காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அலவாங்கு வானூர்தி! 6 ஒக்ரோபர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Puthithu @ 9:11 பிப

மப்றூக்

மது ஊடகங்கள் சிலவற்றின் தமிழ் கண்டுபிடிப்புகள் சிலவேளை சித்திரவதைப்புகளாக அமைந்து விடுவதுண்டு! சில ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயம். நம்மூர் கிழவிக்குக் கூட ‘கார்’ என்றால் புரிந்து விடும். இதைப்போய் சில ஊடகங்கள்  ‘மகிழூந்து’ என தமிழ்ப் படுத்தித் தொலைக்கின்றன. யாருக்குத்தான் விளங்கப் போகிறது?

சூரியன் செய்திப் பிரிவிலுள்ளோர்தான்  இதை பிடிவாதமாகத் தொடர்ந்து வருகின்றனர். நான் செய்தி வாசித்து முடித்த பின்னர் எத்தனையோ நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழூந்து என்றால் என்ன என்று விசாரித்திருக்கின்றார்கள். பாமரனும் விளங்கும் வகையில் செய்தியின் மொழிநடை அமைய வேண்டும் என்பதே ஊடகவியலின் அடிப்படையாகும்!

பல்வேறு தடவைகள் இதுபற்றி சூரியன் செய்தியாசிரியர்களுடன் நான் விவாதித்திருக்கின்றேன். அவர்களுடன் நல்ல வகையானதோர் உறவு எனக்கிருந்தது (இப்போதும் இருக்கின்றது). குறிப்பாக சில செய்திகளை எழுதும்போது செய்தி ஆசிரியர் இந்திரஜித்துடன் (இப்போது பிரதம ஆசிரியர்) காத்திரமாக விவாதித்து நல்ல முடிவுகளையும் பெற்றதுண்டு.

ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதில் இந்திரஜித் விடாப்பிடியாகவே இருப்பார். ஆனால், செய்தியாசிரியர் சிகாமணி அண்ணாவுக்கு பெரிதாக இதில் விருப்பமில்லை. எனக்கும் இதில் உடன்பாடு குறைவு. ஆகவே, நான் செய்தி வாசிக்கும் போது ‘மகிழூந்து’ என எழுதப்பட்டிருந்தால் ”கார் எனப்படும் மகிழூந்து” என்றுதான் வாசிப்பேன். இதன்போது, செய்தியைக் கேட்போருக்கு ‘மகிழூந்து’ என்றால் என்ன என்பதற்கான விடை கிடைத்துவிடும்.

சூரியனில் இணைந்து கொண்ட இரண்டாவது அறிவிப்பாளர் குழுவில் நானும் ஒருவன். சர்மிளா, ரணனன், காயத்திரி மற்றும் ரபீக் ஆகியோர் ஏனையவர்கள். 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி எமக்கான நியமனம் கிடைத்தது. அதற்கு ஒரு வருடத்தின் பின்னர் – மேலும் சிலர் அறிவிப்பாளர்களாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இரண்டெழுத்துப் பெயரைக் கொண்ட அறிவிப்பாளரும் ஒருவர்!

அறிவிப்பாளர்களில் இருவகையினர் உள்ளனர். சிலர் வானொலியில் – தாம் பேசும் விடயதானங்கள் குறித்து அதிகமாக அக்கறை செலுத்துவார்கள். அடுத்த வகையினரோ தமது குரலில்தான் அக்கறை கொள்வார்கள். பின் சொன்ன வகையினர் –  தாங்கள் பேசும் விடயதானங்களில் அதிகமாய் கோட்டை விட்டுவிடுவதுண்டு! இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளர் இதில் – இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்!

சில ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப் படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன் அல்லவா? ஆனாலும், நமது பேச்சு வழக்கில் கலந்து போயுள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்பதம் என்ன என்பது குறித்து அனேகமாய் தேடித் தெரிந்து வைத்துக்கொள்வேன். பிடிக்காத விடயம் என்பதற்காக அதுபற்றி அறிந்து கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. ஓர் ஒலிபரப்பாளனுக்கு சகல துறை குறித்தும் தேடல் இருக்க வேண்டும். அது மிகவும் அவசியம்!

ஒருநாள் இரவுச் செய்தியறிக்கை. இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளர் வாசித்துக் கொண்டிருந்தார். செய்தியின் ஓரிடத்தில் ‘அலவாங்கு வனூர்தி’ மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் வாசித்தார். கேட்டுக் கொண்டிருந்த பலருக்கு அது என்ன என்றே புரியவில்லை. அது புதியதோர் வானூர்தி அல்லது ஆகாய மார்க்கமாகத் தாக்கும் ஆயுதம் எனச் சிலர் கருதியிருக்கலாம். செய்தியறிக்கையை முடித்து விட்டு வந்த இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளரை விசாரித்தபோதுதான் தெரிந்தது, செய்தியில் எழுதப்பட்டிருந்தது ‘உலங்கு வானூர்தி’ என்று! இதில் கொடுமை என்னவென்றால் ஹெலிகொப்டரைத்தான் தமிழில் உலங்கு வானூர்தி எனக் கூறுவதென்று செய்தியை வாசித்தவருக்கும் தெரியாது!

இந்த அறிவிப்பாளர் பற்றிய இன்னொரு கோமாளிக் கதையுமுள்ளது! அறிவிப்பாளர்கள் சிலருக்கு பகல், மாலை மற்றும் முன்னிரவு நேர நிகழ்சிகள் வழங்கப்படுவதில்லை. இரவு 12 மணிக்குப் பிறகு ஒலிபரப்பாகும் நள்ளிரவு நிகழ்சிகளிலேயே அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அவ்வாறான இரவு நேர அறிவிப்பாளர்களில் இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளரும் ஒருவராக இருந்தார்!

பகல் நிகழ்சிகளில் அல்லது முன்னிரவு நிகழ்சிகளில் கடமையாற்ற வேண்டுமென்று நள்ளிரவு நேர அறிவிப்பாளர்களுக்கு மிகவும் ஆசைதான். ஆனாலும், அவ்வாறான சந்தரப்பங்கள் அவர்களுக்குக் கிடைப்பதென்பது மிகவும் அரிது.

அறிவிப்பாளர்களுக்கான வாராந்தக் கூட்டம் அலுவலகத்தில் இடம்பெறும் வழமையொன்று அப்போது சூரியனில் இருந்தது. அதன்போது, எங்கள் வானொலியின் நிகழ்சித் தரம், குறைகள் மற்றும் போட்டி வானொலிகளின் நிகழ்சிகள் குறித்தெல்லாம் அலசுவோம். இந்தக் கூட்டத்துக்கு சிரேஷ்டமான அறிவிப்பாளர்கள் சமூகமளித்தல் கட்டாயமாகும். சிலவேளை இவ்வாறான கூட்டங்களின் போது – சிரேஷ்டமானோர் யாராவது நிகழ்சி செய்து கொண்டிருந்தால், அவரை விடுவிக்கும் பொருட்டு – நள்ளிரவு நேர அறிவிப்பாளர்களில் ஒருவர், குறித்த நிகழ்சியைக் கையேற்று நடத்துமாறு பணிக்கப்படுவார்.

பகலில் நிகழ்சி செய்வதற்கான சந்தர்ப்பம் – நள்ளிரவு அறிவிப்பாளர்களுக்கு அநேகமாக, இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் கிடைப்பதுண்டு!

இப்படித்தான் – ஒரு சனிக்கிழமை பின்னேரம் என்று நினைக்கிறேன். அறிவிப்பாளர்களுக்கான கூட்டம் என்பதால் அனைவரும் வந்திருந்தோம்.  இதனால், இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளருக்கு பகல் நேர நிகழ்சியை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

சூரியனின் அப்போதைய நிகழ்சிப் பிரிவு முகாமையாளராக அபர்ணா பணியாற்றினார்! அன்றைய கூட்டத்துக்கு அபர்ணா வருவதற்கு தாமதமானதால் நாங்கள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். அபர்ணா வந்தார். திடீரென எங்களிடம் இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளரின் பெயரைச் சொல்லித் திட்டத் தொடங்கினார். எங்களுக்கோ எதுவும் புரியவில்லை. பின்னர் அபர்ணா விஷயத்தை விளக்கமாக கூறிய போது – வயிறு வலிக்க, நீண்ட நேரம் சிரித்தோம்!

பெண்கள் வயதுக்கு வருவதை பூப்படைதல், அல்லது பூப்பெய்துதல் என்றெல்லாம் கூறுவதுண்டல்லவா? இது இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளருக்குத் தெரியுமோ இல்லையோ – நமக்குத் தெரியாது! அப்போது மின்சாரக் கனவு திரைப்படம் வந்த புதிது. அதில் ‘பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை’ என்று ஒரு பாடல் உண்டு! அந்தப் பாடலை ஒலிபரப்புவதற்கு முன்னர் ஏதாவது பேச வேண்டும் என்கின்ற ஆசையில், தனது விருப்பத்துக்கேற்றவாறு வானொலியில் கதைத்த நம்ம அறிவிப்பாளர், இறுதியாக – ”நேயர்களே… நீங்களும் பூப்படைய ஆசையா”  என்று கேட்டு விட்டு, பாட்டை ஒலிபரப்பியிருக்கின்றார்.

இந்தக் கூத்தையெல்லாம் வாகனத்தில் கேட்டுக் கொண்டு வந்த அபர்ணா –  இரண்டெழுத்து அறிவிப்பாளரின் பெயர் சொல்லி, எங்களிடம்  திட்டித் தீர்த்தார்!

பின்னர், அந்த அறிவிப்பாளருக்கு அபர்ணாவிடமிருந்து நேரடியாகவே பூசைகள் கிடைத்தன!

இப்போது அந்த இரண்டெழுத்துப் பெயர் அறிவிப்பாளர் – அரச வானொலியொன்றில் பகுதி நேர அறிப்பாளராக இருக்கின்றார்!!

o

(வீரகேசரி வெளியீடான  ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

 

1 Responses to “அலவாங்கு வானூர்தி!”

  1. ஹா ஹா எனக்கும் யாரென்று தெரியுமே….


பின்னூட்டமொன்றை இடுக