மப்றூக்
ஸ்ரீலங்கா மு.காங்கிரசின் வரலாற்றில் அதன் கௌரவத்தினை எப்போதும் காப்பாற்றி வருவதுபோல், இம்முறைமுறையும் அம்பாறை மாவட்டம் காப்பாற்றியிருக்கிறது. 52 உள்ளுராட்சி மன்றங்களில் தனித்தும் 20 மன்றங்களில் வெற்றிலைக் கூட்டணியமைத்தும் வேட்புமனுத் தாக்கல் செய்த அந்தக் கட்சிக்கு அம்பாறை மாவட்டம் மட்டுமே 04 சபைகளை வென்றெடுத்துக் கொடுத்திருக்கிறது. இதனூடாக, மு.கா.வின் இருதயம் அம்பாறை மாவட்டம்தான் என மீண்டுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 06 உள்ளுராட்சி மன்றங்கள்தான் இருந்தன. அவை, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகியவை. இப்போது அக்கரைப்பற்றில் ஒரு மாநகரசபையும், இறக்காமம் பிரதேச சபையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை 08 ஆகியிருக்கிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு, மு.கா.வின் தலைவராக மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் இருந்த காலப்பகுதியில் ஓர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதில் மு.கா.வும் போட்டியிட்டது. அதன்போது தலைவர் அஷ்ரப் – அம்பாறை மாவட்டம் குறித்து சவாலொன்றினை விடுத்திருந்தார். அது – நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, அம்பாறை மாவட்டத்திலுள்ள 06 முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஒன்றை இழந்தாலும், தான் வகித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என்பதே அஷ்ரப்பின் அந்த சவாலாகும்.
மர்ஹும் அஷ்ரப்பின் அந்த சவாலுக்குப் பின்னால் ஓர் அரசியல் இருந்தது. அவர் – இழப்பேன் எனச் சொன்ன, அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிவடைய அப்போது 06 மாதங்கள் மட்டுமே இருந்தன. தவிரவும், அப்படி இழந்தாலும், அந்தப் பதவி தனது நெருங்கிய உறவினரான சம்மாந்துறையைச் சேர்ந்த தொப்பி முகைதீனையே போய்ச் சேரும் என்பதாலும் அஷ்ரப் அந்தச் சவால் குறித்துக் கவலையடையவில்லை.
இந்த நிலையில், அந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் மு.கா.வால் 04 சபைகளை மட்டுமே மட்டுமே அப்போது வெற்றி கொள்ள முடிந்தது. பொத்துவில் மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளினை ஐ.தே.கட்சி கைப்பற்றிக் கொண்டது.
ஆகவே, தனது சவாலின் பிரகாரம் – அஷ்ரப் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவினைத் துறந்தார். அந்த இடத்துக்கு எதிர்பார்க்கப்பட்டது போல் தொப்பி முகைதீன் நியமிக்கப்பட்டார்.
இப்படி, முஸ்லிம் காங்கிரஸ் கௌரவப் போர் நடத்திக் காட்டிய மாவட்டத்தில்தான் மு.கா. இம்முறை மூன்று சபைகளைக் கையிழந்திருக்கிறது. அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்றுப் பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளில் மு.காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது.
அக்கரைப்பற்று என்பது மு.காங்கிரசின் பிரதான அரசியல் எதிராளிகளில் ஒருவரான அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊராகும். ஆயினும், கடந்த காலங்களை விடவும் அக்கரைப்பற்றில் மு.கா.வுக்கு இம்முறை மக்கள் ஆதரவு அதிகரித்திருந்ததைக் காண முடிந்தது. இருந்தபோதும், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் அக்கரைப்பற்றுப் பிரதேச சபைகளில் தலா ஒரு ஆசனத்தினையே மு.கா.வால் பெற முடிந்துள்ளது.
அப்படியென்றால் என்னதான் நடந்தது?
அமைச்சர் அதாஉல்லாவின் குதிரைக் கட்சி அக்கரைப்பற்று மாநகரசபையில் பெற்ற வெற்றி குறித்து – அவரின் கட்சி சார்பில் இம்முறை அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டவரும், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எல். தவம் என்பவரே பல்வேறு விமர்சனங்களையும், நம்பிக்கையீனங்களையும் வெளியிட்டு வருகின்றார். தவம் எனும் இந்நபர் – இந்தத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் என்பதும் இங்கு அடிக் கோடிட வேண்டிய விடயங்களாகும்.
இவை ஒருபுறமிருக்க, அக்கரைப்பற்றுப் பிரதேச தேர்தல் களத்தில் இம்முறை மு.கா. தலைமை போதுமான கரிசனையினைக் காட்டவில்லை என்பதும் அந்தக் கட்சி அங்கு கடுமையாக வீழ்வதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது! அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை வென்றெடுக்க வேண்டும் எனும் விடயத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் கௌரவப் போரொன்றினை நடத்தியிருக்க வேண்டும். தனது கூடிய கவனத்தினையும், நேரத்தினையும் மு.கா. தலைவர் அங்கு செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இரண்டு, மூன்று கூட்டங்களில் கலந்து கொண்டதோடு அக்கரைப்பற்றில் ஹக்கீம் தனது கடமையினை முடித்துக் கொண்டார் என்கின்றார் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர். இது தொடர்பில் அக்கரைப்பற்றில் போட்டியிட்டியிட்ட மு.கா. வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களிடமும் இதே ஆதங்கங்கள் இருந்தன!
அம்பாறை மாவட்டம் என்பது மு.கா.வின் தளம், இருதயம். அங்குள்ள முஸ்லிம் உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றைக் கூட அந்தக் கட்சி இழக்கக் கூடாது. அவ்வாறு இழப்பதென்பது மு.கா.வுக்கும் அதன் தலைமைக்கும் கௌரவப் பிரச்சினை என்று – அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் எண்ணியமை போல், ஹக்கீம் எண்ணியிருந்திருந்தால், அம்பாறை மாவட்டத்தில் மு.கா. மூன்று சபைகளை இழந்திருக்காது என்று கூறுகின்றார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மு.கா. மாகாணசபை உறுப்பினரொருவர்!
இவை தவிர, இம்முறை இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மு.கா. தரப்பில் முறையான திட்டமிடல்கள் இன்மையும், தேர்தலை நடத்துவதற்கான நிதிப் பங்களிப்பு கட்சியினால் அபேட்சகர்களுக்கு அல்லது குறித்த பிரதேசங்களின் தேர்தல் குழுவினருக்கு வழங்கப்படாமையும் அந்தக் கட்சி வீழ்ச்சியடையக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அதனால்தான், கடந்த முறை மு.காங்கிரஸ் அனுராதபுர மாவட்டத்தில் தன்வசம் வைத்திருந்த 14 ஆசனங்களையும், குருநாகல் மாவட்டத்தில் வைத்திருந்த 08 ஆசனங்களையும், பொலநறுவை மாவட்டத்தில் கொண்டிருந்த 02 ஆசனங்களையும் ஒட்டு மொத்தமாக இழந்து நிற்கிறது என்கிறார் மு.கா.வின் உயர் பதவியில் இருக்கும் நண்பரொருவர்!
இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என மு.காங்கிரசின் தலைவரால் வாக்களித்து பின்னர் கைவிடப்பட்ட பலரின் கோபமும், ஒத்துழையாமையுமே மட்டக்களப்பில் மு.கா. துடைத்தெறியப்படுவதற்கு மிகப் பிராதான காரணங்களாக அமைந்திருக்கின்றன.
ஆகக்குறைந்தது, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக – தான் வாக்குறுதி வழங்கியவர்களுக்கு தனது அமைச்சிலுள்ள இணைப்பாளர்கள் பொறுப்பினையாவது மு.கா. தலைவர் வழங்கி ஆறுதல் படுத்தியிருக்கலாம். அதனூடாக, குறித்த நபர்களின் பங்களிப்பைப் பெற்று மட்டக்களப்பில் வெற்றிகரமானதொரு தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால், துரதிஷ்டவசமாக மு.கா. தலைவர் அவற்றினைக் கூடச் செய்யவில்லை என்பது மட்டக்களப்பிலுள்ள மு.கா. ஆதரவாளர்களின் கவலையாகும்.
இப்படியே போனால், ஒரு கட்டத்தில் தேசிய அளவிலான தனது பிடியினை மு.கா. இழந்து விட நேரும். அம்பாறைக்குள் மட்டுமே அந்தக் கட்சி குதிரையோட்ட வேண்டி வரும். பிறகு முஸ்லிம்களின் பிரதான கட்சி என்றும், தேசியத் தலைவர் என்றும் மார்பு தட்ட முடியாமல் போய்விடும்!
எனவே, மு.கா. தனது சரிவுகளிலிருந்து எழுவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அந்தக் கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த கோரிக்கையாகும். கட்சித் தொண்டர்களாலும், ஆதரவாளர்களாலும் வழமையாக விடப்படும் வேண்டுகோள்களை வலது காதால் வாங்கி இடது காதால் விடுவதைப் போல், தலைவர் – இந்த விடயத்திலும் நடந்து கொள்வாரேயானால் கடைசியில் – கட்சியி இருக்கும், தலைவர் இருப்பார், ஆனால் ஆதரவளிக்கத்தான் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார் மு.கா.வின் அரசியல் பீட உறுப்பினரொருவர்!
ஆமை சுடுவது மல்லாத்தி – நாம சொன்னா பொல்லாய்ப்பு என்பதற்காக, சொல்லாமலிருக்க முடியாது! அப்படி இருக்கவும் நமக்குத் தெரியாது!! o (இந்தக் கட்டுரையை 04 ஏப்ரல் 2011 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் நீங்கள் காணலாம்)