காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

ஆரியவதிகள்: நமது தேசத்தின் இயலாமை! 2 செப்ரெம்பர் 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 7:07 பிப

மப்றூக்
டலுக்குள் அறையப்பட்ட ஆணிகள் மற்றும் கம்பித் துண்டுகள் இருபத்து மூன்றினையும், அவற்றின் வலிகளையும் சுமந்தவாறு தொலைக்காட்சிகளில் கண்ணீர் வடியப் பேசிய ஆரியவதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா? அது நோவினை தரும் ஒரு விசித்திரமான கதை. நவீன காட்டு மனிதர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்தப் பெண்ணின் அனுபவம் – நமது தேசத்தின் இயலாமை!

சஊதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி என்கிற பெண்ணின் உடலில், அவருடைய வீட்டு எஜமானர்கள் ஆணிகளை அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கின்றார்கள் என்பது – நம்மில் பலருக்கு வெறும் செய்தியாக மட்டுமே இருந்திருக்கும்! ஆனால், அதன் பின்னாலுள்ள வலி, கொடூரம், காட்டுமிராண்டித்தனம், நமது தேசத்தின் இயலாமை போன்றவற்றையெல்லாம் நம்மில் எத்தனைபேர்தான் எண்ணிப் பார்த்திருக்கின்றோம்!

தப்பித் தவறி ஒரு குண்டூசி நமது விரலில் குத்தி விட்டாலே துடித்துப் போகிறோம். அப்படியிருக்கையில், தனது உடலில் ஆணிகளும், கம்பிகளுமாக 23 இடங்களில் அறையப்பட்டபோது, எப்படி வலித்திருக்கும் அந்தப் பெண்ணின் உயிர்!

இடது கையில் 05 ஆணிகளும் ஒரு கம்பித் துண்டும், வலது கையில் 03 ஆணிகளும் 02 கம்பித் துண்டுகளும், வலது காலில் 04 ஆணிகள், இடது காலில் 02 ஆணிகள், இவை தவிர கண் இமைக்கருகில் ஒரு கம்பித்துண்டு! இவை ஆரியவதியின் உடம்பிலிருந்து சத்திரசிகிச்சை மூலமாக அகற்றப்பட்டவைகள். இன்னும் 05 ஆணிகள் நீக்கப்படாமல் உடம்பில் உள்ளன. அவைகளை எடுப்பது அந்தப் பெண்ணுக்கு ஆபத்தானது என்பதால் வைத்தியர்கள் அவற்றை அப்படியே விட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஆணியொன்று 6.6 சென்ரிமீற்றர் நீளமானது.

ஆரியவதியின் கைகளை – அவரின் வீட்டு எஜமானியம்மா பிடித்திருக்க, சூடாக்கிய ஆணிகளைக் கொண்டு வந்து ஆரியவதியின் உடம்பில் எஜமானர் அடிப்பாராம். ஏன் இந்தத் தண்டனை என்று நீங்கள் கேட்கலாம்? சின்னச் சின்னத் தவறுகளுக்குத்தான் இந்தக் கொடுமை. ஒரு நாள் கிளாஸ் ஒன்றை ஆரியவதி – கை தவறி உடைத்தபோதுதான் இந்தச் சித்திரவதை ஆரம்பித்திருக்கிறது. நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கும். ஒரே நாளில் துடிக்கத் துடிக்க – ஆரியவதியின் உடம்பில் 05 ஆணிகளை அடித்திருக்கின்றான் அந்த எஜமானன்!

பிறகு, ஆரியவதி எப்படியோ இலங்கைக்கு வந்தார். இந்த விடயம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கமானது. (இந்த இடத்தில், ‘நியூஸ் பெஸ்ற்’ செய்திச் சேவைக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்) அதனைத் தொடர்ந்து, ஆரியவதியின் சஊதி அரேபியாவைச் சேர்ந்த முன்னாள் எஜமானரும், அவரின் மனைவியும் அங்குள்ள பொலிஸாரால் கைதாகியுள்ளனர். இவை எல்லாம் நாம் அறிந்த செய்திகள்தான்!

ஆனால், இவைபோல் – நாம் அறியாத செய்திகள் எத்தனை உள்ளன?!

மத்திய கிழக்கு நாடுகளில் சித்திரவதைக்காளாகும் ஆயிரமாயிரம் பெண்களில் ஆரியவதியும் ஒருவர். ஆனால், ஆரியவதியை விடவும் நூறு மடங்கு வலி தரும் கதைகளைச் சுமந்து கொண்டு, வீட்டுச் சிறைகளில் வாடும் நமது நாட்டுப் பெண்கள் பற்றியும் இந்த இடத்தில் பேச வேண்டியிருக்கிறது.

இலங்கையைச் சேர்ந்த சுமார் 18 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். இவர்களில் முக்கால் வாசிப்பேர் பெண்கள். இந்தக் கணக்கின்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பெண்களின் தொகை 13.5 லட்சமாகும்.

இதில், சஊதி அரேபியாவில் மட்டும் 04 லட்சம் இலங்கையர்கள் வேலை செய்கின்றார்கள். அப்படியென்றால், இவர்களில் 03 லட்சம் பேர் பெண்கள்.

மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரில் – அங்கு இயற்கையாகவோ, ஏனைய வழிகளிலோ பலர் மரணிக்கின்றார்கள். ஒரு தகவலின்படி, சராசரியாக மாதமொன்றுக்கு 20 சடலங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதாக அறிய முடிகிறது.

இவ்வாறு வரும் சடலங்களில் – துன்புறுத்தல்களுக்குள்ளாகி, அங்குள்ள எஜமானர்களால் கொல்லப்படுவோர் எத்தனைபேர் என்பது சில வேளைகளில் கண்டுபிடிக்கப்படாமலும் கணக்கில் எடுக்கப்படாமலும் போகலாம்! (போகலாம் என்ன, போகிறது!)

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதென்பது நமது மிக மோசமான இயலாமையாகும். இங்குள்ள ‘நமது’ என்பதற்கு – குடும்பத்தவர்கள், சொந்தக்காரர்கள், அரசாங்கம், நாடு என்று எப்படியும் பொருள் கொள்ளலாம்!

உலகில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று! அந்த நாட்டின் சனத்தொகை கிட்டத்தட்ட 120 கோடியாகும். இதில் 29 கோடிப்பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்றார்கள். ஆனாலும், அந்த நாடு, தனது பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை. அப்படி அனுப்பினால், மொத்தத் தேசிய வருமானமாக இந்தியாவுக்கு றியாலும், திர்ஹம்களும் கோடிகளாக வந்து குவியும். ஆனாலும், இந்தியா அதைச் செய்யவில்லை!

ஆனால், இலங்கை – மிக நீண்ட காலமாகவே வீட்டுப் பணிப்பெண்களாக தனது நாட்டுப் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இவ்வாறு இலங்கையிலிருந்து செல்லும் பெண்களில் – நமது ஆரியவதியைப் போல், ஆயிரமாயிரம் பேர் அங்குள்ள எஜமானர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு (கவனிக்க: பாலியல் பலாத்காரமும் ஒருவகைச் சித்திரவதைதான்!) – கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

சஊதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் கதையும் இப்படித்தான்! தான் – வேலைக்குச் சென்ற வீட்டில் சுமார் 18 வருடங்கள் ஓர் அடிமைபோல் அந்தப் பெண் பணிபுரிந்திருக்கின்றார். வெளித் தொடர்புகள் எவையுமில்லை. கிட்டத்தட்ட வீட்டுச்சிறைதான். இந்த நிலையில் ஊதியமும் அவருக்கு வழங்கப்படவில்லை. கடைசியில் எப்படியோ நாட்டுக்கு திரும்பியுள்ளார். இருப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை!

இப்படி – வெளிநாடுகளில் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகும் நமது நாட்டுப் பெண்களின் தொகை மிகவும் பெரியது. ஆனால், அவைபற்றி எங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தவர்களோ, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

ஆரியவதியின் விடயத்தை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்காது போயிருந்தால், அவரின் கதையும் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போயிருக்கும். நமது அமைச்சர்களும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத் தலைவரும் – பதறியடித்துக் கொண்டு ஆரியவதியைக் காண, கும்புறுப்பிட்டிய வைத்தியசாலை வரை வந்திருக்க மாட்டார்கள்! ஏதோ ஆரியவதியின் நல்ல காலம் – அவரின் அவலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த வேளையில், இதுபோல் கொடுமை அனுபவித்துக் கொண்டிருக்கும் நமது ஏனைய பெண்கள் குறித்தும் நாம் கவனிக்க வேண்யுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நபர் பற்றியும், குறிப்பாக – வீட்டுப் பணிப் பணியாளர்களாகச் செல்லும் பெண்கள் குறித்தும், அவர்களின் நலன்கள் தொடர்பிலும் நமது அரசாங்கம் கூடிய அக்கறைகளைச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளிலுள்ள, இலங்கைத் தூதுவராலயங்கள் அங்குள்ள இலங்கைப் பணிப் பெண்களின் நல்லது கெட்டதுகளை அறிவதில் உஷாராகச் செயற்படுதல் வேண்டும்.

மேற்சொன்னவாறு அக்கறையாகவும், உஷாராகவும் சம்பந்தப்பட்டவர்கள் நடந்திருந்திருந்தால், ஆரியவதிக்கு இந்த நிலை ஆகியிருக்கவே மாட்டாது!

மேற்சொன்னவைகளைச் செய்வது சம்பந்தப்பட்டோருக்குச் சிரமமென்றால், இப்படியான கொடுமைகளில் சிக்காமல் நமது பெண்களைப் பாதுகாப்பதற்கு இன்னுமொரு வழியுமிருக்கிறது. இந்தியாவைப் போல், நாமும் – வீட்டுப் பணியாளர்களாக எமது பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் விடுவதே அந்த வழியாகும்!

அரசாங்கம் அப்படியொரு முடிவை எடுக்குமாயின், இரண்டு விடயங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

முதலாவது: வெளிநாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை செய்வோர் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்து வரும் தேசிய வருமானம் இல்லாமல் போகும்.

இரண்டாவது: அவ்வாறு பணிப் பெண்களாகச் செல்லாதவர்களின் குடும்ப வறுமைக்கு, அரசாங்கம் உதவ வேண்டி வரும். இது அரசுக்கு மேலதிகமானதொரு செலவை ஏற்படுத்தும். (உதாரணமாக, வெளிநாடுகளில் 13.3 லட்சம் பெண்கள் வேலை செய்கிறார்கள். தற்போது இவர்களுக்கு சமுர்த்தி போன்ற உதவிகளை வழங்கத் தேவையில்லை. ஆனால், இவர்கள் அனைவரும் – இலங்கையில் இருப்பார்களாயின் அவர்களுக்கும் சமுர்த்தி உதவிகளை வழங்க வேண்டி வரும். இது அரசாங்கத்துக்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தும்)

இந்தக் கட்டுரையை படித்து விட்டு சிலவேளை நீங்கள் என்னிடம் ஒரு விடயம் குறித்து வாதிப்பதற்கு வரக்கூடும்.

அதாவது, ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ எனும் மாபெரும் சலுகை இழக்கப்பட்டபோது கூட, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பொன்றும் நிகழவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியிருக்கும் போது, வெளிநாடுகளுக்கு நமது நாட்டுப் பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்பாமல் விடுவதால் மட்டும் – எமது நாட்டுப் பொருளாதாரத்தில் அடிகள் விழுந்து விடுமா என்ன? என்று நீங்கள் கேட்கலாம்!

‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ விவகாரத்தில் அரசாங்கம் விடுத்த அறிக்கையானது – ‘விழுந்தும் மீசையில் மண்படவில்லை’ என்பற்கு ஒப்பானதாகும்.

ஆனால், ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ சலுகை ரத்துச் செய்யப்பட்டதால், உண்மையில், அரசாங்கத்துக்கு  ஆப்புகளுக்கு மேல் ஆப்புகள் விழுந்திருக்கின்றன.

‘சண்டை’ என்கிற திரைப்படத்தில், விவேக்கின் உள்ளங் கையை – கதாநாயகன்
சுந்தர் சி, ‘ஸ்குறூ ட்றைவர்’ ஒன்றால் குத்திக் குத்திக் கிழிப்பார். அப்போது – தான் பெரிய பலசாலி என்று பம்மாத்துக் காட்டுவதற்காக, நடிகர் விவேக் வலியை மறைத்துக் கொண்டு, “வலிக்கல்ல… வலிக்கல்ல..”| என்று சிரித்துக் கொண்டிருப்பார். ஆனாலும், தாங்க முடியாத வலியால், அவரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தோடிக் கொண்டிருக்கும்!

‘ஜி.எஸ்.பி. பிளஸ் ரத்துச் செய்யப்பட்டதால், நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பொன்றும் நிகழவில்லை’ என்று – ஆளுந்தரப்பார் கூறுவதைக் கேட்கும் போது, ‘சண்டை’ படத்தில் வரும் மேற்படி – விவேக் ஜோக்தான் நமது ஞாபகத்துக்கு வருகிறது! (அட, எதையோ எழுத வந்து, எதிலோ முடிக்க வேண்டியதாயிற்று!)

(இந்தக் கட்டுரையை 01 செப்டம்பர் 2010 ஆம் திகதிய ‘வீரகேசரி’ நாளிதழிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s