காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தீகவாபி: வெட்கப்பட வைக்கும் கதை! 10 ஒக்ரோபர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 11:49 பிப

மப்றூக்
முன்னரெல்லாம் அரசாங்கத்தின் திரைகளுக்குப் பின்னால் நடைபெற்று வந்த சில விடயங்கள் இப்போது அரசாங்கத்தின் திரைகளில் படங்களாக ஓடத் தொடங்கியுள்ளன. அவைகளிலொன்று தீகவாபியை பிரதேச செயலகமொன்றாக மாற்றும் நடவடிக்கையாகும். இதற்கான ஏற்பாடுகள் அத்தனையும் மிகத் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

சரி, தீகவாபி எனும் பகுதிக்கு பிரதேச செயலகம் ஒன்றைக் கொடுத்தால் என்ன? அதை ஒரு பிரச்சினையாக எடுத்து இந்தக் கட்டுரையில் ஏன் பேச வேண்டும் என்பவை உள்ளிட்ட சில கேள்விகள் உங்களுக்குள் எழலாம். எனவே, சில விபரங்களை இங்கு நாம் விரிவாகப் பேசவேண்டியுள்ளது!

பிரதேச செயலக முறைமை என்பது – நிருவாகத்தை இலகுபடுத்துவதற்காகவும், அதை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். முன்பெல்லாம் ஒரு பிறப்புச்; சான்றிதழ் எடுப்பதற்கு பஸ் எடுத்து, மணிக்கணக்கில் பயணித்து ஏறி இறங்கிய பொதுமக்கள் இப்போது – அந்தச் சான்றிதழை தமது பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களில் ஒரு சில நிமிடங்களில் கூட பெற்றுக் கொள்ள முடிகிறது. நிருவாகத்தை மக்களின் காலடிக்கு கொண்டு செல்வது என்பது இதைத்தான்.

இந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகங்கள் உள்ளன. இவற்றில் கூடிய சனத்தொகையைக் கொண்ட பிரசேச செயலகம் சம்மாந்துறையாகும். அங்கு 52 ஆயிரத்து 552 பேர் உள்ளனர். சிறிய செயலகம் லகுகலை. அதன் மக்கள் தொகை 07ஆயிரத்து 703 எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் 21 ஆவதாக இன்னுமொரு பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அது – தீகவாபி பிரதேச செயலகமாகும்.

தீகவாபி என்பது சிங்கள மக்களைக் கொண்டதொரு குக்கிராமம். அட்டாளைச்சேனைப்  பிரதேச செயலகத்திலுள்ள தீகவாபி 02 கிராம சேவகர் பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. (அதாவது,
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதில் இரண்டு பிரிவுகள்தான் தீகவாபி என அழைக்கப்படுகிறது) தற்போதைய 2010 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி இந்தக் கிராமத்தில் 597 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தச் சனத்தொகை 02 ஆயிரத்து 75 ஆகும்! இது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 4.6 (04 தசம் 6) வீதமாகும்.

இந்த வகையில், மேற்படி 4.6 வீதமான தீகவாபி மக்கள் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 20 முதல் 25 வீதமான நிலப்பரப்பினை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இதன் விசாலம் கிட்டத்தட்ட 05 ஆயிரம் ஏக்கர்களாகும்.

மேற்படி 05 ஆயிரம் ஏக்கர் நிலத்தினையும் தீகவாபி பகுதியினர் எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு நீண்டதொரு பின்னணிக் கதையிருக்கிறது.

தீகவாபியிலுள்ள விகாரையை வைத்துக் கொண்டு அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் காணிகள் புனித பிரதேசம் எனும் பெயரில் சுவீகரிக்கப்பட்டன. பின்னர் அப்பகுதியிலுள்ள பூமிக்கடியில் புராதனப் பொருட்கள் புதையுண்டிருப்பதாகக் கூறி, தொல்பொருள் திணைக்களத்தினர் முஸ்லிம் மக்களின் மேலுமொரு தொகுதிக் காணியினை கையகப்படுத்திக் கொண்டனர். இவை தவிர தீகவாபி எல்லையிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் – அப்பகுதிப் பெரும்பான்மையினத்தவர்களால் அடாத்தாகப் பறித்தெடுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, தீகவாபி எல்லையிலுள்ள பூமிக்கடியில் பழமை வாய்ந்த வைத்தியசாலையொன்று இருந்தமைக்கான தடயங்கள் இருப்பதாகக் கூறி, தொல்பொருள் திணைகளத்தினர் அப்பகுதியிலுள்ள அரை ஏக்கர் காணியினை சட்டரீதியாகக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரை ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு அதைச் சூழவுள்ள 450 ஏக்கர் நிலத்தினை அவர்கள் இப்போது பிடித்து வைத்திருக்கின்றார்கள்.

தீகவாபி எல்லையில் முஸ்லிம்கள் தமது காணிகளை ஆண்டாண்டு காலமாகக் கொண்டுள்ளனர். பொன்னன்வெளி, வெள்ளக்கல் தோட்டம், ஆள்சுட்டான் வயல் (பொன்னன்வெளி கிழல்), திராயோடை, துரவையடிமடு என்று சுமார் 1200 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட அந்தக் காணிகளுக்கு அரசாங்கம் வழங்கிய காணி அனுமதிப் பத்திரங்கள் இன்னுமுள்ளன.

உதாரணமாக, தீகவாபி எல்லையிலுள்ள பள்ளக்காட்டுப் பகுதில் காணிகளைக் கொண்டிருந்த 135 பேருக்கு 1920 ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த அப்போதைய பிருத்தானிய ஆளுநர் ஜோன் ஹரிசன் என்பவரால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்படி 135 பேரினதும் காணி அனுமதிப்பத்திரங்கள் பின்னர் 1945 ஆம் ஆண்டு அவர்களுக்குச் சொந்தமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

தீகவாபி எல்லையினுள்ளிருக்கும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆள்சுட்டான் (பொன்னன்வெளி கிழல்) காணியில் சுமார் 150 ஏக்கரினை – தீகவாபியைச் சேர்ந்த பிரதேசசபை மட்டதிலுள்ள அரசியல்வாதியொருவர் துண்டு துண்டாகப் பிரித்து விற்றுள்ளார். கடந்த யுத்தகாலத்தில் முஸ்லிம்கள் தமது காணிகளைச் சென்று பார்வையிட முடியாமல் போனதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த அரசியல்வாதி இந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளார்.

ஆனாலும், மேற்படி அரசியல்வாதியின் இந்த நடவடிக்கைக்கெதிராக காணிச்சொந்தக்காரர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையுத்தரவொன்றினைப் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. அதற்கிணங்க, காணிச்சொந்தக்காரர்கள் அவர்களுடைய காணியில் விவசாயத்தை மேற்கொள்ள முடியுமென்றும், அவர்களைத் தவிர வேறு யாரும் குறித்த காணிகளுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு, முஸ்லிம்களின் காணிகள் – தீகவாபிக்காக பல்வேறு காரணங்களின் பொருட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது வனவிலங்குத் திணைக்களத்தினர் யானைப் பாதுகாப்பு வேலி அமைத்தல் எனும் பெயரில் முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் திட்டமொன்றைத் தொடங்கியிருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, சம்மாந்துறை கரங்காவ வட்டையிலுள்ள சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கை நிலங்களை யானை வேலி அமைத்து வனவிலங்குத் திணைக்களத்தினர் அபகரித்துள்ளனர். இதில் வீரமுனை கோயிலுக்குச் சொந்தமான காணியும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், 597 குடும்பங்களையும், 02 கிராமசேவையாளர் பிரிவுகளையும் கொண்ட தீகவாபிக்கு பிரதேச செயலகமொன்று தேவைதானா? அதை எப்படி வழங்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம்!

ஆனால், கதை வேறாக இருக்கிறது. ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு அங்கு மக்கள் தொகை இத்தனை இருக்க வேண்டும், அதன் நிரப்பரப்பு இத்தனை ஏக்கர் இருக்க வேண்டும் என்றெல்லாம் – எந்தவித நிபந்தனைகளும் பார்க்கப்படுவதில்லையாம். அமைச்சரவையில் அங்கீகாரமொன்றைப் பெற்றுவிட்டால், பிரதேச செயலகமொன்றை உருவாக்கி விட முடியும் என்கிறார் நிருவாக சேவையிலிருக்கும் நமது அன்புக்குரிய அதிகாரியொருவர்!

எனவே, தீகவாபிக்கென பிரதேச செயலகமொன்றை உருவாக்குவதென்பது பேரினவாதச் சிந்தனையாளர்களுக்கு கஷ்டமானதொரு காரியமல்ல!

சில காலங்களுக்கு முன்னர், தீகவாபியின் விகாராதிபதி தமக்கு பிரதேச செயலகமொன்றை வழங்க வேண்டுமெனக்கோரி அரசாங்கத்துக்குக் கடிதமொன்றை எழுதியிருந்தார். அவ்வாறு வழங்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன என்றும் அவர் தனது கடிதத்தில் குடிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் குறித்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் அரச தரப்பு அபிப்பிராங்களைக் கோரியிருந்தது. ஆனால், தீகவாபி விகாராதிபதி சொன்ன காரணங்களைக் கொண்ட பல பகுதிகள் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குள் இருப்பதாகவும், அந்தக் காரணங்களை முன்னிறுத்தி தீகவாபிக்கு பிரதேச செயலகமொன்றைக் கொடுப்பதாயின் பல நூற்றுக் கணக்கான பகுதிகளுக்கு பிரதேச செயலகங்களை வழங்க வேண்டி வரும் எனவும் கூறி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் பதிலளித்தது.

இதேவேளை, புதிதாக எல்லைகளை நிர்ணயித்து, நாட்டில் மேலும் பல புதிய கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்கும் கோதாவொன்றில் அரசாங்கம் குதித்திருக்கிறது. இதனூடாக, தமக்குத் தேவையான சில புதிய நிருவாக பிரதேசங்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதன்படி 32 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 44 பிரிவுகளாக்கப்பட்டு புதிய எல்லைகள் இடப்பட்டுள்ள. இந்த புதிய எல்லைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லையாயினும், விரைவில் அமுல்படுத்தப்படும்!

இதில் குறிப்பிட வேண்டி விடயம் என்னவெனில், அட்டாளளைச்சேனைப் பிரதேச செயலகப் பகுதிகளில் புதிய எல்லைகள் இனங்காணப்பட்டுள்ள போதும், தீகவாபியின் 02 கிராம சேவகர் பிரிவுகளும் அப்படியேதான் இருக்கின்றன. காரணம், அங்கு புதியதொரு கிராம சேவகர் பிரிவினை உருவாக்குமளவுக்கு சனத்தொகை இல்லை!

இப்படியானதொரு நிலையில், தீகவாபியை பிரதேச செயலகமாக உருவாக்கும் பேரினவாதிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. சிறுபான்மையினத்தவர்களின் நிலங்களைக் களவாடுவது, நிருவாக பொறிமுறைகளினூடாக அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது போன்ற பேரினவாத நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் – தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் ஒரு தீகவாபி பிரதேச செயலகம் தேவையாக இருக்கிறது.

அதனால், தீகவாபி – மிக அவசரமாக ஒரு பிரதேச செயலகமாய் தோற்றம் பெறும் என்கிறார் அரசியலில் பழம்தின்றவரான நமது முன்னாள் மக்கள் பிரதிநிதியொருவர்.

அப்படியென்றால், அரசாங்கத்திலிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் குறிப்பாக, கிழக்கின் ஒரேயொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள மந்திரி என்று தேசிய காங்கிரஸ்காரர்களால் கொண்டாடப்படும் அமைச்சர் அதாஉல்லா போன்றவர்கள் தீகவாபி பிரதேச செயலகம் உருவாக்குவதைத் தடுத்து நிறுத்த மாட்டார்களா? அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது என்ன செய்யப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

அப்படி நீங்கள் கேட்டால் உங்களுக்கு அரசியல் தெரியாது அல்லது அல்லது அரசியல் அறிவில் நீங்கள் பலவீனமானவர்கள் என்றுதான் கூற வேண்டியிருக்கும். ஒரு தீகவாபிக்கு எதிராகக் குரல் கொடுத்து – அரசாங்கத்திலுள்ள பேரினவாதிகளிடம் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு அதாஉல்லாவோ நமது முஸ்லிம் அமைச்சர்களோ அரசியல் தெரியாதவர்களல்லர்.

அதாஉல்லாவுக்கு அரசியல் தெரியும்! அதனால், அவர் தீக்கவாபி பிரதேச செயலகம் எனும் செயற்பாட்டுக்கெதிராகக் குரல் கொடுக்க மாட்டார். அப்படி எதிர்க்குரல் எழுப்பும் நோக்கம் இருந்தால், முஸ்லிம்களின் காணிகள் இங்கு களவாடப்படும் போதே, அதை அவர் செய்திருப்பார் என்கிறார் – அம்பாறை மாவட்டத்தின் சமூக அக்கறையாளரொருவர்!

இதனால், நாம் கூறுவது யாதெனில், அரசாங்கத்திலுள்ள நமது முஸ்லிம் அமைச்சர்களின் கைதூக்கலினூடாக வழங்கப்படும் அங்கீகாரத்துடன்தான் – தீகவாபி பிரதேச செயலகம் உருவாகும்!

வெட்கக் கேடுதான் என்றாலும், முஸ்லிம் சமூகம் இதை ஜீரணித்தேயாக வேண்டும்!!

(இந்தக் கட்டுரையை  09 ஒக்டோபர் 2010 அன்றைய  ‘சுடரொளி ‘ நாளிதழிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s