காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

காதல் கடிதங்கள்! 12 மே 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:21 பிப

மப்றூக்

தென்னிந்தியத் திரைப்பட நடிகர்களுக்கு இருக்கும் பிரபல்யம் – ஏதோவொரு வீதத்தில் இங்கு வானொலி அறிவிப்பாளர்களுக்கு இருக்கின்றது அல்லது இருந்தது! அதிலும், சூரியன் எப்.எம். உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதன் அறிவிப்பாளர்களுக்கு நம்ப முடியாத ரசிகர் பட்டாளம் இருந்தது.

சூரியனின் ஆரம்ப காலங்களில் – ஒவ்வொரு நாளும் அறிவிப்பாளர்களைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்துக்கு ரசிகர்கள் வந்து கொண்டிருப்பார்கள். சில நாட்களில் பத்து, இருபது தடவைகள் நம்மைச் சந்திக்க ரசிகர்கள் வருவார்கள். புதிதில் இது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அலுத்துவிட்டது.

ஒவ்வொரு தடவையும் வேலைகளை இடையில் விட்டுவிட்டு (அலுவலகத்தில் அறிவிப்பு மட்டும் வேலையல்ல, நிகழ்ச்சிகளுக்குத் தயாராவது, பாடல்களைத் தெரிவு செய்வது என்று ஆயிரம் வேலைகள் உள்ளன) வரவேற்பிடத்துக்குச் சென்று – நேயர்களுடன் பேசி, அவர்களுக்கு ஓட்டோகிராப் எழுதிக் கொடுத்து, சிலவேளைகளில் அவர்களுடன் போட்டோவுக்கு நின்று போஸ் கொடுத்துவிட்டு வருவதற்குள் போதும் என்றாகிவிடும்.

நேயர்கள் நேரடியாக வருவது ஒருபுறம் இருக்க – அலுவலகத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் இன்னொருபுறம்! சில நேயர்கள் தாம் பேச விரும்பும் அறிவிப்பாளரைப் பெயர் குறித்துக் கேட்பார்கள். சிலரின் புதினம் வித்தியாசமானது. அவர்களுக்கு யாராவது ஒரு அறிவிப்பாளருடன் பேசினால் சரி! தாங்கள் வானொலியில் கேட்கும் குரலுடன் தொலைபேசியில் பேசுவதில் அவர்களுக்கு அத்தனை ஆனந்தம்!

இப்படி வரும் நேயர்களின் அழைப்புகளும் பல சமயங்களில் அசௌகரியங்களைத் தருவதுண்டு. நாம் மிக முக்கியமான வேலைகளில் இருக்கும் போது வரும் அழைப்புக்கள் – நம்மை விடாது! கடைசியில், பேசி முடித்து வைக்கும் போது நமது முக்கியமான வேலையில் மண்விழுந்திருக்கும்.

எனக்கென்றால் நேயர்களுடனான தொடர்புகளில் பிடித்தமானது அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான். நேரடியாகச் சந்திப்பவர்களும், தொலைபேசியில் உரையாடுகின்றவர்களும் அநேகமாக ‘உங்கள் நிகழ்ச்சி பிரமாதம், உங்கள் குரல் நன்றாக இருக்கிறது’ என்கிற வகையறாக்கள். கடிதங்கள் அப்படியல்ல. அவற்றினை எழுதும் நபருக்கும் நமக்கும் நேரடித் தொடர்பிருக்காது என்பதால், அவை நம்மை விமர்சிக்க முயற்சிக்கும், நேர்மையாக இருக்கும்!

வானொலி நாட்களில் நேயர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பழக்கமொன்று என்னிடமிருந்தது. கடிதங்களை எழுதுபவர்கள் இந்த மாதிரியானவர்கள்தான் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. பல வகைப்பட்டவர்களிடமிருந்தும் வரும். சில கடிதங்கள் வாழ்த்தி வரும், சில – நமது சின்னச் சின்ன தவறுகளைக் கூட எழுத்தில் படம் பிடித்துக் காட்டும். இன்னும் சில கடிதங்கள் நிகழ்ச்சிகளுக்கு அப்பால் நின்று பேசும். வேறு சில – காதல் கடிதங்களாக இருக்கும்!

நான் யாரோ ஒரு பெண்ணால் விரும்பப்படுகின்றேன் என்பது – ஒருவகையில் சந்தோசமான விடயம்தான். ஆனாலும், அந்தக் கடிதத்துக்குரிய பெண்மீது கடைசியில் பரிதாபமே ஏற்படும். வானொலில் அறிவிப்பாளனாக இருக்கும் ஒரேயொரு தகுதியை அடிப்படையாக வைத்து வரும் இந்தக் காதலை என்ன கணக்கில் சேர்ப்பது?!

சில காதல் கடிதங்களை நான் நேசித்திருக்கின்றேன் (கவனிக்க: கடிதங்களை மட்டும்தான்). காரணம், அந்தக் கடிதங்களின் மொழி நடை, கிண்டல், புத்திசாதுரியம் என்பவை ரசிக்கும் படியானவையாக இருக்கும்! சில கடிதங்கள் கண்டதும் கிழித்துப் போடும் வகையிலானவை!

அவள் – இரண்டாவது வகையான கடிதங்களை எழுதுபவள். அவளுக்கென்று ஒரு நிஜப்பெயர் இருக்கிறது. ஆனாலும், அவளை நான் உங்களுக்கு ‘அவள்’ என்றே அறிமுகம் செய்கிறேன்.

அவளிடமிருந்து வரும் கடிதங்கள் என்னைக் காதலிப்பதாகச் சொல்லும், நான் இல்லா விட்டால் வாழ்க்கையில்லை என்று அடம்பிடிக்கும், கட்டியணைக்கும் – முத்தங் கொடுக்கும்! ஆனாலும், அவளின் கடிதங்கள் ஏனோ என்னை ஈர்க்கவேயில்லை. வாரத்துக்கு ஆகக்குறைந்தது மூன்று கடிதங்காளவது அவளிடமிருந்து வரும். இடையில் தொலைபேசி அழைப்புக்கள் வேறு!

அலுவலக தொலைபேசிக்கு அவள் அடிக்கடி வருவாள். அது பெரும் தொல்லையாகி விட்டது.  அவளின் காதலும், குரலும் அலுவலகத்துக்கே பழக்கப்பட்டு விட்டது. அவள் என்னைக் கேட்டால் இல்லை என்று சொல்லி விடுங்கள் என்று அலுவலக நண்பர்களிடம் கூறி வைத்தேன். இல்லை என்றாலும் கேட்க மாட்டாள்! திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டேயிருப்பாள்!

திடீரென ஒருநாள் என் கைப்பேசிக்கு அவள் அழைத்தாள். பெண்ணின் குரலில் வழியும் யாரோ ஓர் ஆண் அறிவிப்பாளன் அவளுக்கு என் இலக்கத்தைக் கொடுத்திருந்தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்! அவளிடம் எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தேன். அழைப்பெடுப்பதை அவள் நிறுத்தவேயில்லை. இடையில் எனது தொலைபேசி இலக்கத்தினையும் மாற்றினேன். புதிய இலக்கத்துக்குள்ளும் புகுந்து கொண்டாள். ஒரு நாள் நூற்றுக்கும் அதிகமான தடவை அவளிடமிருந்து அழைப்புக்கள் வந்தன. கோபம் தலைக்கேறியது. நாகரீகமற்ற வார்த்தைகளால் அவளைத் திட்டினேன். பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாகக் கூறினேன். சிரித்து விட்டு, ‘‘ஐ லவ் யு” என்றாள்!

இந்தப் பிரச்சினை குறித்து நடா அண்ணாவிடம் விபரமாகக் கூறினேன். பொலிஸில் முறையிடப் போவதாகச் சொன்னேன். சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண் பிள்ளை என்பதால், அந்த முயற்சியில் இறங்க வேண்டாம் என்று நடா அண்ணா சொல்லி விட்டார்!

கடித உறையில் விலாசம் எழுதப்பட்டிருக்கும் கையெழுத்தை வைத்தே, அது அவளிடமிருந்து வரும் கடிதம்தான் என்பதை அலுவலகத்திலுள்ள அநேகர் இனங்காணத் தொடங்கினர். அவளிடமிருந்து வரும் கடிதங்களைப் படிப்பதை நான் நிறுத்தியிருந்தேன். அவளின் கடிதங்கள் அநாதரவாகக் கிடக்கும்.
இந்த காதல் கடித விவகாரத்தை வைத்து சூரியன் நண்பிகள் என்னை பகிடி பண்ணுவார்கள். ‘பாவம் மப்றூக் அந்தப் பிள்ளைக்கு வாழ்க்கை கொடுத்தால் என்னவாம்’ என்று சீண்டுவார்கள். நான் தூக்கியெறிந்த அவளின் கடிதங்களை என்னிடம் சொல்லி விட்டு  – நண்பிகள்  சத்தமாக நளினத்துடன் படிப்பார்கள். ஏனையோர் வளைத்திருந்து கேட்டுச் சிரிப்பார்கள். கடிதத்தில் அப்படி ரசம் சொட்டும்!!

இப்படித்தான் ஒரு நாள் – அவளிடமிருந்து வந்த கடித உறையை நண்பிகள் உடைத்தார்கள். உள்ளே ரத்தக் கையெழுத்துடன் ஒரு கடிதம்! வாசித்ததில் – அவளைக் காதலிப்பதாக நான் முடிவு சொல்ல வேண்டுமென்றும், அப்படியில்லாது போனால் – வீட்டைவிட்டு சூரியன் அலுவலகத்துக்கு ஓடி வந்து விடுவேன் என்றும் அதில் அவள் எழுதியிருந்தாள்! வழமைபோல், குப்பைக் கூடைக்குள் கடிதத்தை வீசி விட்டு – வேலையில் மூழ்கிப் போனேன்!

சனிக்கிழமை எனக்கு ஓய்வு நாள்! வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தேன். அறிவிப்பாளர் கௌரியின் கைப்பேசியிலிருந்து வந்த அழைப்பு என்னை எழுப்பியது! என்ன என்று கேட்டேன். அந்த காதல் கடிதங்களின் சொந்தக்காரி வீட்டை விட்டு ஓடிவந்து சூரியன் கலையகத்தில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பதாகவும் கௌரி தாழ்ந்த குரலில் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!

சில கணங்கள் யோசித்தேன். அந்த விவகாரத்தை நான் கையாள விரும்பவில்லை. எனவே, அதை அலுவலக ரீதியாகக் கையாளும்படி கௌரியிடம் கூறினேன். அந்த நிலையிலும் என்னைப் பகிடி பண்ணிச் சிரித்தார் என் அன்புள்ள நண்பி கௌரி!

அன்று இரவு 07 மணிவரை அவள் சூரியன் வரவேற்பறையிலேயே இருந்திருக்கின்றாள். அங்கிருந்து செல்லுமாறு அவளை பலர் வேண்டிக் கொண்ட போதும் – அவள் அகலவில்லை! கடைசியில் பொலிஸாரின் உதவியுடன் கொழும்பிலிருந்த அவளின் உறவினர்களை அழைத்து அவளைப் பாரம் கொடுத்திருக்கின்றார்கள் அலுவலகத்து ஆட்கள்!

கௌரி சொல்லித்தான் இதையும் அறிந்து கொண்டேன்!

மறுநாள் – ஞாயிற்றுக்கிழமை! அலுவலகத்தில் மாலை ஆறுமணிவரை வேலை செய்து கொண்டிருந்தேன். பசித்தது. கீழே – சாப்பிட்டு வரச் சென்றிருந்தேன். அலுவலகத்துக்குத் திரும்பி வரும்போது ஏழு மணியிருக்கும்! வரவேற்பறையில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னைக் கண்டதும் வரவேற்பு உத்தியோகத்தர் – ”மப்றூக் உங்களுக்குத்தான் விசிற்றஸ்” என்றார்! வந்திருந்தவர்களிடம் என்ன விடயம் என்று விசாரித்தேன். அப்போது அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆமாம், கடிதங்களின் சொந்தக்காரியும், அவளின் உறவு முறைப் பெண்ணும்தான் (இவரும் இளமையானவர். 35 வயதுக்குள் இருக்கும்) வந்திருந்தார்கள்.

எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. மிகவும் சத்தமாக, அவளைத் திட்டத் தொடங்கினேன். ஒரு பெண் பிள்ளை இப்படி நடந்து கொள்ளும்வரை வீட்டிலிருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்று, அவளின் உறவுக்காரப் பெண்ணையும்  திட்டினேன். மேலும், இப்படி அவள் நடந்து கொள்வதால் எனக்கு ஏற்படும் அசௌகரியம் குறித்தும் கூறினேன்.

அவளின் உறவுக்காரப் பெண் – அப்படியே அதிர்ந்து போனதை நான் அவதானித்தேன். அவர் என்னிடம் ‘‘தயவு செய்து சத்தம் போடாதீர்கள். நாங்களும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விடயத்தை மெதுவாகப் பேசுங்கள்” என்று கெஞ்சினார். நான் ஓரளவு நிதானமானேன்.

அந்த உறவுக்காரப் பெண்ணின் அருகில் உட்கார்ந்தேன். கடிதங்களின் சொந்தக்காரியின் காதல் விவகாரத்தை ஆதியிலிருந்து அந்தம் வரை விபரித்தேன். நான் சொல்வதையெல்லாம் அவர் வியப்பான முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அப்படியே பேச்சை நிறுத்தினேன். ‘‘கொஞ்சம் இருங்கள்” என்று கூறிவிட்டு – அலுவலகத்துக்குள் வந்தேன். அவளின்  ரத்தக் கடிதத்தை வீசி எறிந்த குப்பைக் கூடைக்குள் தேடினேன். அடியில் கிடந்தது. எடுத்துக் கொண்டு சென்று  –  உறவுக்காரப் பெண்ணிடம் காட்டினேன். அவர் அதை வாசித்து முடித்தபோது,  அந்தக் கடித்ததை அவள் பறித்தெடுத்தாள். துண்டு துண்டாகக் கிழித்தாள்.

அந்த உறவுக்காரப் பெண் என்னிடம் கூறினார்,  “மப்றூக் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். இவள் என்னை இங்கு அழைத்து வரும்போது, நீங்களும் இவளும் காதலிப்பதாகவும், அந்தக் காதலைச் சேர்த்து வைக்கும் படியும் என்னிடம் கேட்டுக்கொண்டாள். வீட்டை விட்டு இவள் ஓடிவந்து விட்டதால் – எப்படியோ நல்லது நடக்கட்டும் என்பதற்காகத்தான் இவளைக் கூட்டிக் கொண்டு உங்களிடம் பேச வந்தேன். ஆனால், இவள் சொன்னவை அனைத்தும் பொய் என்று இப்போது புரிந்து கொண்டேன். உங்களை அசௌகரியப்படுத்திதற்கு என்னை மன்னித்து விடுங்கள்”என்றார்.

நான் அவரிடம் கனிவாகப் பேசத் தொடங்கினேன். எனது கோபத்தில் இருந்த நியாயங்களைக் கூறினேன். அவரை ஆரம்பத்தில் திட்டியதற்காக நானும் மனம் வருந்துவதாகத் தெரிவித்தேன். இவ்வளவு நடந்தபோதும் – கடிதங்களின் சொந்தக்காரி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை!

திரும்பிப் போகும் போது மட்டும், ஒரு முறை…..  ஒரேயொருமுறை புன்னகைத்தாள்!

O


Advertisements
 

5 Responses to “காதல் கடிதங்கள்!”

 1. Rinas MHM Says:

  “எனக்கென்றால் நேயர்களுடனான தொடர்புகளில் பிடித்தமானது அவர்களிடமிருந்து வரும் கடிதங்கள்தான்.” கடிதங்களுக்கும் facebook massage களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை எண்டு நினைக்கிறன். உங்களின் அழகிய ஆக்கங்களுக்கு விமர்சனம் அனுப்பி, பதில் இல்லாததில் ஏமாற்றம் உண்டு. அலை போன்ற facebook massage களுக்குள் என் massage துரும்பு போல் அடங்கி இருக்கனும். என்றாலும் நல்ல ஆக்கம்.

 2. […] காதல் கடிதங்கள்! Digg Digg […]

 3. Mohamed Says:

  மப்றூக், அவளின் பெயர் “சந்தோசம்” எனும் கருத்தை குறித்து நிற்பதா…? தயவுசெய்து சொல்லுங்கள்.

 4. Jaya Palan Says:

  வெறுமனவே போன வாழ்க்கையை யானைகட்டி இழுத்துவந்து கொழும்பில் கவிஞர் மப்றூக் வேலை பார்த்த வானொலி நிலைய நாற்காலியில் இருத்த ஆவலாய் இருக்கு? ஆனால் அதெல்லாம் முடிகிறகாரியமல்லவே?
  அதிஸ்ட்டம் இருந்திருந்தால் கவிஞரைப்போல நானும் ஒரு வானொலி அறிப்பாளராகி இருப்பேனாக்கும். மப்றூக் போன்ற அதிஸ்ட்ட சாலிகள் எழுதும்போதுதான் வாசிக்கவே காதல் கிடைக்குது. நமக்கான வாழ்க்கையின் இனிப்புகள் அவ்வளவுதான் போலும். – வ.ஐ.ச.ஜெயபாலன்

  • mabrook Says:

   வாசித்ததுக்கும் – அது குறித்த மன உணர்வுகளைப் பதிவு செய்ததுக்கும் நன்றியண்ணே…

   உங்கள் பின்னூட்டம் – உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

   நேரம் கிடைக்கும் போது – என் எழுத்துக்கள் குறித்த நல்லது கெட்டதுகளை எழுதுங்கோ!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s