காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

மு.கா.வும் அடுத்த கண்டமும்! 20 ஒக்ரோபர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 9:31 பிப

color-dotமப்றூக்

Hakeem - 002முஸ்லிம் காங்கிரஸ் காலத்துக்குக் காலம் ஆபத்தான பல கண்டங்களுக்கு ஆளாகியிருக்கிறது! அதுவும் ஹக்கீம்
தலைவரான பிறகு மு.கா. நிறையவே கண்டங்களைக் கண்டிருக்கின்றது. அவற்றில் சிலவற்றிலிருந்து அது – தப்பிப் பிழைத்திருக்கிறது, சிலவற்றுக்குப் பலியாகியிருக்கிறது!

அந்தவகையில், மு.கா. மிக அண்மையிலும் ஒரு கண்டத்தைச் சந்தித்திருந்தது. 18 ஆவது திருத்த சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்காது போயிருந்தால், அந்தக் கண்டம் மு.கா.வை பலிகொண்டிருக்கும். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுந்தரப்போடு இணைந்திருப்பார்கள். கட்சி மீண்டும் உடைந்து பலவீனப்பட்டிருக்கும்.  நல்லவேளை, சாதுரியமாக யோசித்ததால்  ஹக்கீம் தன்னையும், கட்சியையும் கண்டத்திலிருந்து காப்பாற்றி விட்டார்.

கண்டங்கள் என்பவை – இருந்திருந்து விட்டுத்தான் அநேகமாக உருவாகும். இரண்டு கண்டங்களுக்கிடையில் நீளமானதொரு கால இடைவெளி இருக்கும். ஆனால், மேற்சொன்ன கண்டத்தைச் சந்தித்த களைப்பு நீங்குவதற்குள்ளேயே மு.கா.வினரும் ஹக்கீமும் இன்னுமொரு கண்டத்தை விரைவில் சந்திக்கப் போகின்றார்கள். அந்தக் கண்டம் அடுத்த மாதம் நிகழலாம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, அரசுக்கு மு.கா. ஆதரவளிப்பதால், அந்தக் கட்சிக்கு சில அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

மு.கா.வில் தலைவரையும் சேர்த்து 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், மு.கா.வுக்கு மிஞ்சிப்போனால் 03 அல்லது 04 அமைச்சுக்களே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் ஒன்று அமைச்சரவை அந்தஷ்துள்ளதாகவும், ஏனையவை பிரதியமைச்சுப் பதவிகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

ஆக, எப்படிப் பார்த்தாலும் – மு.கா.வின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிப் பேர்தான் அமைச்சர்களாகப் போகின்றனர். ஏனைய நான்கு பேரும் எம்.பி.க்களாத்தான் தொடர்ந்தும் இருக்கப்போகின்றார்கள்.

இதுதான் மு.கா. எதிர்நோக்கவுள்ள கண்டமாகும். அந்த 04 அமைச்சுப் பதவிகளையும் யார்யாருக்குப் பங்கிடுவது? அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதவர்களின் குழப்படிகளை எப்படிச் சமாளிப்பது? என்பதே மு.கா. எதிர்நோக்கவுள்ள அந்தக் கண்டமாகும்.

அமைச்சுப் பதவிகளைப் பங்கிடும் போது, மு.கா. ஆகக் குறைந்தது 04 வழி முறைகளைக் கையாள முடியும்!

வழிமுறை ஒன்று : நாடாளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள கட்சியின் பெரிய தலைகள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் ஏனையவர்களுக்கு வழங்குவது. (ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச மற்றும் செயலாளர் ரில்வின் போன்றவர்கள் நாடாளுமன்றப் பதவிகளைப் பெறாமல் கட்சிக்குள்ளிருந்து செயற்படுவது போன்று)

வழிமுறை இரண்டு : முன்பு அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களைத் தவிர்த்து, புதியவர்களுக்கு வழங்குவது.

வழிமுறை மூன்று : கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத் தன்மையினை அடிப்படையாக வைத்து – சீனியர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குதல்!

வழிமுறை நான்கு : ஜூனியர்களுக்கு அமைச்சுக்களை வழங்கி விட்டு Hasan Aliபெரிய தலைகள் எம்.பி.க்களாக தொடர்ந்தும் இருத்தல்.

மேற்சொன்ன வழிமுறைகள் அனைத்தும் சாத்தியமானவைதான். என்றாலும், அவைகளில் சில வழிமுறைகள் – கட்சியின் தலைவருக்கும், பெரிய தலைகளுக்கும் சாதகமற்றவை என்பதால், அவை நிகழ்வது சாத்தியமிருக்காது.

சரி, மு.கா.வுக்கு கிடைக்கும் அமைச்சுப் பதவிகளை அந்தக் கட்சி  எவ்வாறு பகிர்ந்து கொடுக்கும் போது குழப்பங்களை ஓரளவு தணிக்கலாம், எப்படிக் கொடுத்தால் பிரச்சினைகள் ஊதிப் பருக்கும் என்பது பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

அமைச்சுப் பதவிகளை கட்சியின் பெரிய தலைகள் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்தால்ள – ஹக்கீம், பஷீர், ஹசனலி ஆகிய மூவரும் பட்டியலின் முதலில் வருவார்கள்.

ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹசனலி மற்றும் பைசால் காசிம் ஆகியோர் நிந்தவூர்க்காரர்கள். பைசால் காசிம் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். ஹசனலி தேசியப்பட்டியல் வழியாக நியமனமானவர். நிந்தவூரில் பைசால் காசிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது, அதே ஊரைச் சேர்ந்த ஹசனலிக்கு தேசியப்பட்டியலை ஹக்கீம் வழங்கியமை குறித்து கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களுக்குள்ளும் பாரிய விமர்சனங்கள் உள்ளன.

மட்டுமன்றி, கடந்த நாடாளுமன்றத்திலும், இதேபோன்று பைசால் காசிம் நிந்தவூரில் எம்.பி.யாக இருக்கையில் அதே ஊரைச் சேர்ந்த ஹசனலி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆக, ஒரே ஊரில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இருக்கும் போது, அதே ஊரைச் சேர்ந்த ஹசனலிக்கு திரும்பத் திரும்ப இரண்டு தடவைகள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியமை பற்றிய விமர்சனங்கள் கொதிநிலையில் இருக்கும் போது, ஹசனலிக்கு அமைச்சுப் பதவியும் கொடுத்தால் கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரிக்கும் என்கிறார் நமது ஊடக நண்பர்!

மட்டுமல்ல, ஹசனலிக்கு அவ்வாறானதொரு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமும் ஏற்றுக் கொள்வதற்கு சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. காரணம், இம்முறை இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மு.கா. வேட்பாளர்களில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர், அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர், முன்பு பிரதியமைச்சராகவும் இருந்தவர். ஆக, தனக்கே அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என அவர் வாதிடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

இந்தப் பிரச்சினையை சமாளிக்க பைசல் காசிமுக்கும் ஓர் அமைச்சுப் பதவி கொடுக்கப்படுமானால், நிந்தவூருக்கு இரண்டு அமைச்சர்கள் ஆகிவிடும்! இதை கட்சிக்குள்ளிருப்பவர்களோ, கட்சியின் ஏனைய பிரதேசத்தவர்களோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கடுமையாக எதிர்ப்பார்கள்!

சரி, இதைவிடுத்து மாவட்டத்துக்கு ஒன்று எனும் அடிப்படையில் அமைச்சுப் பதவியினை வழங்குவதற்கு தலைமை தீர்மானித்தால் கூட, அங்கேயும் கண்டம் இருக்கிறது. முதலில் தலைவர் ஓர் அமைச்சை எடுத்துக் கொள்வார். பிறகு கிழக்கு மாகாணத்தை கவனித்தால், மட்டக்களப்பில் பஷீர் சேகுதாவூத் ஒன்னேயொன்று – கண்ணே கண்ணு. மு.கா.வுக்கு அங்கு அவர் மட்டும்தான் எம்.பி. திருகோணமலையிலும் பிரச்சினையில்லை அங்கும் தௌபீக் மட்டும்தான் மு.கா.வுக்கு எம்.பி. ஆனால், அம்பாறையில்தான் பிரச்சினை.

பைசால் காசிம், ஹரீஸ் என்று அம்பாறை மாவட்டத்திலே தேர்தலில் போட்டியிட்டு வென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேசியப்பட்டியல் எம்.பி. ஹசனலியுமாக 03 பேர் இருக்கின்றனர். இந்த இடத்தில் ஹசனலியைக் கழித்துப் பார்த்தாலும், அம்பாறை மாவட்டத்தில் அமைச்சுப் பதவி ஹரீஸுக்கா, பைசாலுக்கா என்கிறதொரு சர்ச்சை எழும்!

கடந்த முறை பிரதியமைச்சராக இருந்தவர் பைசால் காசிம். மட்டுமன்றி, பலர் கட்சியை விட்டுப் பிரிந்துபோன போது, இவர் தலைவரின் கூடவே இருந்தவர். கடந்த பொதுத்தேர்தலின்போது அவருடைய விளம்பரத்தில் ‘கட்சி மாறாத தலைமைத்துவம்’ என்று Harees - 004பைசல்காசிம் தன்னைக் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, இம்முறையும் அமைச்சுப் பதவியை அவர் தனக்குத் தருமாறு கோருவார் என்பதே நமது கணிப்பாகும்.

ஆனால், ஹரீஸ் தரப்பு அதை அனுமதிக்காது என்கிறார் அம்பாறையைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியொருவர். காரணம், இந்தமுறை நடந்த பொதுத் தேர்தலில் மு.கா. அபேட்சகர்களிலே அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் ஹரீஸ். மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்குள்ள மூன்று தொகுதிகளிலும் – கல்முனைத் தொகுதியில் மட்டும்தான் மு.காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அது ஹரீஸின் தொகுதியாகும். ஆக, மு.கா.வை அம்பாறையில் வெற்றிபெற வைத்த தொகுதியின் பிரதிநிதி எனும் வகையிலும், அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனும் வகையிலும் – தனக்கே அமைச்சுப் பதவியை வழங்க வேண்டுமென்று  ஹரீஸ் வாதிடுவார்.

இந்த இடத்தில் ஹக்கீமுக்கு விழி பிதுங்கும், கண்டம் உச்சத்தைச் தொடும்!

இதுமட்டும் பிரச்சினையில்லை. கிழக்கு மாகாணத்தினுடைய மாவட்டத்துக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்குவது எனும் கணக்கில் பார்த்தாலும், 03 மாவட்டங்களுக்கும் 03 அமைச்சுப் பதவிகள் போய்விடும். தலைவரும் ஒன்றை எடுத்துக் கொண்டால் – நான்கு!

அப்படியென்றால், வடக்குக்கு அமைச்சுப் பதவியில்லையா என்பார் நூர்தீன் மசூர்! வடக்குக்கு மு.கா. சார்பிலுள்ள ஒரேயொரு நாடாளுமன்றப் பிரதிநிதி நூர்தீன் மசூர்தான். மட்டுமன்றி, மனிதர் முன்பு பிரதியமைச்சராக இருந்தவர், கட்சியின் சீனியர்களிலும் ஒருவர்!

ஆக, நூர்தீனுக்கு அமைச்சுப் பதவியை வழங்காது விட்டால், வடக்கு மாகாணத்தையே மு.கா. புறக்கணித்து விட்டது போலாகிவிடும்.

அப்படியென்றால், இதற்குத் தீர்வுதான் என்ன? ஆகக்குறைந்தது மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட்டுவிட்டால் கூட, ஏனைய ஆறு எம்.பி.க்களும் அமைச்சுப் பதவிகளை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். ஆக, அரசாங்கத்திடம் மொத்தமாக 06 அமைச்சுக்களை மு.கா. பெற்றெடுத்தால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். கண்டத்திலிருந்து கட்சியும், தலைவரும் தப்பிக்கலாம்!

ஆனால், மு.கா.வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 06 அமைச்சுப் பதவிகளைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியொரு பெரிய சன்மானத்தைக் கொடுத்துத்தான் மு.கா.வை தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்கிற தேவைகளும் மஹிந்த அரசுக்கு இப்போதைக்கு இல்லை!

ஆக, மு.கா.வுக்கு 06 அமைச்சுப் பொறுப்புகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவென்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் நீங்கள் இப்படியும் யோசிக்கலாம். அதாவது, கிடைக்கும் அமைச்சுக்களை தலைவருக்கு விரும்பியவாறு பகிர்ந்து கொடுப்பது. கிடைக்காதவர்கள் என்னதான் செய்யப் போகிறார்கள்? அவர்கள் கோபித்துக் கொண்டு அல்லது பிரிந்து கொண்டு எங்குதான் போவார்கள்? மு.கா. எதிர்த்தரப்பில் இருக்கும் போது, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரச்சினைப்பட்டால் ஆளுந்தரப்புப் பக்கமாகச் சென்று விடுவார்களோ என ஹக்கீம் கவலைப்பட்டார். ஆனால், மு.கா.வே அரசாங்கத் தரப்புப் பக்கமாக இருக்கும் போது, அதன் எம்.பி.க்கள் தலைமையோடு பிரச்சினைப்பட்டாலும் எங்குதான் செல்வார்கள்? போவதென்றால் எதிர்க்கட்சிப் பக்கமாகத்தான் போய் அமர வேண்டும்.

எனவே, ஹக்கீம் அரசாங்கத்தோடு இருக்கும் நிலையில், அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்தளிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் வெறும் சலசலப்பாக மட்டும்தான் இருக்குமே தவிர, அது ஒரு கண்டமாக ஹக்கீமையோ, கட்சியையோ பலியெடுக்காது என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம்.

ஆனால், அவ்வாறு யோசிப்பது பிரச்சினையை தற்காலிகமாகக் கிடப்பில் போடுவதற்கு ஒப்பானதாகும். இந்த யோசனையின் வழியில் ஹக்கீம் நடந்து கொண்டால், அது அவரை எதிர்பாராத இடத்தில் பலியெடுத்து விடும்.

faisal casim - 009உதாரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சியில் மு.கா. சிறிது காலம் அரசாங்கத்தோடு இருந்து கொண்டு அமைச்சுப் பதவிகளையெல்லாம் அனுபவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். பின்னர், மஹிந்தவோடு பிணங்கிக் கொண்டு அரசாங்கத்தை விட்டும் மு.கா. வெளியேறியபோது என்ன நடந்தது? மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாயிசும், நிஜாமுத்தீனும் மு.கா.வோடு முரண்பட்டுக் கொண்டு அரசில் அப்படியே தொடர்ந்து இருந்தார்களல்லவா?

இதேபோல், அமைச்சுப் பதவிகளை ஹக்கீம் பகிரும்போது பாதிக்கப்படும் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தோடு மு.கா. பிணங்கிக் கொள்ளும் ஒரு கட்டத்தில் ஹக்கீமை பழிவாங்குவதற்காக, அரசோடு தொடர்ந்தும் இருக்கத் தொடங்குவார்கள்.

ஆக – எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், ஹக்கீமுக்கும் – மு.கா.வுக்குமான கண்டம் ஆரம்பித்து விட்டதுபோல்தான் தெரிகிறது!!

Countdown Start..!!

0

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும்இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s