காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தலைவரின் கதவுகள்! 18 திசெம்பர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 9:18 பிப

மப்றூக்
திர் பார்த்தது, எதிர்பாராதது, எதிர்பார்த்தும் நிகழாதது, எதிர்பாராமல் நிகழ்ந்தது என சமீப நாட்களாக நமது அரசியல் அரங்கில் நிறைய விடயங்கள் நடந்தேறிவிட்டன. குறிப்பாக கடந்த அமைச்சரவை மாற்றமானது பலருக்கு ஏமாற்றங்களையே திணித்து விட்டுச் சென்றிருக்கிறது.

அமைச்சரவை மாற்றம் நடந்து எத்தனையோ நாளாகி விட்டன. அதன் பிறகு எவ்வளவோ நடந்தும் விட்டன. இந்த நிலையில், இப்போது எதற்கு இந்தக் கதை என்று யோசிப்பவர்கள், சற்றே ஆறஅமர இந்தக் கட்டுரையை வாசித்து முடிக்க வேண்டும்.

மு.காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இணைந்ததன் பிறகு அந்தக் கட்சிக்கு வழங்கப்படலாம் என மு.காங்கிரஸ் தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சுக்களின் எண்ணிக்கையானது பூர்த்தி செய்யப்பட்டவில்லை. இது – மு.கா. ஆதரவாளர்களுக்கும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கடுமையான ஏமாற்றங்களைக் கொடுத்துள்ளன.

மு.காங்கிரசின் தலைவருக்கு ஒரு அமைச்சுப் பதவியும், தவிசாளர் பஷீருக்கு பிரதியமைச்சுப் பதவியுமாக அந்தக் கட்சிக்கு அரசாங்கம் கொடுத்தவை போதாது என்பது – கட்சியிலுள்ளோர் பலரின் நிலைப்பாடாகும். இது தொடர்பில் மு.கா.வின் முக்கிய ‘தலை’யொன்று நம்மிடம் தெரிவித்த கருத்தானது மிகவும் நேர்மையும், யதார்த்தமும் கொண்டதாகும்.

அதாவது, ‘மு.கா.வுக்கு அரசு கொடுத்தவை போதாது என்று சொல்வது சரியென்றால், அரசுக்கு மு.கா. கொடுத்தவையும் போதாதுதானே’ என்றார்.

இது மிகவும் கவனத்துக்குரியதொரு கருத்தாகும். இந்த அரசிடம் மு.கா. எதையும் பழிபோட்டுப் பெற முடியாததொரு இக்கட்டான நிலை இருக்கிறது. காரணம், இந்த அரசின் வெற்றிக்காக கடந்த காலங்களில் ஒரு துரும்பைக் கூட மு.கா. எடுத்துப் போடவில்லை. மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஹக்கீம் முக்கியமானவர்!

எவ்வாறிருந்தபோதும், கடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, ஆகக்குறைந்தது மு.காங்கிரஸ் அதன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொடுக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும், வெளியிலும் இருந்தது.

அம்பாறை மாவட்டம் என்பது மு.கா.வின் இருதயம்! இது – அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சொந்த மாவட்டம். இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டமும் அம்பாரைதான்! மேலும், மு.கா.வுக்கு தேசிய அளவில் கிடைக்கும் வாக்குகளில் அதிமானவற்றை வழங்குகின்ற மாவட்டமாகவும் அம்பாறையே இருக்கிறது. இவை தவிர, மு.கா.வின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 03 பேர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

மு.கா. தொடர்பில் இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட ஒரு மாவட்டத்துக்கு – அந்தக் கட்சியின் தலைமையானது ஒரு அமைச்சுப் பொறுப்பைக் கூடப் பெற்றுக் கொடுக்காமல் விட்டமையானது மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும் என்கிறார் மு.கா.வின் அம்பாறை மாவட்ட பிரதேச சபையின் தலைவரொருவர்!

அப்படியென்றால், அம்பாறை மாவட்டம் ஏன் இவ்வாறு அலட்சியம் செய்யப்பட்டது? ஆதற்கான காரணம்தான் என்ன என்பதை நாம் இங்கு – சற்று உரத்துப் பேச வேண்டியிருக்கிறது!

மு.கா.வுக்கு இப்போது கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகளோடு இன்னும் இரண்டைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருந்ததாகவும், ஆனால் மு.கா. தலைவர்தான் அதைக் கேட்டுப் பெறவில்லை அல்லது இப்போதைக்கு வேண்டாம் எனக் கூறிவிட்டதாகவும் கதையொன்று உலவுகிறது.

இதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பக்கூடியதாகவே உள்ளது! அதாவது, கட்சிக்குள்ளிருக்கும் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் அவரவருக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் மு.கா.வுக்கு  03 அல்லது 04 அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் கூட, அதைப் பங்கிடுவதென்பது கட்சித் தலைவருக்கு மிகவும் கஷ்டமான காரியமாகப் போயிருக்கும். இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் தலைவரும், தவிசாளரும் மட்டும் அமைச்சுப் பதவிகளைப் பெறும் வகையில் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினையும், ஒரு பிரதியமைச்சுப் பதவியினையும் மு.கா. தலைவர் பெற்றெடுத்தாராம்!

‘இந்தக் கதை உண்மையென்றால், தலைவர் ஹக்கீமின் தீர்மானமானது மிகவும் பலவீனமானது. பிரச்சினைகளுக்குப் பயந்து ஓடி ஒளிவதும், கட்சிக்குக் கிடைக்கவிருந்த நலன்களை பலி கொடுத்திருப்பதும் சிறந்ததொரு தலைமைக்கு அழகல்ல’ என்று மு.கா.வின் பிரதேச அமைப்பாளரொருவர் தனது ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. சார்பில் ஒரு அமைச்சுப் பதவியையேனும் பெற்றுக் கொடுக்காமல் தமது மாவட்டத்தை தலைவர் ஹக்கீம் புறக்கணித்து விட்டதாகவே கணிசமான மு.கா. ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள்.

மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்

அம்பாறை மாவட்டத்தில் எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் எம்.ரி. ஹசனலி என்று மு.கா.வின் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஹரீசும், பைசாலும் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள். ஹசனலி – தேசியப்பட்டியல் மூலம் தெரிவானவர்!

இவர்களில் ஆகக்குறைந்தது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்காயினும் அமைச்சுப் பதவியொன்றை மு.கா. தலைவர் பெற்றுக் கொடுத்து – அம்பாறை மாவட்டத்தைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும் என்பது – அந்த மாவட்டத்தின் மு.கா. ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது.

சரி, போனவை போகட்டும்! அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. சார்பில் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் இல்லாமல் போய்விடவில்லை! எதிர்வரும் ஜனவரி மாதம் ஆளுந்தரப்பிலுள்ள மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்துக்குள்ளிருந்து கதைகள் கசிகின்றன. இதன்போது, மு.கா. தலைவர் கேட்பாராயின் அந்தக் கட்சிக்கும் இரண்டு பிரதியமைச்சுக்களை அரசு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

அப்படியாயின் இந்த சந்தர்ப்பத்தை மு.கா. தலைவர் தவறவிடவே கூடாது. மு.கா.வுக்கு இரண்டு பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கும் பட்சத்தில், அவற்றினை தலைவர் ஹக்கீம் கேட்டுப் பெறுதல் வேண்டும் என்று கட்சியின் உயர்பீடத்தவர்களே கூறுகின்றார்கள்.

சரி, அவ்வாறு கிடைக்கும் அமைச்சுப் பதவிகளை எவ்வாறு பகிர்வது என்பது ஒரு பிரச்சினை என்கிறீர்களா? இல்லவேயில்லை!! அந்த இரண்டினையும் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவதே கட்சிக்கும் – தலைவருக்கும் நன்மை பயக்கும் முடிவாக இருக்கும் என்பதே நமது அபிப்பிராயமாகும்!

நூர்தீன் மசூர்

இந்த நிலையில், திருகோணமலை மற்றும் வன்னி மாவட்ட மு.கா. ஆதரவாளர்கள் பற்றியும் நாம் பேசுதல் வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். தௌபீக் இருக்கின்றார். இவர் ஓர் இளைஞர். துடிப்பானவர்! வன்னி மாவட்டத்தின் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரை அந்தக் கட்சி எதிர்பாராமல் இழந்திருக்கிறது. அவரின் மரணம் அதிர்ச்சியானது!

மேற்படி இரண்டு மாவட்டங்களும் மு.கா.வின் கோட்டைகளாகும்.

ஆக, திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்கள் குறித்தும் மு.கா. சிந்தித்தே ஆக வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் – தற்போது அமைச்சர்களாகவுள்ள மு.கா. தலைவர் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தினையும், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் வன்னி மாவட்டத்தினையும் பொறுப்பெறுத்து அந்த மாவட்டங்களைக் கவனித்தல் வேண்டும்.

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் – திருகோணமலை மாவட்டத்துக்குமான தொடர்புகள் நெருக்கமானவை! கிழக்கு மாகாணசபைக்கான கடந்த தேர்தலில் மு.கா. தலைவர் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தில் களமிறங்கி அபார வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் – அந்த மாவட்டத்தின் கைகளிலேயே மு.கா.வின் ஒட்டு மொத்த வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன. மு.கா.வின் அரசியல் பகையாளிகள் பலரின்  இருப்பிடமாகவும் இந்த மாவட்டம் இருக்கின்றது. குறிப்பாக, அம்பாறை – அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த மாவட்டமாகும்.

இவ்வாறான பின்னணிகளை வைத்துப் பார்க்கும் போது, அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. சார்பில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டே ஆக வேண்டும். மு.கா.வின் மிகப்பெரும் கோட்டையிலே அதன் எதிராளிகள் அமைச்சுப் பதவிகள் எனும் ஆயுதங்களுடனும், மு.கா. தரப்பினரோ அமைச்சுப் பதவிகளற்ற நிலையில் நிராயுததாரிகளாகவும் அரசியல் செய்வதென்பது மு.கா.வுக்கு நல்லதல்ல என்று கூறுகின்றார் நமது நண்பரான பல்கலைக்கழக விரிவுரையாளர்!

மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் – ஆளுந்தரப்பில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்த காலங்களில்தான் மு.கா.வின் வேர்களை தேசிய அளவில் பரப்பினார். அதேவேளை, மு.கா.வுக்கெதிரானவர்களின் கொம்புகளையும் முறித்தார்.

ஹக்கீம்

ஆனால், தற்போதைய மு.கா. தலைவர் ஹக்கீம் – ஆளுந்தரப்போடு இணைந்திருந்த காலங்களில் இவற்றினைச் செய்வதற்குத் தவறியே வந்துள்ளார்!

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் இந்தக் காலத்திலாவது மு.கா. தலைவர் ஹக்கீம் – மறைந்த தலைவரைப் பின்பற்ற வேண்டும் என்பதே தமது அவாவாகும் என்கிறார்கள் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள்.

அதிஸ்டமும், சர்ந்தப்பங்களும் ஒருவரின் கதவை – ஒரு முறைதான் தட்டும் என்பார்கள். ஆனால், மு.கா. தலைவர் ஹக்கீமின் கதவுகளை அவை – பல தடவை தட்டிய போதும் துரதிஷ்டவசமாக தனது கதவுகளை ஹக்கீம் திறக்கவேயில்லை!

இப்போது, அவரின் கதவு இன்னுமொரு தடவை தட்டப்பட்டிருக்கிறது. அவரின் வாசலில் அதிஷ்டங்களும், சந்தர்ப்பங்களும் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன.

கதவுகள் திறக்குமா?                                                                                                                  o

(இந்தக் கட்டுரையை 18 டிசம்பர் 2010 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

2 Responses to “தலைவரின் கதவுகள்!”

 1. asfer eseak Says:

  இது நடுநிலையான(ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு நன்மை தரும்) கருத்து என்று எண்ணித்தான் வாசித்தேன் ஆனால் எங்கேயோ சாய்ந்து போவதுபோல் தெரிகிறதே? உண்மையா அது?

  • mabrook Says:

   எங்கு சாய்கிறது என்பதை நீங்கள் சொல்லவேயில்லையே! எவருக்காகவும், என் எழுத்துக்களை நான் வளைப்பதில்லை நண்பரே…
   ஆனாலும், வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றிகள்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s