காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

நான் – வெள்ளையன் – மலைப்பாம்பு! 5 ஒக்ரோபர் 2010

Filed under: ஆகாயத்தில் வசித்தவன் — Mabrook @ 10:41 முப

மப்றூக்
mic-1வானொலியில் அறிவிப்பாளனாக வரவேண்டுமென்று நான் நிறையவே அலைந்திருக்கிறேன். கொழும்பில் வந்து நின்று பல நாள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். பஸ்சுக்கு காசில்லாமல் கொழும்பில் நடந்து திரிந்திருக்கின்றேன் – என்றெல்லாம் சிலரால் கூறப்படும் துயர் நிறைந்த அனுபவங்கள் போல எவையும் என்னிடமில்லை! நான் வானொலியில் சேர்ந்த கதையானது கண்மூடித்திறப்பதற்குள் நிகழும் மாயாஜாலம் போல் அதிசயமானதொன்று! அதை பிறகு சொல்கிறேன்.

சூரியன் எப்.எம். யில் நான் சேர்ந்து கொண்டபோது, அங்கிருந்த அறிவிப்பாளர்களில் அனேகமானவர்கள் வித்தியாசமான திறமைகளைக் கொண்டவர்களாக இருந்தனர். முதன் முதலாக உலக வர்த்தக மையத்தின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கோபுரத்தின் 35 ஆவது மாடியினுள் நுழைந்த போது நான் சுவாசித்த – காற்றை நறுமணப்படுத்தும் அந்த வாசம் இன்னும் என் ஞாபகங்களில் மிதக்கிறது.

அப்போது – என் ஆரம்ப நாட்களில் நான் ஒட்டிக் கொண்ட நண்பர்களில் வெள்ளையனும் முகுந்தனும் குறித்துச் சொல்லத்தக்கவர்கள். இருவரும் எனக்கு சிரேஷ்டமானோர். என்றாலும் நான் திறமைகளை வெளிப்படுத்தும் போது, மனம் நிறைந்து பாராட்டுவார்கள். என் பயிற்சிக் காலத்தின் போது அவர்களுடன்தான் அதிகமான நாட்களைக் கழித்திருக்கின்றேன். அவர்களுடன் இணைந்து ஒரு பயிற்சி அறிவிப்பாளனாக நிகழ்சிகளை வழங்கும் போது, அவர்களுக்கான சந்தர்ப்பங்களைக் கூட – எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். அந்த நட்பு இப்போதும் தொடர்கிறது!

ஊடகத்துறைக்குள் ஒருவரின் திறமையை மற்றவர் பாராட்டுவதென்பதோ அல்லது தனக்கான சந்தர்ப்பமொன்றை வழங்குவதென்பதோ குதிரைக் கொம்பான விஷயம். அவ்வாறு இடம்பெறுமானால் அது பிரதியுபகாரங்களை எதிர்பார்த்தோ அல்லது ‘காக்காய்’ பிடிப்பதற்காகவோதான் நிகழும் என்பது பொதுவான கணிப்பாகும்! ஆனால், வெள்ளையனும், முகுந்தனும் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் எனக்கு அவைகளைச் செய்தார்கள்!

வெள்ளையனைப் பொறுத்தவரை அவன் ஒரு கலகக்காரன்! தான் சம்பந்தப்படாத விடயமென்றால் கூட, அநியாயங்களைக் கண்டால் பொறுத்துக் கொள்ள மாட்டான்! வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வந்தவன் என்பதால், சக மனிதனின் தேவை மற்றும் வலிகளை இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தான். பிச்சைக்காரனோடு கூட சமமாகவும், பொய்மையற்றும் பழக அவனால் எப்படி முடிந்தது என்பது குறித்து இன்றும் நான் ஆச்சரியங்களோடு யோசிப்பதுண்டு! அவனுக்கும் எனக்குமிடையில் ஒத்த குணங்கள் பல இருந்தன. அதனால் இன்றுவரை நண்பர்களாகவே இருக்கின்றோம்!

‘டைமிங் ஜோக்’ என்பார்களே… ஒருவரின் பேச்சுக்கு  – சற்றும் தாமதிக்காமல் சூழ்நிலைக்குப் பொருத்தமாக வெகு ஒருசிலர் மட்டும் நகைச்சுவைகளை சட்டெனக் கூறி விடுவார்கள். அதை ‘டைமிங் ஜோக்’ என்பார்கள்! வெள்ளையனுக்கு இது கைவந்த கலை. மற்றவர்களைப் போல் உடல் அசைவுகளைச் செய்து காட்டுவதிலும் திறமையானவன்! வெள்ளையனை இன்னும் விபரித்துச் சொல்வதென்றால் – சூரியனின் விகடகவி எனலாம் – தப்பில்லை! அவனுடன் இருந்த நேரங்களில் அதிகமானவை வயிறு வலிக்கும் சிரிப்புடன்தான் கழிந்தன! அவனில்லாத வானொலி நாட்கள் வறுமையானவை!

சூரியன் வானொலியின் ஆரம்பக் காலம் அது!  தனியார் வானொலிகள் பற்றிய விமர்சனங்கள் எத்தனைதான் இருந்தாலும் அப்போது மக்கள் மத்தியில் சூரியனுக்கு ஆச்சரியப்படத்தக்கதோர் வரவேற்பு இருக்கவே செய்தது! வானொலியில் அறிவிப்புச் செய்யும் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களில் அதிகமானோர் அலுவலகம் சென்று விடுவோம். நிகழ்சிகளுக்கான முன்தயாரிப்புகளை செய்வதும், பாடல்களைத் தெரிவு செய்வதும், நிகழ்சி முன்னோட்ட விளம்பரங்களை (Programme Trailor) செய்வதுமாக எங்கள் நேரம் சந்தோசமாகக் கழியும். நண்பர்கள் சேர்ந்தவுடன் பக்கத்திலுள்ள ‘கோல் ஃபேஸ்’ கடற்கரைக்குச் செல்வோம், சிலவேளைகளில் படம் பார்க்கவும் செல்வதுண்டு.

சூரியனின் கலையகம் பற்றி இந்த இடத்தில் உங்களுக்கு சொல்ல வேண்டும்! அங்கு நாங்கள் அறிவிப்பாளர்கள் மட்டுமல்ல. நாங்கள்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். அங்குள்ள விளம்பர நிரலைப் பார்த்து அதற்கேற்றாற் போல் – குறிப்பிட்ட விளம்பரங்களை குறித்த நேரத்துக்கு ஒலிக்கச் செய்ய வேண்டும். இதற்குள் தொலைபேசி நேயர்களுடன் பேசி, அவர்களையும் நிகழ்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைகளுக்கிடையில் எமது நிகழ்சியில் அடுத்து என்ன பேசுவது, எதைப்பற்றிப் பேசுவது என்பது குறித்தும் தயார் செய்துகொள்தலும் அவசியமாகும். அனேகமாக தனியார் வானொலிகள் அனைத்திலும் இதே ஒலிபரப்பு முறைதான்! ஆக – நாங்கள் அறிவிப்பாளர்களாகவும் அதேசமயம் ஒலிபரப்பாளர்களாவும் கடமையாற்ற வேண்டும்.

ஆனால், அரச வானொலிகளான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அனேகமான சேவைகளில் இப்படியில்லை. ஒலிபரப்பு வேலைகளைச் செய்வதற்கு – ஒலிபரப்பு உதவியாளர் என்று ஒருவர் இருப்பார். அறிவிப்பாளரின் வேலை ஒலிவாங்கிக்கு முன்னால் இருந்து கொண்டு கதைப்பது மட்டும்தான்! இரண்டு பாடல்களுக்கிடையில் வேண்டுமானால் அவர் ஒரு குட்டித் தூக்கம் கூட போட்டெழலாம்!

சூரியன் கலையகத்தில் இருவர் கடமையாற்றும் போது, இயந்திரங்களை ஒலிபரப்பும் பக்கத்தில் ஒருவர் இருந்து கொள்வார். மற்றவர் அவருக்கு நேரெதிரே அமர்ந்து கொள்வார்.

ஆரம்ப நாட்களில் நிகழ்சிகளை விடவும் செய்தியறிக்கைகளே எனக்கு வழங்கப்பட்டன. அப்போது சூரியனின் நிகழ்சிப் பொறுப்பதிகாரியாக மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் இருந்தார். ‘நடா அண்ணா’ என்றுதான் நாங்கள் அவரை அழைப்போம்!

செய்தியறிக்கை வாசிப்பதென்பது பதட்டம் கலந்த பரபரப்பானதொரு கடமை. காரணம், நிகழ்சியின்போது தவறுகள் ஏதாவது ஏற்பட்டு விட்டால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், செய்தியில் அவ்வாறு முடியாது. எல்லாத் தரப்பினரும் செய்தியினை கேட்பதால் அதற்குப் பெறுமானமும் அதிகம்!

அப்பொழுதுகளில் செய்தி அறிக்கையின் போது நிறையவே தடுமாறியிருக்கிறேன். மற்றவர்கள் சிலருடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை. ஆனாலும் குறுகிய காலத்துக்குள்ளேயே என்னைச் சரி செய்து கொண்டேன்.

ஒருநாள் இரவுச் செய்தி. நான்தான் வாசித்தேன்! முன்னால் இருந்து கொண்டு எனக்கான ஒலிவாங்கி மற்றும் இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருந்தான் வெள்ளையன்! ஓரிரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும், தடீரென்று முன்னால் இருந்த வெள்ளையன் எனது வாசிப்பின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப முகத்தைக் கோணலாக்கி நளினம் செய்ய ஆரம்பித்தான். இது எனது கவனத்தைச் சிதைக்க ஆரம்பித்தது. மட்டுமன்றி சிரிப்பும் வந்தது. அடக்கிக் கொண்டேன். மூச்சுத் திணறியது. அவனின் செய்கைகளை நிறுத்துமாறு கையால் சைகை செய்தேன். ஆனால், அவனின் கோணங்கித்தனம் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. உண்மையாகச் சொன்னால், ஒரு வித்தைக்காரக் குரங்குக்கு ஈடாக அவன் அந்த நளினங்களைப் புரிந்து கொண்டிருந்தான்.

எப்படியோ சிரிப்பை அடக்கி, மூச்சுத்திணறி, தட்டுச் தடுமாறி செய்தியை வாசித்து முடித்தேன்! எனக்கோ தாங்க முடியாத கோபம் வந்தது. வார்த்தைகளால் வெள்ளையன் மீது எரிந்து விழுந்தேன். அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று சொன்னேன்! செய்தியின் போது நான் சிரித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும் படி கூறினேன்!

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வெள்ளையன் மிகவும் சீரியசஸாக ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்; “ஒலிபரப்பில் இருக்கும் வேளைகளில் காலுக்குக் கீழே மலைப்பாம்பு போனால் கூட, நமது கவனத்தை சிதையவிடாது, வேலையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டுமென்று எங்கள் பயிற்சிக் காலத்தின் போது – நடா அண்ணா சொல்லித்தந்திருக்கிறார். புதிதாக வரும் ஒவ்வொரு பயிற்சி அறிவிப்பாளரையும்  நாங்கள் சோதிப்போம். இதில் நீ எப்படி என்பதைச் சோதிப்பதற்காகத்தான் நான் அவ்வாறு நளினம் செய்தேன். வேண்டுமானால் நடா அண்ணாவிடம் கேட்டுப்பார்” என்றான். அவனின் கதையில் எனக்கு நம்பிக்கை வரவில்லை!

anacondaஇருந்தாலும் இதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது? நானோ பயிற்சி அறிவிப்பாளன். நடா அண்ணாவிடம் இதைப் போய் எப்படிக் கேட்பது? அப்படியே கேட்டாலும்… நான் கவனச் சிதைவடைந்த கதை அவருக்குத் தெரிந்துவிடுமே என்று பயம் வேறு! ஆக – விசயத்தை அப்படியே விட்டுவிட்டேன்!

ஆனாலும், அந்தப் பாம்புக் கதை வெள்ளையனின் தமாஷ் என்பதை பின்னாளில் நான் தெரிந்து கொண்டேன். புதிய அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பாம்புக் கதைக்குப் பலியாகியே வந்தனர்.

அறிவிப்பாளர்களை சிரிக்க வைப்பதற்காக வெள்ளையன் நீண்ட காலமாகச் செய்து வந்த இந்தக் கூத்தை – ஒரு நாள் இரவு, சிறு நொடிப் பொழுதொன்றில் சிவானுஜா என்கிற என் சக அறிவிப்பாளினி செய்து முடித்தாள்!

சிவானுஜா சிரிக்க வைத்தாள். சிரித்தவர் சர்மிளா.

அன்றிரவு – செய்தியை விடவும், அதை வாசித்த போது – சர்மிளா சிரித்தமை பற்றிய கதையே பெரிதாகப் பேசப்பட்டது!

அது ஒரு சுவாரசியமான கதை. வேறொரு சமயம் சொல்கிறேன்!

o

(வீரகேசரி வெளியீடான ‘இசை உலகம்’ சஞ்சிகையில் எழுதிய வானொலிக் கால அனுபவத் தொடர்)

Advertisements
 

5 Responses to “நான் – வெள்ளையன் – மலைப்பாம்பு!”

 1. நானும் சூரியனின் ஆரம்ப கால நேயர். நடா அண்ணாவிலிருந்து நான் வெளிநாட்டுக்கு வருவதற்கு கொஞ்சம் நாட்களுக்கு முதல் அறிமுகமாகிய பார்த்தீபன் வரை அத்தனை அறிவிப்பாளர்களது நிகழ்ச்சிகளையும் ரசித்திருக்கிறேன். குறிப்பாக வியாசா, வெள்ளையன், மப்ரூக், முகுந்தன், ஷர்மிளா, சிவானுஜா, ரிகாசா, சங்கீத்தா……அத்தனை பேரும் எனக்கு பிடித்த அறிவிப்பாளர்கள்.

  நல்ல பதிவு ஒன்று தந்தீங்க அண்ணா….. வாழ்த்துக்கள். தொடர்ந்தும் உங்கள் வானொலி அனுபவங்களை எழுதுங்கள். (அப்படியே எங்கட வீட்டுப் பக்கமும் வாங்க……)

 2. Vetti payal Says:

  நல்ல பதிவு அண்ணா இன்னும் இன்னும் பதிவுகளை எதிர்பார்கின்றோம். சூரியன் ரசிகர்களாகிய எங்களுக்கு இந்த திரைக்கு ( சாரி ஒலிவாங்கிக்கு ) பின்னான கதைகள் ரொம்ப சுவாரஷ்யமாக உள்ளது.

 3. நல்ல பதிவு எங்கள் பெரியப்பாவின் மகன் மணிவண்ணன்
  அணணாவும் உங்கள் குழுவில் இணைந்துள்ளார்

 4. kavitha Says:

  சூரியனின் ரசிகைகளில் நானும் ஒருவர், உங்களது இந்த பகிர்வுகள் சுவாரஷ்யமாக உள்ளது.

 5. sri Says:

  ஒலிபரப்பு துறையில் சுமைகளையும் பகிரலாமே?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s