காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

‘கடி’ ஜோக்கும் பின்னரான காயங்களும்! 8 ஒக்ரோபர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 10:04 பிப

மப்றூக்

சூரியனின் ஆரம்ப காலத்தில் பல அறிவிப்பாளர்கள் பகுதி நேர அடிப்படையில்தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நானும் அப்படித்தான். வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் அப்போது முழு நேரப் பத்திரிகையாளராக – நான்  பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதனால் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகத்தான் பணியாற்ற முடிந்தது.

அப்போதுகளில் நிகழ்சி செய்வதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குப் பெரிதாகக் கிடைப்பதில்லை. நடா அண்ணாதான் நிகழ்சி முகாமையாளர். ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று என்பது போல், எப்போதாவது ஓரிரு நிகழ்சிகள்தான் எனக்குக் கிடைத்தன. இதுபற்றி நடா அண்ணாவிடம் பல தடவைகள் பேசினேன். மற்றவர்களைப் போல் எனக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறும் கேட்டேன். ஆனால், மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

அந்த வேளைகளில் நடா அண்ணாவுடன் கோபம் கோபமாக வரும்! வானொலியில் நிகழ்சி செய்வதற்கான சந்தர்ப்பங்களை மிகவும் சொற்பமாகவே அவர் எனக்கு வழங்கினார். ஆயினும், நடா அண்ணா இல்லாவிட்டால் சூரியனில் இணைவதற்கான சர்ந்தப்பம் எனக்குக் கிடைத்தேயிருக்காது!

ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் அலுவலகம் சென்றேன். திடீரென நடா அண்ணா அழைத்து – “நாளை காலை ‘சூரிய ராகம்’ நிகழ்சியை செய்ய முடியுமா?” என்று கேட்டார். காலை நிகழ்சியென்பது பரபரப்பு மிக்கது. நிறைய விளம்பரங்களை ஒலிபரப்ப வேண்டியிருக்கும். சற்று வேகமாகவும் இயங்க வேண்டும். இதற்குரிய பயிற்சிகளோ, அனுபவங்களோ எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் நடாவிடம் சொல்ல முடியாது. அந்த நிகழ்சியை செய்ய இயலாது என்று கூறினால், பின்னர் எனக்கான அத்தனை சந்தர்ப்பங்களும் இதைக் காரணமாக வைத்தே மறுக்கப்படும் என்பதால், ”சரி செய்கிறேன்” என்றேன்!

அன்று இரவு தூக்கமே வரவில்லை. காலை 06 மணிக்கு நிகழ்சியை நான் ஆரம்பிக்க வேண்டும். 07 மணிக்கு அறிவிப்பாளர் குமுதினி என்னோடு நிகழ்சியில் இணைந்து கொள்வார். குமுதினியை ‘அக்கா’ என்றுதான் அழைப்பேன். நிகழ்சி பற்றிய விபரங்களை அவரிடம் முதல் நாளே கேட்டு அறிந்து கொண்டேன். ஆனாலும், அன்றைய நிகழ்சி குமுதினி வரும்வரை தடுமாற்றங்கள் நிறைந்ததாகவே அமைந்தது.

சூரிய ராகங்கள் – நேயர்களை இணைத்துக் கொள்ளும் ஒரு நிகழ்சி. எனவே, அன்று நேயர்களிடம் ‘கடி ஜோக்ஸ்’ கேட்பது என்று நானும் குமுதினியும் தீர்மானித்தோம். கையில்  கடி ஜோக்ஸ் புத்தகமொன்று இருந்ததால், இடைக்கிடையே நாங்களும் ஜோக்ஸ் சொல்லுவதெனவும் முடிவாயிற்று! இதன்படி நிகழ்சியைச் தொடர்ந்தோம்!

அந்த வேளையில் நேயர் ஒருவர் இணைந்தார். ஏதோ ஜோக் ஒன்று சொன்னார். சிரித்தோம். பதிலுக்கு நாங்கள் ஒரு கடிக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு பதில் கூறுமாறும் நேயரிடம் கூறி, புத்தகத்தில் இருந்த கேள்வியொன்றை எடுத்து விட்டேன். ஆனால், அந்தக் கேள்விதான் எனக்கு கண்டமாக அமையும் என்று யார்தான் நினைத்தார்கள்!

”ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் செல்லும் ஒளவையார், அங்கிருந்த பணியாளரிடம் வடை கொண்டு வருமாறு சொல்கிறார். அப்போது ஒளவைளயாரிடம் பணியாளர் ஒரு கேள்வி கேட்டார். அப்படி என்னதான் கேட்டிருப்பார் என  நீங்கள் நினைக்கின்றீர்கள்” என்று கேட்டேன். நேயருக்கு பதில் தெரியவில்லை (அதாவது எனது கையிலிருந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடையை அவர் கூறவில்லை). சரி, தெரிந்தவர்கள் அழையுங்கள் என்றால், அழைத்தவர்கள் எவருக்கும் விடை தெரிந்திருக்கவில்லை. ஆக, விடையை நானே சொல்ல வேண்டியதாயிற்று. அதாகப்பட்டது, ”சுட்ட வடை வேணுமா, சுடாத வடை வேணுமா என்றுதான் ஒளவையார் கேட்டிருப்பார்” என்று எனது விடையை அவிழ்த்து விட்டேன். இப்படி, கேள்வி பதில்களாக எங்கள் நிகழ்ச்சி – அப்படியிப்படியென்று எப்படியோ 10 மணி வரை நீண்டு நிறைவடைந்தது!

அன்று சனிக்கிழமை என்பதால் அறிவிப்பாளர்களுக்கான கூட்டம் இருந்தது. காலை 10.30 மணியிருக்கும், நடா வந்தார்! 11 மணிக்கு கூட்டம் என்றிருந்தது. நடா அண்ணாவைக் கண்டதும் அருகே சென்று ”அண்ணா நிகழ்சி கேட்டீங்களா? எப்படியிருந்தது?” என விசாரித்தேன்.
அறிவுபூர்வமாக விமர்சனங்களை முன்வைப்பதில் நடா வித்தகர். நாம் யோசிக்காத கோணங்களிலிருந்து மிக நுணுக்கமாக சில விடயங்களைச் சொல்லித் தருவார். இதுபோலவே, தனக்கு பிடிக்காத ஒருவர் எத்தனை சிறப்பாக நிகழ்சி செய்திருந்தாலும் – மிகச் சூசகமாக நடா மட்டம் தட்டி விடுவார். அதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
”நல்லா இருந்துச்சு. நான் கொஞ்சம் லேட்டாத்தான் கேட்டேன். ஜோக்ஸ் எல்லாம் சொல்லி நல்லாச் செய்தீர்” என்றார் நடா! ஓரளவு ஆறுதலாக இருந்தது.

அன்றைய நிகழ்சியில் எனக்குத் திருப்தியில்லை. முதலாவது – காலை நிகழ்சியல்லவா! ஆனாலும், நடா அண்ணா ”நல்லா இருந்துச்சு” என்றதால், நிகழ்சியின் இடையில் விட்ட சில பிழைகளுக்கும், தடுமாற்றங்களுக்கும் திட்டுக் கிடைக்காது. அந்தவகையில் சந்தோசம்தான் என்று எண்ணிக் கொண்டேன்!

11.00 மணி. கூட்டம் ஆரம்பமானது! ஒவ்வொரு நிகழ்சி பற்றியும், அதன் நிறை குறைகள் பற்றியும் பேசப்பட்டது. அப்போது திடீரென உரத்த குரலில் நடா என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.  ”ஐசே, நீர் என்ன சும்மா பைத்தியக்காரன் மாதிரி ரேடியோவில் பேசுறீர். ஓளவையார் என்றால் உமக்கு யாரென்று தெரியுமோ? அவர் ஒரு தெய்வீகப் புலவர். உம்மட முகம்மது நபியைப் பற்றி நீர் இப்படி பேசுவீரோ…..” என்றார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்னர்தான் எனது நிகழ்சியை நன்றாக இருந்ததாகச் சொன்னவருக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படி? என்று யோசிப்பதற்குள் எனக்கான பூசை புனஸ்காரங்ளெல்லாம் செய்து முடிக்கப்பட்டாயிற்று.

கடி ஜோக் என்று – தமிழ் சினிமாக்களிலேயே கடவுளர்களின் பெயர்களைச் சொல்லி நையாண்டி வசனங்களெல்லாம் இடம்பெறும் போது, இந்தச் சின்ன விடயத்துக்குப் போய், நடா – ஏன் அன்று என்னைத் திட்டினார் என்று தெரியவேயில்லை!

நடா அண்ணாவிடம் அதுபற்றி – இதுவரை நான் கேட்கவுமில்லை!
o

(வீரகேசரி வெளியீடான  ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

One Response to “‘கடி’ ஜோக்கும் பின்னரான காயங்களும்!”

  1. உங்க தலைப்பைப் படித்துவிட்டு இந்தக் கேள்வியை வாசிக்கும் போதே எனக்குப் புரிந்தது.. இப்படி ஒரு பேச்சு கிடைத்திருக்குமெண்டு.

    ஆனா அது நடா அண்ணாவிடம் இருந்து கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..

    எப்படியோ உங்களுக்கு ஏச்சு கிடைச்ச அளவில் சந்தோசம்..
    ஹி ஹி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s