காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மு.கா. தலைவரும் தடயமற்ற பயணமும்! 10 ஜனவரி 2011

Filed under: அரசியல் — Puthithu @ 12:56 முப

மப்றூக்

சுயவிமர்சனம் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது  நமது நல்லது கெட்டதுகளை நாமே அலசி ஆராய்ந்து கொள்வதாகும். அவ்வாறு யோசிக்கும் போது நமது தவறுகளுக்கும், நம் மீதான விமர்சனங்களுக்கும் சிலவேளைகளில் நாமே காரணமாகி விடுகின்றமை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் நமக்கு விபரீதத்தை உருவாக்கி விடும் இவ்வாறான தவறுகளை நம்மில் சிலர் அறியாமல் செய்து விடுகின்றோம். வேறு சிலரோ அறிந்தே செய்து விடுகின்றனர்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இதில் இரண்டாவது வகை!

தான் செய்வது தவறு அல்லது தனது செயற்பாடுகளால் தாறுமாறாக விமர்சனங்கள் வந்து விழும் எனத் தெரிந்தும் – அவர் சில காரியங்களை தனது மூப்புக்குச் செய்தே விடுகின்றார். இதனால், பாதிக்கப்படப்போவது ஹக்கீம் மட்டுமல்ல. கூடவே மு.காங்கிரசும் மோசமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிருவரும் என்று அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் முனுமுணுத்துக் கொள்கின்றனர்.

விசாரித்துப் பார்த்ததில் இந்த முனுமுணுப்புகளுக்கு காரணங்களும், நியாயங்களும் நிறையவே இருக்கின்றன.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போயிருந்தார். அந்தப் பயணம் பற்றி மு.கா.வின் தொண்டர்களோ, ஆதரவாளர்களோ பெரிதாக அறிந்திருக்கவில்லை. தலைவர் ஹக்கீமும் அறிவித்திருக்கவுமில்லை. அது ஒரு தடயமற்ற பயணமாகும்.

தமது கட்சித் தலைவர் அம்பாறை மாவட்டத்துக்கு வந்திருப்பதை அல்லது வந்து போயிருந்ததை மு.கா. தொண்டர்களில் பலர் – பத்திரிகைகளைப் பார்த்தே அறிந்து கொண்டனர். இது – அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினையும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மு.கா.வுக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களை ஹக்கீம் இதுவரை பகிரங்கமாகச் சந்தித்து நன்றி தெரிவிக்கவில்லை என கட்சி ஆதரவாளர்களே குறை கூறிக் கொண்டிருக்கும் நிலையில்தான், ஹக்கீமின் இந்த தடயமற்ற பயணம் நிகழ்ந்திருக்கிறது.

அம்பாறை மாவட்டத்துக்கு ஹக்கீம் வந்துபோன பிறகு – பல்வேறு விதமான ஊகங்களும், கதைகளும், வதந்திகளும் உலவத் தொடங்கியுள்ளன. சில பிரதேசங்களுக்குப் புதிதாக இளைஞர் அமைப்பாளர்கள் சிலரை – ஹக்கீம் நியமித்து விட்டுச் சென்றுள்ளதாகப் பேசப்படுகிறது. அதேவேளை வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. சார்பாகப் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டுள்ள சிலருக்கு – சந்தர்ப்பம் வழங்குவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவைகளில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் மு.கா.வின் பிரதேச முக்கியஸ்தர்களே திண்டாடுகின்றார்கள். முக்கியஸ்தர்களின் நிலையே இதுவென்றால் ஆதரவாளர்கள் பாவமில்லையா?!

இதனால்தான், ஹக்கீமின் இந்தப் பயணம் குறித்து மு.கா.வின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் முனுமுணுத்துக் கொள்கின்றனர்.

இந்தப் பயணத்தின் போது, ஒரு சிலரை மட்டும் ஹக்கீம் – அழைத்துப் பேசியிருந்ததாக அறியக்கிடைக்கிறது.

மு.கா. தலைவர் இவ்வாறு தடயமற்று வந்துபோனமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை என்று கூறுகின்றார் கல்முனையைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினரொருவர். அதாவது, கடந்த பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழங்குவேன் என்று ஹக்கீம் வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், கடைசிவரை அதை அவர் நிறைவேற்றவேயில்லை. இந்த நிலையில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஹக்கீம் தவறிவிட்டார்.

இவற்றினால், ஹக்கீம் மீது அம்பாறை மாவட்டத்திலுள்ள மு.கா.வின் தொண்டர்களிலிருந்து குட்டிக் குட்டித் தலைவர்கள் வரை, பலர் கோபத்தில் இருக்கின்றார்கள். அதனால்தான் அவர் இப்படி – சொல்லாமல் கொள்ளாமல் வந்து போயிருக்கின்றார். இன்னும் சொன்னால், அம்பாறை மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை நாடிபிடித்தறிவதற்காகவே தலைவர் ஹக்கீம் இப்படியானதொரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்று கல்முனை மாநகரசபையின் அந்த மு.கா. உறுப்பினர் மேலும் கூறினார்.

இந்தக் கதையில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன! அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீமுக்கு இவ்வாறானதொரு அசௌகரிய நிலை தோன்றுவதற்கு அவரே காரணமாகவும் போய்விட்டார் என்பதுதான் – இங்கு அடிக்கோடிட்டுக் கூறவேண்டிய செய்தியாகும்.

நமது கட்டுரைகளில் நாம் – திரும்பத் திரும்ப கூறுகின்றதொரு விடயத்தை இன்னுமொருமுறை இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது, பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தப்பித்துத் திரிவதென்பது – ஒருபோதும் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்து விடாது. ஆனால், துரதிஸ்டவசமாக மீண்டும் மீண்டும் ஹக்கீம் இதையே செய்து வருகின்றார் என மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச அமைப்பாளர் ஒருவர் கூறுகின்றார்.

மு.கா. தலைவர் – அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போன செய்தி குறித்து அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட ஆதரவாளரொருவர் நம்மிடம் அவரின் ஆதங்கத்தைத் தெரிவிக்கையில்ளூ ‘தலைவர் அமைச்சுப் பதவியை எடுத்தவுடன் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து, கட்சி ஆதரவாளர்களைப் பகிரங்கமாகச் சந்தித்திருக்க வேண்டும். அல்லது அம்பாறை மாவட்டத்தில் பொதுக் கூட்டமொன்றைப் போட்டு மக்களுக்கு நன்றியையாவது சொல்லியிருக்க வேண்டும். அம்பாறை மாவட்டம் என்பது மு.கா.வின் அத்திவாரம் என்பது ஒறுபுறமிருக்க, மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் சொந்த இடம் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆனால், இவைகளில் எதையுமே செய்யாமல் தலைவர் ஹக்கீம் இப்படி ஒளித்து விளையாடுவது அவரின் தலைமைக்கும் கட்சிக்கும் அழகுமல்ல – நல்லதுமல்ல’ என்றார்!

ஆக, மேற்படி விடயம் குறித்து மு.கா. தலைவர் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்து விட்டது. இந்த நிலையில் – தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்லும் தலைவராக இருந்து விடாமல் ஹக்கீம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவை தவிர, உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. சார்பாக களமிறக்கும் வேட்பாளர்கள் குறித்தும் ஹக்கீம் அதீத கவனம் செலுத்துதல் வேண்டும். கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தில் மு.கா. சார்பாகப் போட்டியிட்டவர்களில் மிக அதிகமானோர் திருப்திகரமானவர்களாக அமைந்திருக்கவில்லை.

உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் – ஓரளவு விடயதானமுள்ளவராக இருக்க வேண்டும். தமது பிரதேசத்தின் நன்மை, தீமைகள் குறித்து ஓர் அதிகாரியை, அமைச்சரைச் சந்தித்துப் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். அவ்வாறல்லாத ஒருவர் ஓர் உள்ளுராட்சி மன்றத்தின் உறுப்பினராகி – எதைத்தான் கிழித்துவிடப் போகிறார்!

எனவே, இது விடயத்தில் தலைவர் ஹக்கீம் கவனமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். ஒரு சிலரின் அழுத்தங்களுக்காகவோ, அல்லது சண்டியர்கள் என்பதற்காகவோ, அல்லது காசுக்காரன் என்பதற்காவோ வெற்றுத் தலையர்களையெல்லாம் வேட்பாளர்களாக்கி விடும் பாவத்தை ஒருபோதும் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்து விடக் கூடாது. அவ்வாறு அவர் செய்து விடுவாராயின் அது மாபெரும் சமூகத் துரோகமாவே கருதப்படுதல் வேண்டும் என்று முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஒருவரும் தனது கருத்தை நம்மிடம் முன்வைத்தார்.

ஆகவே, இவை குறித்து ஒன்றுக்கு இரண்டு அல்லது தேவையாயின் மூன்று தடவைகள் மு.கா. தலைவர் சிந்திக்க வேண்டும்.

மக்களிடம் செல்லாத ஒருவர், மக்கள் கருத்தைச் செவி மடுக்காத ஒருவர் – மக்கள் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவராவார்!

தனது லாயக்கு என்ன என்பதை ஹக்கீம் நிரூபிக்க வேண்டும்!!

(இந்தக் கட்டுரையை 07 ஜனவரி 2011 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

 

1 Responses to “மு.கா. தலைவரும் தடயமற்ற பயணமும்!”

  1. Farliyas ACM Says:

    மக்களிடம் செல்லாத ஒருவர், மக்கள் கருத்தைச் செவி மடுக்காத ஒருவர் – மக்கள் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவராவார்!


பின்னூட்டமொன்றை இடுக