மப்றூக்
உனது திருமணத்துக்குப் பிறகு நான் இறைவனிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒரு விபத்தாகக் கூட உன்னை நான் சந்தித்து விடக் கூடாது என்பதே!
ஆனால், நமது விடயத்தில் இறைவன் எனது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதேயில்லை! இன்று பிந்திய மாலைப் பொழுதில் அல்லது முன்னிரவின் மங்கல் வேளையில் உன்னை நான் கண்டேன்! அந்தக் கணம் உள்ளுக்குள் ஓருதரம் உயிர் உதறித் துடித்தது!
அது நீதான், கணவனுடன் கையில் குழந்தையோடு நின்ற உன்னைக் கடந்து வந்த பிறகுதான் கவனித்தேன், நீயும் எனது திசையையே பார்த்து நின்றாய்!
எத்தனை வருடங்களாயிற்று உன்னைப் பார்த்து. கடைசியாய் காதலர்களாகத்தான் பிரிந்தோம். இப்போது – அந்நியர்களாகச் சந்திக்கின்றோம்!
கையில் நீ வைத்திருந்த குழந்தை பற்றி உன் தோழியிடம் விசாரித்தேன். ஆண் பிள்ளையென்றாள். நிச்சயமாக தமிழ் சினிமாக் கதாநாயகிபோல் உன் குழந்தைக்கு நீ என் பெயரை வைத்திருக்க முடியாது என்று நம்புகிறேன்! தனக்குப் பிடித்த பெயரை தன் குழந்தைக்குச் சூட்டுகின்ற சுதந்திரத்தைக் கூட, இந்த சமூகம் உன்போல் பெண்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறியாதவனில்லையடி நான்!
விசித்திரங்களால் நிறைந்தது வாழ்க்கை!
பேசிக்கொள்ள வேண்டுமென்கின்ற தவிப்போடு நாம் அலைந்து திரிந்த போது – சந்திப்புகள் நமக்குள் சாத்தியமற்றுப் போயின. இப்போது முகம் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் – பேசிக்கொள்ளத்தான் எதுவுமேயில்லை.
இரவில் இலை மூடித் தூங்கும் வாகை மரம், விடியலில் விரிவதைப் போல் – இன்று உன்னைக் கண்ட பிறகு, எனக்குள் காணாமல் போய்க்கிடந்த நினைவுகள் கண்விடுக்கத் துவங்கின!
காதலித்த காலத்தில் நீ எழுதிய கடிதங்களை ஒரு முறை தூசு தட்ட வேண்டும் போல் மனசு துடித்தது. தட்டினேன்! மோசமானதோர் அரசியல்வாதியைப் போல், உன் மடல்கள் முழுக்க நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே நிறைந்து கிடந்தன! என்னைப் பிரிந்தால் மறு கணமே இறந்து போய் விடுவேன் என்று ஒரு கடிதத்தில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தாய் நீ!
திரும்பத்திரும்ப படித்துப் பார்த்தபோது, அப்போதெல்லாம் நான் விழுந்து விழுந்து ரசித்த உன் காதல் கடிதங்களின் ஏராளமான வரிகள் இப்போது எனக்கு– கோமாளித்தனமாகவே தெரிந்தன!
இப்போது ஓர் ஆசை! உனக்கும் எனக்குமிடையில் தனியாக ஒரு சந்திப்பு நிகழ வேண்டும். அப்போது உன்னை கேட்பேன்,
”உண்மையில் நீ என்னைக் காதலித்தாயா?”
ஆனால், நமது விடயத்தில்தான் இறைவன் எனது ஆசைகளை நிறைவேற்றியதேயில்லையே
கனவில்வந்து
பொழிந்து விட்டுப் போன
மழை மாதிரி தடயமற்றுப் போயிற்று…
தீராது என்று – நீ
சத்தியங்கள் செய்து தந்த காதல்!
0
(சூரியனில் ஒலிபரப்பான ‘இறவாத காலம்’ பிரதி)