காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கனவு பலித்த கதை! 18 ஏப்ரல் 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 11:31 பிப

மப்றூக்

ப்போது நான் வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அது 99 களின் முற்பகுதி. சூரியன் எப்.எம். ஆரம்பித்து ஆறேழு மாதங்கள்தான் ஆகியிருக்கும். எங்கு கேட்டாலும் சூரியன்தான்! ஆண்டாண்டு காலமாக இயந்திரத் தமிழில் வானொலியைக் கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு சூரியன் வரவு – புது உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

வீரகேசரியில் வேலை செய்தபோது – நண்பர்கள் சிலருடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது, பகல் வேளைகளில் வானொலி கேட்பதற்குப் பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. எங்களோடு தங்கியிருந்த நண்பரொருவர் தீவிவிரமான வானொலிப் பிரியர். எங்கள் தங்குமிடத்தில் அதிகம் வானொலி கேட்பது அவர்தான். இரவு வேளை என்றாலும், கொஞ்சம் சத்தம் வைத்துத்தான் கேட்பார். அதில் ஒரு திருப்தி!

அந்த நாட்களில் ‘கலை ஒலி’ எனும் வானொலியொன்றும் சேவையில் இருந்தது. (பின்னாட்களில் அது ‘சுவர்ண ஒலி’யாக மாறி விட்டது). அந்த வானொலியில் ‘பேய்க் கதை’ எனும் நிகழ்ச்சியொன்று இடம்பெறும். நமது வானொலிப் பிரியரான நண்பரின் அபிமான நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று.

‘பேய்க் கதை’ இல்லாத நேரங்களில் நண்பர் கேட்பது சூரியன் எப்.எம். தான்!

இந்த நாட்களில்  குறித்துச் சொல்லத்தக்க இரண்டு விருதுகள் எனக்குக் கிடைத்தன. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட 1998 ஆம் ஆண்டுக்கான ‘இளைஞர் விருது’கள்தான் அவை! அகில இலங்கை ரீதியாக கவிதையில் முதலிடமும், அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடமும் கிடைத்தன. இந்த விருதுகள் தந்த உற்சாகம்தான் என்னை சூரியனின் அறிவிப்பாளராக்கியது.
அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட அறிவிப்பாளர் போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்ததை வைத்துக் கொண்டு, சூரியனில் அறிவிப்பாளராவதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்தேன். கூட இருந்த நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், அது தொடர்பில் யாருடன் பேசுவது எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒன்றும் தெரியவில்லை.

ஒரு நாள் சூரியனின் கலையகத் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பொன்றை எடுத்தேன். அறிவிப்பாளர் பிரேம்தான் பதிலளித்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நடா அண்ணாவின் தொடர்பு இலக்கத்தை வழங்க முடியுமா? எனக் கேட்டேன். சாதாரணமாக நடா அண்ணாவின் தொலைபேசி இலக்க்தை நேயர்களுக்கு வழங்க மாட்டார்கள் என்று ஊகித்து வைத்திருந்ததால், என்னை ஒரு பத்திரிகையாளர் என்று அறிமுகத்தின் போதே சொல்லி வைத்து விட்டேன்.
நடா அண்ணாவின் வீட்டுத் தொலைபேசி இலக்கம் கிடைத்தது!

அது ஓர் இரவு வேளை. நடா அண்ணாவின் வீட்டுக்கு தொலைபேசியை அழைத்தேன். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. மறுமுனையில் ”ஹலோ” எனும் கம்பீரமான குரல். நடா அண்ணா எனப் புரிந்து கொண்டேன். பதிலுக்கு நானும் ”ஹலோ’ சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூரியனில் அறிவிப்பாளராக வேண்டும் எனும் எனது விருப்பத்தையும், அறிவிப்பாளர் போட்டியில் எனக்குக் கிடைத்த இளைஞர் விருது பற்றியும் நடா அண்ணாவிடம் கூறினேன்.

அனைத்தையும் கேட்டு விட்டு, நடா அண்ணா சொன்னார்;  ”தம்பி நாங்கள் இப்ப ‘ட்ரெய்னிங்’ இல்லாதவர்களையெல்லாம் அறிவிப்பாளர்களாக எடுக்கிறதில்ல. உங்களுக்கு சூரியனில் அறிவிப்பாளராக வேண்டுமென்டா, முதலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகி – அங்கு பயிற்சியை எடுத்துக் கொண்டு, பிறகு இங்க வாங்க. அப்ப உங்களை சேர்த்துக் கொள்ளலாம். சூரியனை நடத்துறது தனியார் கம்பனியொன்று. அவங்க பயிற்சி இல்லாத ஒருவரை எடுத்து, அவருக்கு ‘ட்ரெய்னிங்’ கொடுத்து – காலத்தையும், பணத்தையும் செலவு செய்வதையெல்லாம் விரும்ப மாட்டாங்க. என்ன புரிகிறதா?” என்று கேட்டார்.

எனக்கு வெறுத்துப் போனது. இன்னும் கொஞ்சம் பேசிப் பார்த்தேன். தனது முந்தைய ‘ரெக்கோட்’டையே நடா அண்ணா திரும்பவும் சுழற்றினார். ”சரி” என்று வைத்து விட்டேன்.

நடா அண்ணாவின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அறிவிப்பாளராகுவதென்றால் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் சிபாரிசு இருக்க வேண்டும். அப்படியானதொரு சிபாரிசு இல்லையென்ற ஒரேயொரு காரணத்துக்காக 1996 ஆம் ஆண்டு, எனக்கானதொரு சந்தர்ப்பம் இல்லாமலானது. அது பழைய கதை. ஆக – இனி முயற்சித்துப் பலன் இல்லை என்பதால் அதை மறந்து விட்டேன்!

ஒரு நாள் வேலை விட்டு தங்குமிடம் வந்தேன். இரவாகியிருந்தது. அலுப்பில் அப்படியே கொஞ்சம் உட்கார்ந்திருந்தேன். வானொலி சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு யோசனை. திரும்பவும் ஒரு முறை நடா அண்ணாவுடன் பேசிப் பார்த்தால் என்ன? நடா அண்ணா வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை டயல் செய்தேன். மறு முனையில் புவனா என்கிற திருமதி புவனலோஜினி! நடா அண்ணாவின் மனைவி!!

அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். முன்பு நடா அண்ணாவுடன் பேசியமை பற்றியும் வானொலியாளராக வேண்டும் எனும் – எனது விருப்பம் பற்றியும் கூறினேன்.

அதுவரை, அவர் யார் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. உரையாடலின் போதுதான் – அவர் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் புவனலோஜினி எனத் தெரிய வந்தது.

நான் வீரகேசரியில் வேலை செய்வதாகச் சொன்னமை – புவனா அக்காவின் கவனத்தை ஏதோ ஒருவகையில் திருப்பியிருந்தது. பத்திரிகை விடயங்கள் குறித்தெல்லாம் அவர் கேட்டார். தனது சிறுகதை வீரகேசரியில் வெளிவந்துள்ளதாகச் சொன்னார். பிறகு நடா அண்ணாவிடம் தொலைபேசியைக் கொடுத்தார்.

”தம்பி நான் ஏற்கனவே சொல்லி விட்டேன்தானே. ‘ட்ரெய்னிங்’ இல்லாம நாங்க யாரையும் இப்ப எடுக்க மாட்டம்” என்றார்! ”இல்ல இன்னுமொரு முறை ‘ட்ரை’ பண்ணிப் பார்ப்பம் என்று எடுத்தன்” என்றேன். சில கணங்கள் எதையோ யோசித்தார். பிறகு திடீரென, ”நாளைக்கு காலை உங்களுக்கு வேலையா. வேல்ட் ட்ரேட் சென்ரருக்கு (world Trade centre)  வரமுடியுமா என்று கேட்டார்.

”வேலையிருக்கிறது, ஆனாலும் வர முடியும். ‘ஹாஃப்டே’ போடலாம்” என்றேன். ”வேல்ட் ட்ரேட் சென்ரர் 35 ஆவது மாடி, 11 மணிக்கு வரணும்”. ”சரி” என்றேன்!

உண்மையாகச் சொன்னால் ‘வேல்ட் ட்ரேட் சென்ரர்’ எந்தப் பக்கம் இருக்கிறது என்றே அப்போது எனக்குத் தெரியாது. மறுநாள் காலை – நண்பர் ஒருவருடன் ஆட்டோ ஒன்றில் ஏறி ‘வேல்ட் ட்ரேட் சென்ரர்’ வந்தேன். பிறகு ‘ஈஸ்ற் டவர்’ 35 ஆவது மாடி – சூரியன் எப்.எம். வரவேற்புப் பீடத்தை அடைந்தேன்.

கொஞ்ச நேரத்தில் நடா அண்ணா வந்து உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே என்றால், ஒலிப்பதிவு கூடமொன்றுக்கு. அங்கு அறிவிப்பாளர் அபர்ணாவும் இருந்தார். எழுதப்பட்ட சில செய்தி மற்றும் விளம்பரங்களைத் தந்து, வாசிக்கச் சொன்னார்கள். வாசித்தேன். அதை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள். பிறகு கொஞ்ச நேரம் நடா அண்ணா என்னிடம் பேசினார்.

ஒலிபரப்புக் கூடத்திலிருந்து வெளியே வரும்போது, “இதுதான் சூரியன் கலையகம்” என்று எனக்குக் காட்டினார். கதவில் சதுர வடிவிலான சிறிய கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அதனூடாகப் பார்த்தேன். உள்ளே எனது எண்ணத்திலிருந்த எவையும் இருக்கவில்லை. வானொலியில் நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது – கலையகம் என்றால் இப்படித்தான் இருக்கும், அறிவிப்பாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள், ஒலி வாங்கி இப்படித்தான் பொருத்தப்பட்டிருக்கும் என்றெல்லாம் எனக்குள் ஒரு பிம்பத்தை நான் – உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால், அங்கு எல்லாமே வேறாக இருந்தன.

குரல் பரீட்சையை முடித்துக் கொண்டு நேராக வீரகேசரிக்கு வந்தேன். அன்று வேலையே ஓடவில்லை. முடிவு என்னவென்று அறிய ஆவலாக இருந்தது.

மாலை 5.00 மணியிருக்கும் வீரகேசரிக்கு என்னைக் கேட்டு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என்று கேட்டால், நடா அண்ணா! “தம்பி இப்ப கொஞ்சம் சூரியனுக்கு வர முடியுமா” என்றார். “சரி” என்றேன். அடுத்த அரை மணித்தியாலத்துக்குள் – நான் சூரியன் வரவேற்பு பீடத்தில் நின்றேன். உள்ளே போகச் சொன்னார்கள். சென்றேன். நடா அண்ணா என்னைக் கண்டதும் எழுந்து வந்து கையைக் குலுக்கி வாழ்த்துச் சொன்னார். என்னை அறிவிப்பாளராகத் தெரிவு செய்துள்ளதாகக் கூறினார்.

சந்தோசத்தில் எங்கோ பறப்பது போலிருந்தது. நடா அண்ணா எனக்கான நியமனக் கடிதத்தை நீட்டினார். அது பகுதி நேர அறிவிப்பாளர் பதவிக்கான நியமனக் கடிதம். வாங்கிக் கொண்டு நன்றி சொன்னேன்.

”இன்றிரவே நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள வேண்டும். நேரத்துடன் வாருங்கள்” என்றார். தலை – கால் ஒன்றும் புரியவில்லை. நேராகத் தங்குமிடம் வந்தேன். நண்பர்கள் ஆவலுடன் இருந்தார்கள். நியமனக் கடிதத்தைக் காட்டினேன். சந்தோசப்பட்டார்கள். அவசர அவசரமாக வெளிக்கிட்டு இரவு நேர நிகழ்ச்சிக்காக மீண்டும் சூரியன் புறப்பட்டேன்.

அப்போது இரவு நேர நிகழ்ச்சியினை அறிவிப்பாளர்களான சர்தாரும், சுஜீவாரும் (நம்ம பாடகி சுஜீவாதான்) செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களின் நிகழ்ச்சியில் என்னை இணைத்து – அறிமுகம் செய்து வைக்குமாறு நடா அண்ணா கூறியிருக்க வேண்டும். வானொலியில் என்னை அறிமுகம் செய்தார்கள்.

ஒலி வாங்கியை உயிர்ப்பித்து என்னிடம் ஏதோ கேட்டார்கள். பேசினேன். உள்ளுக்குள் படபடத்தது. நா – வரண்டு போயிற்று. வானொலியில் பேசுவது, மலையொன்றை உடைப்பது போன்ற கஷ்டமானதொரு காரியம் போல் தோன்றியது.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் – நான் அறிவிப்பாளராகிய நிகழ்வு ஒரு மாயா ஜாலம் போலவே சிலவேளைகளில் தோன்றுகிறது.

காலை குரல் வளப் பரீட்சை. மாலை நியமனம். இரவு – நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வானொலியில் பேசுகிறேன்! இப்படி – ஒரே நாளில் அனைத்தையும் முடித்துக் கொண்டு அறிவிப்பாளரான புதுமை உலகில் வேறெங்கும் நிகழ்ந்திருக்காது. ஆனால், அது எனக்கு நிகழ்ந்தது.

இப்படி அவசர அவசரமாக ஏன் இது நிகழ்ந்தது, எதற்காக நிகழ்ந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்கு சுவாரசியமான ஒரு பின்னணி இருந்ததாகப் பின்னர் கேள்விப்பட்டேன். அதுபற்றி உங்களுக்கும் கூறவேண்டும். வேறொரு முறை – விரிவாகச் சொல்கிறேன்!

0

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

2 Responses to “கனவு பலித்த கதை!”

  1. dinushan Says:

    சில வலுவான பின்னனி உள்ளவர்கள் இப்படி ஒரே நாளில் இவ்வாறு ஒரு நிலையை அடைந்தால் வியப்பிற்கு ஏதுமில்லை, ஆனால் எந்த பின்னனி, அறிமுகம் இல்லாது தனியே உங்கள் முயற்சி, திறமையை மட்டும் வைத்தே நினைத்த நிலையை அடைந்தீர்கள்,, உண்மையில் பாராட்டிற்கும், எடுத்துக்காட்டான விடயம்,, இப்போ அறிவிப்பாளராக இல்லாமை பலரிற்கு ஏக்கமான ஓர் ஏமாற்றமே!!!!!!!!!!!!

  2. hafees Says:

    naan hafees unmaila atputham msbrook anna


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s