காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தேடல்! 29 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 8:08 பிப

மப்றூக்
தேடலுள்ள வானொலியாளர்கள் எப்போதும் தம் நேயர்களை வியக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்!

இந்த – தேடல் என்பதை சிலர் பிழையாகவோ அல்லது தமக்குச் சாதகமாகவோ விளங்கி வைத்துள்ளார்கள். வானொலியில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரை மணி நேரம் முன்னராக வந்து, இணையத்தளத்திலோ அல்லது இந்திய சஞ்சிகைகளிலோ எதையாவது அவசர அவசரமாக உருவியெடுத்துக் கொண்டு போய்  பாடலின் இடையிடையே புதிய தகவல்களைச் சொல்வது போல் சொதப்பி விடுவதற்குப் பெயர் தேடல் அல்ல!

ஊடகத்துறையில் இருப்பவர்கள்கள் எப்பொழுதும் எதையாவது வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த வாசிப்பு என்பது இவர்களின் சாதரண பழக்கங்களில் ஒன்றாகவும் இருத்தல் வேண்டும்.

தனது நிகழ்ச்சியில் சொல்லி விட்டுப் போவதற்காக – எதையாவது அவசரக்குடுக்கைத் தனமாய் தேடுவதை விடவும், தான் – தேடித் தெரிந்தவைகளில் பொருத்தமானவைகளை தன்னுடைய நிகழ்ச்சிகளில் வழங்குகின்ற அறிவிப்பாளரே எப்போதும் நேயர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். தம்மை ஆச்சரியங்களில் ஆழ்த்துகின்ற அறிவிப்பாளர்களையே – நேயர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்!

ஒரு நாள் – நான் வானொலியில் நிகழ்ச்சியொன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, கலையகத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. ஹலோ சொன்னேன். மறுமுனையில் ஒரு நேயர்! அவருக்கும், அவருடைய நண்பருக்கும் ஒரு சந்தேகமாம். அதாவது, குறிப்பிட்ட ஒரு திரைப்படத்துக்கு (என்ன திரைப்படம் என்று இப்போது எனக்கு நினைவிலில்லை) இசையமைப்பாளர் யார் என்பதே அந்தச் சந்தேகம். இருவரும் ஆளுக்கொரு இசையமைப்பாளரின் பெயரைச் சொல்ல – இருவருக்குமிடையில் பந்தயம் பிடிக்கும் நிலை உருவாயிற்று! “எனவேதான் சரியான விடையைத் தெரிந்து கொள்வதற்காக உங்களைத் தொடர்பு கொண்டோம் அண்ணா” என்றார் அந்த நேயர்!

இதில் பகிடி என்னவென்றால், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை நானும் மறந்து விட்டேன். ஆனால், அதை நான் அந்த நேயரிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! அவருடன் பேசியவாறே கலையகத்திலிருக்கும் கணணியில் குறிப்பிட்ட படத்தின் பெயரை ‘டைப்’ செய்தேன். அந்தத் திரைப்படத்திலுள்ள பாடல்கள், பாடியவர்கள் மற்றும் இசையமைப்பாளர் என்று அத்தனை தகவல்களும் திரையில் வந்து நின்றன. (சூரியனிலுள்ள அத்தனை பாடல்களையும் சில காலங்களுக்கு முன்னர் கணணி மயப்படுத்தியுள்ளதால், இவ்வாறான வசதி அங்கு உள்ளது). நேயரிடம் விடையைச் சொன்னேன். அது அவர் கூறிய விடைதானாம் என்பதால் அவருக்கு இரட்டிப்புச் சந்தோசம்!

உண்மையாகச் சொன்னால், ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று வெளியிலுள்ளவர்கள் நம்புகின்றார்கள். அவர்களுடைய நம்பிக்கையின் அரைவாசியளவாவது – நாம் இருக்க வேண்டுமல்லவா!

சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் சொல்லும் அதிகமான தகவல்கள் பழைய ஆனந்த விகடனிலோ அல்லது குமுதத்திலோ சுட்டெடுத்தவைகளாகவேயிருக்கும். இதை இவர்கள் சொல்லும் போது, வானொலியைக் கேட்கும் விசயமுள்ள நேயர்கள் இந்த அறிவிப்பாளர்களின் பெயரைச் சொல்லி – வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமுண்டு (இப்படி ஒரு நேயர் திட்டியதை ஒரு சமயம் நான் நேரடியாகக் கண்டிருக்கின்றேன்). இரண்டு – மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விடயத்தை, ஏதோ புதிய விடயமொன்றைச் சொல்வது போல் பில்டப்பெல்லாம் கொடுத்துச் சொன்னால் – நேயர்கள் திட்டாமல், வேறு என்னதான் செய்வார்கள்!

ஒரு தடவை சூரியனின் பொறுப்பு வாய்ந்த அறிவிப்பாளரொருவர் தனது நிகழ்ச்சியில் தகவலொன்றைச் சொன்னார். அதாவது, திருகோணமலை இந்துக் கோயிலொன்றிலிருந்து காணாமல் போன சிலையொன்று இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீளப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் திருகோணமலை கோயில் நிருவாகத்தார் ஈடுபட்டு வருவருவதாகவும் அவர் கூறினார். இது பழையதொரு செய்தியாகும். பத்திரிகைகளிலேயே இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அது பிரசுரமாகியிருந்தது. இது தவிர, சூரியனின் பிரதான செய்தியறிக்கையிலும் இவ்விடயம் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது. இவ்வாறானதொரு தகவலைத்தான் பொறுப்பு வாய்ந்த அந்த அறிவிப்பாளர் – புதிய தகவல் போல ஒப்புவித்துக் கொண்டிருந்தார்!

வீட்டிலிருந்தவாறே இந்த கூத்தை நான் கேட்டுக் கொண்டிந்தேன்! பிற்பகல் அலுவலகம் சென்றபோது, அந்த அறிவிப்பாளரிடம் குறித்த விடயத்தைக் கூறி, அது பழையதொரு தகவலென்றும் – சூரியனின் செய்தியறிக்கையிலேயே இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் கூறினேன். ஆனால், அந்த அறிவிப்பாளரோ “அப்படியா” என்று ஆச்சரியமாகக் கேட்டார். அந்த தகவல் பற்றி குறித்த அறிவிப்பாளர் ஒரு வீதம் கூட அறிந்திருக்கவில்லை என்று அவரின் பேச்சிலிருந்து புரிய முடிந்தது.

பிறகு விசாரித்த போது ஒரு விடயம் தெரியவந்தது. அந்த பொறுப்பு வாய்ந்த அறிவிப்பாளர், தனது நிகழ்ச்சியில் சொல்வதற்கு – தகவல்கள் எதையாவது தேடித்தருமாறு அங்குள்ள அலுவலகக் கடமைகளைப் புரியும் பெண்மணி ஒருவரிடம் கூறி வைத்திருந்தாராம். ஆனால் அந்தப் பெண்ணுக்குப் இது பிடிக்கவில்லை. அது அவரின் கடமையும் அல்ல! அதுதான் – ஏனோ தானோ என்ற மனப்பான்மையில் இணையத்தளத்தில் தேடி, தனது கண்ணில் பட்ட தகவல்களையெல்லாம் சேகரித்து – இந்த அறிவிப்பாளரிடம் கொடுத்திருக்கின்றார். அதை அப்படியே வாங்கிக் கொண்டுபோய் அறிவிப்பாளரும் தன்னுடைய நிகழ்ச்சியில் ஒப்புவித்து விட்டார்!

ஆனால், ஊடகத்துறையைப் பொறுத்தவரை இது மிகவும் பொறுப்புணர்வற்றதும், பொடுபோக்குத்தனம் நிறைந்ததுமானதொரு செயலாகும்!

இப்படித்தான் ஒரு தடவை – கனிஷ்ட அறிவிப்பாளரொருவர் பகல் வேளையில் நிகழ்ச்சியொன்றைச் செய்து கொண்டிருந்தார். அது – நேயர்களைத் தொலைபேசியில் இணைத்து அவர்கள் விரும்புகின்ற பாடல்களை ஒலிபரப்பும் நேரடி நிகழ்ச்சி! அதில் இணைந்து கொண்ட நேயரொருவர் – குறித்த அறிவிப்பாளரிடம் – தனக்கு ‘கண்ணதாஸன் காரக்குடி’ என்கின்ற பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார். அது  ‘அஞ்சாதே’ என்கின்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். அப்போது அந்தப்படம் வந்த புதிது! ஆனால், இந்தப் பாடல் பற்றியோ, பாடல் இடம்பெற்ற படம் பற்றியோ எதுவும் அறிந்திராத அந்த அறிவிப்பாளர் நேயருக்குக் கூறிய பதில்தான் மிகவும் கோமளித்தனமானது!

அதாவது, “கண்ணதாஸன் பாடல்கள் வேண்டுமென்றால் நீங்கள் நேற்றைய காற்று நிகழ்ச்சியில்தான் கேட்க வேண்டும்” என்று சொல்லியிருக்கின்றார் நமது அறிவிப்பாளர்! நேற்றைய காற்று என்பது – பழைய, இடைக்காலப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சியென்பதால்தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார். ஆனால், இதை வெளியில் கேட்டுக் கொண்டிருந்த நேயர்கள் – குறித்த அறிவிப்பாளரைக் கேலி செய்து சிரித்திருப்பார்கள்.

ஒரு வானொலி அறிவிப்பாளர் எப்போதும் தன்னை இற்றைப்படுத்திக் (Update) கொண்டேயிருக்க வேண்டும்! புதுப்பாடல்கள் வெளிவந்தால் அவை இடம்பெற்ற திரைப்படம், பாடலைப் பாடியோர், படத்துக்கு இசையமைத்தவர் போன்ற அனைத்துத் தகவல்களையும் உடனடியாகத் தேடித் தெரிந்து கொள்தல் வேண்டும். அப்படி அறிந்து வைத்திருந்தால் அந்த அறிவிப்பாளருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது!

இதுபோலவே, தனக்குச் சந்தேகமுள்ள எந்தவொரு விடயத்தைப் பற்றியும் ஒரு அறிவிப்பாளர் வானொலியில் பேசக்கூடாது. ‘When you doubt leave it out’ என்று – நடா அண்ணா இதை எமக்கு அடிக்கடி ஞாகப்படுத்துவார். சில அறிவிப்பாளர்கள் இப்பொழுதும் ஒருசில தகவல்களைக் கூறிவிட்டு “என்று நினைக்கின்றேன்” என்பார்கள்! என்னைக் கேட்டால், இது ஒலிபரப்பில் தவிர்க்க வேண்டியதொரு வாக்கியம் என்றுதான் சொல்வேன்!

தான் – வானொலியில் கூறப்போகும் தகவலானது – சரிதானா என்கிற சந்தேகமொன்று அறிவிப்பாளரொருவருக்கு ஏற்பட்டு விடுமாயின், அதைக் கூறாமல் விடுவதே புத்திசாலித்தனமாகும். வானொலி விதிமுறையும் அதுவாகத்தான் இருக்கிறது. சரியென்று உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே ஓர் அறிவிப்பாளர் வானொலியில் கூற வேண்டும். அதை விடுத்து, தாம் – சரியென்று நினைப்பதையெல்லாம் அறிவிப்பாளர்கள் வானொலியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. சில வேளைகளில் அந்தத் தகவல் பிழையாகவும் இருந்துவிடக் கூடும்!

ஆனால், இந்த அடிப்படை விடயங்களையெல்லாம் இன்று எத்தனைபேர் விளங்கி வைத்துக் கொண்டு ஒலிபெருக்கி முன் உட்கார்கின்றார்கள் என்று கேட்டால், அதற்கான விடை கவலையளிப்பதாகவே இருக்கும். வெறுமனே வானொலியில் அர்த்தமேயில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் இன்று தம்மை ‘உலக மகா’ ஒலிபரப்பாளர்களாக எண்ணிக் கொள்கின்றார்கள், சிலர் சொல்லிக் கொள்கின்றார்கள்!

இன்னொருபுறம், ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் – யானை மாலையிட்டதால் கோயிலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண்னொருத்தி அரசியாக முடி சூட்டப்பட்டது போல், விஷயமேயில்லாத ஒரு சில அறிவிப்பாளர்கள் –  பதவி நாற்காலிகளுக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள். இதன் விளைவு – இவர்களின் விருப்பம் போல் வானொலிகளில் ‘புதுமை’ என்ற பெயரில் இம்சைகள் இடம்பெறத் தொடங்குகின்றன!

வானொலிகள் மீதான ஆர்வம் மக்களிடம் இன்று கணிசமான அளவு குறைவடைந்து போயுள்ளமைக்கும், படித்தவர்கள் – இப்போதைய ஒலிபரப்புத்துறை பற்றி மட்டமாக மதிப்பீடு செய்து வைத்திருப்பதற்கும் மிக முக்கிய காரணங்கள் – இவைதான்!

நமது இன்றைய ஒலிபரப்பாளர்கள் – ஒன்றை மட்டும் மனதில் பதிந்து கொள்தல் வேண்டும். அதாகப்பட்டது, ” ‘A’ எனும் திரைப்படத்தில், ‘B’ பாடிய பாடலை ‘C’ மற்றும் ‘D” ஆகியோர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்” என்று கூறுவதற்கு – ஓர் அறிவிப்பாளர் தேவையேயில்லை. இதை – வீதியோரத்தில் அதிஷ்டலாபச் சீட்டுகளை ஒலிபெருக்கியில் கூவி விற்றுக் கொண்டிருக்கும் ஒருவரே மிக அழகாகச் சொல்லி விடுவார்!

ஒலிபரப்புத்துறை என்பது பரந்து விரிந்ததொரு கடல்! ஆனால், இன்றைய அறிவிப்பாளர்களில் பலர், கடலில் நீந்துவதாக நினைத்துக் கொண்டு, வெறுமனே – கரையில் கைகளை அடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும்!

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

3 Responses to “தேடல்!”

 1. kajugaran Says:

  now what you say, about shakthifm

 2. Thaha Muzammil Says:

  திடீர் ஞாபகம்,
  வானொலியிலா அல்லது தொலை காட்சியிலா என்பதை மறந்துவிட்டேன்.

  ஒரு பொருளுக்கான ஆங்கில சொல்லை கண்டுபிடிக்கும் போட்டி.

  பொருள்: பாதாம் பருப்பு.

  பலர் விடையளித்தனர். தவறு, தவறு என்று சொல்லிக்கொண்டே போனார்.

  இன்னுமொரு நேயர் “ஆமன்” என்று விடையளித்தார். அறிவிப்பாளர் அதற்கும் தவறு என்று சொல்லிவிட்டு, “எல்மொண்ட் ” என்பதே சரியான விடை என்று பதில் அளித்தார்.

  “Almond” என்பதற்கான சரியான ஆங்கில உச்சரிப்பு ஆமன் என்பதே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s