காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நிகழ்ச்சி என்றொரு சூழ்ச்சி! 27 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:52 முப

மப்றூக்

வானொலிகளில் பாடல்களை போட்டி போட்டுக் கொண்டு – முந்திக் கொடுக்கும் கலாசாரம் தனியார் வானொலிகளின் வருகைக்குப் பின்னரே ஆரம்பமானது. “இந்தப் பாடலை முந்திக் கொண்டு வழங்கியது உங்கள் முதற்தர வானொலியான நாங்கள்தான்” என்று கூக்குரலிடுவதில், ஆகக்குறைந்தது இரண்டு புதிய நேயர்களைக் கூட இவர்களால் சேர்க்க முடிவதில்லை. வேண்டுமென்றால், இந்தக் கலாசாரத்தால் வானொலிகள் தமது அடிமட்ட நேயர்களை உசுப்பேத்தலாம். அத்தோடு தமது முதுகினைத் தாமே சொறிந்தும் கொள்ளலாம். அவ்வளவுதான்!

சொன்னால் நம்ப மாட்டீர்கள் – வானொலிகளின் முதலாளிமார் “ஏன் இந்தப் பாடலை நீங்கள் முந்திக் கொண்டு ஒலிபரப்பவில்லை” என்று விளையாட்டுக்குக் கூட அறிவிப்பாளர்களிடமோ, நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியிடமோ கேட்பதில்லை. இந்தச் சின்னப்புள்ளத்தனமெல்லாம் நம்மவர்கள் படுத்தும் பாடுகள்தான்!

சூரியனின் ஆரம்பக் காலத்தில் ‘பாடல்களை முந்திக் கொடுக்கும்’ கலாசாரத்தின் உச்ச போதைக்குள் நானும் மூழ்கிப் போயிருந்தேன். இதற்காக ஓடித் திரிந்ததையும், அலைந்ததையும் நினைக்கையில் இப்போது வெட்கமாகக் கூட இருக்கிறது.

பாடல்களை முந்திக் கொடுக்கும் வானொலிகளில் மிக அதிகமானவை ஒலிபரப்பும் இறுவட்டுக்கள் – அனேகமாக காப்புரிமையை மீறி எடுக்கப்பட்ட திருட்டுத்தனமானவைகளாகவே இருக்கின்றன. காப்புரிமையுடைய அசல் இறுவட்டுக்களில் இருந்து பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்றால் இரண்டொரு நாட்கள் தாமதித்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை.

நமது தனியார் வானொலிகளுக்கு இவ்வாறான திருட்டு இறுவட்டுக்களை வழங்குவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கின்றது. இவர்களிடமிருந்து இறுவட்டுக்களைப் பெறும் வானொலிகள், குறித்த பாடல்களை முந்திக் கொண்டு வழங்கும் போது – அந்தக் கும்பலைச் சேர்ந்த நபர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும். இவர்களுக்கிடையிலான ‘டீல்’ இவ்வளவுதான்!

இலங்கையில் திரைப்படங்களை வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்பீர்கள் (இப்போது இந்த நிறுவனம் திரைப்படங்களையே தயாரித்து வருகின்றது). அனேகமாக – முன்னணி கதாநாயகர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களின் படங்களைத்தான் ஐங்கரன் நிறுவனம் வெளியிடுவது வழமை! இவ்வாறு – ஐங்கரன் வெளியிடுகின்ற திரைப்படங்களின் பாடல்களை – முதலில் ஒலிபரப்பும் உரிமையினை அந்த நிறுவனம் சில காலமாக சக்கி எப்.எம். வானொலிக்கு வழங்கி வந்தது!

இதில் என்ன ஆச்சரியமென்றால், சக்திக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருந்த போதும், ஐங்கரன் வெளியிட்ட பல திரைப்படங்களின் பாடல்களை சூரியன் எப்.எம். – திருட்டு இறுவட்டுக்கள் மூலமாக முந்திக் கொண்டு ஒலிபரப்பியிருக்கின்றது. இந்த வேளைகளில் ஐங்கரன் நிறுவனத்தின் சார்பானவர்கள் சூரியன் தரப்பாரைத் தொடர்பு கொண்டு ‘தாம் தூம்’ என்று குதிப்பார்கள். தாங்கள் வெளியிடும் திரைப்படப் பாடல்களை இவ்வாறு காப்புரிமையை மீறி ஒலிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று சத்தம் போடுவார்கள். ஆனாலும், ஐங்கரன் வெளியிடும் அடுத்த படப் பாடல்களையும் சூரியன்தான் முந்திக் கொண்டு ஒலிபரப்பும்!

இப்படித்தான், ஒரு தடைவ ஐங்கரன் நிறுவனம் வெளியிடுவதற்கு உரிமை பெற்றிருந்த ‘அந்நியன்’ திரைப்படப் பாடல்களை சூரியன் எப்.எம். முந்திக் கொண்டு ஒலிபரப்பியதோடு, நாங்கள்தான் ஒலிபரப்பினோம் என்று சட்டைக் கொலரை வேறு தூக்கிப் போட்டுக் கொண்டது. இதனால், கடுப்பாகிப் போன ஐங்கரன் நிறுவனத் தரப்பார் சூரியன் எப்.எம்.  நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு எகிறிக் குதித்தார்கள்.

உண்மையாகவே,  நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பேசியிருந்தால் விடயம் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால், நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியோ ஐங்கரன் தரப்பாருடன் தனது மேதாவித்தனத்தைக் காட்டுவதாக நினைத்து தேவையில்லாமல் பேசப் போனார். விளைவு, – சூரியன் வானொலி நிறுவனத்துக்கெதிராக ஐங்கரன் தரப்பார் நீதிமன்றம் வரை சென்று விட்டார்கள்! இது ஊடகங்களிலெல்லாம் அப்போது பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டது. குறிப்பாக, மகாராஜா நிறுவனத்தாரின் சக்தி வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் இந்த விடயத்தை ஊதிப் பெரிதாக்கின!

இந்த இடத்தில் சூரியன் வானொலி நிறுவனத்தை நடத்துகின்ற ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரேய்னோ சில்வாவைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். (இவர்தான் எங்களின் முதலாளி என்று ஏற்கனவே கூறியிருக்கின்றேன்) ரேய்னோ மிகவும் ஆளுமையுள்ள ஓர் இளைஞர். இவரின் தீர்க்கமான முடிவுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. அதிரடியான முடிவுகளை எடுத்து அசத்துவதிலும் மனிதர் கெட்டிக்காரர்!

உண்மையைச் சொன்னாhல், ஐங்கரன் நிறுவனத்தார் ஒரு பாடலை ஒலிபரப்பியதற்காக இப்படி நீதிமன்றம் வரை சென்றமையானது, எங்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் ரேய்னோ சில்வாவை ஆத்திரப்படுத்தி விட்டது. மட்டுமல்லாமல்லாமல் சூரியனுக்கு விடுக்கப்பட்டதொரு சவாலாகவே இதை நாங்கள் கருதினோம். இந்த வேளையில்தான் ஐங்கரன் நிறுவனத்தாரை பழி தீர்ப்பதற்காகவென்றே – ‘டொப் பைவ்’ என்கிற திரைப்படப் பட்டியல் நிகழ்சியொன்று பற்றி நான் யோசிக்கத் தொடங்கினேன்!

உதாரணமாக, இந்தியாவின் சன் ரீ.வி. நிறுவனம் ‘டொப் ரென்’ என்கிற நிகழ்சியொன்றை நடத்துகின்றது நமக்கெல்லாம் தெரியும். அந்த நிகழ்சியில் சன்.ரீ.வி. – பத்துத் திரைப்படங்களை தரவரிசைப் படுத்தும். அந்தத் தர வரிசைதான் அனேகமாக குறித்த படங்களின் தலைவிதியையே தீர்மானிக்கும். சிலவேளைகளில், தமக்குப் பிடிக்காதவர்களின் நல்ல திரைப்படங்களைக் கூட, சன்.ரீ.வி. பாதாளத்துக்குள் வீழ்த்தியிருக்கின்றது. சிலசமயம் சாதாரண படங்களையே உச்சத்துக்குக்குக் கொண்டு சென்று, அதற்கு அமோக வசூல் கிடைக்க வழிவகைகளையும் செய்திருக்கின்றது. சன்.ரீ.வி.யின் ஊடக பலம்தான் இதற்குக் காரணம். சன்.ரீ.வி. சொன்னால் மக்கள் அங்கு நம்புகின்றார்கள்!

சன்.ரீ.வி.யின் இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து வானொலியில் திரைப்படங்களை வரிசைப்படுத்தும் நிகழ்சியொன்றைச் செய்வது. அதில் இலங்கையில் திரையிடப்படுகின்ற 05 படங்களை எடுத்து, அவைகளை விமர்சித்துத் தரவரிசைப்படுத்துவது. அப்போது பட்டியலுக்குள் ஐங்கரன் வெளியிடும் திரைப்படங்கள் சிக்கினால், அவைகளை விமர்சனங்களால் அடித்து வீழ்த்தி தரவரிசையில் மோசமானதொரு இடத்துக்குக் கொண்டு செல்வது என்பதே எனது கணக்கில் இந்த நிகழ்ச்சியின் இலக்காகும்!

மேலும், இப்படியொரு நிகழ்ச்சி சூரியனின் கையில் இருந்தால், ஐங்கரன் தரப்பார் நீதிமன்றம் சென்றது போல், இலங்கையில் திரைப்படங்களை வெளியிடுவோர் எதிர்காலத்தில் சூரியனோடு முட்டி மோதவெல்லாம் வர மாட்டார்கள். சிலவேளை அவர்கள் துள்ளினால், அடக்குவதற்கு இந்த நிகழ்ச்சியை ஆயுதமாக உபயோகிக்கலாமல்லவா!

எனது மூளைக்குள் உதித்த இந்த ‘நரித்தனமான’ நிகழ்ச்சி பற்றி, சூரியனின் நிகழ்ச்சி பொறுப்பதிகாரியிடம் சொன்னேன். சந்தோசத்தை அவரால் அடக்க முடியவில்லை. நான் வடிவமைத்திருந்த அந்த நிகழ்ச்சியை எப்படிச் செய்வது என்பது பற்றி அவர் முழுமையாக விபரிக்கச் சொன்னார். விபரித்தேன். இப்போதே எம்.டி. (முகாமைத்துவப் பணிப்பாளர்) யிடம் சென்று இந்நிகழ்ச்சியை செய்வதற்கான அனுமதியைக் கேட்கப் போவதாகச் சொன்னார். நிகழ்சி பொறுப்பதிகாரியின் இந்த வேகத்துக்குக் காரணம், ஐங்கரனின் நீதிமன்ற விவகாரத்தால் – அதிகமாக அவமானப்பட்டுப் போனவர் இவர்தான். அதனால், ஐங்கரனைப் பழி தீர்க்க வேண்டுமென்று இவர் தனிப்பட்ட ரீதியிலும் குறியாக இருந்தார்.

நிகழ்ச்சிப் பொறுப்பாளரும், நானும் புதிய நிகழ்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்போது, எங்கள் பக்கமாக எம்.டி. வந்தார்! மரியாதைக்காக எழுந்து நின்றோம். ஏன்ன விடயம் என்று கேட்டார். நான் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி பற்றிக் கூறினோம். அதற்கான அனுமதியைக் கேட்டோம். எம்.டி. மாற்றுக் கதைகள் எதுவும் பேசவில்லை. உடனடியாக நிகழ்ச்சியை ஆரம்பியுங்கள் என்று சொல்லிச் சென்று விட்டார்!

சாதாரணமாக புதியதொரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதென்றால், அதுபற்றி எம்.டி.க்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும். அந்தக் கோரிக்கையினை அவர் சில வாரங்களோ, மாதங்களோ தனது மேசையில் வைத்திருந்து கடைசியில்தான் அதற்கான முடிவைத் தருவார்! முடிவு என்றால் அனுமதி கிடைக்கும் என்று அர்த்தமல்ல. பலவேளைகளில் கிடைக்காமலும் போயிருக்கின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சி விடயத்தில் எம்.டி. இப்படி நடந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

புதிய நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செய்வதாக முடிவெடுத்தோம். ஆனால், எனக்கு ஆகக்குறைந்தது ஒரு வாரமேனும் அவகாசம் தேவைப்பட்டது. காரணம், ஐந்து திரைப்படங்களையும் முதலில் பார்க்க வேண்டும். அவைகளுக்கு விமர்சனம் எழுத வேண்டும். பிறகு அவைகளை எனது குரலில் ஒலிப்பதிவு செய்து, எடிட் செய்ய வேண்டும். கடைசியில் விமர்சனங்களுக்கிடையில் திரைப்படங்களின் ஒலி வடிவத்தை இணைத்து, தேவையான இடங்களில் இசையைக் கலந்து எடுக்க வேண்டும். இப்படி ஐந்து படங்களுக்கும் செய்ய வேண்டும். மட்டுமன்றி, முதல் நிகழ்ச்சி என்பதால், மிகத் தீவிர கவனத்தோடு அதைச் செய்ய வேண்டும். இதற்கு ஆகக்குறைந்தது ஒரு வாரமேனும் தேவைப்படும்!

ஆனால், இதுபற்றியெல்லாம் சூரியனின் நிகழ்ச்சி பொறுப்பதிகாரி யோசிக்கவுமில்லை, அலட்டிக் கொள்ளவுமில்லை. அவருக்கு உடனடியாக நிகழ்சியை ஆரம்பிக்க வேண்டும். பொறுப்பதிகாரியிடம் இந்த நிகழ்ச்சியின் காத்திரம் பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய பொறுப்புகள் பற்றியும் நிறைய விளங்கப்படுத்திய பிறகும், உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர் குறியாகவேயிருந்தார். இது எனக்கு ஒரு கட்டத்தில் கோபத்தை ஏற்படுத்தி விடவே, என்னால் நிகழ்ச்சியை செய்ய முடியாது. தேவையென்றால் நீங்கள் யாராவது செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். உடனடியாக, பொறுப்பதிகாரி வழிக்கு வந்தார். சரி, ஆகக்குறைந்தது அந்த நிகழ்ச்சியின் முன் அறிவித்தல் விளம்பரத்தையாவது செய்து ஒலிபரப்பு என்றார். அதுகூட எனக்கு விருப்பமில்லை. ஒரு வாரத்துக்கு முன்பே அதுபற்றி நாம் விளம்பரம் செய்தால், எதிர்த்தரப்பு வானொலிகள் நம்மை முந்திக் கொண்டு, நாம் திட்டமிட்டு வைத்துள்ள நிகழ்ச்சிபோல் ஒன்றைச் செய்து விடவும் கூடும். ஆனாலும், பொறுப்பதிகாரியின் தொல்லை தாங்க முடியாததால் ஒரு நிகழ்ச்சி முன் அறிவிப்பு விளம்பரத்தைச் செய்து ஒலிபரப்பினேன்!

குறித்த எங்கள் நிகழ்ச்சியின் விளம்பரத்தைக் கேட்டதும் சக்தி எப்.எம். காரர்கள் உஷாராகி விட்டார்கள். அந்த நிகழ்ச்சியின் இலக்கு என்ன என்பதை அவர்கள் இலகுவாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போது, ஐங்கரனின் வெளியீடாக இலங்கையில் அந்நியன் திரைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. சூரியனின் புதிய நிகழ்ச்சி அந்நியன் படத்தை நிச்சயமாகக் குறிவைக்கும் என்று சக்தித் தரப்பார் புரிந்து கொண்டார்கள்.

இந்த ஆபத்திலிருந்து ஐங்கரன் நிறுவனத்தாரையும், அந்நியன் படத்தையும் காப்பாற்றுவதற்காக சக்தி வானொலிக்காரர்கள் மாற்று வழி பற்றி யோசித்திருக்க வேண்டும். விளைவு, நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை சக்தி எப்.எம். சனிக்கிழமை காலையே செய்யப் போவதாக அறிவித்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘டொப் படம்’! அவர்களின் அந்த நிகழ்ச்சி முன் அறிவித்தல் விளம்பரத்தில், சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலு கூறும் ”மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு” என்கிற வசனத்தை அவர்கள் திட்டமிட்டுச் சேர்த்திருந்தார்கள்! (என்னை கிண்டல் செய்வதற்காகத்தான்)

இதில் கொடுமை என்ன தெரியுமா? சூரியனிலிருந்து சக்திக்கும் – சக்தியிலிருந்து சூரியனுக்கும் தகவல்கள் கொடுக்கும் உளவாளிகள் சிலர் இரண்டு தரப்பிலும் இருந்தார்கள். இவர்களின் மூலமாகத்தான் எனது புதிய நிகழ்ச்சியின் வடிவம் கசிந்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருந்தது!

சக்தி வானொலி இப்படி எனது நிகழ்ச்சியை முந்திக் கொண்டு, அதே மாதிரியானதொரு நிகழ்ச்சியைச் செய்யவிருந்தமை குறித்து எனது கோபத்தை சூரியன் நிகழ்ச்சி பொறுப்பதிகாரியிடம் வெளிப்டுத்தினேன். முந்திரிக் கொட்டைத்தனமாக – நிகழ்ச்சி முன் அறிவிப்பு விளம்பரத்தை நாம் ஒலிபரப்பியதால்தான், அவர்கள் நம்மை முந்திக் கொண்டார்கள் என்றும், இந்த அவசரத்துக்கு முகாமையாளரே காரணம் என்றும் கடுப்பானேன்! பொறுப்பதிகாரி சமாளித்துக் கொண்டார்!

சனிக்கிழமை சக்தி எப்.எம்.மின் அந்த நிகழ்ச்சியைக் கேட்டேன். விடயங்கள் நாம் யோசித்து வைத்தது போலிருந்தன. ஆனால், அவர்களின் விமர்சனம் காத்திரமாக அமையவில்லை. மேலும், அவர்கள் நேரடி நிகழ்ச்சியாக அதைச் செய்ததால், நிகழ்ச்சியில் நிறையத் தொய்வுகளும், சுவாரசியமற்ற தன்மைகளும் நிறைந்திருந்தன. அவர்களின் நிகழ்ச்சியில் அந்நியன் திரைப்படம் முதலாமிடத்துக்கு வந்திருந்தது!

மறுநாள் எனது நிகழ்ச்சி! மிகவும் கவனமெடுத்துத் தயாரிப்பு வேலைகளைச் செய்திருந்தேன். எனது மனச்சாட்சிப்படி அன்றைய நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. நிறையப் பாராட்டுக்கள் கிடைத்தன. தமிழ் வானொலித்துறை வரலாற்றில் – திரைப்படங்களை விமர்சித்து, அவைகளைத் தரவரிசைப் படுத்தும் முதல் முயற்சி என்று அந்த நிகழ்ச்சி பற்றிப் பலரும் கூறினார்கள். அன்றைய நிகழ்சியில் அந்நியன் படத்தை மிகக் காரசாரமாக விமர்சித்தேன். ஐந்து படங்களில் அந்நியனுக்கு மூன்றாமிடத்தையே வழங்கினேன்.

நிகழ்சியை முடித்து விட்டு கலையகத்தை விட்டு வெளியேறும் போது – அலுவலக தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்நியன் படத்தை மோசமாக விமர்சித்ததற்காகவும், மூன்றாமிடத்துக்குக் கொண்டு சென்றதற்காகவும் தொலைபேசி நபர் என்னைக் கடுமையாகத் திட்டினார். அச்சுறுத்தினார்.

அனேகமாக ஒவ்வொரு வாரமும், அந்த அச்சுறுத்தல் எனக்கு வந்து கொண்டேயிருந்தது.

பிறகு தானாகவே அது நின்று போயிற்று!

இப்படியான அந்த நிகழ்ச்சியை ஒரு நிலையில் நான் – செய்வதற்கு மறுக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. காரணம், சூரியனின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி அவரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, திரைப்படங்களை வரிசைப்படுத்துமாறு என்னை வற்றுபுறுத்தினார். அது எனக்கு கடுமையான தொந்தரவினைத் தந்தது. அதனால், அந்த நிகழ்ச்சியிலிருந்து நான் விடுபடும் வழி முறைகள் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்!

சூரியனுக்கெதிராக ஐங்கரன் தரப்புத் தாக்கல் செய்த அந்த வழக்கு தோற்றுப் போனதென்பது வாசகர்களுக்கான கொசுறுத் தகவலாகும்!

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

2 Responses to “நிகழ்ச்சி என்றொரு சூழ்ச்சி!”

  1. Rinas.M Says:

    Innumoru puthinam theriyumoa,,, itha rauf nana than FB la link panni irukkar, enakke itha vaasikkumpoathu intha santhosam enda avarukk,, he he he heeeee

  2. “நம்மூரில் விழாக்களில் மேஜிக் வித்தை காட்டுபவர்கள் செய்ததையே செய்து காட்டி ……. என்று ஆரம்பிக்கும் விமர்சனம் அது இப்போதும் நினைவிருக்கின்றது அதையும் தாண்டி ஆரோக்யமான சினிமாவுக்கு என்று நீங்கள் உருவாக்கிய செக்மான்ட் ரொம்ப அருமை …..அதெல்லாம் வானொலியின் பொற்காலம் ….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s