காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

உரத்துப் பேசுதல்! 14 நவம்பர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 7:46 பிப

மப்றூக்

வ்வொரு சம்பவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறையவே பாடங்கள் இருக்கின்றன. நம்மோடு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு முடிந்த பின்னர் – அது பற்றி யோசித்துப் பார்க்கையில், ஆயிரம் கேள்விகளும், விமர்சனங்களும் நமக்குள் எழும். அதை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கவே கூடாது, அது நடப்பதற்கு இன்னார்தான் காரணம் என்று ஒரு நிகழ்வை வைத்து, ஆயிரத்தெட்டு விடயங்களை நாம் யோசிக்க முடியுமல்லவா?!

அப்படியென்றால், 30 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்திலிருந்து நாம் அறிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்குமான பாடங்கள் எத்தனையோ இருக்குமல்லவா? உண்மையாகச் சொன்னால், கடந்த யுத்த காலத்தை வைத்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் பாடங்களல்ல, அனுபவவங்கள்! காரணம், அனுபவங்களை விட மிக நல்ல ஆசான் உலகில் வேறு எதுவும் கிடையாது!

இவ்வாறானதொரு நிலையில், 2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்வதற்காக, 08 பேரைக் கொண்ட நல்லிணக்க ஆனைணக் குழுவொன்றினை ஜனாதிபதி நியமித்ததும், அந்த ஆணைக்குழு முன் பல்வேறு நபர்கள் சாட்சியங்களை முன்வைத்து வருவதும் நாம் அறிந்த விடயங்களே!

இதேவேளை, இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதான் நோக்கம், இதன் தகுதி, தராதரம் பற்றியெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி சண்டையின் போது நிகழ்ந்தாகக் கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களைத் திசை திருப்புவதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது, இந்த ஆணைக்குழு என்கிற விவகாரம் வெறும் அரசியல் கண்துடைப்பு என்றெல்லாம் கூறப்படும் அதேவேளை, இப்படியானதொரு விசாரணையை நடத்துவதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு எந்தவிதமான தராதரங்களும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது.

அதனால்தான், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் – மேற்படி நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்திருக்கின்றன.

எது எவ்வாறிருந்த போதிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில், மேற்படி ஆணைக்குழுவானது, பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தெரிவு செய்துள்ள காலப்பகுதி பற்றியும் பல்வேறு அதிருப்திகள் உள்ளன. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்றதொரு நாட்டில், யுத்த நிறுத்த காலமாகக் கருதப்பட்ட 2002 முதல் 2009 வரையிலான காலங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கு வழக்குப் பார்க்க முயற்சிப்பது சரியில்லை என்பது கணிசமானோரின் கருத்தாக இருக்கிறது.

நாட்டில் இந்த யுத்தம் தொடங்கியமைக்கு ஒரு காரணம் இருக்கிறது. அது பற்றி ஆராயும் போதுதான் அதன் ஆணிவேர் பற்றி அறிய முடியும். அப்படியல்லா விட்டால், வரலாற்றில் புரியப்பட்ட தவறுகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியாது போகும். எனவே, வரலாறுகளை அறிந்து கொள்ளாமல் நாம் எப்படி அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும்?

ஆக, யுத்தத்தால் இந்த நாட்டில் ஏற்பட்ட பேரழிவு பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் முழுமையாக நாம் அறிந்து கொள்ளும் போதுதான், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, இன்னுமொரு யுத்தத்துக்கான முளை உருவாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சுற்றி வளைத்துச் சொல்ல வருவது என்னவென்றால், இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது தலையைப் பற்றி ஆராய்வதற்குப் பதிலாக ‘முடி’யைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தோடு ஒப்பிடுகையில் நல்லிணக்க ஆணைக்குழு ஆராய்வதற்காக எடுத்துக் கொண்ட காலமானது மிகவும் கீழ்நிலைப் பெறுமானம் கொண்டதாகும்!

இருந்தாலும், பலர் இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்துக் கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்தல் வேண்டும். ஏதோ ஒருவகையில் இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் அதன்முன் அளிக்கப்படும் சாட்சியங்களும் பதிவுகளாகின்றன. எதிர்காலத்தில் இந்தப் பதிவுகளின் அடிப்படையில் சில நல்லது கெட்டதுகள் நடக்கவும் சந்தர்பங்கள் உள்ளன. எனவே, விருப்பமில்லாது விட்டாலும் கூட, தமிழ் முஸ்லிம் சமூகங்களும் இந்த ஆணைக்குழுவினைப் பயன்படுத்தியே ஆக வேண்டியிருக்கிறது.

குறிப்பாக, முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை – ஒரு சிலர் மட்டுமே இந்த ஆணைக்குழு முன், சாட்சியமளித்திருக்கின்றார்கள். முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், சஊதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாவிட் யூசுப், சமூக செயற்பாட்டாளர் எம்..ஐ.எம். முகையதீன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பர்ஸானா ஹனீபா ஆகியோர் சாட்சியமளித்தோரில் சிலராவர்!

மேற்சொன்னவர்களில் எம்.ஐ.எம். முகையதீன் குறிப்பிடத்தக்க ஒருவர். இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வரலாறுகள் தொடர்பில் இவர் மிகச் சிறந்த அறிவினைக் கொண்டவர், முஸ்லிம்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டதுகளை ஆவணமாகவும், புள்ளிவிபரங்களாகவும் சேகரித்து வருபவர். புலிகளுடனான பேச்சு பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் சமூகம் சார்பாகக் கலந்து கொண்டவர் என்பதால், காத்திரமான கருத்துக்களை முன்வைப்பதற்கும், சாட்சியமளிப்பதற்கும் இவருக்கு நல்ல அருகதையிருக்கிறது.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன் – முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளாகச் சாட்டியமளிக்க வேண்டிய சமூகப் பொறுப்பினைக் கொண்டுள்ள பலர் – இன்னும் இதுபற்றி மூச்சு விடாமல் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

குறிப்பாக, தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன், தாம் சாட்சியமளிக்கப் போவதில்லை எனும் ஒரு நிலைப்பாட்டினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருந்தது. அதற்கு மு.கா. தெரிவித்த காரணமும் நியாயமானதே! அதாவது நாம் ஏற்கனவே கூறியது போல், சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு தெரிவு செய்துள்ள காலம் குறித்து மு.கா.வுக்குத் திருப்தியில்லை. முஸ்லிம் சமூகம் 1990 களில்தான் மிக மோசமான நெருக்குவாரங்களையும், இழப்புக்களையும் இந்த நாட்டில் சந்தித்தது. ஆனால், அவை குறித்துப் பேசாமல் 2002 களுக்குப் பின்னர் பேசுவது எந்த வகையில் நியாயமாகும் என்பது மு.கா.வின் கேள்வியாகும். அதுவும் நியாயமான கேள்விதான்!

இருந்தாலும், எதிர்பார்த்ததை விடவும் சற்றே ஆழ, அகலமாகவும், தனக்காக நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் கோடுகளை தாண்டிய படியும், தேசிய நல்லிணக்க ஆணைக்குழு இயங்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

உதாரணமாக, ‘1990 களில் 600 முஸ்லிம் பொலிஸாரை புலிகள் கொன்றமைக்காக உங்களால் மன்னிப்புக் கோர முடியுமா?’ என்று – தம்மிடம் சாட்சியமளிப்பதற்காக வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் ஆணைக்குழுவினர் கேட்டிருந்தார்கள்.

இது மிக முக்கியமானதொரு பதிவாகும். அதாவது, 2002 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்த சம்பவங்கள் குறித்துப் பேசுவதற்காக என உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவானது, தனக்கு விதிக்கப்பட்ட கால வரையறையை தானே தாண்டியிருப்பது இங்கு கவனத்துக்குரியதாகும். எனவே, சாட்சிகளும் இனி கால வரையறையை மீறிப் பேசலாமல்லவா?!

அப்படியென்றால் 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சாட்சியமளித்தோர் யாரும் இதுவரைப் பேசவில்லையா என நீங்கள் கேட்கலாம். நிறைப் பேர் பேசியிருக்கின்றார்கள். அப்படிப் பேசுவதற்கு ஆணைக்குழுவும் அனுமதித்துமிருக்கிறது.

ஆகவே, நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தி வைத்துள்ள கால வரையறை குறித்து அதிருப்தியுடையோரும் இனி சாட்சியமளிக்கலாம்! குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சி என்கிற அடையாளத்துடனுள்ள மு.காங்கிரசானது – தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக் வேண்டும் என்பது அதிகமானோரின் விருப்பமாகும்.

இவ்விடயம் குறித்துப் பேசுவதற்காக மு.காங்கிரசின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத்தை தொலைபேசியில் அழைத்தோம். பேசினார். ‘தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் முடிவுசெய்யப் பட்டுள்ளது. அதற்கமைய மு.கா. சாட்சியமளிக்கும்’ என்றார்.

ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க வேண்டியவர்கள் இன்னும் இருப்பதனால், இந்த ஆணைக்குழுவின் ஆயுள்காலத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் மேலும் 06 மாதங்களினால் நீடித்துள்ளார். எனவே, மு.காங்கிரஸ் மிகவும் காத்திரமாகவும், தெளிவாகவும் தனது சாட்சியங்களினை முன்வைக்க முடியும்.

இந்த வேளையில் இன்னுமொரு விடயத்தினையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. அதாவது, 1990 கள்தான் முஸ்லிம்களுக்கு மிகவும் இழப்புகள் நேர்ந்த காலம் என்றாலும்,
2002 – 2009 வரையிலான காலப் பகுதிகளில் முஸ்லிம் சமூகம் குறித்துப் பேசுவதற்கு எதிவுமில்லை என்று ஆகிவிடாது.

அந்தக் காலப்பகுதியில்தான், மூதூர் முஸ்லிம்கள் புலிகளால் இம்சிக்கப்பட்டு அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள். அந்தக் காலத்தில்தான் புலிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மூதூரில் முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட அட்டூழியங்களை கணக்கில் எடுக்காமல் இருந்தார். அந்தக் காலப்பகுதியில்தான் வாழைச்சேனையில் முஸ்லிம்கள் இருவர் கொல்லபட்டதோடு, அவர்களின் ஜனாஸாக்கள் கூட வழங்கப்படாமல் பலரின் முன்னிலையில் புலிகளால் எரிக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில்தான் முஸ்லிம்கள் பலரிடம் கப்பம் பெறப்பட்டது. அந்தக் காலங்களில்தான் முஸ்லிம்கள் பலர் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டார்கள்.

எனவே, 2002 – 2009 காலத்திலும் முஸ்லிம்கள் குறித்துப் பேசுவதற்கு நிறைய நிகழ்வுகளும், சம்பவங்களும் இருக்கின்றன. அவைகள் குறித்து மு.கா.வும், முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் தைரியமாகப் பேச முன்வருதல் வேண்டும்.

மு.கா.வைப் பொறுத்த வரையில், அதன் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மிகவும் தகுதியுள்ள ஒருவராவார். அவர் ஓர் ஆயுதப்போராளியாக இருந்தவர், அதனால், பல நேரடி அனுபவங்களைக் கொண்டவர். இலங்கை முஸ்லிம் அரசியல் தொடர்பில் ஆழமான அறிவு கொண்ட அரசியல்வாதிகளில் பசீர் குறிப்பிடத்தக்கவர். நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்தபோது முஸ்லிம் சமூகம் சார்பாக – அரசோடும், புலிகளோடும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர் என்பதால், மு.கா. சார்பில் சாட்சியமளிப்பவர்களில் ஒருவராக பசீர் இருக்க வேண்டும் என்கிறார் நமது நண்பரான பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர்!

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கு மு.கா. சார்பில் பொருத்தமான இன்னுமொருவர் அந்தக் கட்சியின் செயலாளர் ஹசன் அலி! முஸ்லிம்கள் பற்றிய புள்ளி விபரங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் இவருக்கு நல்ல அறிவு இருப்பதால் மு.கா. சார்பான சாட்சிகளில் இவரும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

இவர்களுடன் மு.கா.வின் தலைவர் ரஊப் ஹக்கீமும் சாட்சியமளித்தே ஆக வேண்டும் என்பது அதகமானோரின் கருத்தாகும்.

அரசியல் கட்சிகள் தவிர, முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த காத்திரமுள்ள தனிநபர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மேற்படி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதற்கு முன்வருதல் வேண்டும். காரணம், இது அவர்களின் சமூகக் கடமையாகும்.

இவ்வாறான நேரங்களில், பேசாமல் இருந்து விட்டு, பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்களாகவும், முஸ்லிம் சமூகத்தைக் காப்பவர்களாவும் சுய பிரகடனம் செய்து கொள்வோரை முஸ்லிம் சமூகம் எட்டி உதைக்க வேண்டும் என்று கூறும் நமது ஊடக நண்பரின் கோபத்தில் நிறையவே நியாயங்கள் இருக்கின்றன.

உதாரணமாக, 2006 ஆம் ஆண்டளவில் மூதூர் முஸ்லிம்கள் புலிகளால் இம்சிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து மாபெரும் மக்கள் ஆதரவுடன் ‘மூதூர் பிரகடனம்’ என்கிற வரலாற்று நிகழ்வொன்றினை நடத்தியவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஷ்சேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி! இவர் அப்போது, கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் நிறுவனங்களின் தலைவராக இருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஹனீபா மதனி போன்ற சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மிகவும் பொருத்தமானவர்களே!

எனவே, விமர்சிக்கப்படுவது போல், பிற்காலத்தில் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளினால், எதுவும் ஆகாமல் போனாலும் கூட, அதன் முன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் சாட்சியமளித்தே ஆக வேண்டும் என்பதே அந்தச் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகளின் வேண்டுகோளாகும்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் வழங்கப்படும் சாட்சியங்களும், அந்தக் குழுவின் அறிக்கைகளும், அதை உருவாக்கியவர்களின் இலக்குகளுக்கு அப்பால் சென்று, வேறு வேறு விடயங்களை நிறைவேற்றுவதற்கு – பின்னர் ஒரு காலத்தில் உதவக் கூடும். எனவே, தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினைப் புறக்கணிப்பதென்பது புத்திசாலித்தனமான முடிவல்ல!

எல்லாம் சரி, முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகளாக, அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்ற சிலருடைய சாட்சியத்தை ஏன் இந்தக் கட்டுரையில் நீங்கள் வலியுறுத்தவில்லை என்று – இந்தக் கட்டுரையை பத்திரிகைக்கு அனுப்புவதற்கு முன்னர் படித்து விட்டுக் கேட்டார் எனது நண்பரொருவர்.

சிலர் சாட்சியமளிப்பதை விடவும் ‘சும்மா’ இருப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் உதவியாகும்!

யார் அந்தச் ‘சிலர்’ என்பதை அரசியல் கணிதம் தெரிந்தவர்கள், கூட்டிக் கழித்துத் தெரிந்து கொள்ளட்டும்!!

(இந்தக் கட்டுரையை  13 நொவம்பர் 2010 அன்றைய  ‘சுடரொளி ‘ நாளிதழிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s