காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

முகுந்தன்! 24 பிப்ரவரி 2011

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 10:50 முப

மப்றூக்

முகுந்தன்

டகமொன்றில் நிலைத்து நிற்பதற்கு எது தேவையோ இல்லையோ – பொறுமை என்பது மிகவும் முக்கியமானது. ரோசம் பொத்துக் கொண்டு வரும் வகையறாக்களும், முயல் மூக்கில் புல்லுக் குத்தும் ஜாதிகளும் ஊடகத் துறையில் நின்று நிலைப்பது மிகவும் கடினம். நமது பிடறிக்குப் பின்னால் ஆயிரம் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கும். அசந்தால் அவ்வளவுதான். ஒற்றை வரியில் சொன்னால்,  நீருக்குள்ளால் நெருப்பெடுத்துக் கொண்டு செல்லும் வேலை – ஊடகத் தொழில்!
இந்தப் பொறுமை என்கின்ற விடயத்தில் இன்றுவரை சூரியனில் நான் வியக்கும் நண்பர்களில் முக்கியமானவன் முகுந்தன். பாவிக்கு சுட்டுப் போட்டாலும் கோபம் வராது! எனக்கு சிரேஷ்டமானவன்தான் என்றாலும் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். எங்களுக்கிடையில் நல்ல வகையான நட்பு இன்றுவரை உண்டு! குறிப்பாக முகுந்தன், வெள்ளையன், நான் – சூரியனின் கலகலப்புக் கூட்டணி!

பக்கத்தில் இடி விழுந்தாலும் முகுந்தன் அசைய மாட்டான். பரபரப்பு, ‘ரென்ச’னெல்லாம் மருந்துக்கும் கிடையாது. என்னைக் கேட்டால், இந்தக் குணம் – வானொலி ஒலிபரப்பாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய சிறப்புத் தகைமை என்றுதான் சொல்வேன். ‘ரென்சன்’ என்பது வானொலி அறிவிப்பாளனுக்குக் கூடவே கூடாது. ஒரு நிகழ்சியின் போதும், நிகழ்ச்சிக்கு முன்பும் ‘ரென்சன்’ தரக் கூடிய ஆயிரம் சம்பவங்கள் நடக்கும். அதையெல்லாம் கணக்கெடுத்தால், நிகழ்ச்சி – அம்போதான்!

சூரியனின் ‘ரென்சன்’ பாட்டிகளில் நானும் ஒருவன்! சின்னத் தவறு அல்லது குழப்பம் தரும் சம்பவமொன்று நடந்தாலே போதும்; முழு நிகழ்ச்சியையும் சொதப்பி விடுவேன். அனேகமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நான் செய்யும் நாட்களைப் பார்த்து – சிலர் வேண்டுமென்றே ஏதாவதொரு பிரச்சினையைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். நானும் – அவர்கள் எதிர்பார்த்தது போல் ரென்சனாகி, அந்த ‘ரென்ச’னோடு நிகழ்ச்சியை ஆரம்பித்து, எங்காவது ஒரு இடத்தில் இடறி விழுந்து விடுவேன்! ஆனால், இந்தக் கீழ்மைத்தனங்கள் பற்றிப் புரிந்து கொண்ட பின்நாட்களில், நான் உசாராகி விட்டேன். நிகழ்ச்சியின் போது கூலாக இருப்பதற்கு முடிந்தவரை என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன்!

சூரியனின் ஆரம்ப காலங்களில் – நிகழ்ச்சிகள் குறித்து எல்லா நேரங்களிலும் நடா அண்ணா மிகவும் அவதானமாக இருப்பார். இரவு இரண்டு மணி, அதிகாலை நான்கு மணி என்று எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கடமையிலிருக்கும் அறிவிப்பாளருடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்வார். பிழைகள் விட்டால் அவ்வளவுதான்.

நடா அண்ணாவின் கோபம் வித்தியாசமாக இருக்கும். அவர் எல்லா அறிவிப்பாளர்களையும் ஒரே மாதிரியாகத் திட்ட மாட்டார். உதாரணமாக, நடா அண்ணா என்னை நாகரீகம் குறைந்த வார்த்தைகளால் ஒருபோதும் திட்டியதில்லை. ஆனால், முகுந்தனை அவ்வப்போது வெளுத்து வாங்குவார். இதில் சுவாரசியம் என்னவென்றால், நடா அண்ணா தொலைபேசி வழியாக முகுந்தனைத் திட்டும்போது, முகுந்தனோ – சிரித்த முகம் மாறாமல் அப்படியே கேட்டுக் கொண்டிருப்பான். தேவையேற்படும் போது மட்டும் இடையில் ”ஓம் அண்ணா, ஓம் அண்ணா” என்பான். தன்னைத் தொலைபேசி வழியாக ஒருவர் தாறுமாறாகத் திட்டுகின்ற சங்கதியை கடைசிவரை, தனக்கு முன்னால் இருக்கும் நபருக்கு அவன் வெளிப்படுத்தவே மாட்டான். ஆனாலும், கலையகத்திலிருக்கும் வெள்ளை நிறத் தொலைபேசியின் சத்தம் சற்று அதிகமானது. நடா அண்ணா – முகுந்தனுக்கு வைக்கும் பூசை புனஸ்காரங்களெல்லாம் முன்னாலிருக்கும் நமக்கும் தெளிவாக கேட்கும்.

ஒரு நாள் இரவு முகுந்தனுடன் இணைந்து நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன். அது ஆரம்பக் காலம். நடா அண்ணா, வெள்ளை நிற தொலைபேசிக்கு வந்து முகுந்தனை ஏதோவொரு பிழைக்காக வாட்டியெடுத்தார். முகுந்தனும் தனது பாணியில் அந்த அழைப்பை ‘அற்ரன்’ பண்ணி முடித்தான். முன்னால் இருந்த நானோ – எதுவும் அறியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு முகுந்தனிடம் ”யாரடா போனில்” என்று கேட்டேன். முகுந்தன் சீரியஸாகச் சொன்னான்: ”மச்சான், நடா அண்ணா பேசினார். நிகழ்ச்சி நல்லாயிருக்குதாம், ஆனால், உன்னை அதிகம் கதைக்க விட வேணாதாம்” – என்று, தான் வாங்கிக் கட்டியதை மறைத்து, கூலாக ஒரு கதையளந்தான்!

முகுந்தன் உள்ளிட்ட ஆரம்ப காலத்து சூரியன் நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் போது, இந்தத் தொலைபேசிக் கதையைச் சொல்லி இப்போதும் நான் சிரிப்பதுண்டு!

இதுபோலதான் – அறிவிப்பாளர்கள் ஏதாவது பிழைகள் செய்து விட்டால், பிழையின் தன்மைக்கேற்ப நடா அண்ணா தண்டனைகள் வழங்குவார். பிழை செய்தவரை குறித்த சில நாட்களுக்கு வேலையை விட்டும் இடை நிறுத்தி வைப்பது அநேகமாக, நடா அண்ணாவின் அப்போதைய தண்டனை முறையாக இருந்தது. மூன்று நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை இந்தத் தண்டனைக் காலம் நீளும்! வெள்ளையனை ஒரு தடவை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை, நடா அண்ணா வேலையை விட்டும் விலக்கி வைத்தார். அந்த நாட்களில் சூரியனில் அனைத்து விதமான அதிகாரங்களும் நடா அண்ணாவுக்கு வழங்கப்பட்டிருந்தது!

இப்படித்தான் ஒரு நாள் – வழமைபோல் முகுந்தன் அலுவலகம் வந்தான். நடா அண்ணா அவருக்கான இடத்தில் கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு – இரண்டு கைகளையும் பிடறியின் பின்னால் கட்டியவாறு கதிரையில் சுழன்று கொண்டிருந்தார். நடா அண்ணா இப்படி காட்சி தருவது அநேகமாய் அங்கிருக்கும் அறிவிப்பாளர்களுக்கு அத்துணை ஆரோக்கியமானதொன்றல்ல! முகுந்தன், உள்ளே வந்தான். அப்போது செயலாளர் அருந்ததியை நடா அண்ணா சத்தமாக அழைத்து – முகுந்தனிடம் எதையோ கொடுக்குமாறு சைகை செய்தார். அருந்ததியும், ஏதோ வெற்றிச் சான்றிதழொன்றை வழங்கும் தோரணையுடன் முகுந்தனின் கையில் காகிதமொன்றைக் கையளித்தார். அது ஒரு மெமோ! சந்தேகத்துடன் முகுந்தன் அதைப் பிரித்துப் பார்த்தால்… ஒரு மாதம் வேலை நீக்கம்!

நம்ம முகுந்தன் அசந்து போவானா என்ன? அப்படிக் கடிதம் கிடைத்தால் உடனடியாக அலுவலகத்தை விட்டும் வெளியேற வேண்டும் என்பது அங்குள்ள நடைமுறை! ஆனால், முகுந்தன் நிகழ்ச்சிப் பிரிவை விட்டும் வெளியே வந்து, வரவேற்பாளர் பகுதியில் இருந்து கொண்டான். நடா அண்ணா அந்த வழியாக வந்து போகும் போதெல்லாம், மிகவும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, நடா அண்ணா பார்க்கும் படியாக நின்றான். கிட்டத்தட்ட பல மணித்தியாலங்கள் இதுதான் கதை! முகுந்தனின் இந்த நடவடிக்கை நடா அண்ணாவுக்கு ஒருவிதமான சிக்கலை ஏற்படுத்தி விட்டிருக்க வேண்டும். கடைசியில் – அருந்ததியிடம் சொல்லி – அவனை உள்ளே எடுத்தார். ஒரு மாத வேலை நீக்கமும், கான்சல்! முகுந்தனின் இந்தப் பொறுமை யாருக்கு வரும் சொல்லுங்கள்!

ஒரு காலத்தில் சூரியனில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சிகளிலொன்று ‘மெய் மறப்போம், பொய் கறப்போம்’! நிகழ்ச்சியை முகுந்தனும் வெள்ளையனும் இணைந்து வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும், சந்தப்பம் பார்த்து ‘கடி’ பட்டுக் கொள்வதும்தான்! கேட்பதற்கு இது சுவாரசியமாக இருக்கும். உண்மையாகச் சொன்னால், நேயர்கள் இதை விரும்பி ரசித்தார்கள். இந்த இருவரின் கேலி கிண்டல்களுக்காகவே பலர் அந்த நிகழ்ச்சியைக் கேட்டதுண்டு!

ஒரு நாள் ‘மெய் மறப்போம், பொய் கறப்போம்’ நிகழ்ச்சி! வெள்ளையன் – முகுந்தன் இருவரும் கடி பட்டுக் கொண்டிருந்தார்கள். இதன் போது, வெள்ளையனை முகுந்தன் ஏதோ கிண்டல் செய்து விட்டு, வெள்ளையனுக்குப் பேச சந்தர்ப்பம் வழங்காமலே  பாடல் ஒன்றை ஒலிபரப்பி விட்டான். அது வெள்ளையனுக்குப் பிடிக்கவில்லை. பாடல் ஒலிக்கும் வேளையின் போது, வெள்ளையன் இது குறித்து முகுந்தனிடம் தனது அதிருப்தியை வெளியிட்டான். ஆனால், முகுந்தன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது இருவருக்கும் வாக்குவாதமாக மாறியது. கடும் சொற்கள் வெளிப்பட்டன. இப்படியே நிலைமை சூடேறிக் கொண்டு செல்ல… கடைசியில் – தான் அணிந்திருந்த ‘ஹெட்போனை’க் கழற்றி எதிரிலிருந்த முகுந்தனின் முகத்தில் ஓங்கி அடித்து விட்டான் வெள்ளையன்!

உண்மையாகவே, முகுந்தனின் இடத்தில் என்போன்ற ஒருவர் இருந்திருந்தால் அந்த இடம் ரணகளமாக மாறியிருக்கும். மட்டுமன்றி நிகழ்ச்சியும் நாறிப் போயிருக்கும்! ஆனால், முகுந்தனின் பொறுமை அந்த நிலைமையைச் சமாளித்தது. அடிவிழுந்த அதிர்ச்சி மாறும் முன்பே – ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிறைவடைந்தது. முகுந்தன் சாதாரண நிலைக்கு வந்தான். எதுவித ‘ரென்சனு’மில்லாமல் மிகவும் கூலாக ஒலி வாங்கியை உயிர்ப்பித்து – வெள்ளையனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டே, தொடர்பில் காத்திருந்த அடுத்த நேயருடன் சுவாரசியம் மாறாமல் பேச ஆரம்பித்தான். முகுந்தனிடமுள்ள மிகப்பெரும் பலம் இதுதான்!

இன்னுமொன்று, நேயர்களைக் கையாள்வது என்பது ஒருவகைக் கலை. அலுவலகத்துக்கும், கலையகத்துக்கும் அழைப்புக்களை எடுத்து நம்மை விசாரிக்கும் நேயர்களுடன் ஒரு நாகரீகத்துக்காக உரையாடுவதுண்டு. ஆனால் – அவ்வாறு பேசும் நேயர்களில் சிலர், பொதுவான விடயங்கள் தாண்டி – குடும்ப விடயங்கள், தனிப்பட்ட விவகாரங்கள் என்று தொடங்கி… நமதும், சக அறிவிப்பாளர்களினதும் அந்தரங்க விடயங்கள் பற்றியெல்லாம் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இது கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். ஒரு சில தடவை தொடர்பினைத் துண்டித்து விடும் நிலைக்குக் கூட நான் சென்றதுண்டு. ஆனால், முகுந்தன் இந்த விடயத்திலும் கெட்டிக்காரன். நேயர்களைக் கையாள்வதிலும், அவர்களின் உறவைப் பேணுவதிலும் – அவனுக்கு நிகர் அவனேதான்! கிட்டத்தட்ட அத்தனை நேயர்களும் அவனுக்கு நண்பர்கள்தான்!

ஆனால், முகுந்தனின் இந்த விடயத்தில் எனக்கு  உடன்பாடு கிடையாது! ஒவ்வொரு அறிவிப்பாளரும் தனது நேயர்களை எப்பொழுதும் நேயர்களாகவே வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். சிலவேளை, ஓரிருவர் விதிவிலக்காய் நண்பர்களாக மாறிப்போகலாம்!

நடா அண்ணா எப்போதும் சொல்வார்;  ”நேயர்களை எப்பொழுதும் நேயர்களாவே வைத்திருங்கள்! ஒரு நேயரை நண்பராக்கிக் கொள்ளும் போது – உங்கள் நேயர்களில் ஒருவரை நீங்கள் இழந்து விடுகின்றீர்கள்!”

O

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

3 Responses to “முகுந்தன்!”

  1. shylaja Says:

    அனுபவம் அலாதியானது…. அட இது உங்கள் டயலாக் தான் மப்ரூக் அண்ணா . ஆகாயத்தில் வாசித்தவன் தொடர் , பாகம் 08, “கைபுள்ளை”யில் . நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் கிறேன் மனோகர் ஆகியோரை நேர்கண்ட அனுபவ பகிர்வின் குறிப்பில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயம், அதாவது அவரை நேர் காண கிடைத்தபோது அவரின் பாதணியை கூட அவரின் உதவியாளர் போட்டுவிடும் கோமாளித்தனம் இல்லாமல் இருக்கலாம் என்ற உங்கள் குறிப்பு,ஒரு வகையில் நம் “வானலை வம்பருக்கும்” பொருந்தும் . அனுபவமும், ஆற்றலும் அதிகம் இருந்தும் வைரத்தை குப்பையில் போட்டது போன்ற ஒருசில விடயங்களால் அவரின் மதிப்பை மற்றவர் அறியாமல் இருப்பது அவரின் நலன் விரும்பியாய் இன்னும் மனதை நெருடும் விடயம் சகோதரா

  2. vellayan Says:

    nandre mabruk , nada anna oru univercity mugunthan some thing special avanodu nigalchigal padaithathu marakkamudiyatha kana kalam


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s