காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நடராஜசிவம்! 25 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 12:23 முப

மப்றூக்

லக நாயகன், சர்வதேச ஒலிபரப்பாளர் மற்றும் உலக மகாகவி

என்கின்ற அடைமொழிகளோடு எனக்கு உடன்பாடுகளில்லை! உதாரணமாக பாரதியின் கவிப்புலமையில் எப்போதும் எனக்கு ஈர்ப்புகள் அதிகம்தான். ஆனாலும், அவரை ‘உலக மகாகவி’ என்றழைப்பதில் நான் முரண்பாடு கொள்வதுண்டு. காரணம், உலகில் இதுவரை வாழ்ந்த – வாழுகின்ற கவிஞர்கள் குறித்து, ஆகக்குறைந்தது தமிழ் மொழிக் கவிஞர்கள் குறித்தாவது முழுமையாக ஆராய்ந்து, அதன் பின்னர் பாரதியே முதன்மையானவர் எனும் முடிவொன்று பெறப்பட்டால், பின்னர் – நாம் அவரை  ‘உலக மகாகவி’ என அழைக்கலாம். எதிர்ப்பில்லை!

இருந்தபோதும், இந்தத் தர்க்கங்களையெல்லாம் மூட்டை கட்டி ஒருபுறம் வைத்து விட்டு, சமகால மூத்த தமிழ் மொழி ஒலிபரப்பாளர்களில் ‘உலக அறிவிப்பாளர்’ என்கிற அடைமொழிக்கு மிகப்பொருத்தமானவர் யார் என எனைக் கேட்டால், திருவாளர் சி. நடராஜசிவம் என்பது எனது பதிலாக அமையும்! சுமார் ஐந்தாறு வருடங்கள் மிக அருகிலிருந்து அவரை அவதானித்தவன் என்பதால் ஐயங்களின்றி என்னால் இதைக் கூற முடியும்.

ஓர் ஒலிபரப்பாளன் எல்லாத் துறைகளிலும் முடியுமானவரை அறிவு கொண்டிருந்தல் வேண்டும் என்பதற்கு நடா அண்ணா மிகப் பொருத்தமான உதாரணம். மட்டுமன்றி, பேசும் ஒவ்வொரு துறை குறித்தும் அவர் மிக ஆழமான அறிதல்களைக் கொண்டிருந்தார்.

சூரியனில் வேலை செய்த காலங்களில் நடா அண்ணாவுடன் பலதும் பத்தும் பேசுவோரில் நான் பிரதானமானவன். சில அறிவிப்பாளர்கள் – நடா என்றால் பயத்திலேயே ஒதுங்கிப் போய் விடுவார்கள். ஆனால், என்னைக் கண்டதுமே “என்ன புதினங்கள்…” என்று நடா –
ஆரம்பித்து விடுவார் பேச்சை!

நான் ஒரு பத்திரிகைக்காரன் என்பதால் அல்லது கவிதை இலக்கியம் என்று அடிக்கடி பேசிக் கொன்டு திரிவதால் நடா அண்ணா – என்னோடு அவ்வாறு கதைத்திருக்கக் கூடும் என்பது என் எண்ணம்!

இலக்கியம் மற்றும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கிய விமர்சனங்கள் போன்றவை குறித்துப் பேசுவதற்கு எனக்கும் அங்கு பெரிதாக எவரும் கிடைக்கவில்லை. தம்மைச் சிரேஷ்டமானவர்களாகக் கூறிக்கொண்டு வெறும் பத்தாம் பசலித்தனமாக பேசும் ஒருசிலர் அங்கிருந்த போதும், அவர்களோடு சமரசம் செய்து கொள்ள என்னால் கடைசிவரை இயலவேயில்லை! நடா அண்ணாவின் நிலையும் இதுபோலவே இருந்திருக்கலாம். அதனால், ‘இருப்பவர்களில் இவன் பரவாயில்லை’ என்று நினைத்தும், அவர் என்னுடன்  கதைத்திருக்கலாம். எவர் கண்டார்?!

ஒரு நாள் எங்கள் பேச்சு இலக்கியம் குறித்து ஆரம்பித்தது. இலக்கியம் கவிதைக்கு கிளை பரப்பியது. பின் – கவிஞர்கள் பற்றி விரிந்தது! நடா – இவைகள் குறித்து மிகச் சுவாரசியமாகப் பேசிக்கொண்டேயிருந்தார். நானும் பின் தொடர்ந்தேன். திடீரென பிரமிள் பற்றிய பேச்சை அவர் ஆரம்பித்த போது, நான் பின்வாங்கத் தொடங்கினேன்.

தருமு சிவராமு என்கிற பிரமிள் பற்றி அப்போது நான் மேலோட்டமாகவே அறிந்திருந்தேன். அவரின் சில கவிதைகளோடு மட்டுமே பரீட்சயமிருந்தது. ஆக, பிரமிள் பற்றியும் அவரின் கவிதைகள் பற்றியும் நடா பேசப்பேச… நான் வெறுமனே தலையாட்டிக் கொண்டிருந்தேன். வேறென்ன செய்ய?

இப்படி ஆயிரமாயிரம் அனுபவங்கள். மும்மொழிப் புலமை, தமிழ் சினமா மட்டுமன்றி சிங்களம் மற்றும் உலக மொழிச் சினமாக்கள் குறித்த தெரிதல்கள் என்று – நடா அண்ணா ஒரு கடல்!

இத்தனை இருந்தபோதும் ‘உலக அறிவிப்பாளர்’ எனும் அடைமொழி கொண்டு நடா அழைக்கப்படுவதில்லை! இதுகுறித்து – நான் அடிக்கடி ஆச்சரியம் கொள்வதுண்டு. நடா அண்ணா உலக அறிவிப்பாளர் எனும் அந்த அடைமொழியைப் பெறுவதற்குத் தவறவிட்ட தருணங்கள்தான் எவை?

ஒலி, ஒளிபரப்பாளர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். தமக்கென சில மாய உலகங்களையும், பிம்பங்களையும் அவர்கள் சிருஷ்டித்து வைத்துள்ளார்கள்!  அவர்களின் நடையுடை, பாவனை அனைத்தும் விசித்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். இயந்திரத்தனமான நாடகபாணியிலேயே அவர்களின் சாதாரண உரையாடல்கள் கூட நிகழும்! ஆனால், நடா இவ்வாறான போலிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். மிக அதிகமான வேளைகளில் உணர்வுகளை மிக வெளிப்படையாக அதன் வடிவத்திலேயே அவர் வெளிப்படுத்தக் கண்டிருக்கிறேன்! போலிகளை ரசிக்கும் நமது உலகில் – இந்த வெளிப்படைத்தன்மையானது பலவீனமாகவே கருதப்பட்டு வருகிறது!

ஊடகமொன்றின் நிலைப்புக்கு அதன் வியாபார வெற்றியென்பது மிக மிக முக்கியமானதாகும். வியாபார ரீதியாக ஓர் ஊடகம் வெற்றி பெறுவதற்கு அதனை இயக்குபவர்கள் அல்லது வழி நடத்துபவர்கள் வியாபார சிந்தனைகள் அல்லது புத்தியுடையோர்களாக இருத்தல் அவசியமாகும்.  தனது ஊடக நுகர்வாளர்களின் பெரும்பான்மை விருப்பு, வெறுப்புக் குறித்து – இந்த வியாபார சிந்தனையுடையோர் மிக நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இது விடயத்தில் நடா அண்ணாவை ஒரு கிங் (King) என்றே கூற வேண்டும்!

நிகழ்சிகளுக்கு இவர் வைக்கும் பெயர்களே இதற்கு உதாரணங்களாகும்! நான் செய்து வந்த ‘நேற்றைய காற்று’ நிகழ்சி – ஆரம்ப காலங்களில் 09 மணிமுதல் 12 மணிவரையானது. ஆனால், நிகழ்சிக்கான நேரம் சற்று அதிகம் என்று கருதியதால் நேற்றைய காற்றை 09 இல் இருந்து 11 மணி வரையும் குறைத்து விட்டு, 11 மணியிலிருந்து 12 மணிவரை – நேயர்களுடனான சம்பாசனை நிகழ்சியொன்றைச் செய்வதெனத் தீர்மானித்தோம்! இந்த புதிய நிகழ்சியில் ஒரு தலைப்பைக் கொடுத்து அதுபற்றி நேயர்களுடன் சம்பாசிப்பதென முடிவாயிற்று.

புதிய நிகழ்சியை அன்றே ஆரம்பிக்க வேண்டும் என்றார் நடா அண்ணா. ஆனால், நிகழ்சிக்கு என்ன பெயர் வைப்பதென்று யோசித்தால் திடீரென எதுவும் எனக்குத் தோன்றவில்லை! சிரேஷ்டமான பத்தாம் பசலிகளும் தங்கள் பங்குக்கு அரைவேக்காட்டுத் தனமாய் ஏதேதோ பெயரையெல்லாம் சொன்னார்கள். எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.  கடைசியாக நடா அண்ணாவிடம் கேட்டேன், கொஞ்ச நேரம் யோசித்து விட்டு ஒரு பெயர் சொன்னார்; அது – ‘நிலவோடு நீண்ட கதை’ என்பதாகும்!

மிக வெற்றிகரமாக பல ஆண்டுகள் ஒலிபரப்பாகி வந்த இந்த நிகழ்சியின் கவித்துவமான பெயர் குறித்தே, பலர் பாராட்டுத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது!

இதுபோலவே இசை நிகழ்சித் தொடரொன்று! மலேசியா வாசுதேவனுடன் உள்ளுர் பாடகர்கள் இணைந்து, நாட்டின் 10 இடங்களில் இந்த நிகழ்சியினை நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது! குறித்த நிகழ்சி பற்றித் தெரியப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த இசை நிகழ்சியின் பெயரை – ‘பாபா பூம்பா’ என்று நடா அறிவித்தார். வந்திருந்த சில பத்திரிகையாளர்கள் நக்கலாகக் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே, “என்ன இது? இசை நிகழ்சிக்குரியதொரு பெயர் போலவே இல்லையே” என்றனர். அப்போது மிகவும் கூலாக நடா சொன்னார்  “இந்தப் பெயர்தான் நிகழ்சியின் வெற்றிக்கே ஆரம்பமாக அமையப்போகிறது”என்று!

ரஜினி திரைப்படங்களின் ‘பன்ஞ்’ வசனங்களுக்கு ஈடாக அந்தப் பெயர் நேயர்களால் பின்னர் உச்சரிக்கப்பட்டது!

இதெல்லாம் ஏன்? சூரியன் எப்.எம் என்பதே – அவர் வைத்த பெயர்தானே!

ஒரு தேர்தல் நாளன்று விசேட செய்தியறிக்கை. நடாதான் வாசித்தார். கலையகத்தில் அப்போது நானும் இருந்தேன். முறைப்படி கலையகத்தை விட்டு நான் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், நடாவின் அனுமதியுடன் அவர் செய்தி வாசித்ததை மிக அருகிலிருந்து பார்த்தேன். நடா அண்ணா செய்தி வாசித்து – நான் பார்த்த முதல் முறை அதுதான்.

வர்த்தக விளம்பரங்களுக்காக அல்லது நிகழ்சி முன்னோட்ட விளம்பரங்களுக்காக நாங்கள் குரல் ஒலிப்பதிவு செய்வோம். தேவையான பொழுது நடா அண்ணாவின் குரலையும் பயன் படுத்திக் கொள்வோம். அப்படி, நடாவின் ஒலிப்பதிவு இடம்பெறும் போது அவரின் உடல் அசைவுகளும், நளினங்களும் சிரிப்பை உண்டாக்கும். அவ்வாறான சமயங்களில் சிரிப்பை அடக்கியே எமக்கு – பாதி உயிர் போய் விடும். குரலின் ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப அவர் ஒட்டு மொத்தமாகவே தன்னை மாற்றிக் கொள்வார். இதே நிலைதான் நாடக ஒலிப்பதிவிலும்! நடா அண்ணாவின் குரலை ஒலிப்பதிவு செய்யும் வேளைகளில் அவர் முற்று முழுதாக அப்பாத்திரமாவே மாறி விடுவார். சில சமயங்களில் அவர் நடித்து விடுவதுமுண்டு!

அனேகமாக நடா அண்ணாவின் குரல் ஒலிப்பதிவு, மற்றும் ஒலிபரப்பு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர – வேறு எவரும் கலையகத்தினுள் இருக்க முடியாது. அது – எழுதப்படாததொரு விதி! அதனால், அவரின் ஒலிப்பதிவு நேரங்களில் சிலர் ஒளிந்திருந்து பார்ப்பதுண்டு!

பின்னர், நண்பர்கள்  சேர்ந்து அரட்டையடிக்கும் வேளைகளில், நடா அண்ணாவின் உடல் அசைவுகள் போல் செய்து காட்டி – சிரித்து நாங்கள் மகிழ்வோம்! இதில் நடாவைப் போலவே நடிக்கக் கூடியவர்கள் இருவர். ஆண்களில் – வெள்ளையன், பெண்களில் – சிவானுஜா!

ஒலிபரப்புத்துறைக்குப் பொருத்தமேயில்லாதவர்களைக் கூட – நடா அண்ணா சூரியனில் ஆகாயமளவுக்கு உயர்த்தி விட்டிருந்தார். அதுபோலவே, ஆனானப்பட்ட கொம்பனைக் கூட அடையாளமே தெரியாமல் போகவும் செய்திருக்கின்றார். துரதிஷ்டவசமாக வானொலியில் அவரால் –  நான் வளர்க்கப்படவேயில்லை!

நடாவின் தெரிவுகள் அனேகமாகப் பிழைத்துப் போவது கிடையாது. அவர் தெரிவு செய்த அறிவிப்பாளர்களில் அதிகமானோர் திறமையானவர்கள். சூரியனில் இருந்த ஏராளமான அறிவிப்பாளர்களை – போட்டி வானொலியாக இருந்த சக்கி எப்.எம் மற்றும் சுவர்ண ஒலி (இப்போது இந்த வானோலி மூடப்பட்டு, அதன் அலைவரிசையில் ‘ரன்’ எப்.எம். என்கிற சிங்கள சேவை ஒலிபரப்பாகிறது) உள்ளிட்ட பல வானொலிகள் அடிக்கடி தனது பக்கமாய் இழுத்துக்கொண்டதை வைத்தே இதை நிரூபிக்கலாம்!

இதுவெல்லாம் நடாவின் துறைசார் விடயங்கள் குறித்த எனது பதிவுகள். இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளன. நேரம் வரும், அப்போது சொல்வேன்!

இவைகளையெல்லாம் தாண்டி, நடா அண்ணாவுக்குள் இருந்த ஒரு மாபெரும் கருணை மனிதனை – ஒரு பொழுது எனக்கு அறியக் கிடைத்தது. அந்தக் கணங்கள் மறக்கவே முடியாதவை! ஒரு தாய்க்குரிய பரிவோடு அவர் நடந்து கொண்ட விதம்…..

ஆம், அது ஒரு செல்வாய்க் கிழமை. 2002 ஆம் ஆண்டு ஒரு மார்ச் மாதத்தின் பிற்பகல் வேளை!

என்ன நடந்தது?

வேறொரு வாரம் சொல்கிறேன்!
o
(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

One Response to “நடராஜசிவம்!”

  1. //அனேகமாக நடா அண்ணாவின் குரல் ஒலிப்பதிவு, மற்றும் ஒலிபரப்பு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர – வேறு எவரும் கலையகத்தினுள் இருக்க முடியாது. அது – எழுதப்படாததொரு விதி! //

    என்ன காரணம்?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s