காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கடவுளும் நானும்! 26 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 6:38 பிப

மப்றூக்

கடவுளைத் துயிலெழுப்பி விட்டு, நான் தூங்கிப் போன கதை!

ப்போது – நான் நள்ளிரவு நேர நிகழ்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். சூரியனில் ஒலிபரப்பாகும் இப்போதைய விடிய விடிய இரவுச் சூரியன் நிகழ்ச்சியின் அப்போதைய பெயர் வண்ணத் தடாகம்! இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தனியாளாக நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்.

இயல்பில் நான் கொஞ்சம் பொடுபோக்குச் சுபாவம் கொண்டவன். பங்சுவாலிட்டி (நேரந் தவறாமை) என்பதில் ரொம்ப வீக்! ஆனாலும், வானொலிக் காலங்களில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நான் பொடுபோக்காகச் செய்தது கிடையாது. காரணம், அது – நான் மிகவும் நேசித்த துறை, தொழில்!

இருந்தபோதும், எனது அறிவுக்கு அப்பாற்பட்டு சில தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படித்தான் ஒரு நாள் இரவு நேர நிகழ்ச்சி. அதிகாலை 5.00 மணிவரை செய்தாயிற்று. இன்னும், 01 மணித்தியாலம்தான் பாக்கி. 5.00 மணியிலிருந்து 6.00 மணிவரை சமயங்கள் சம்பந்தமான விடயங்கiயும், பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப வேண்டும். முதலில், சுப்ரபாதத்தை ஒலிபரப்பினேன்!

அந்த சுப்ரபாதம் சுமார் 25 நிமிட ஒலிபரப்பு நேரத்தையுடையது. 5.00 மணிக்கு ஆரம்பித்தால், நிறைவடைய 5.25 ஆகும். ஆக அந்த 25 நிமிடங்களுக்குள் வெளியில் கொஞ்சம் போய் தேனீர் பருகிவிட்டு வருவது வழக்கம்! ஆனால், அன்று எனக்கு தாங்க முடியாத தூக்கம். வெளியிலெல்லாம் செல்வதற்கு முடியவில்லை. எனவே, கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக – ஒலிவாங்கிக்கு முன்னால் இருந்த ‘கொன்சோலில்’ தலையை வைத்து சற்றுக் கண்களை மூடினேன்!

எவ்வளவு நேரம் கழிந்திருக்கும் என்று தெரியவில்லை.

திடீரென விழிப்பு வந்தது! யாரோ என்னைத் தட்டியெழுப்பியது போல் உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் எங்கள் அறிவிப்பாளர் கௌரி!

கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை. சற்று கண்களைக் கசக்கின் கொண்டேன். சுப்ரபாதம் நின்று போயிருந்தது. வானொலியில் எதுவும் ஒலிக்கவில்லை. என்னையறியாமல் நான் தூங்கிப் போயிருந்தமை புரிந்தது. நேரத்தைப் பார்த்தால், 5.40 என்றது கடிகாரம்!

சுப்ரபாதம் பாடும் போது – கடவுள் தூக்கம் விட்டெழுவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அந்தவகையில் பார்த்தால், துயில் விட்டெழுந்த கையோடு கடவுள், என்னைத் தூங்க வைத்து விட்டார் போலும்!

நான் பெரிதாகப் பதட்டமடையவில்லை! ஒலி வாங்கியை உயிர்ப்பித்தேன். “நேயர்கள் இனி – இஸ்லாமிய கீதம் கேட்கலாம்” என்று சொல்லி விட்டு, ஏற்கனவே தயாராக வைத்திருந்த பாடலை ஒலிக்க விட்டேன்! சேக் முகம்மது பாடினார்!

காலை நிகிழ்ச்சிக்காக வந்திருந்த கௌரிதான் தூங்கியிருந்த என்னைத் தட்டியெழுப்பினார். “என்ன ஆச்சு மப்றூக்” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் கௌரி. “தெரியவில்லை. கொஞ்சம் தூங்கி விட்டேன்” என்றேன்! ஆனால், எவ்வளவு நேரம் ஒலிபரப்பு நின்று போனது என்று கௌரி கேட்கவுமில்லை, நான் சொல்லவுமில்லை! கணக்குப்படி கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஒலிபரப்பு நின்று போயிருந்தது!

இது வெளியில் தெரிந்திருந்தால், கடுமையான தண்டனை கிடைத்திருக்கும்! ஆனால், கடைசி வரை யாரிடமும் கௌரி சொல்லவேயில்லை. சூரியனில் எனக்குக் கிடைத்த மிக நல்ல நண்பிகளில் கௌரியும் ஒருவர்!

நிகழ்ச்சியை முடித்து விடைபெறுவதற்கு இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னர், கலையகத் தொலைபேசிக்கு வந்த ஒரு அழைப்புக்கு “வணக்கம்” சொன்னேன்! மலையகத்திலிருந்து ஒரு நேயர் பேசினார். “என்ன அண்ணா சூரியன் கொஞ்ச நேரம் வேல செய்யல?” என்று கேட்டார்.

நான் என்ன சொல்லியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

” நிலையக் கோளாறு” என்றேன்!!!!

இன்னொரு தவறு இப்படி நடந்தது!

ரசித்துக் கேட்கக் கூடிய மிக நல்ல பாடல்கள் அன்றைய நேற்றைய காற்றில் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பாடல் ஒலிப்பதற்கு முன்னதாகவும், அந்தப் பாடல்களுக்குப் பொருத்தமாக சின்னச் சின்னதாய் சில வரிகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அடுத்ததாக ஒலிபரப்ப வேண்டிய பாடல் “இது இரவா பகலா” என்கிற நீலமலர்கள் திரைப்படப் பாடல். ஜேசுதாசும், வாணிஜெயராமும் பாடியிருந்தார்கள்.

இது – காதலனும், காதலியும் பாடுகின்ற பாடல்!

காதலி கேட்கிறாள் – “இது இரவா? பகலா?”
பதில்தானே கூற வேண்டும்.
காதலன் சொல்கிறான் – “நீ நிலவா? கதிரா?”

காதலி கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்கிறாள். கேட்ட கேள்விக்குப் பதில்களைச் சொல்லாமல், காதலனோ – பதிலுக்குக் கேள்விகளையே கேட்கின்றான். ஆனால், உண்மையிலேயே அவை கேள்விகளல்ல. அந்தக் கேள்ளிகளில் பதில்கள் ஒளிந்து இருந்தன. எப்படி? பார்ப்போமா?

அவள் கேட்டதென்ன? – “இது இரவா? பகலா?”
அவன் சொன்னதென்ன? – “நீ நிலவா? கதிரா?”
கதிர் என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு.

பெண்ணை நிலவாகத்தானே உவமிப்பார்கள்! அப்படியென்றால், காதலனின் கேள்விக்கு “நான் நிலவு” என்றுதானே அவள் கூற வேண்டும்.

நிலவு எப்போது வரும்? இரவில்!

என்ன புரிகிறதா?

இப்போது காதலியின் கேள்ளியை திரும்பவும் பாருங்கள்! “இது இரவா? பகலா?” அவன் என்ன சொல்கிறான் – “நீ நிலவா? கதிரா?”. அதாவது, பெண் என்றால் நிலவு, நிலவு வருவது இரவில் எனவே, “இது இரவு நேரம்” என்று அவன் கவிதைத்தனமாகப் பதில் சொல்கிறான்!

இந்தப் பாடலைக் கேட்கும் போது – இப்படித்தான் இதை நான் விளங்கிக் கொண்டேன்!

சரி, அவள் ஏன்  இதை அவனிடம் கேட்க வேண்டும்? அவளுக்கு மட்டும் இது இரவு என்று தெரியாதா? காதலனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

எனவே, அந்தப் பாடலை ஒலிக்க விடுவதற்கு முன்னதாக – இப்படி நான் கூறினேன்!

“தெரிந்தும் தெரியாததாய் திருட்டுத்தனம் செய்கிறாள்
அறிந்தும் அறியாததாய் அப்பாவி போல் நடிக்கிறாள்
இது – காதலின் சிறுபிள்ளைத்தனம்!”

சொல்லி விட்டு, பாடலை ஒலிக்கவிட்டேன்!

பாடலை ரசித்துக் கொண்டிருந்த நேரம், பிரத்தியேகத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது! “ஹலோ” சொன்னேன்! அடுத்த முனையில் சூரியனின் செய்தியாசிரியர் நடராஜா குருபரன். (அப்போது செய்தியாசிரியர். பிறகு செய்தி முகாமையாளரானார்).

“என்ன குரு அண்ணா”?
“உன்னுடன் அக்கா பேச வேணுமாம்!”.
‘அக்கா’ என்றுதான் அவருடைய மனைவியை நாங்கள் சொல்வோம்!
“கொடுங்கள்” என்றேன்!

இந்த இடத்தில் குரு அண்ணாவின் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் கூற வேண்டும். இவர் இடைக்காலப் பாடல்களின் ரசிகை! நேற்றைய காற்றைத் தவறாமல் கேட்பவர். திரைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் குறித்து நல்ல அறிவு கொண்டவர். இவையெல்லாம் – குரு அண்ணா சொல்லித்தான் எனக்குத் தெரியும்!

அந்தப் பாடலுக்கு நான் சொன்ன வரிகளைக் கேட்டதும் குரு அண்ணாவின் மனைவி புரிந்து கொண்டார் – நான் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று! காரணம், திரைப்படத்தில் வரும் நாயகி பார்வையற்றவர். அதனால்தான், “இது இரவா? பகலா?” என்று நாயகனைக் கேட்கிறார். பாடலுக்குத் தோன்றுவோர் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும்!

விபரங்களை – குரு அண்ணாவின் மனைவி கூறியதும், தவறைப் புரிந்து கொண்டேன். அது ‘காதலின் சிறுபிள்ளைத்தனமில்லை’!

அக்காவுக்கு நன்றி சொல்லி தொலைபேசியை வைக்கவும், பாடல் முடியவும் சரியாக இருந்தது!

சமாளிக்க வேண்டுமே!

ஒலிவாங்கியை உயிர்ப்பித்துப் பேசத் தொடங்கினேன்! “வானொலி என்பது ஓர் ஒலி ஊடகம். பாடலொன்றை  கேட்கும் போது – நாம் எதை உணர்கிறோமோ, அந்தப் பாடல் நமக்குள் எதை உணர்த்துகின்றதோ, அதற்கேற்பவே கவிதைத்தனமாகச் சில வரிகளை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்தேன். சிலவேளை, காட்சியோடு பார்க்கும் போது இந்த வரிகள் பாடல்களுக்குப் பொருத்தமற்றவைகளாகவும் இருக்கக் கூடும். எனவே, காதுகளால் ரசிக்கப்படும் பாடல்களுக்கு மட்டுமே இந்தக் கவிதை வரிகள் பொருந்தும்” என்றேன்.

சில நாட்களுக்குப் பின்னர் வந்த கடிதமொன்றில், அந்த நேற்றைய காற்றுப் பற்றி பெண் நேயர் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.

பாடலுக்கு விளக்கம் சொல்லப் போனதில் குப்புற நீங்கள் விழுந்ததும், மீசையில் பட்ட மண்ணை யாருக்கும் சொல்லாமல் துடைத்ததும்  எங்களுக்குத் தெரியாதா என்ன?’

பலவேளைகளில் – நம்மை விடவும் ரசிகர்கள் புத்திசாலிகளாக இருந்து தொலைத்து விடுகிறார்கள்!!

o

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

3 Responses to “கடவுளும் நானும்!”

 1. Rinas.M Says:

  நான் என்ன சொல்லியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்,,,,,,,,,,,, ha ha hah aaaa ungalayellam nambi,, naangalum evloa aniyayama irunthirukkam endu ninaikkaika, anbaa varuthu. antha kandy neyarukku en aazhntha anuthaapangal!!!

 2. ‘பாடலுக்கு விளக்கம் சொல்லப் போனதில் குப்புற நீங்கள் விழுந்ததும், மீசையில் பட்ட மண்ணை யாருக்கும் சொல்லாமல் துடைத்ததும் எங்களுக்குத் தெரியாதா என்ன?”

  he he he

  //பலவேளைகளில் – நம்மை விடவும் ரசிகர்கள் புத்திசாலிகளாக இருந்து தொலைத்து விடுகிறார்கள்!!//

  ஹா ஹா என்னைத்தானே சொல்கிறீர்கள்..?? ஓகே ஓகே
  உண்மைகள் தாமதமாகத்தான் வெளிச்சத்துக்கு வரும்

 3. m.sasny althaf Says:

  vrry intrstng….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s