காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

அஷ்ரப்: அவர் வயற்காரனாக இருந்தார் 16 செப்ரெம்பர் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 6:54 பிப

மப்றூக்

(செப்டெம்பர் 16ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 10ஆவது நினைவு தினமாகும்)

– 01 –

வர் வயற்காரனாக இருந்தார். முஸ்லிம் சமூகம் எனும் நெல் வயலை அவர் காவல் செய்தார். அந்த வயலை மாடுகள் மேயாமலும், பறவைகள் உண்ணாமலும், யானைகளும் பன்றிகளும் வந்து உழத்தி விட்டுச் செல்லாமலும் அவர் – கண் விழித்துக் காவல் காத்தார்.

அவர் வயற்காரனாக இருந்த போது, விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனாலும், அந்த விளைச்சலைப் பெறுவதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அவரின் காலத்திலும் அந்த வயலில் களைகள் இருந்தன. அவைகளை அவர் லாவகமாய் பிடுங்கியெறிந்தார்.

அவரின் காலத்துக்கு முன்னர் – குத்தகைக்கும், அடமானத்துக்கும் கொடுக்கப்பட்டிருந்த வயலை, அவர் மீட்டெடுத்தார். அவரின் காலத்தில் – அந்த வயலுக்குச் சொந்தக்காரனாகவும், வயற்காரனாகவும் அவரே இருந்தார். அவர் அந்த வயலை மிகவும் நேசித்தார். அதனால், அதை அவர் மிக நன்றாகப் பராமரித்தார்.

அந்த வயலுக்குத் தேவையான வாய்க்கால்கள், வீதிகள், பரண், புரை என்று, ஒவ்வொன்றையும் அவர் ரசித்து ரசித்து அமைக்கத் தொடங்கினார். அவர் வயற்காரனாக இருந்தபோது அந்த வயல் செழிப்பாக இருந்ததாக பலரும் பேசிக் கொண்டார்கள் அஷ்ரப் என்கிற அவர் – முஸ்லிம் சமூகம் எனும் நெற்பயிர்களின் வயற்காரனாக இருந்தார்.

16 செப்டம்பர் 2000 ஆம் ஆண்டு  திரும்பி வர முடியாத தூரத்தில் – ஒரு பொழுது வயற்காரன் ஆகாயத்தில் கரைந்து போனான். வயல் அதன் பாதுகாப்பை இழந்தது. வெள்ளத்தால் அழிந்தது. வயலை மாடுகள் கேட்பாரின்றி மேய்ந்தன. யானைகளும் பன்றிகளும் வயலை மீண்டும் அழிக்கத் தொடங்கின. வயலில் களைகள் நிறைய முளைத்தன.

பின்னர் ஒரு தடவை, வரம்புகளால் வயல் துண்டாடப்பட்டது. வயற்காரனின் சந்ததிகளாகச் சொல்லப்பட்டவர்கள் – துண்டாடப்பட்ட வயலினை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்தெடுத்துக் கொண்டார்கள். மிகுதியாய் இருந்த வயல் துண்டுகள், மீண்டும் அடமானத்துக்கும் குத்தகைக்கும் கொடுக்கப்பட்டன. வயல் சோபையிழந்தது!

– 02 –

மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான்! 1989 இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர் 2000ஆம் ஆண்டு மரணமானார். ஆனாலும், இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் இந்தப் பத்து வருடங்கள்தான் ஒரு விடியலாகப் பார்க்கப்படுகிறது. அந்த ஒரு தசாப்தம், முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு சகாப்தமானது!

அவர் மரணித்து விட்டார் என்பதற்காக, அவரை ஒரு தீர்க்கதரிசியாகவோ, புனிதராகவோ புகழ்பாடி விட முடியாது! அஷ்ரப் பலவீனமான மனிதனாகவே இருந்தார். ஆனால், பலமானதொரு தலைவனாக உயர்ந்தார்.

முஸ்லிம் சமூகத்தின் பல அரசியல் தலைவர்களை விடவும், அஷ்ரப் தன் சமூத்தை அதிகமாக நேசித்தார். அதனால்தான், முஸ்லிம் சமூகம் இன்றுவரை அவரை நேசித்துக் கொண்டிருக்கிறது.

அஷ்ரப்பை நேசிக்காத அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் நேசிக்கத் தயாராக இல்லை என்பதற்காகவே, பல அரசியல்வாதிகள் அஷ்ரப்பை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பொலிஸ் ஆணைக்குழு விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அஷ்ரப்பைப் பார்த்து இந்த சபைக்குள் நுழைந்த மிக மோசமான மிருகம் நீதான் என்று திட்டிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், (இவர் நாடாளுமன்றத்தில் இப்போதும் தேசியப்பட்டியல் உறுப்பினராக இருக்கின்றார்) அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் அவரைப் போற்றிப் புகழத் தொடங்கியமை – இதற்கு நல்ல உதாரணமாகும்!

ஆம், அஷ்ரப்பை நேசிக்காதவர்களை முஸ்லிம் சமூகம் நேசிக்கத் தயாராகவேயில்லை! அஷ்ரப்பின் நாடாளுமன்ற அரசியல் காலத்தில் முதல் ஐந்து ஆண்டுகளையும் அவர் எதிர்க்கட்சியில் கழித்தார். பின்னரான காலங்களில்தான் ஆளுந்தரப்பில் இருந்தார். ஆக, முஸ்லிம் சமூகத்துக்கு அவரால் கிடைத்த அபிவிருத்திகள் அனைத்தும் அவர் ஆளுந்தரப்பில் இருந்த ஐந்து ஆண்டுகால கொடுப்பினைகள்தான்!

அஷ்ரப் ஆளுந்தரப்பில் இருந்தபோது, அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரைப் போல், ஓர் அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த சிறுபான்மை அரசியல் தலைவர் – சுதந்திரத்துக்குப் பிறகு எவரும் இருந்ததாகக் தெரியவில்லை! முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியில், அஷ்ரப் ஒரு ராஜ கிரீடமாக இருந்தார்! அவ்வாறு அஷ்ரப் இருந்தமைக்கு, அவரின் அறிவும் – சாதுரியமும் பிரதான காரணங்களாகும்

முஸ்லிம் சமூகத்துக்கு அஷ்ரப்பின் இருப்பு இன்னும் பல தசாப்தங்களுக்குத் தேவையாக இருந்ததொரு நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்ட அதே செப்டெம்பர் மாதமொன்றில் (21 செப்டெம்பர் 1981) அந்த இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான அஷ்ரப்பின் மரணமும் நிகழ்ந்தது.

எதிர்பார்க்கப்படாத அந்த மரணத்தின் பின்னணி குறித்து, இன்றும் ஆயிரம் கதைகள் பேசப்படுகின்றன. யாருக்குத் தெரியும், பேசப்படாத ஓர் ஊமைக் கதை கூட – அவர் மரணத்தில், ஆயிரத்தோராவது கதையாக ஒளிந்து கொண்டிருக்கலாம்!

– 03 –

ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாத் பதியுதீன் போன்றோரும், அவர்களின் கூட்டத்தாரும், தங்கள் தங்கள் முகாம்களில் இருந்தபடியே – இன்று அஷ்ரப்பின் நினைவு நாளை அனுஷ்டிக்கத் தொடங்குவார்கள்

அஷ்ரப்பின் அரசியல் வாரிசுகளாக இவர்கள் – தம்மைத் தாமே, மீளவும் இன்றைய தினத்தில் சுயபிரகடனம் செய்து கொள்வார்கள். அஷ்ரப்பின் கொள்கைகளின் மீது பயணிப்போர் தாம் மட்டுமே என, ஒவ்வொருவரும் சப்தமாக மார்தட்டிக் கொள்வார்கள். மு.கா. என்றால் அஷ்ரப் – அஷ்ரப் என்றால் மு.கா. என்கிறார் ஹக்கீம் அஷ்ரப்பை இழந்த பிறகு, மு.கா.வில் ஒன்றுமில்லை என்கிறார் அதாவுல்லா இவைகளுக்கிடையில் வேறொன்றைச் சொல்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்.

பாவம் – முஸ்லிம் சமூகம்!

ஹக்கீம், அதாவுல்லா, ரிஷாத் என்று எல்லோருமே அஷ்ரப்பை உச்சரிக்கிறார்கள். அவரின் படத்தை ஏந்தியிருக்கிறார்கள். அஷ்ரப்பின் கொள்கைகளே தமது அரசியல் சித்தாந்தம் என்கிறார்கள். ஆனால், எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவை தவிர, அஷ்ரப்பின் இலட்சியக் கட்சியாகிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியான அஷ்ரபின் மனைவி பேரியலோ – ஒரு படி மேலே சென்று, அந்தக் கட்சியைத் தொலைத்து விட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவமாகி விட்டார்.

ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால் அஷ்ரப் இருந்தாலும் – இப்போதைக்கு, இதைத்தான் செய்திருப்பார் என்கிறார் அம்மணி! ஆக – எது சரி, எது பிழை என்று பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீ எனும் நான் என்றும், நான்தான் நீ என்றும் (அஷ்ரப்பின் கவிதைத் தொகுதியின் பெயர் நான் எனும் நீ என்பதாகும்) அடுத்த அஷ்ரப்பாக எத்தனை பேர்தான் சுயபிரகடனம் செய்து கொண்டாலும், முஸ்லிம் அரசியலில் – அஷ்ரப்பின் வெற்றிடம் அப்படியேதான் இருக்கிறது.

இந்த வெற்றிடம் நிரப்பப்பட முடியாதது எனக் கூறிவிடுவதற்கில்லை. ஆனால், நிரப்புவதற்கு யாருண்டு என்பதே இங்குள்ள பெருங் கேள்வியாகும்.

(இந்தக் கட்டுரையை http://www.tamilmirror.lk எனும் இணையத் தளத்திலும் பார்வையிடலாம்)

<!–more இன்னும் வாசிக்க…. –>
Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s