காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு! 25 நவம்பர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 1:12 முப

மப்றூக்

நேற்றைய காற்று நிகழ்சி! இரவு 10 மணியிருக்கும். 1970 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த காதல் பாடல்களை ஒலிபரப்பி அப்பாடல்களுக்குப் பொருத்தமாக கவிதை வரிகளைக் கூறிக் கொண்டிருந்தேன்.
நான் ஒலிபரப்பும் பாடல்கள் சிலவேளைகளில் எனக்குப் பிடிப்பதேயில்லை! எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நேயர்களின் விருப்பத்தை மறுதலிக்க முடியாது. ஆனால், சில பாடல்களை ஒலிபரப்பும் போதோ – ஆழ்ந்து ரசிக்க முடியும். அவை உயிர் தழுவும் பாடல்கள்!

அன்று ஒலிபரப்பான பாடல்களும் அப்படித்தான், மனம் வருடும் பாடல்கள்! ரசித்துக் கொண்டிருந்த வேளை, அலுவலகப் பாவனைக்கான பிரத்தியேக தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. கலையகத்தின் உள்ளேயிருக்கும் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் வரும்போது மணி ஒலிக்காது. சிறிய வெளிச்சம் ஏற்படும்! கடமையில் இருக்கும் அறிவிப்பாளரை எங்கள் அலுவலகத்திலுள்ளோர் தொடர்பு கொள்வதற்கானதே குறித்த பிரத்தியேக இலக்கமாகும்! நேயர்கள் அழைப்பதற்கு வேறு இலக்கம்!
வந்த அழைப்புக்கு ”ஹலோ” என்றேன். மறு முனையில் எங்கள் நிருவாக இருக்குனர் (Managing Director). எம்.டி (MD) என்று அவரை சுருக்கமாகச் சொல்வோம்! எங்களுக்கு பொஸ் (Boss) அவர்தான்! “நான் எம்.டி. பேசுகிறேன்” என்றார். அவரின் குரலை அடையாளம் கண்டு கொண்டேன். எங்களுக்கிடையிலான உரையாடல் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றது. ‘”மப்றூக் நான் சொல்லும் தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொள்ளுங்கள்” என்றார். எழுதிக் கொண்டேன். “இது அமைச்சர் ‘ஏ’ யின் தொலைபேசி இலக்கம் (பெயர் வேண்டாம் என்பதால் தவிர்த்துள்ளேன்) அவரோடு உடனடியாக பேசுங்கள்” என்று சொல்லி வைத்து விட்டார்.

நான் எழுதிக் கொண்டது ஒரு மொபைல் போன் இலக்கம். அழைப்பெடுத்தேன். ”ஹலோ” என்றது ஒரு குரல். ”நான் சூரியன் எப்.எம்.மில் இருந்து மப்றூக் பேசுகிறேன், அமைச்சர் ‘ஏ’ யுடன் பேசலாமா?” என்றேன். கொஞ்சமிருங்கள் என்றது அந்தக் குரல். காத்திருந்தேன். தொலைபேசி கைமாறுவது புரிந்தது. “ஹல்லோவ்வ்வ்…” அமைச்சர் ‘ஏ’ யின் குரல் ரொம்பவே தடுமாறியது. அவர் உச்ச போதையில் இருந்ததைப் புரிந்து கொண்டேன்.

“நான் சூரியன் எப்.எம். இல் இருந்து பேசுகிறேன்” என்றேன்.
“ஆ… வணக்கம், வணக்கம்…! உங்க நிகழ்சிதான் கேட்டிட்டிருக்கன், நமக்கு நல்ல பாட்டொன்ணு போடுங்களேன். அந்த கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு பாட்டு…” – இதைச் சொல்ல, நிறைய சுற்றி வளைத்தார். எனக்குப் பத்திக் கொண்டு வந்தது.

நேற்றைய காற்று என்பது – ஓரளவு பழைய மற்றும் இடைக்காலப் பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்சி! இதில் போய் இப்படிப் புதியதொரு பாடலைக் கேட்டால் எப்படிக் கொடுப்பது? “பதினொரு மணிக்குப் பிறகு ஒலிபரப்பினால் பரவாயில்லையா?” என்றேன். 09 மணியிலிருந்து 11 மணி வரைதான் நேற்றைய காற்று. அடுத்து வரும் நிகழ்சியில் புதிய பாடல்கள், வேகமான பாடல்களை ஒலிபரப்ப முடியும். அதனால்தான் அவ்வாறு கேட்டேன். ஆனால், பதினொரு மணிக்குப் பிறகென்பது ரொம்ப பிந்திய நேரமென்றும் அதற்கு முன் ஒலிபரப்புமாறும் அமைச்சர் ‘ஏ’ கூற, “முயற்சிக்கிறேன்” என்று சொல்லி, தொலைபேசியை வைத்து விட்டேன்!

நேரம் 10.20 இருக்கும். அலுவலகப் பாவனைக்கான தொலைபேசி இலக்கத்துக்கு திரும்பவும் அழைப்பொன்று வந்தது. எடுத்தால் மீண்டும் எம்.டி! “மப்றூக், அமைச்சருடன் பேசினீங்களா?”. “ஆம்” என்றேன். “என்னவாம்?”.  “அவர் பாட்டொன்று கேட்டார், பதினொரு மணிக்கு பிறகு ஒலிபரப்புவதாகச் சொல்லியிருக்கிறேன்” என்றேன். எம்.டி.யின் குரல் கோபத்தில் உச்சத்துக்கு சென்றது. ஆங்கிலத்தில் உள்ள ‘கெட்ட’ வார்த்தைகளைக் கூறி, உடனடியாகப் பாடலை ஒலிபரப்புமாறு சொன்னார். (இதற்கெல்லாம் நாங்கள் கவலைப் படுவதில்லை. சிலவேளை மிகச்சாதாரண விடயங்களுக்குக் கூட, எங்கள் எம்.டி. அவ்வாறான வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவார்) விரைவாகச் சென்று சி.டி.  (CD) யை எடுத்து வந்தேன். வானொலியில் நான் – எதுவுமே பேசவில்லை. பாடலைப் போட்டேன். ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..’ ஒலிபரப்பாகியது!

இந்தப் பேய்க் கூத்தெல்லாம் உள்ளே இருக்கும் நமக்குத்தான் தெரியும். வானொலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களோ பாவம்! இவைகள் எதையும் அறிய மாட்டார்கள்! ‘நேற்றைய காற்றில்’ இந்தப் பாடலைப் போய் ஒலிபரப்பும் எனக்கு – ஏதாவது கிறுக்குப் பிடித்து விட்டதோ என்று கூட அப்போது யாவராவது நினைத்திருக்கக் கூடும். என்ன செய்ய? நான்தான் இருதலைக் கொள்ளி எறும்பாகிப் போனேனே. ஆனாலும், நிலைமையைச் சமாளிக்க வேண்டும். என்ன செய்வது? பாடல் முடிவதற்குள் யோசித்து, நேயர்கள் நம்பும் படியாக வானொலியில் ஏதாவது காரணம் கூற வேண்டும்!

எங்கள் கலையகத்துக்குள் இருந்தவாறே ஏனைய போட்டி வானொலிகளை கேட்கக் கூடிய வசதி இருந்தது. உடனடியாக சக்தி எப்.எம்.மை தட்டி விட்டேன். நண்பன் ரஊப்தான் கடமையிலிருந்தான். அது ‘இதயராகம்’ ஒலிபரப்பாகும் நேரம். ஆனால், நிகழ்சி ஒலிபரப்பாகவில்லை. சக்தி எப்.எம். முதற்தர வானொலியாக தெரிவாகி விட்டதாய் ரஊப் அறிவித்துக் கொண்டிருந்தான். மேலும், நேயர்கள் வானொலியில் வாழ்த்துக் கூறலாம் என்றதோடு, தொலைபேசியில் பேசுவோரை இணைத்தும் கொண்டான். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, எங்கோ ஒரு மூலையில் மின்னல் வெட்டி மறைந்தது. ஆம், நிலைமையைச் சமாளிக்க விஷயம் கிடைத்திற்று!

‘கருப்புதான் எனக்கு பிடித்த கலரு’ பாடல் நிறைவடைந்தது. ஒலிவாங்கியை ‘ஒன்’  (on)  செய்து கொண்டு – பேச ஆரம்பித்தேன். “நேயர்களே முதற்தர வானொலி எனும் இடத்தை நமது சூரியன் எப்.எம். தொடர்ந்தும் தன்வசம் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், வேறு சிலரோ, இந்த இடம் தமக்குக் கிடைத்து விட்டதாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமன்றி, அதற்காக வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த நேரத்தில் நாம் பேசாவிட்டால், அவர்களின் பொய் – நிஜமாகி விடும்! உண்மையாகவே நாம்தான் முதலிடம் பெற்றுள்ளோம். அதனால்தான், ‘நேற்றைய காற்றை’ இடைநிறுத்தி விட்டு, நாமும் வாழ்த்து நிகழ்சியொன்றை நடத்தவுள்ளோம்! எனவே, உங்கள் முதற்தர வானொலியை வாழ்த்த – நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்” என்று கூறி, நிலைமையைச் சமாளித்தவாறே, தொடர்ந்து – புதிய பாடல்களை ஒலிபரப்பத் தொடங்கினேன்!

இரண்டு, மூன்று பாடல்கள் ஒலித்திருக்கும். அதே இலக்கத்துக்கு மீண்டுமொரு அழைப்பு வந்தது! திரும்பவும் எம்.டி.யோ எனத் தயங்கிக் கொண்டே  “ஹலோ” என்றேன். “வணக்கம் நான் திரும்பவும் அமைச்சர்தான் பேசுறன். உங்க எம்.டி. இங்க எனக்கு பக்கத்துலதான் இருக்காரு. நமக்கு இன்னுமொரு பாட்டு வேணுமே…” என்றார்.  “என்ன பாட்டு”?  “அது வந்து… அந்த… பரமசிவன் கழுத்திலிருந்து பாட்டு” என்றார் கௌரவ அமைச்சர்! கொலை வெறி என்பார்களே… அவ்வாறானாதொரு கெட்ட கோபம் வந்து, என் உச்சந் தலையில் தட்டியது. ஆனால், என்ன செய்ய? அடக்கிக் கொண்டேன்!

சூரிய காந்தி திரைப்படத்துக்காக ரி.எம். சௌந்தராஜன் பாடிய ‘பரமசிவனின் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா…’ பாடல் தொடர்ந்து ஒலித்தது! பாடலின் இடையே “ஒலிக்கும் இந்தப் பாடலை அமைச்சர் ‘ஏ’ அவர்கள் தனக்காக விரும்பிக் கேட்டிருந்தார். அவருக்காக வருகிறது பாடல்” என்றேன்!

இடையிடையே – உணர்ச்சி வசப்பட்ட நேயர்கள் பலர்
அழைப்பெடுத்து, சக்தி எப்.எம்.மை திட்டியயோடு, சூரியனைத் தூக்கித் தலையில் வைத்தார்கள். அவர்களையும் வானொலியில் இணைத்துக் கொண்டேன்!

நேரம் 11.00 மணி தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அமைச்சரின் தொல்லையில் இருந்து ஓய்வு கிடைத்தது. நீண்ட நேரமாக அவரின் அழைப்பில்லை, ஆறுதலாக இருந்தது! இனி பிரச்சினையின்றி இருக்கலாம் என்று நினைத்த நேரத்தில்தான், மீண்டும் அந்த அழைப்பு வந்தது!

நிச்சயமாக அமைச்சராக இருக்க முடியாது. காரணம், அப்போதே அவர் போதையின் உச்சத்தில் இருந்தார். எனவே, நிச்சயம் இப்போது கவிழ்ந்திருப்பார் என்பது என் கணிப்பு! தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்த போது, மறுமுனையில் “ஹலோ” என்றது அந்தக் கரகரப்புக் குரல்! ஆம், சாட்சாத் நம்ம அமைச்சர் ‘ஏ’ தான் திரும்பவும் வந்திருந்தார். எனக்கு வெறுத்தே போனது!

அமைச்சர் இப்போது பாடல் எதையும் கேட்கவில்லை. என்னுடன்  வேறு ஒருவர் பேச விரும்புவதாகக் கூறினார். “சரி” என்றேன். தொலைபேசி கை மாறியதும், மறு முனையில் ஒரு பெண் குயில் “ஹலோ” என்று கூவியது! இனிமையான குரல். நிச்சயமாக இளம் வயதாகத்தான் இருக்க வேண்டும். ”சொல்லுங்கள்” என்றேன். தனக்கு ‘தேன் சிந்துதே வானம்’ என்கிற பாடலைத் தர முடியுமா என்றது குயில்! முடியாது என்று சொல்ல முடியுமா என்ன? “தரலாமே” என்றேன். (அப்போதே இதைக் கேட்டிருந்தால், என் நேற்றைய காற்றைக்கு இத்தனை துயரம் நிகழ்ந்திருக்காதேடி பாவி…!)

அந்தக் குயிலுக்காக – வானம் தேன் சிந்தி முடித்தது!
வேலை முடிந்து தங்குமிடம் சென்றேன். அன்றிரவு முழுக்க அமைச்சரின் கூத்துக்களெல்லாம் நினைவுக்கு – அடிக்கடி வந்து வந்து போயின!

பாவம் – மலையக மக்கள்!!

வீரகேசரி வெளியீடான  ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

One Response to “கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!”

  1. பாவம் – மலையக மக்கள்!!

    அப்புறம் அந்த குயிலுக்கு என்னாச்சோ ஏதாச்சோ,…
    ம்ம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s