இளைஞர்களில் சிலர் அணிந்து கொண்டு வலம் வந்த நினைவுகள் மறக்க முடியாதவை!

சில தசாப்தங்களுக்கு முன்னர் தேசங்கள் கடந்து லிபியத் தலைவர் கேணல் கடாபி – ஒரு ஹீரோவாக முஸ்லிம் மக்களால் நேசிக்கப்பட்டார், மதிக்கப்பட்டார். கடாபி என்கின்ற சொல் – விடுதலையை விரும்பும் முஸ்லிம் வீரர்களின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டது.

ஆனால், அதே கடாபி – அவரின் தேசத்து மக்களாலேயே அடித்து இழுத்துக் கொண்டு சென்று கொல்லப்பட்டுள்ளார் என்பதை – நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் தங்கள் இதயங்களில் கடாபியை ஒரு ரோசாப்பூவைப் போல் சூடியிருந்த லிபிய மக்கள் – இன்று ஒரு எச்சில் இலை போல தூக்கி எறிந்திருக்கின்றார்கள் என்றால், இதற்கு என்னதான் காரணம்??
நம்மில் அநேகமானோர் நம்பிக் கொண்டிருப்பது போல் கடாபி அத்தனை நல்லவரில்லை! ஆனால், கேணல் கடாபி அத்தனை கெட்டவருமில்லை!!

லிபியாவை ஜனநாயகமற்றதொரு நாடாகவே கடாபி ஆட்சி செய்தார். அங்கு கட்சிகள் இல்லை, தேர்தல்கள் இல்லை, நாடாளுமன்றம் என்று எதுவுமேயில்லை! ஆனாலும், லிபியர்களை கடாபி தனது ஆட்சிக் காலத்தில் செல்வந்தர்களாக மாற்றினார். அந்த மக்களுக்கு – அதிக பொருளாதார சலுகைகளை வழங்கினார். நம்பினால் நம்புங்கள், லிபிய மக்கள் ‘கரண்ட் பில்’ கட்டுவதேயில்லை. லிபியர்களுக்கு மின்சாரத்தைக் கூட கடாபி இலவசமாகவே வழங்கினார்.

பிறகேன் கடாபிக்கு எதிரான புரட்சி வெடித்தது என்கிறீர்களா? எல்லாமே கடாபிதான் – கடாபிதான் எல்லாமே என்கிற 40 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதிகாரம் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பும், ஆத்திரமுமே புரட்சியாக வெடித்தது! இந்தப் புரட்சிக்கு எண்ணெய் ஊற்றி உசுப்பேத்தி விட்டன அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும்!

ஒருவரின் மரணத்தின் பிறகுதான்- அவர் அதிகம் பேசப்படுவார், விமர்சிக்கப்படுவார். கடாபியின் மரணம்தான் அவரின் எல்லாக் கோணங்களையும் பேசச் செய்கிறது!

கடாபி ஒன்றும் ராஜ வம்சத்து ஆளில்லை! ஆடுகளையும், Gadafi1ஒட்டகைகளையும் மேய்த்துத் திரிந்த நாடோடிப் பெற்றோருக்குப் பிறந்தவர்தான் இந்த மனிதர். ஆனால், தனது 27ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றி – சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சக்கரவர்த்தியைப் போல் ஆண்டு அனுபவித்தார்!

இயற்கையில் கடாபி ஒரு ரசனையாளர். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதிப் பிரியங் கொண்டவர். ஒரு நாளில் ஏராளமான தடவைகள் ஆடைகளை மாற்றிக் கொள்வார். தன்னைச் சந்திக்க விருந்தினர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கும் போதும், தனது அறைக்குச் சென்று மீண்டும் ஆடைகளை மாற்றிக் கொண்ட பிறகுதான் சந்திக்க வருவார். அதிலும், வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகளில் கடாபிக்கு நிறையப் பிரியம்.

லிபிய அதிபர் கேணல் கடாபி பற்றி அவரின் மருத்துவத் தாதிகளில் ஒருவராகப் பணியாற்றிய உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஒக்சானா பலின்ஸ்கயா எனும் யுவதி கூறும் தகவல்களைக் கேட்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.
‘எனக்கு அரபு மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அதிபர் கடாபிக்கு எங்களிடையே ‘பபிக்’ என்று ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தோம். ‘பபிக்’ என்றால் ரஷ்ய மொழியில் சிறிய தந்தை என்று அர்த்தம்.

நான் தாதியாகக் கடமையாற்றிய காலத்தில் எனக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இரண்டு படுக்கையறை கொண்ட வீடு, அழைத்தவுடன் ஆஜராகும் சாரதி என்று எல்லாமே சௌகரியமாகத்தான் இருந்தன. ஆனால், என்னுடைய நடத்தைகள், செயற்பாடுகள் என்று – எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அத்தனை விடயங்களும் கண்காணிக்கப்பட்டன’ என்கிறார் ஒக்சானா!

அதிபர் கடாபி 1942ஆம் ஆண்டு பிறந்தவர். மரணிக்கும் போது 69 வயது. ஆனால், அவரின் உடல் ஆரோக்கியம், குறிப்பாக – இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை எப்போதும் ஓர் இளைஞனுடையவை போன்று மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார் மருத்துவத்தாதி ஒக்சானா.

‘உக்ரேன் நாட்டு ஊடகங்கள் எங்களை கடாபியின் ‘அந்தப்புரத்துப் பெண்கள்’ என்றுதான் எழுதும். உண்மையில் அது முட்டாள்தனமானதொரு கூற்றாகும். கடாபியின் மருத்துவத் தாதிகளாகப் பணியாற்றிய எங்களில் எவரொருவரும் அவரின் காதலியாகவோ, அந்தப்புரத்து நாயகியாகவோ இருந்ததில்லை! இன்னும் சொன்னால், அவரின் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது போன்ற மருத்துவக் கடமைகளின் போது மட்டும்தான் அவர் மீது எங்கள் கைகள் படுவதுண்டு!

கடாபி கவர்ச்சியான உக்ரேன் பெண்களையே அவரின் தாதியர்களாகத் தெரிவு செய்து வைத்திருந்தார். எங்களுடைய தோற்றம் அதற்கு முக்கியமானதொரு காரணமாக இருந்திருக்கலாம். தன்னைச் சுற்றி அழகிய பொருட்களும், அழகிய மனிதர்களும் இருப்பதை அவர் பெரிதும் விரும்பினார்’ என்கிறார் ஒக்சானா!

கடாபியிடம் விசித்திரமான பழக்க வழக்கங்கள் இருந்தன. அரபுப் பாடல்களை பழைய ‘கசற் பிளேயர்’களில் கேட்பதில் அவருக்கு அலாதிப் பிரியம்.

Nurseஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் வேளைகளில் ஏழைச் சிறுவர்களைக் கண்டால் கடாபி தனது வாகனத்திலிருந்தபடியே காசையும், இனிப்புப் பண்டங்களையும் வெளியில் வீசி எறிவார். அவரின் வாகனத்தைத் துரத்தியபடியே சிறுவர்கள் அவற்றினைப் பொறுக்கிக் கொள்வார்கள். ஆனால், ஒருபோதும் அந்தச் சிறார்களின் அருகில் கடாபி சென்றதேயில்லை. காரணம், அவர்களிடமிருந்து தனக்கு நோய்கள் ஏதாவது தொற்றி விடுமோ என்கிற பயம்தான்.

இவை மட்டுமல்ல, கடாபி வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்கு தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களால் சூழப்பட்ட கூடாரத்தினுள்தான் தூங்குவாராம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி லிபியத் தலைவரிடம் நிறையவே விந்தையான பழக்க வழங்கங்கள் இருந்தன!

கடாபி வெளிநாடு செல்லும் போது, நல்ல ‘மூட்’டில் இருந்தால், தன்னுடன் வருகின்ற தனது அலுவலர்கள் அனைவரையும் கடைகளுக்குச் சென்று விரும்பியவைகளையெல்லாம் வாங்கிக் கொள்ளுமாறு கூறுவார். எதிர்பாராத நேரங்களில் போனஸ் கொடுப்பார். தனது உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கடிகாரங்களை ஒவ்வொரு ஆண்டும் தனது அலுவலர்களுக்கு பரிசளிப்பதை கடாபி ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்.

கடாபியின் மருத்துவத்தாதி ஒக்சானா – கடாபி பற்றியும் அவருக்கெதிராக நிகழ்ந்த புரட்சி பற்றியும் இப்படிக் கூறுகின்றார். ‘லிபியாவின் எல்லாமாக கடாபியே இருந்தார். அவருக்கு ஸ்ராலினை (ரஷ்ய நாட்டு சர்வதிகாரி ஜோசப் ஸ்ராலின்) ரொம்பப் பிடிக்கும். கடாபி அனைத்து அதிகாரங்களையும், சௌபாக்கியங்களையும் கொண்டிருந்தார். எகிப்தில் இடம்பெற்ற புரட்சியை முதன் முதலாக தொலைக்காட்சியில்தான் நான் பார்த்தேன். ஆனால், அவ்வாறானதொரு புரட்சியை எங்கள் ‘பபிக்’குக்கு (கடாபி) எதிராக எவராவது மேற்கொள்வார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால், ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக அந்தப் புரட்சி துனூசியா, எகிப்து என்று – லிபியாவையும் தொற்றிக் கொண்டு விட்டது’!

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கடாபிக்கும் வரலாற்றில் எப்போதும் முறுகல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. 1986ஆம் ஆண்டு பேர்லின் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் குண்டு வெடிப்பொன்று நிகழ்ந்தது. இதில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பின் பின்னணியில் லிபியா செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, லிபியாவின் தலைநகரான திரிப்போலியிலும் மற்றும் பெங்காசி நகரிலும் கடுமையான விமானத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் கடாபியின் வளர்ப்பு மகளொருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லிபியா மீது அந்த அமெரிக்க வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் றீகன் பதவி வகித்தார். கடாபியோடு மிகக் கடுமையாக மோதிப் பார்த்த அமெரிக்கத் தலைவர்களில் றீகன் குறிப்பிடத்தக்கவர். ஒருமுறை கடாபியை ‘மத்திய கிழக்கின் பைத்தியக்கார நாய்’ (Mad dog of the Middle East) என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் றீகன் சாடியிடிருந்தமையை உலகு Gadafi3அத்தனை இலகுவில் மறந்திருக்காது. இதை வைத்தே – கடாபி மீது அமெரிக்கா கொண்டிருந்த குரோதத்தை ஓரளவேனும் நாம் புரிந்து கொள்ள முடியும். அந்தக் குரோதங்களின் நீட்சியும், உச்சகட்டக் காட்சியும்தான் – நேட்டோவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட புரட்சியும், கடாபியின் கறை படிந்த மரணமுமாகும்!

கடாபியின் சரி – பிழைகளுக்கப்பால், வரலாற்றின் அதிக பக்கங்களில் அவர் – இனி ஒரு கொடுங்கோலனாகவே நமது குழந்தைகளால் வாசிக்கப்படுவார். ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக கடந்த சில தசாப்தங்களாய் வரலாறுகளை – அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளுமே தமக்கு ஏற்றாற் போல் புனைந்து வருகின்றன.

கடாபி ஒரு வரலாற்று நாயகன் என்பதில் இரண்டு கதைகள் இல்லை. ஆனால், அந்த நாயகன், நம்மில் அநேகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது போல் – அத்தனை நல்லவருமில்லை, அத்தனை கெட்டவருமில்லை!!!

o

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும்இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s