காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நேர்ந்து விடப்பட்டுள்ளவர்களின் கதை! 7 பிப்ரவரி 2011

Filed under: அரசியல் — Mabrook @ 9:23 பிப

மப்றூக்

ரு பக்கம் மழை – வெள்ளம், மறுபக்கம் தேர்தல் சூடு! கடந்த வெள்ளத்தின் போது தங்கள் பின்பக்கத்தைக் கூட, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமாகக் திருப்பாத அரசியல்வாதிகளெல்லாம் இனி விழுந்தடித்துக் கொண்டு வருவார்கள், தயாராக வைத்திருக்கும் கண்ணீரை – மக்களுக்காக வடிப்பார்கள். யாரோ அன்பளித்த நிவாரணங்களை இவர்களின் பெயரில் கொடுப்பார்கள். அரச ஊடகங்கள் இந்தக் கோதாரிகளையெல்லாம் திரும்பத் திரும்ப – போட்டுக்காட்டி நம்மையெல்லாம் இம்மை செய்யும்!

தேர்தலின் துவக்கமே ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு நல்ல சகுனமாக அமையவில்லை. அந்தக் கட்சியின் 25 உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்னொரு வகையில் சொன்னால் தேர்தலில் போட்டியிடாமலேயே ஆளுந்தரப்பு 25 இடங்களில் தோற்றுப் போயிருக்கிறது.

இன்னொருபுறம், நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் – சில கட்சிகளுக்கும் நபர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதேவேளை, சில கட்சிகளுக்கும் – அரசியல்வாதிகளுக்கும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் தாங்கள் தோற்றுப் போவது உறுதி என்று தெரிந்தும் சிலர் – தமது கட்சித் தலைமையிடம் அழுது புரண்டு – அபேட்சகர் ஆசனத்தைப் பெற்றெடுத்துள்ளார்கள். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு சில நூறு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்ட இவர்கள், என்ன தைரியத்தில் திரும்பவும் அதே கோதாவில் குதித்துள்ளனர் என்றுதான் நமக்குப் புரியவேயில்லை!

கணக்கு வழக்கு

நாட்டில் 335 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 301 சபைகளுக்கு மார்ச் 17 இல் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்படி சபைகளில் போட்டியிடும் பொருட்டு 2047 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 450 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கில் பார்த்தால் 1597 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

தேர்தல் நடைபெறவுள்ள மொத்தச் சபைகளுக்குமாக 03 ஆயித்து 931 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாடளாவிய ரீதியில் – வருகின்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 01 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 417 குடிமக்கள் தகுதிபெற்றுள்ளார்கள்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் – 19 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு 164 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவைகளில் 05 அரசியல் கட்சிகளினதும், 48 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மொத்த சபைகளுக்குமாக 182 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 07 அரசியல் கட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட சுயேற்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 06 உள்ளுராட்சி சபைகள் ஏற்கனவே இருந்தன. தற்போது அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் இறக்காமம் பிரதேச சபை ஆகியன அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக 08 முஸ்லிம் பெரும்பான்மை சபைகள் உள்ளன. இவற்றில் கல்முனை மாநகரசபை தவிர்ந்த ஏனைய 07 உள்ளுராட்சி சபைகளுக்கும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு இம்முறை தேர்தல் நடைபெறுகிறது.

மேலுள்ள சபைகளில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்திலும், மு.கா.வே ஆட்சி செய்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் இறக்காமம் பிரதேச சபை ஆகியவைகளுக்கு இது – கன்னித் தேர்தலாகும்.

அக்கரைப்பற்று – சரியான போட்டி!

அக்கரைப்பற்று அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த ஊர். அங்கு ஒரேயொரு பிரதேச சபையே இருந்தது. ஆனால், அமைச்சர் அதாஉல்லா தனது உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினைப் பயன்படுத்தி இப்போது அந்த ஊரில் ஒரு மாநகரசபையைப் புதிதாக உருவாக்கியுள்ளதோடு, பிரதேச சபையையும் அப்படியே வைத்திருக்கின்றார். (பிரதேச சபையின் எல்லை மாறியிருக்கிறது)

அக்கரைப்பற்றுக்கு அருகிலுள்ள அட்டாளைச்சேனையானது ஒரு பிரதேச சபையினை மட்டுமே கொண்டது. ஆனால், அட்டாளைச்சேனையை விடவும் 465 வாக்காளர்கள் குறைந்த அக்கரைப்பற்றுக்கு ஒரு பிரதேச சபையும், கூடவே புதிதாக ஒரு மாநகரசபையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இப்போது அக்கரைப்பற்று மாநகரசபையின் வாக்காளர் தொகை 20 ஆயிரத்து 971 ஆகவும், அக்கரைப்பற்றுப் பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை 04 ஆயிரத்து 74 ஆகவும் மாறியிருக்கிறது. இதனடிப்படையில், இலங்கையில் மிகவும் குறைந்தளவு வாக்காளர்களைக் கொண்ட உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றாக அக்கரைப்பற்றுப் பிரதேசசபை மாறியிருக்கிறது.

கொசுறுத் தகவல்: இலங்கையில் மிகவும் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட உள்ளுராட்சி மன்றம் – ஹப்புத்தளை நகரசபையாகும். இதன் வாக்காளர் தொகை 02 ஆயிரத்து 506 ஆகும். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இன்னும் சில உள்ளுராட்சி மன்றங்களாக, குருனாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய நகரசபை (4115 வாக்காளர்கள்), தலவாக்கலை – லிந்துலை நகரசபை (4174 வாக்காளர்கள்) ஆகியவைகளைக் குறிப்பிடலாம்

அக்கரைப்பற்று நகரசபைக்கான தேர்தலில் இம்முனை அமைச்சர் அதாஉல்லா தனது கட்சியின் குதிரைச் சின்னத்தில் தன்னுடைய மகனைப் போட்டியிட வைத்துள்ளார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல் மேயராகத் தனது மகனை ஆக்கிப் பார்க்கும் ஆசையில்தான் அதாஉல்லா இப்படியானதொரு முடிவினை எடுத்துள்ளதாக – அதாஉல்லாவின் நெருக்கமான வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

இந்தப் பேச்சு அநேகமாக உண்மைதான். காரணம், தனது கட்சி போட்டியிடும் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேசசபை ஆகியவற்றுக்கான முதல்வர் மற்றும் தவிசாளரை – கட்சியின் தலைவரான நான்தான் தெரிவு செய்வேன் என்று – அமைச்சர் அதாஉல்லா கூறியிருக்கின்றார்.
அவருடைய கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மற்றும் அபேட்சகர் சந்திப்புக்கள் போன்ற தருணங்களில் அமைச்சர் மிகவும் பகிரங்கமாகவே இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அதாகப்பட்டது, விருப்பு வாக்குகளை யார் அதிகமாகப் பெற்றாலும் பரவாயில்லை. நான் விரும்பியவர்களையே மேயராக்குவேன், சேர்மனாக்குவேன் என்பதுதான் அமைச்சர் அதாஉல்லா சொல்லவரும் செய்தியாகும்!

இதன்படி பார்த்தால், மகனை மேயராக்குவதென்பதை அதாஉல்லா தீர்மானித்து விட்டார். அப்படியென்றால், அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் அமைச்சர் அதாஉல்லாவின் குதிரைச் சின்னத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் பலிக்கடாக்களா என்று என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது. (மகனை மேயராக்குவதற்கு முதலில் அமைச்சரின் கட்சி அங்கு வெற்றிபெற வேண்டும் என்பது வேறு கதை!)

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் இம்முறை – அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எல். தவம் (இந்துக்களின் பெயர்போல் தெரிந்தாலும் இவர் முஸ்லிம்தான்) என்பவரும் போட்டியிடுகின்றார். இம்முறை மேயர் கதிரையைக் குறிவைத்துள்ளவர்களில் இவரும் ஒருவர். அமைச்சர் அதாஉல்லாவின் மகனை விடவும் இவர் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என நம்பப்படுகிறது. அதனால், அமைச்சரால் இவர் கட்சிக்குள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும் ஒரு கதை உலவுகிறது!

இந்த நிலையில், அக்கரைப்பற்று உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் – கடந்த தேர்தல்களைப் போல், அமைச்சர் அதாஉல்லாவின் கைகள் மட்டுமே ஓங்கி நிற்கும் தேர்தல்களாக அமையப் போவதில்லை என்று மட்டும் புரிகிறது. முன்பு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தேர்தல்களை முகம்கொண்ட மு.காங்கிரஸ் இம்முறை அரசாங்கக் கட்சியாக அதாஉல்லாவை எதிர்கொள்ளப் போகிறது.

தவிரவும், அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், கிழக்கு மாகாணப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், முஸ்லிம் சமாதான செயலகத்தின் அம்பாறை மாவட்டக் கிளை உள்ளிட்ட பல அமைப்புக்களினதும், நிறுவனங்களினதும் தலைமைப் பொறுப்புக்களை வகித்த அஷ்சேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் தலைமையில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களும் அதாஉல்லா அணியினருக்குப் பெருத்த சவாலாகவே இருக்கப் போகின்றனர்.

ஆக, அக்கரைப்பற்று உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் – சபாஷ் போடுமளவுக்கு சரியான போட்டிகளைக் கொண்டதாகத்தான் அமையப் போகிறது.

விசுவாசிகளின் குமுறல்!

இது இப்படியிருக்க மு.கா.வுக்குள்ளும் குத்து வெட்டுக்கள் ஓய்ந்தபாடில்லை! இம்முறை உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் தெரிவின் போது, அந்தக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கட்சியின் நலனை விடவும், தமக்கு நெருக்கமானவர்களை அபேட்கர்களாக்குவதிலேயே ஆர்வம் காட்டியதாக – கட்சியின் விசுவாசிகள் பலர் ஆதங்கப்பட்டுக் கொள்கின்றனர்.

குறிப்பாக, நிர்ந்தவூர் பிரதேச சபைக்குரிய தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையின் போது, மு.கா.வின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலி – கட்சி விசுவாசிகளை விடவும், தனக்கு நெருக்கமானவர்களையே கவனத்திற் கொண்டதாகப் பேசப்படுகிறது.

மு.கா. செயலாளர் ஹசனலி நிந்தவூர்க்காரர். அவருக்கும் – நிந்தவூர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் என்பவருக்கும் இடையில் சொல்லிக் கொள்ளும்படி உறவுகள் இல்லை. இதனால், முன்னாள் தவிசாளர் தாஹிரை ஓரம்கட்டும் நோக்குடன் மு.கா. செயலாளர் ஹசனலி இந்தத் தேர்தலில் தனது சொந்த சகோதரரை அபேட்சகராகக் களத்தில் இறக்கியுள்ளதோடு, வேறொரு நபரையும் களமிறக்கும் கோதாவில் ஈடுபட்டிருந்தாராம். ஆனால், ஹசனலி களமிறக்க விரும்பிய அந்த நபர் – கடந்த காலங்களில் மு.கா.வுக்கெதிராக சண்டித்தனம் பண்ணியவர். தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அவர் மு.கா. பக்கமாக வந்திருந்தார் என்கிறனர் அப்பகுதி மு.கா. ஆதரவாளர்கள்.

ஏற்கனவே, மு.காங்கிரசுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இரண்டாவது தடவையாகவும் ஹசனலி அனுபவித்துக் கொண்டிருப்பது குறித்து கட்சியின் உயர் மட்டத்துக்குள்ளும், ஆதரவாளர்களுக்கிடையிலும் கடுமையான கசப்புணர்வுகள் தோன்றியுள்ள நிலையில், ஹசனலி இவ்வாறான குத்து வெட்டுக்களில் ஈடுபடுவது – அவருக்கும், கட்சிக்கும் ஆரோக்கியமானதல்ல என்கிறார் நமது நண்பரான பல்கலைக்கழக விரிவுரையாளர்!

கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சிக்கு உள்ளேயும் – வெளியேயுமான குத்து வெட்டுக்களோடும், கண்ணுக்குத் தெரியாத கத்திச் சண்டைகளோடும் களமிறங்கியிருக்கின்றார்கள் நமது வேட்பாளர்கள்.

இந்த வேட்பாளர்களில் சிலர் பலிகடாக்களாகப் போகின்றனர். சிலர் கறிவேப்பிலைகளாவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். வேறு சிலர் – யாரோ ஒருசிலரின் வெற்றிகளுக்காக நேர்ந்து விடப்பட்டிருக்கிறார்கள்!

(இந்தக் கட்டுரையை 05 பெப்ரவரி 2011 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s