காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மு.காங்கிரஸும், ‘வேண்டாம்’ எனும் வியூகமும்! 1 திசெம்பர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 10:11 பிப

ஜனாதிதியிடமிருந்து அமைச்சர் நியமனத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஹக்கீம்

மப்றூக்

லங்கை அரசியல் கடந்த திங்கட்கிழமை காலை 10.00 மணிவரைக்கும் கடைசிப் பந்தில் வெற்றி இலக்கைக் கொண்ட ருவன்ரி – ருவன்றி கிரிக்கட் போட்டியின் இறுதி நிமிடங்களுக்கு ஒப்பானதாய் இருந்தது. அமைச்சரவை மாற்றத்தை அறிந்து கொள்ளும் ஆவலும், பரபரப்புமே அதற்குக் காரணங்களாகும்.

தமக்கு என்ன அமைச்சு கிடைக்கப் போகிறதோ என்கிற பதட்டத்தில் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒருபுறம். தமக்கு அமைச்சுப் பதவி கிடைக்குமா இல்லையா என்கிற கவலையில் சிலர் – வேறொரு புறம்.இவற்றுக்கு அப்பால் – தமது ஆதரவுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன அமைச்சு கிடைக்கப் போகிறதோ என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், படு ரென்சனுடன் பொதுமக்கள் – இன்னுமொரு புறம்!

குறிப்பாக, அரசாங்கத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரசாருக்கு என்ன அமைச்சுப் பொறுப்புகள், எத்தனை அமைச்சுப் பொறுப்புகள் என்பதை அறிந்து கொள்வதில் மு.கா. ஆதரவாளர்கள் மட்டுமன்றி, மு.கா.வுக்கு எதிர் அரசியல் பாசறையில் உள்ளோரும் அதிக ஆர்வம் காட்டியதை அவதானிக்க முடிந்தது.

அதிலும் குறிப்பாக, அதாஉல்லாவை விட ஹக்கீமுக்கு ‘பெரிய’ அமைச்சு கிடைக்க வேண்டும் என்றும், ஹக்கீமை விடவும் ‘பெரிய’ அமைச்சு அதாஉல்லாவுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அவரவர்களின் தீவிர ஆதரவாளர்கள் பலர் வெளிப்படையாகவே தமது விருப்பங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

இந்த நிலையில், ஏ.எல்.எம். அதாஉல்லா கடந்த அமைச்சரவையில் வகித்த உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சுப் பதவியினையே மீண்டும் பெற்றுள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு நீதியமைச்சு வழங்கப்பட்டிருக்கிறது. இவைகளில், எது ‘பெரிய்ய்யது’ என்பதை அவரவர் ஆதரவாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.

இழந்து பெற்ற வெற்றி!

அதாஉல்லா

இவை ஒரு புறமிருக்க, பலரும் எதிர்பார்த்த மாதிரி மு.காங்கிரசுக்கான அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை அமையவில்லை. மு.கா.வுக்கு ஆகக்குறைந்தது ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இரண்டு அல்லது மூன்று பிரதியமைச்சுக்களும் வழங்கப்படலாம் என்று நமது கட்டுரையொன்றில் எதிர்வு கூறி எழுதியிருந்தமை சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (மறந்து போனவர்கள் திரும்பவும் சிறப்புக் கட்டுரை பகுதியிலுள்ள ‘மு.கா.வும் அடுத்த கண்டமும்’ என்கிற கட்டுரையைப் படிக்கலாம்) ஆனால், தலைவர் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும் என – ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும், ஒரு பிரதியமைச்சுமாக இரண்டு அமைச்சுக்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

நமக்குக் கிடைத்த தகவலின்படி மு.கா.வுக்கு அரச தரப்பு மேலும் இரண்டு பிரதியமைச்சர் பதவிகளை வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனாலும், அவற்றினைப் பெற்றுக் கொண்டால் பின்னர் கட்சிக்குள் யார்யாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்பதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், இப்போதைக்கு குறித்த பிரதியமைச்சர் பதவிகளை மு.கா. தலைமை வேண்டாம் என்று சொல்லி விட்டதாகவும் தெரியவருகிறது.

எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள மு.காங்கிரசுக்கு 04 அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் போது அவற்றினைப் பங்கிடுவதில் பாரிய சிக்கல்களை தலைவர் ஹக்கீம் முகம்கொண்டே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மு.கா.வுக்குக் கிடைக்கவிருந்த மேலும் இரண்டு பிரதியமைச்சுப் பதவிகளை இப்போதைக்கு வேண்டாம் என்றிருக்கின்றராம் ஹக்கீம்!

மு.கா. தலைமையின் இந்த முடிவை இப்போதைக்கு புத்திசாலித்தனமானதொரு முடிவாகவே பார்க்க முடிகிறது. கட்சிக்குக் கிடைக்கும் இரண்டு மேலதிக பிரதியமைச்சர் பதவிகளை விடவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரச்சினையின்றி கைக்குள் வைத்துக் கொள்வதே முக்கியம் என்கிற மு.கா. தலைவரின் முடிவு பாராட்டுக்குரியது!

இது ஒருபுறமிருக்க, அமைச்சர்கள் பலருக்கு, என்ன அமைச்சு தங்களுக்குக் கிடைக்கப் போகிறது என – கடைசிவரை தெரிந்திருக்கவேயில்லை. ஆனால், மு.கா. தலைவருக்கு நீதியமைச்சு கிடைக்கும் என்கிற தகவலை ஊடகங்கள் முந்திக் கொண்டு வெளியிட்டிருந்தன. அப்படியாயின், ஹக்கீம் இந்த அமைச்சுப் பொறுப்பை வழங்குமாறு முன்கூட்டியே கேட்டிருக்க வேண்டும். அல்லது ஹக்கீமுக்கான அமைச்சுப் பொறுப்பு என்ன என்பதை ஜனாதிபதி முன்கூட்டியே ஹக்கீமிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன விடயங்களில் எது நடந்திருந்தாலும், மு.கா. தலைமையை ஜனாதிபதி மதித்து நடந்திருக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மகிழ்ச்சி தராத அமைச்சு

இதேவேளை, மு.கா. தலைவருக்கு கிடைத்திருக்கும் நீதியமைச்சு குறித்து கட்சியின் ஆதரவாளர்களிடையே பெருத்த மகிழ்ச்சிகளைக் காண முடியவில்லை. இந்த அமைச்சை வைத்துக் கொண்டு ‘சமூகத்துக்கு என்னத்தைச் செய்ய முடியும்’ என்பதே – அவர்கள் அதிகமாக மகிழ்ச்சிப் பட முடியாமைக்குக் காரணமாகும்.

பஷீர்

மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் இப்போதெல்லாம் தமது கட்சிக்குள் நடக்கும் அனைத்து விடயங்களையும், கட்சியின் மறைந்த தலைவர் அஷ்ரப்போடும், அவரின் செயற்பாடுகளோடுமே ஒப்பிட்டுப் பார்க்கப் பழகிவிட்டனர். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் அவர் வசம் வைத்திருந்த துறைமுகங்கள், கப்பல்துறை, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சுகளைப் போலவே இப்போதும் கிடைக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புகின்றார்கள். காரணம், அந்த அமைச்சுக்கள் கிடைத்தால் நிறைய வேலை வாய்ப்புகளையும், அபிவிருத்திகளையும் சமூகத்துக்குப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அந்தக் கட்சி ஆதரவாளர்களுடைய நம்பிக்கையாகும்.

இந்த இடத்தில் இரண்டு விடயங்களை நாம் பேச வேண்டியிருக்கிறது.

  • விடயம் ஓன்று:

அமைச்சுப் பொறுப்பை வைத்துக் கொண்டு, அதனூடாக மக்களுக்கு எதையாவது செய்வதும் செய்யாமல் விடுவதும், அந்தந்த அமைச்சுப் பதவிகளை வகிப்போரின் திறமையிலும், அர்ப்பணிப்பிலுமே தங்கியுள்ளது. மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் – துறைமுகங்கள் அமைச்சுப் பதவியினை வகிப்பதற்கு முன்னர் அப்படியொரு அமைச்சும் அமைச்சரும் இருந்ததே பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், அஷ்ரப் அந்த அமைச்சினை பாரமெடுத்துக் கொண்ட பிறகு, அதனூடாக நிறையவே செய்து காட்டினார். சிறுபான்மை சமூகங்களுக்காக அந்த அமைச்சினை உச்ச அளவு அவர் பயன்படுத்திக் கொண்டார்.

இன்னும் சொன்னால், அமைச்சுப் பொறுப்புகளற்ற அமைச்சு ஒன்றைக் கொடுத்திருந்தால் கூட (இவ்வாறான அமைச்சுப் பதவி கடந்த அரசாங்கங்களில் இருந்தது) அதை வைத்துக் கொண்டும் அஷ்ரப் நிறையக் காரியங்களைத் தனது சமூகத்துக்காகச் சாதித்திருப்பார் என்பது அவர் குறித்து அறிந்தோரின் அபிப்பிராயமாகும். அது உண்மையும் கூட!!

ஆகவே, நீதியமைச்சினை வைத்துக் கொண்டு மு.கா. தலைவரால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட முடியாது. மக்களுக்கும், சமூகத்துக்கும் இந்த அமைச்சின் மூலமாக நிறையவே அபிவிருத்திகளைச் செய்து காட்ட முடியும்.

  • விடயம் இரண்டு:

கட்டிடங்களும், கொங்றீட் காடுகளும் மட்டுமே அபிவிருத்தி என்பதற்கான அடையாளங்கள் அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவை மட்டும்தான் ஒரு சமூகத்துக்கான அபிவிருத்திகள் என்கிற மனப்பதிவினை மக்கள் மத்தியில் அதிகமான அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

இந்தக் கருத்தியலில் இருந்து முதலில் மக்கள் விடுபட வேண்டும். உதாரணமாக, இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கென சில பிரத்தியேமான சட்டங்கள் உள்ளன. குறிப்பாக முஸ்லிம் விவாகச் சட்டத்தைக் குறிப்பிடலாம்.

அஷ்ரப்

இவைபோன்றை சமூகம் சார்ந்த சட்ட விடயங்களில் ஒரு நீதியமைச்சராக ஹக்கீம் – கூடுதல் கவனமெடுத்து தேவையான திருத்தங்களை செய்ய முடியும். அல்லது சமூகத்துக்கு நன்மை தரும் புதிய சட்டங்களை உருவாக்கலாம். (அரசாங்கத்தின் நம்பிக்கையினையும், நட்புறவினையும் சம்பாதித்துக் கொண்டால் இவைகளைச் செய்து காட்ட முடியும்)

ஆக, தனது சமூகத்துக்காக கட்டிடங்களையும், அபிவிருத்தி என்கிற பெயரில் ஆயிரம் கொங்றீட் காடுகளையும் உருவாக்கிக் கொடுப்பதை விடவும், மேற்சொன்னது போல், சமூகத்துக்குத் தேவையான சட்டத்தை உருவாக்கி அல்லது திருத்திக் கொடுப்பது மேலானது.

ஹக்கீம்: ஒன்றும் செய்ய மாட்டார்

இந்த இடத்தில் மு.கா. தலைவர் குறித்து கூறப்பட்டு வரும் ஒரு விமர்சனத்தினை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது, ‘ஹக்கீமுக்கு ஜனாதிபதிப் பதவியைக் கொடுத்தாலும் அவர் தனது சமூகத்துக்கு அதனூடாக ஒன்றும் செய்ய மாட்டார்’ என்பது மு.கா.வுக்கு எதிரணியிலுள்ளோரின் கருத்தாகும். இவ்வாறானதொரு கருத்து கணிசமான மு.காங்கிரஸ் ஆதரவாளர்களிடமும் உள்ளது.

காரணம், கடந்த காலங்களில் ஹக்கீம் அமைச்சராக இருந்த போது, அந்தப் பதவி வழியாக தனது சமூகத்துக்கு குறிப்பிடும் படியாய் அவர் எதுவுமே செய்யவில்லை என்று பலரும் குறைபட்டுக் கூறுவார்கள். இதை மறுப்பதற்கும் இல்லை.

மு.கா.வின் நேரடி அரசியல் எதிராளிகளான அதாஉல்லா போன்றோர் தமது அமைச்சுப் பதவியினூடாக கிழக்கில் பாரிய வேலைத் திட்டங்களையும், தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்துக் கொண்டிந்த போது, அதே காலப்பகுதியில் அமைச்சராக இருந்த ஹக்கீம்  – சொல்லிக் கொள்ளக் கூடிய வகையில் எதனையும் செய்யவில்லை என்பது உண்மைதான்.

எனவே, இந்த விமர்சனம் குறித்து இம்முறை மு.கா. தலைவர் ஹக்கீம் அதிக கவனமெடுக்க வேண்டும் என்கிறார்கள் அந்தக் கட்சியின் உள்ளிருக்கும் உயர்மட்டத்தவர்கள்.

ஹரீஸ்

இதேவேளை, கிழக்கின் ஒரேயொரு மு.கா. அமைச்சராக பசீர் இருப்பதால் – அவருக்கும் பாரிய பொறுப்புகள் உள்ளன. இவரிடமிருந்து கட்சியின் கிழக்கு ஆதரவாளர்கள் நிறையவே எதிர்பார்ப்பார்கள். தவிர, கிழக்கு மாகாணம் என்பது மு.கா.வின் அடித்தளம் என்பதால், அங்கு சற்று கூடிய கவனத்தினை மு.கா. செலுத்தியே ஆக வேண்டும். அது தவற விடப்படும் தருணங்களில் – குற்றவாளிக் கூண்டுக்குள் பிரதானமாக பசீரே ஆதரவாளர்களால் நிறுத்தப்படுவார்.

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, தமக்கு அமைச்சுப் பதவிகளை தலைவர் ஹக்கீம் பெற்றுத் தரவில்லை என்கிற கடுப்பிலும், கவலையிலும் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. அவர்களை ஆற்றுப்படுத்துவதிலும் மு.கா. தலைவர் ஹக்கீம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அமைச்சுப் பதவி கிடைக்காத மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெஞ்சுக்குள் புகையும் தணல்களை அப்படியே விட்டு வைத்தால், ஒரு நாள் அது நெருப்பாக எரியும்…! நினைத்துப் பார்க்காதவற்றையெல்லாம் எரிக்கும்!!                                                                                                                                                       o

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும் இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)                                                                                                                                                                       

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s