காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கைப்புள்ள! 26 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 11:59 பிப

மப்றூக்

ந்தியத் தமிழ்ச் சினமாவின் இன்றுள்ள நகைச்சுவை நடிகர்களில் நான் மிகவும் ரசிப்பவர் வடிவேல்! சிரிக்க வைக்கும் அவருடைய உடல் மொழி அதற்குப் பிரதான காரணம்! சினமா என்பது ஒளியினை அடிப்படையாகக் கொண்டதொரு பொதுஜன ஊடகம். அங்கு ஒலியை விடவும், காட்சிகளே முக்கியம் பெறுகின்றன. அந்தவகையில் – வசனங்களேயில்லாமல் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்கச் செய்யும் அபூர்வமானதொரு நடிப்பு வடிவேலிடம் கொட்டிக் கிடக்கிறது.

அந்த வடிவேலுவை, நேர்காணக் கிடைத்த அனுபவம் அலாதியானது!

சூரியன் எப்.எம். அனுசரணையில் பிரம்மாண்டமானதொரு இசை நிகழ்ச்சி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்தியப்பாடகர்கள் பலர் அதில் பங்கேற்றார்கள். அந்த நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக வந்த வடிவேலுவைத்தான், வானொலியில் நேர்கண்டேன். நகைச்சுவை நடிகர் கிரேன் மனோகரும் வந்திருந்தார்.

வடிவேலுவை நேர்காணல் செய்யுமாறு இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அவரைப் பற்றிய போதுமான தகவல்கள் அப்போது என்னிடமிருக்கவில்லை. இணையத்தளங்களில் அலைந்தேன். சினமா தொடர்பான நண்பர்களுடன் பேசினேன், பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் நிறைய இந்தியச் சஞ்சிகைகளை வாங்கி வடிவேல் பற்றித் தேடினேன். ஒரு நல்ல நேர்காணலுக்காக – இப்படித்தான் உழைக்க வேண்டியிருந்தது!

அந்த நேர்காணலை – ஒரு பகல் வேளை, பரபரப்பான விளம்பரங்களுக்கிடையில் நேரடியாக நடத்த வேண்டியிருந்தது. இடையில், சக அறிவிப்பாளர்கள் சிலரும் மூக்கை நுழைத்தார்கள். ‘ஏனோ அது எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை! ஆனாலும், வடிவேலுவுடனான அந்த நேர்காணலில் நிறையச் சிரிப்பு இருந்தது.

எல்லாச் சினமாக்களையும் நான் பார்ப்பதில்லை. நான் பார்க்கக் கூடிய படங்களுக்கு சில அளவுகோல்களையும், தகுதிகளையும் வைத்திருக்கின்றேன். அந்தவகையில் – வடிவேல் நடித்த படமென்றால் பார்ப்பேன். சிலவேளைகளில் வலுவேலுவுக்காக மட்டுமே பார்ப்பதுமுண்டு!

வடிவேலின் மிக உச்சபட்ச நகைச்சுவையாக இன்றும் நான் ரசிப்பது ‘வின்னர்’ திரைப்படக் காட்சிகளை! அதில் வருகின்ற – வருத்தப்படாதோர் வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளயை நினைத்தால் மரணவீட்டிலும் சிரிப்பு வரும்! ‘வேணா… வலிக்குது… அழுதிடுவன்…’ – எத்தனை அற்புதமான நடிப்பு!

வடிவேலு, சூரியனுக்கு வந்தபோது கூடவே அவருடைய உதவியாளர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். கலையகத்துக்குள் நுழைவதற்காக வடிவேலு வெளியில் கழற்றிப் போட்ட அவருடைய சப்பாத்துக்களை மீண்டும் அணியும் போது கூட, அந்த உதவியாள்தான் குனிந்து காலில் மாட்டி விட்டார். இப்படி கோமாளித்தனமான ஒரு சில பந்தாக்களைத் தவிர்த்துப் பார்த்தால், வடிவேலு மிக சுவாரசியமான மனிதர். மற்றவர்களுடன் பழகும் போது இவ்வாறான பந்தாக்கள் எதையும் நான் காணவில்லை!

நாம் ஒருவரை நேர்காணும் போது – அவர் பற்றிய பல விடயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு, பொருத்தமான இடங்களில் அவைபற்றிப் பேச வேண்டும். அந்த நேர்காணலின் வெற்றிக்கு அது உதவியாக அமையும். ‘அட, நம்மைப் பற்றி இத்தனை விடயங்களை இவர் தெரிந்து வைத்திருக்கிறாரே…’ என்று நேர்காணப்படுபவர் மிகவும் சந்தோசமடைவார். அந்த சந்தோசம் – நமது நேர்காணலுக்கு அவரை மேலும் ஒத்துழைக்க வைக்கும். இது ஒருவகையான உளவியலும் கூட!

நரிக்குறவர் வேடத்தில் – தான் நடிக்க ஆசைப்படுவதாக மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் வடிவேலு இந்திய சஞ்சிகையொன்றில் கூறியிருந்ததாய் ஒரு ஞாபகம்! நேர்காணலின் போது, ”அந்த வேடத்தில் நீங்கள் நடிக்க ஆசைப்படுவதாக ஒருபோது கூறியிருந்தீர்களே அந்தப் பாத்திரம் மீது ஏன் அத்தனை ஈடுபாடு” என்று கேட்டு வைத்தேன். மனிதர் உற்சாகமாகி விட்டார். “என்னப் பத்தி இம்புட்டு விசயங்கள தெரிஞ்சு வெச்சிருக்கிறீங்களே” என்று தனது ஆச்சரியத்தை அந்த இடத்திலேயே வெளிப்படுத்தினார். நட்பானார்!

தமிழ் சினமா மிக அற்புதமான பலரை போதைக்குப் பலிகொடுத்திருக்கிறது. பி.யு. சின்னப்பா, கலைவாணர் என்.எஸ்.கே, அவரது மனைவி டி.ஏ. மதுரம், நடிகை சாவித்திரி, சந்திரபாபு, கண்ணதாஸன் என்று நீளும் இந்தப் பட்டியல்!

நான் – வடிவேலுவைச் சந்தித்த மிக அதிகமான வேளைகளில் அவர் போதையில்தான் இருந்தார். கூடவே, புகையிலையை சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு, அவரின் உதவியாளர் அடிக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். சுகததாஸ மண்டபத்தில் வைத்து நண்பன் வியாஸாவும் நானும் – வடிவேலுவுடன் போட்டோ ஒன்று எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு வடிவேலு மேடைக்குப் போய் விட்டார். ஆனால், அப்போதும் அவர் போதையில்தான் இருந்தார்.

அன்றைய மேடையில் எத்தனையோ பிரபலமான பாடகர்களெல்லாம் கலந்து கொண்டார்கள். ஆனால், வடிவேலு அரங்கத்துக்குள் நுழைந்ததும் ரசிகர்கள் செய்த கரகோசம் எவருக்கும் கிடைக்கவில்லை. நான் மலைத்துப் போய் விட்டேன். ஒரு சிரிப்பு நடிகன் மீது இத்தனை கிறக்கமா? ஒரு சிரிப்பு நடிகனுக்கு இத்தனை வரவேற்பா, இத்தனை ரசிகர்களா…? வடிவேலு என்கிற அந்த அற்புதமான நடிகனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றேன். கிட்டத்தட்ட அந்தக் கரகோசம் அடங்க ஒரு 10, 15 நிமிடங்கள் ஆயிற்று!

வடிவேலுவை நம்மில் அதிகமானோர் ஒரு சிரிப்பு நடிகனாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள் ஆனால், அவர் மிக அற்புதமானதொரு சீரியஸ் நடிகனும் கூட! தேவர் மகன் படத்தில் ஒற்றைக் கையுடன் வரும் கதாபாத்திரத்தில் வடிவேலு நம்மைக் கசிய வைப்பார்.

உணர்ச்சிகளை முகத்தில் மிக அற்புதமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்று எப்போதும் நான் சொல்லி ரசிப்பவர்கள் இருவர்! பெண்களில் – ஜோதிகா, ஆண்களில் வடிவேலு!

தலைநகர வாழ்க்கையின் போது – சில காலம் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். மனதளவிலும் சோர்வு நிலை. தனிமையின் வெறுமை. இவற்றிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காக நான் தேடித் தேடிப் பார்த்தவை வடிவேலுவின் நகைச்சுவைகள்தான். தமிழ் சினமாவுக்கு கிடைத்த மிக அற்புதமானதொரு நடிகர் வடிவேலு!

ஆனந்த விகடனில் வடிவேலு தொடரொன்று எழுதியிருந்தார். கிட்டத்தட்ட அதை ஒரு சுயசரிதை என்றும் சொல்லலாம். அந்தத் தொடர் பின்னர் ‘வடி வடி வேலு… வெடிவேலு!’ எனும் பெயரில் விகடன் பதிப்புப் புத்தகமாகவும் வந்தது. அதில் போதைப் பழக்கத்தைப் பற்றி அவர் இப்படிச் சொல்வார்:

“குடி குடியைக் கெடுக்கும்ங்கறது கரெக்டான பேச்சு. நம்மாளுக பல பேரு வானம் பூமி தெரியாம குடிச்சுப்புட்டு அப்படியே ரோட்ட அளக்கிற மாதிரி நடப்பாய்ங்க. பல நா எண்ணெயில பொரியற கோழி, மொளவாத் தூக்கலா முட்ட பாரோட்டானு ஒரு காட்டு காட்டிப்புட்டு, குப்புற அடிச்சிக் கொறட்ட வுட்டா போதும்னு இருக்காய்ங்க…

திடுதிப்புனு ஒரு நா ஒடம்பு வேலயக் காட்டும்ல. கனவுல சித்திரகுப்தன் வந்து சீட்டெழுதித் தார மாதிரியே பயந்து போயித் திரிவாய்ங்க. காலையில பாத்தா மதுரைக்கும் மெட்ராசுக்குமா வாக்கிங் போவாய்ங்க. அலோபதி, அம்பிகாபதினு அம்புட்டு பதிகளையுந் தேடி ஓடுவாய்ங்க. பஞ்சராகிப்போன காலத்துல அக்குபஞ்சர் தேடி அலைவாய்ங்க.

எதுக்கு இந்த செரமம்ணே? வாழற வரைக்கும் கட்டுப்பாடா இருந்துட்டம்னா கஷ்ட நஷ்டம் இல்ல. நானும் அப்பிடி இப்பிடி இருந்த பயதேன்! அதனால, இதெல்லாம் அட்வைஷு இல்ல… அனுபவம். ஒடம்பே கோயில்னு சொல்வாக. அப்பிடின்னா அத எம்புட்டுச் சுத்தமா வெச்சிருக்கணும். ஒடம்பு கோயில்னா, பூசாரி யாரு? நாமதேன்!”

வடிவேலு இன்னும் நடிக்கணும்!

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

One Response to “கைப்புள்ள!”

  1. //நரிக்குறவர் வேடத்தில் – தான் நடிக்க ஆசைப்படுவதாக மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் வடிவேலு இந்திய சஞ்சிகையொன்றில் கூறியிருந்ததாய் ஒரு ஞாபகம்! நேர்காணலின் போது, ”அந்த வேடத்தில் நீங்கள் நடிக்க ஆசைப்படுவதாக ஒருபோது கூறியிருந்தீர்களே அந்தப் பாத்திரம் மீது ஏன் அத்தனை ஈடுபாடு” என்று கேட்டு வைத்தேன். //

    இதுக்கு அவர் கொடுத்த பதில் என்ன?
    அத கடைசிவரை சொல்லவே இல்லையே…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s