காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தாவீதுகளின் தெறிவில்! 29 மார்ச் 2011

Filed under: அரசியல் — Mabrook @ 9:09 முப

மப்றூக்

‘கோலியாத்தும் தாவீதும்’ என்கிற கதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். கோலியாத் மிகப்பெரும் வீரன் – சண்டியன். அவனோடு மோதியவர்கள் எவரும் வென்றதில்லை. ஆனால், தாவீது என்கிற சிறுவன் ஒருவன் – தான் விளையாடுவதற்காகப் பயன்டுத்தும் தெறிவில் ஒன்றினைப் பயன்படுத்தி கோலியாத்தோடு மோதி, அவனை வீழ்த்துகின்றான். இதுதான் ‘கோலியாத்தும் – தாவீதும்’ கதையின் சாராம்சம்.

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலிலும், பல ‘கோலியாத்’களை, வாக்காளர் எனும் தாவீதுகள் அடித்து வீழ்த்தியிருக்கின்றார்கள். தாவீதின் தெறிவில்லுக்குப் பதிலாக இங்கு பயன்பட்டிருப்படிருப்பது வாக்குச் சீட்டு! அவ்வளவுதான்.

தேர்தல் என்கிற புயல் அடித்து ஓய்ந்ததைத் தொடர்ந்து – கிட்டத்தட்ட கட்சிகளெல்லாம் தமது சேத விபரங்களைக் கூடிக் கூடி – கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பெரிய்ய்ய்ய கட்சிகள் என்று தங்கள் மார்பில் அடித்துக் கூவித் திரிந்த பலர் முகம் அடிபடக் குப்புற வீழ்ந்திருக்கின்றார்கள். இருந்தாலும் வழமை போல் – தமது மீசையில் மண்படவில்லை என்று அறிக்கைகளால் அவர்கள் – சமாளிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இதில் அதிர்ச்சிக்குரிய விடயமாகப் பார்க்கப்படுவது – ஆனானப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தேர்தலில் வாங்கியிருக்கும் அடிதான்! நாடளாவிய ரீதியில் 09 உள்ளுராட்சி சபைகளை மட்டுமே இந்தக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. அதாவது, த.தே.கூட்டமைப்பை விடவும் குறைவான சபைகளையே ஐ.தே.க. பெற்றிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றினை ஐ.தே.கட்சி இழந்துபோனாலும், கடந்த முறையை விடவும் அந்தக் .கட்சிக்கான வாக்கு வீதம் அதிகரித்திருப்பதாகக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிக்கையிட்டிருக்கின்றார். ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு எதிராளிகளிடம் செமத்தியாக அடிவாங்கிக் கட்டிய பிறகு, அதைச் சமாளிப்பதற்காக – தான் அடியே படவில்லை என்பது போல் அவரின் நண்பர்களிடம் கூறும் கோமாளிக் கதைபோல இருக்கிறது – அத்தநாயக்கவின் அறிக்கை!

சுற்றி வளைத்து ஐ.தே.கட்சியின் இந்தத் தோல்வியும் – அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலையிலேயே கட்டப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் அவர் பெற்ற தோல்விகளோடு இந்தத் தோல்வியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையானது – ஐ.தே.க.வின் தலைமை குறித்த விமர்சனத்துக்கு இன்னும் வழிவகுத்திருக்கின்றது. தலைமைப் பதவியிலிருந்து ஒதுங்குமாறு ரணிலுக்கு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அழுத்தங்களுக்கு இன்னும் வலுச் சேர்த்திருக்கின்றது. கூட்டிக் கழித்துப் பார்க்கையில், நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க. வாங்கியிருக்கும் அடியானது அந்தக் கட்சிக்குள்ளிருக்கும் ‘ரணில் எதிர்பாளர்’களுக்கு நல்ல சகுனம்தான்.

ஜே.வி.பி.யின் நிலையும் இந்தத் தேர்தலில் படுமோசமாகியிருக்கிறது. அதன் சட்டிக்குள்ளிருந்த ஒரேயொரு சபையும் – இந்தத் தேர்தலில் வெற்றிலைக் காரர்களிடம் பறிபோயிருக்கிறது. ஒரு காலத்தில் முப்பதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கட்சியின் நிலையா இது என நினைக்கையில் – ஒருபக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

புரட்டிப் போட்டிருக்கும் முடிவுகள்!

பஷீர் சேகுதாவூத்

பெருந் தேசியவாதக் கட்சிகளின் நிலை இப்படியிருக்க, சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் குப்புற விழுந்திருக்கின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் இருந்தவற்றினையும் இழந்திருக்கின்றது. 52 இடங்களில் தனித்தும் 20 இடங்களில் கூட்டாகவும் தாங்கள் களமிறங்கியிருப்பதாகப் பெருமையடித்துக் கொண்ட மு.கா. 04 சபைகளை மட்டுமே வென்றிருக்கின்றது.

மு.கா. கைப்பற்றியுள்ள 04 சபைகளும் அம்பாறை மாவட்டத்திலுள்ளவை. ஆனால், கடந்த முறை தன்வசம் வைத்திருந்த சம்மாந்துறை பிரதேச சபையை மு.கா. இம்முறை ஐ.ம.சு.முன்னணியிடம் இழந்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த முறை தனது கைக்குள் வைத்திருந்த காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சபைகளை மு.கா. இம்முறை வெற்றிலைக் கட்சியிடம் பறிகொடுத்துள்ள அதேவேளை, கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையிலும் தோற்றிருக்கிறது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், ஓட்டமாவடி பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் கிட்டத்தட் அரைவாசி குiவான வாக்குகளையே மு.கா. பெற்றிருக்கிறது. அந்தவகையில் – மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளுர் அதிகாரசபைகளிலும் மு.கா. அடி வாங்கியிருக்கின்றது.

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஓட்டமாவடியைச் சேர்ந்த லெப்பை ஹாஜி மற்றும் காத்தான் குடியைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முபீன் ஆகியோருக்கு மு.கா. சார்பில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனங்கள் வழங்கப்படும் என – முஸ்லிம் காங்கிரஸ் உறுதிமொழிகளை வழங்கி விட்டு பின்னர் ஏமாற்றியதற்கும், நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் முழுக்க மு.கா. படுதோல்வியடைந்துள்ளமைக்கும் இடையில், இந்த இடத்திலே முடிச்சுப் போட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்கிறார் அங்குள்ள நமது ஊடக நண்பரொருவர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபைப் பகுதி – மு.கா.வின் தவிசாளரும், பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் சொந்த இடமாகும். ஆனால், அங்கும் மு.கா. தோல்வியடைந்திருக்கிறது. இது அந்தக் கட்சி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியான விடயம்தான். ஆனாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியி சார்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர் அமீர் அலி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் உள்ளிட்ட பல அதிகார முகங்கள் அரச ஆதரவுடன் களமிருங்கி தீவிர தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை இங்கு கவனிக்கத்தக்கது.

காத்தான்குடி நகரசபையின் ஆட்சியினை கடந்த முறை தன்வசம் வைத்திருந்த மு.கா.வுக்கு இம்முறை அங்கு ஒரேயொரு ஆசனமே கிடைத்திருக்கின்றது. ஆனால், அங்கு சுயேட்சையாகப் போட்டியிட்ட ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது’ 02 ஆசனங்களை வென்றிருக்கின்றது. ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்’ என்பது காத்தான்குடியை தளமாகக் கொண்டதொரு அமைப்பாகும். இதன் மூலம் காத்தான்குடியில் மு.காங்கிரஸ் வாங்கிக் கட்டியிருக்கும் அடியின் பாரதூரத்தைக் கணித்துக் கொள்ள முடியும்.

அதாஉல்லாவும், அக்கரைப்பற்றும்

அதாஉல்லா

இது ஒருபுறமிருக்க, மு.கா. வின் பரம அரசியல் வைரியான அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது அதன் குதிரைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைகளைக் கைப்பற்றியிருக்கின்றது. குறித்த இரண்டு இடங்களிலும் போட்டியிட்டிருந்த மு.காங்கிரஸ் தலா ஒரு ஆசனத்தினையே பெற்றிருக்கின்றது. ஆயினும், அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாஉல்லாவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் அதாஉல்லாவின் அணியினர் வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்கிய அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கான தேர்தலில் தோற்றுப் போயுள்ளனர். அந்தப் பிரதேச சபைக்கான 09 ஆசனங்களில் இரண்டு ஆசனங்களை மட்டுமே – அதாஉல்லா அணி பெற்றிருக்கிறது. ஏனைய ஆசனங்கள் அனைத்தும் மு.கா. வசமாகியிருக்கின்றன.

அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் அமைச்சர் அதாஉல்லாவின் குதிரைக் கட்சியி சார்பாக, அமைச்சருடைய மகன் அகமட் சக்கி என்பவர் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். அதேவேளை, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அக்கரைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எல். தவம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மூன்றாமிடத்துக்கும், உப தவிசாளராகவிருந்த எம்.எஸ். சபீஸ் நான்காவது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயினும், குறித்த தேர்தலில் நிஜவெற்றியைப் பெற்றவர் – தானே என்றும், அமைச்சர் அதாஉல்லாவின் சூழ்ச்சியின் காரணமாகவே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் – தான் பின்தள்ளப் பட்டுள்ளதாகவும் ஏ.எல். தவம் கூறிவருகின்றார். அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரான மேற்படி தவம், மிக விரைவில் அந்தக் கட்சியிலிருந்து விலகி – வேறொரு கட்சியில் இணையலாம் என – நம்பப்படுகிறது.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகரசபையில் மு.கா. பெற்றுள்ள ஒரேயொரு ஆசனத்துக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிநிலையை இவர் பெறுவார். இது – அமைச்சர் அதாஉல்லாவுக்கு கசப்பான செய்திதான். காரணம், அமைச்சர் அதாஉல்லாவின் எதிராளிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் ஹனீபா மதனி! சில காலங்களுக்கு முன்னர் அமைச்சரின் அடியாட்களால் ஹனீபா மதனி கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் அதாஉல்லாவுக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரமுகர்களுக்கான தண்டனை!

ரஊப் ஹக்கீம்

இது இவ்வாறிருக்க, அரசியல் பிரமுகர்கள் பலரின் பின்னணியோடு இந்தத் தேர்தலில் களமிறங்கிய பலரை மக்கள் ஓரங்கட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக, பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் மு.கா. சார்பாகப் போட்டியிட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீத்தின் சொந்த சகோதரர் ஹசன் என்பவர் படுதோல்வியடைந்துள்ளார். அதேபோன்று அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் ஒன்று விட்ட சகோதரர் ஐ.எல். நசீர் என்பவரும் தெரிவு செய்யப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேலும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆசனத்தைக் குறிவைத்துக் களமிறங்கிய ஜப்பார் அலி என்பவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இவர் மு.கா.வின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹசனலியின் தம்பியாவார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு புறம், அம்பாறை மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்களாகப் பதவி வகித்த பலர் – மீண்டும் அந்தப் பதவியினைப் பெற்றுக் கொள்ள முடியாமல், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக – பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் இம்முறை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் பின்னிலையடைந்துள்ளனர். அதேவேளை, மு.கா.விடமிருந்து சம்மாந்துறைப் பிரதேச சபை பிடுங்கப்பட்டுள்ளதோடு, எதிரணி வேட்பாளர்களை விடவும் குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்று அப்பிரதேசத்தின் முன்னாள் தவிசாளரும் இம்முறை அவருடைய தவிசாளர் ஆசனத்தை இழந்துள்ளார்.

இந்தவகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் மட்டுமே இந்தத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தவிசாளர் ஆசனத்துக்கான தகுதியினை எட்டியிருக்கின்றார்.

இன்னொரு புறம், நடைபெற்ற தேர்தலிலே அரசியல் பின்புலம், அனுபவம் மற்றும் அடையாளங்களைக் கொண்ட பலரையும் பின் தள்ளிவிட்டு சில புதிய முகங்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதி கூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியமான விடயம்தான். உதாரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் இம்முறை மு.கா. சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர் என்பவர் அந்தப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரை விடவும் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று – குறித்த சபையின் தவிசாளர் ஆசனத்தைப் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தனைக்கும் மேற்படி நசீர் என்பவர் எந்தவிதமான அரசியல் பின்புலமோ, அனுபவமோ, அடையாளமோ இல்லாத நிலையில், முதல் தடவையாக இந்தத் தேர்தலில் குதித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இயலாமை!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த சில காலமாக மு.காங்கிரசோடும், அதன் தலைமையோடும் முரண்டு பிடித்துக்கொண்டு திரிந்த அந்தக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். அப்துல் ஜவாத் இம்முறை இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சாட்டாக வைத்துக் கொண்டு – மு.கா. தலைவரிடம் சரணடைந்துள்ளதோடு, கட்சியின் பிரசார மேடைகளில் ஏறி – பேசி வந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் சார்பில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸின் தலைமையிடம் மேற்படி மாகாணசபை உறுப்பினர் ஜவாத் என்பவர் சந்தர்ப்பமொன்றைக் வேண்டியிருந்தார். ஆனால், ஜவாத்துக்கு அந்த சந்தர்ப்பத்தை மு.கா. தலைமை வழங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் – மு.கா. தலைமையோடு முரண்பட்டுக் கொண்டு கட்சிக்கெதிராகப் பேசிக்கொண்டும், செயற்பட்டுக் கொண்டும் வந்தார். உதாரணமாக, கிழக்கு மாகாணசபையில் மு.கா. உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கிணங்க குறிப்பிட்ட சில விடயங்களுக்கு ஆதரவாக வாக்களித்த சந்தர்ப்பங்களில், ஜவாத் மட்டும் எதிர்த்து நின்று வாக்களிக்கத் தொடங்கினார்.

இதன் காரணமாக, மு.காங்கிரசின் அதியுயர் பீடத்தில் குறித்த மாகாணசபை உறுப்பினர் ஜவாத் வகித்து வந்த உறுப்புறுரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜவாத் மீண்டும் மு.கா. தலைவரிடம் சரணடைந்துள்ளார்.

ஆயினும், மு.காங்கிரசின் அதியுயர் பீடம் மேற்கொண்ட முடிவின் அடிப்படையிலேயே ஜவாத்தின் அதியுயர் பீட உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது. அதேபோன்று அதியுயர் பீடத்தின் முடிவின் பிரகாரமே ஜவாத் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அதியுயர் பீடத்திடம் அபிப்பிராயங்கள் எதனையும் கோராமல், மு.கா. தலைவர் அவரின் மூப்புக்கு ஜவாத்தை மீண்டும் கட்சி மேடைகளில் ஏற்றியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் மு.கா.வின் உச்ச சபையான அதியுயர் பீடத்தினை மு.கா. தலைவர் அவமதித்து விட்டதாகவே நான் கருதுகின்றேன் என்கிறார் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அதியுயர் பீட உறுப்பினரொருவர்.

முடிவுகளும் பாடங்களும்!

அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, நடந்து முடிந்த தேர்தல் மற்றும் அதில் பெற்றுக் கொண்ட முடிவுகளினூடாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் தம்மை சுயவிமர்சனத்துடன் மீள்நிர்மாணம் செய்து கொள்ள வேண்டியதொரு தேவை எழுந்துள்ளது. குறிப்பாக, மு.காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் – கட்சிக்குள்ளும், வெளியிலும் ஏராளமான சரிப்படுத்தல்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதேபோன்று, அரசியல் பிரமுகர்கள் களமிறக்கிய வேட்பாளர்களில் அதிகமானோரை மக்கள் இந்தத் தேர்தலில் புறமொதிக்கியமைக்கான காரணம் என்ன என்பதை – குறித்த அரசியல்வாதிகளும் நேர்மையுடன் யோசிக்க வேண்டும்.

மேலும், புதிதாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவோர், இந்தத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு தமது நிருவாகத்தை மேற்கொள்தல் வேண்டும். இல்லையென்றால் – இவர்கள் தொடர்பில் அடுத்த தேர்தலிலும், மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களைச் சாட்டைகளாகத்தான் பயன்படுத்துவார்கள் என்பதை மட்டும் – ஒன்றுக்கு இரண்டு முறை அடித்துக் கூற முடியும்!

(இந்தக் கட்டுரையை  26 மார்ச் 2011 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s