காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

‘அவர்கள்’ குழந்தைகள்! 15 ஒக்ரோபர் 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 10:05 பிப

மப்றூக்
ன்னைச் சுற்றியுள்ள உண்மையான உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘அவர்களைப்’ பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா?

ஓன்றில் ‘அவர்களை’ பரிகாசத்துக்குரியவர்களாக நம்மில் பலர் பார்க்கிறோம். அல்லது பரிதாபத்துக்குரியவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்!

ஆனால், நம்மில் எத்தனைபேர் ‘அவர்களை’ – நமது சக ஜீவன்களாக நினைத்துப் பழகியிருக்கின்றோம்?

‘அவர்கள்’ தீண்டத் தகாதவர்களா? ‘அவர்கள்’ பாவப்பட்டவர்களா? இல்லையே! பிறகேன் ‘அவர்கள்’ நமது குடும்பத்தில் இருந்தால் அவமானமாகவும், வெளியில் இருந்தால் அலட்சியமாகவும் கருதுகின்றோம்!

நன்றாக யோசித்துப் பார்த்தால், ‘அவர்கள்’ பல சந்தர்பங்களில் குழந்தைகள் போலவே நடந்து கொள்கின்றார்கள்!

ஆனாலும், ஒரு குழந்தைக்குக் கொடுக்கும் சமூக அந்தஷ்தைக் கூட, நம்மில் பலர் ‘அவர்களுக்கு’க் கொடுப்பதில்லை!

‘அவர்கள்’, ‘அவர்கள்’ என்று நாம் மேலே கூறும் அவர்கள் – யார் என்றா கேட்கிறீர்கள்?

அவர்கள்தான் உளநோயாளர்கள்!

இவர்களை இழிவு படுத்தும் கீழ்நிலைச் சொற்கள் – நமது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனாலும் – இவர்களை உளநோயாளர்கள் என்றுதான் மருத்துவம் அழைக்கிறது.

உடலில் ஏற்படும் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போல் – உளநோயும் ஒரு வியாதிதான் என்று நம்மில் பலர் புரிந்துகொள்வதில்லை!

இன்று உலக உளநல தினமாகும்! ‘நாட்பட்ட உளநோய்களும், குடும்பங்களின் பங்களிப்பும்’ எனும் தொனியை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடத்துக்கான இன்றைய உளநல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நமது சமூகத்தில் அநேகமாக, நாட்பட்ட உளநோயாளர்கள் அவர்களின் குடும்பத்தவர்களால் கைவிடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதனால், குறித்த உளநோயாளி மேலும் மேலும் நோய்த் தாக்கத்துக்குள்ளாகி விடுகின்றார்.

உளநோயாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்தில் கூட, பெரிதாக அக்கறை செலுத்தப்படுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்!

உதாரணமாக, உலகில் 14 வீதமானோர் ஏதோ ஒருவகையில் உளநோய்க்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், உலகிலுள்ள 40 வீதமான நாடுகளில் உளநோய்க்கான வைத்தியக் கோட்பாடுகளும், 20 வீதமான நாடுகளில் உளநல வைத்தியம் தொடர்பில் சட்டங்கள்  எதுவுமில்லை என்பது அதிர்ச்சிகரமானதொரு தகவலாகும்.

இலங்கையிலும் உளநோய் குறித்த போதுமான விழிப்புணர்வுகளும், சுகாதாரச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை!

இலங்கையின் மொத்தச் சனத்தொலைகயில் 03 வீதமானோர் ஏதோவொரு உளநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், இலங்கையில் உளநோய் தொடர்பான மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவுள்ளது. 05 லட்சம் பேருக்கு 01 உளநோய் மருத்துவர் எனும் விகிதத்திலேயே இலங்கையில் உளநோய் சிகிச்சைக்கான மருத்துவர்கள் இருக்கின்றனர்.

இதேவேளை, உலகின் வேறுசில நாடுகளின் நிலை மிகவும் மோசமானதாகவுள்ளது. உதாரணமாக, தன்சானியாவில் உளநோய் தொடர்பான 06 அரசாங்க வைத்தியர்களே முழு நாட்டுக்குமாக உள்ளனர். கானாவில் 04 உளநோய் வைத்தியர்கள்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது. லாஓஸின் நிலை இதை விடப் பரிதாபம்ளூ அங்கு உளநோய் தொடர்பில் சிகிச்சையளிப்பதற்கு 02 வைத்தியர்கள்தான் உள்ளனராம்!

உளநோய் தொடர்பில், முழு உலகமும் இப்படித்தான் பாராமுகமாகவே இன்னும் இருக்கிறது.

உலகின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் வாழுகின்ற உலக நாடுகள், தமது சுகாதாரச் செலவீனங்களில் ஒரு வீதத்துக்கும் குறைவான தொகையினைத்தான் உலநல மருத்துவத்துக்குச் செலவிடுவதாக அறிக்கையொன்று கூறுகிறது.

ஆக, இந்த புள்ளிவிபரங்கள் – அறிக்கைகளையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, உளநோயாளர் தொடர்பிலான எமது பார்வையும், கவனமும் மிகவும் கீழ் மட்டத்திலேயே இன்னும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தனி நபரில் தொடங்கி – சர்வதேசம் வரை, உளநோயாளர் குறித்த பார்வையும், செயற்பாடுகளும் மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றன. அதனால், அவற்றினை மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

உளநோயாளர்கள் மிகவும் சிரத்தையோடும், அர்ப்பணிப்போடும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நமது பார்வையிலிருந்து இவர்கள் தவறும் போது, அவர்கள் தம்மைத் தாமே ஆபத்துக்குள் சிக்க வைத்துக் கொள்வார்கள்.

உதாரணமாக, இலங்கையில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 50 முதல் 60 வீதமானோர் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மன அழுத்தம் என்பது உளநோயின் ஒருவகை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அந்தவகையில், வருடமொன்றுக்கு இலங்கையில் சுமார் 06 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 01 லட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

எனவே, உளநோயாளர்கள் எப்பொழுதும் யாரோ ஒருவரின் கண்காணிப்புக்குள் இருக்க வேண்டிது அவசியமாகும். ஆனால், இந்தக் கண்காணிப்பு பெரும்பாலான உளநோயாளர்களுக்குக் கிடைப்பதேயில்லை!

இலங்கையில் உளநோய் அதிகரித்துச் செல்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது.

உளநோயாளர்களுக்கென இலங்கையில் நிறுவப்பட்டுள்ள பெரிய வைத்தியசாலையான அங்கொட மனநல வைத்திய நிலையத்தில் கடந்த வருடம் மட்டும் 08 ஆயிரத்து 29 உளநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், இவ்வருடம் கிட்டத்தட்ட 07 ஆயிம் பேர் அனுமதி பெற்றதாகவும் அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜெயான் மென்டில் தெரிவிக்கின்றார்.

எனவே, உளநோய் மற்றும் உளநோயாளர் குறித்து நாமும், தேசமும் மிக அவதானத்துடன் செயற்படுதல் வேண்டும்.

உதாரணமாக உளநோயின் ஒரு வகையான மன அழுத்தத்துக்கு பிரதான காரணங்களாக பின்வருவனவற்றை மருத்துவ உலகம் குறிப்பிடுகின்றது.
•    வறுமை
•    சமூக அங்கீகாரமின்மை மற்றும் கல்வியறிவின்மை
•    வன்முறைக்கு ஆளாகுதல்
•    தனிமைப்படுதல் மற்றும் விவாகரத்து (இதனால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்)
•    நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருத்தல்

எவ்வாறாயினும், ஆண்களை விடவும் – பெண்கள் 02, 03 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில், உளநோய் அதிகரித்துச் செல்வதற்கு இங்கு ஏற்பட்ட சுனாமி மற்றும் யுத்த அழிவுகள் பிரதான காரணங்களகக் குறிப்பிடப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் போது, தமது உடனிருந்தவர்களும், குடும்ப அங்கத்தவர்களும் கோரமாகச் சிதறி வெடித்து இறந்துபோனதைக் கண்ட பலர் – இன்று உளநோயாளிகளாக மாறிப்போயுள்ளனர்.

சுனாமியின்போது, தமது அன்புக்குரியவர்களை கண்ணெதிரில் கடலுக்குப் பலிகொடுத்த நிகழ்வினை மறக்க முடியாத பலர் – இன்று உளநோயாளர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் பற்றி, நம்மில் எத்தனைபேர் ஒரு கணமேனும் நேரமொதுக்கிச்  சிந்தித்திருக்கின்றோம்?

எனவே, உலக உளநல தினமான இன்றிலிருந்தாவது, உளநோயாளர்கள் குறித்து நமது பார்வையினை உயர்ந்த நிலையுடையதாக மாற்றிக் கொள்வதோடு, அவர்களுக்கு முடியுமான வரை உதவுவேன் என்கிற உறுதியை நமக்குள் எடுத்துக் கொள்வோம்.

1992 ஆம் ஆண்டு உலக உளச் சுகாதார சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கிணங்க, ‘உலக உளநல தினம்’ முதன்முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

உளநலச் சுகாதாரக் கல்வி, உலநலம் தொடர்பான விழிப்புணர்வு, உளநலம் எனும் விடயத்துக்காக ஓங்கிக் குரல் கொடுத்தல் ஆகியவைகளை முன்னிறுத்தியே ‘உலக உளநல தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தத் தினத்தை அனுஷ்டிக்கத் தொடங்கி 18 வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும், இந்தத் தினத்தைக் அனுஷ்டிப்பதனூடாக எதுவெல்லாம் நிகழவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ, அவை தேவையான அளவு நிகழ்வதாகத் தெரியவில்லை!

ஒரு கசப்பான உண்மை என்ன தெரியுமா?

உளநோயாளர்கள் தொடர்பில், நம்மில் பலர் ‘அவர்களை’ விடவும் மோசமாகவே நடந்து கொண்டிருக்கின்றோம்!

(இந்தக் கட்டுரையை 10 ஒக்டோபர் 2010ஆம் திகதிய ‘தமிழ் மிரர்’ இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s