காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

பங்காளிகளும், ‘சொத்து’க்கான சண்டைகளும்! 22 நவம்பர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 8:40 முப

மப்றூக்

முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக மாறிவிட்டது. இதில் சாதக, பாதகங்கள் நிறையவே உள்ளன. இன்னொரு புறம் சிலருக்கு இது எரிச்சலை உண்டுபண்ணுவதாகவும் – வயிற்றைக் கலக்கும் விடயமாகவும் மாறியிருக்கிறது. அரசின் உள்ளிருக்கும் சிலருக்கு மு.காங்கிரசை பங்காளியாக ஜனாதிபதி சேர்த்துக் கொள்வதில் இஷ்டமேயில்லை என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்!

மு.கா. எதிர்க்கட்சியில் இருக்கும் போது;  “முஸ்லிம் சமூகத்துக்காக மு.கா. அரசாங்கத்தோடு இணைய வேண்டும்’” என்று கூக்குரலிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்போது – அரசுடன் மு.கா. இணைய முடிவெடுத்துள்ள நிலையில்; ‘எதிர்க்கட்சியில் இருந்தால்தான் முஸ்லிம்களுக்காக மு.கா. குரல் கொடுக்கலாம். அரசோடு இணைந்தால் அடக்கி வாசிக்க வேண்டி வருமல்லவா’ என்று ரொட்டியைத் திருப்பிப் போடுகிறார்கள்.

ஆக, மு.கா. என்ன முடிவெடுத்தாலும் அது சிலருக்குப் பிரச்சினைதான்!
மு.காங்கிரஸ் அதன் நாடாளுமன்ற வரலாற்றில் இணக்க அரசியல், பிணக்கு அரசியல்களை மாறி மாறி நிறையவே செய்திருக்கின்றது. இணக்க அரசியலா, பிணக்கு அரசியலா என்பது குறித்து மு.கா. கடந்த காலங்களில் எடுத்த சில முடிவுகளின் போது, அந்தக் கட்சிக்கு அல்லது அதன் தலைவர் ஹக்கீமுக்கு சில தடவைகள் – அடி சறுக்கியிருக்கின்றது. அதனால், முடிவுகள் பிழைத்துப் போயியுமிருக்கின்றன. இருந்தபோதும், இவ்வாறான முடிவுகளை எடுப்பதென்பது மு.கா.வுக்குப் புதிதில்லை.

முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தின் தோல்வியிலிருந்து நாம் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனி, அரசியலில் பிணங்கி நிற்பதை விடவும், இணங்கிப் போவதையே சாணக்கியமான செயற்பாடாகக் கருத வேண்டியிருக்கிறது. இணங்கிப் போதல் என்பதை – சரணடைதல் அல்லது அடிமைப்படுதல் என்று வீணா அர்த்தப்படுத்திக் கொள்தல் கூடாது!

இது இப்படியிருக்க, மு.கா.வுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த பலர், மு.காங்கிரஸ் தமக்கு எதிரணியில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றார்கள். குறிப்பாக, மு.கா. எதிர்க்கட்சியில் இருப்பதையே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

கடந்த வாரம் ஒரு ஞாயிற்றுக்கிமை விடிகாலையில் நமக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் பேசினார். அவர் நமது கடந்த வார ‘சுடர்ஒளி’ கட்டுரையைப் பார்த்ததாகச் சொன்னார். அதேவேளை மு.கா. எவ்விதமான பேரங்களுமின்றி அரசாங்கத்துடன் இணையப் போவதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றில் விமர்சனக் கட்டுரையொன்று வெளியாகியிருப்பதாகவும் கூறினார். பிறகு அவர் ஓர் ஆதங்கத்தை நம்மிடம் வெளியிட்டார். அதாகப்பட்டது, மு.கா. இப்படி பேரங்களின்றி சும்மா அரசாங்கத்துடன் இணைந்தால் அவர்களின் கொள்கைகள் என்னாவது? சமூக அக்கறையென்பது மு.கா.வுக்கு இல்லையா? இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவர் நம்மிடம் கருத்துக் கேட்டார்!

மேலே நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நபர், அமைச்சர் அதாஉல்லாவின் கட்சிக்காரர். அமைச்சரின் மிகத் தீவிர விசுவாசி. குறித்த நபர் இப்போது வகிக்கும் பதவி கூட, அதாஉல்லாவின் சிபாரிசினால் கிடைத்ததாகவும் ஒரு கதை உள்ளது!

மேற் சொன்ன சம்பவத்தை வைத்துக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மு.கா. அதன் கொள்கைகளை இழப்பது குறித்து அதாஉல்லாவின் கட்சிக்காரருக்கு அப்படி என்ன கவலை? மு.கா.வுக்கு சமூக அக்கறை இருந்தாலும், இல்லா விட்டாலும் அது குறித்து அதாஉல்லாவின் விசுவாசிக்கு என்ன பிரச்சினை? இவை குறித்து ஒன்றும் அவருக்குக் கவலையில்லை. மு.கா. எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும், அரசாங்கத்தோடு மு.கா. இணைந்து விட்டால் நமது நிலையென்ன என்கிற ‘கிலி’யும்தான் அவரின் பிரச்சினைகளாகும்.

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தோடு மு.காங்கிரஸ் இணைகிறது என்கிற செய்திகள் வெளியானதும், அந்தக் கட்சிக்கு சமூக அக்கறை இல்லையா என்று சிலர் கேட்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இதை வேறொரு கோணத்தில் சொன்னால், மு.காங்கிரஸ் சமூக அக்கறையுள்ள கட்சியென்றால் அது எதிர்க்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்பதே குறித்த நபர்களின் வாதமாகும்.

இவ்வாறான கற்பிதங்கள் மேற்சொன்ன அதாஉல்லாக் கட்சிக்காரர்களாலும், அவர்களைப் போன்ற மு.காங்கிரஸ் விரோதப் போக்குடையவர்களாகலும் வடிவமைக்கப்பட்டவையாகும். மு.கா. சமூக அக்கறையுடைய கட்சியென்றால் அது அரசாங்கத்தோடு இணையக் கூடாது என்கிறதொரு மனப்பதிவை இவர்கள் சாதாரண மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பரப்பிவிட முயற்சிக்கின்றார்கள்.

அப்படியென்றால், ஆண்டாண்டு காலமாக அரசாங்கத் தரப்பில் மட்டுமே இருந்து காலங்கடத்திக் கொண்டிருக்கும் தமது அமைச்சர் அதாஉல்லா போன்றவர்களின் ‘சமூக அக்கறை’ குறித்தும் இந்தப் புத்திசாலிகள் பேச வேண்டுமல்லவா? ஆனால் பேச மாட்டார்கள்!

மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் – இணக்க அரசியல் மூலமாகத்தான் முஸ்லிம் சமூகத்துக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் மற்றும் ஒலுவில் துறைமுகம் என்று நீளும் மிகப்பெரும் திட்டங்களையெல்லாம் இணக்க அரசியல் செய்த காலங்களில்தான் அஷ்ரப் பெற்றெடுத்தார்.

ஆக, ஆளுந்தரப்போடு மு.கா. சேருவதை சமூக அக்கறையற்றதொரு முடிவாகக் காட்டி பிரசாரம் செய்வதென்பது – மு.கா.வுக்கெதிரான அரசியலே தவிர வேறில்லை!

இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தோடு பங்காளிக் கட்சியாக மாறியுள்ள மு.காங்கிரசுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைப்பதென்பது உறுதியாகி விட்ட நிலையில், என்னென்ன பதவிகள் கிடைக்கும் என்பது குறித்த ஆரூடங்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

மு.கா. தலைவருக்கு அமைச்சரவை அந்தஷ்துள்ள ஓர் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில்,  ‘தலைவரின் இடத்தை நான் தட்டிப் பறிக்கப் போவதுமில்லை, தலைவருக்கு அடுத்த இடத்தை கட்சியில் நான் விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை’ என்று மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அண்மையில் தெரிவித்த கருத்தினை வைத்துப் பார்க்கையில், மு.கா.வுக்குக் கிடைக்கவுள்ள அமைச்சுப் பதவிகளில் இரண்டாம் நிலைப் பதவி தவிசாளர் பசீருக்குக் கிடைக்கும் என்று கணிக்க முடிகிறது.

மேலும், கட்சியிலுள்ளவர்களில் கணிசமானோர் – பசீரை தலைவருக்கு அடுத்த நிலையில் வைத்தே பார்க்கின்றனர். மட்டுமன்றி, அரசாங்கத்தில் மு.கா. தலைவருக்கு அடுத்ததாக பசீருக்கு பதவியொன்று வழங்கப்படுவதை மு.கா.விலுள்ள பெரும்பான்மையானோர் எதிர்க்கப் போவதுமில்லை என்று, மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே நம்மிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சர்கள் வகிக்கின்ற பதவிகளை விடவும் ‘பாரமான’தொரு பதவி – மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அப்படிக் கொடுக்கப்படுமானால், மு.கா.வுக்கெதிரான கொம்புகள் கிழக்கில் நிறையவே முறியும்!

இவ்வாறானதொரு நிலையில், ‘இந்த அரசில் இணைந்து பெற்றுக் கொள்ளும் பதவியின் வழியாக, மறைந்த தலைவர் அஷ்ரப் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவை போல் – இறைவனின் உதவியுடன் நிச்சயமாக நானும் பெற்றுக் கொடுப்பேன்’ என்கிறார் மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்.

பசீர் சேகுதாவூத்தைப் பொறுத்தவரை, அவர் தமிழ் மக்களோடும் நெருக்கமான உறவுகளை தொடர்ச்சியாகப் பேணிவருகின்றவர். அந்த மக்களின் அவல வாழ்வு குறித்து ஆதங்கங்களை வெளியிட்டு வருபவர் என்கின்ற வகையில், பசீருக்கு இந்த அரசில் கிடைக்கும் பதவி மூலம் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் நல்ல பலன்களைப் பெற்றுக் கொள்ளும் என்று நம்பலாம்!

இதேவேளை, நமது கடந்த கட்டுரைகளில் குறிப்பிட்டமை போல், மு.கா. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் போது, அந்தக் கட்சிக்குள் ஒரு பூகம்பம் வெடிக்கும் அபாயம் உள்ளதை மீளவும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தமாகும். 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அந்தக் கட்சிக்கு கிடைக்கவுள்ள குறைந்தளவான அமைச்சுப் பதவிகளை அதன் தலைவர் எவ்வாறு பகிர்ந்தளிக்கப் போகின்றார் என்பதில்தான் அந்தப் பூகம்பத்தின் பாரதூரம் நிர்ணயமாகும்.

உதாரணமாக, மு.காங்கிரசில் இம்முறை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற நியமனங்களைப் பெற்றுள்ளவர்களுக்கு, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படத் தேவையில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதேவேளை, அம்பாறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சிக்குள் இருப்பதால், அவர்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவருக்கு ஒரு அமைச்சுப் பதவியை வழங்க முடியும் என்பதும் கணிசமானோரின் கருத்தாக இருக்கிறது. அவ்வாறாயின், அந்தப் பதவி ஹரீஸ் எம்.பி.க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்படி, மக்கள் விருப்புகளுக்கிணங்கவும், மக்களின் அதிக விருப்புகளைப் பெற்றவர்களை முதன்மைப் படுத்தியும் மு.கா. தலைவர் முடிவுகளை எடுக்கும் போது, பூகம்பங்களை, நில நடுக்கங்களாக மாற்றிக் கொள்ள முடியும்!

ஹக்கீம் இப்படி சாணக்கியமாகச் செயற்படுவாராயின், மு.கா.வுக்கு எதிரானவர்களின் பாசறைகளில் உருவாகும் நிலநடுக்கங்களை பூகம்பங்களாக மாற்றி விட முடியும்!

(இந்தக் கட்டுரையை  20 நொவம்பர் 2010 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s