காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தேர்தல் கொசுறுகள்! 29 மார்ச் 2010

Filed under: அரசியல் — Mabrook @ 11:45 முப

மப்றூக்

ஒரு வாக்கு – ஐம்பது சதம்


பொ
துத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் ஒரு தொகை மானியப் பணத்தினை வழங்கலாம் என்று பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் சொல்கிறது.

அதற்காக, போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் போய் – ‘மானியம் தாருங்கள்’ என்று வரிசை கட்டிக் கொண்டு நிற்க முடியாது.

அவ்வாறான மானியத்தைக் கோரும் கட்சியொன்று, குறித்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலிலும் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பது – முதலாவது நிபந்தனை!

அப்படிப் போட்டியிட்டிருந்தாலும், அந்தக் கட்சி – கடந்த முறை களமிறங்கிய தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் மொத்தத் தொகையில், ஒரு சத வீதத்துக்குக் குறையாத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது – அடுத்த நிபந்தனை.

இந்தத் தகைமைகளைக் கொண்டுள்ள கட்சிகள் – தேர்தல் ஆணையாளருக்கு முறையாக விண்ணப்பிப்பதன் மூலமாக இந்த மானியத் தொகையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எந்த அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும் தெரியுமா?

குறித்த ஒவ்வொரு கட்சியும், முந்தைய தேர்தலில் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு வாக்குக்கும் 50 சதம் எனும் அடிப்படையில் கணக்குப் பார்த்து வரும் மொத்தத் தொகையே, அந்தந்தக் கட்சிகளுக்கான மானியமாகும்!

இரண்டு ‘பார்’  கேக்கும் மூன்று துண்டு மிச்சங்களும்!

அமைச்சர் அதாஉல்லா தரப்பினரின் பிரச்சாரக் கூட்டமொன்று அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. கூட்டத்துக்குச் சென்று வந்த நண்பரொருவரிடம், கூட்டம் எப்படி? நிறையச் சனமா? என்று கேட்டேன். எனது கேள்விக்கு அவர் வித்தியாசமான முறையில் பதிலளித்தார்.

அதாவது, கூட்டத்துக்கு வந்திருந்த பார்வையாளர்கள் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள் ‘கேக்’ கொடுத்தார்களாம். இரண்டு ‘பார்’ கேக்கினை வெட்டி எல்லோருக்கும் கொடுத்ததில், 03 துண்டுகள் மட்டுமே மிஞ்சியதாம் – என்றார் அவர்.

நண்பருக்கும் – எனக்குமிடையிலான உரையாடல், ஹோட்டலொன்றினுள்தான் நிகழ்ந்தது. இருவரும் தேநீர் பருகிய பிறகு நண்பர் சென்று விட்டார்.

நண்பர் சொன்ன விடயத்தில் எனக்கு ஒரு விடயத்தில் போதிய அறிவில்லை. அதாவது, ஒரு ‘பார்’ கேக்கில் எத்தனை துண்டுகள் வெட்டலாம்?

ஹோட்டல்கார நண்பரிடம் விசாரித்தேன். ஒரு ‘பார்’ இல் மிஞ்சி மிஞ்சிப் போனால், 12 துண்டுகள் வெட்டலாமாம்!

அப்படியென்றால், அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை என்ன என்று நீங்களே கூட்டிக் கழித்துக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

எங்களுரில், இப்போதைய அரசியல் ஜோக் இதுதான்!

விரலற்றவர்களுக்கான குறியீடு

தேர்தலில் வாக்களிக்கும் ஒருவரின் இடது கை – சிறு விரலில் ‘தோதான குறியீடு’ இடப்படுதல் வேண்டும் என்று தேர்தல்கள் சட்டம் சொல்கிறது.

‘தோதான குறியீடு’ என்றால் என்ன? துடைத்தழிக்கவியலாத மையினால் இடப்படும் குறியீடாகும் என்று பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 38 ஆம் பிரிவின் 03 வது உபபிரிவு – அதற்கு விளக்கம் தருகிறது.

அப்படியென்றால், இடது கையில் சிறு விரல் இல்லாதவரின் நிலை என்ன? அவ்வாறான ஒருவருடைய இடது கையின் ஏதேனும் ஒரு விரலில் அந்த – மை அடையாளத்தை இடலாம்.

சரி, இடது கையில் விரல்களே இல்லை என்று வைத்துக் கொள்வோம். அதன்போது என்ன செய்யலாம்? அவரது வலது கையின் சிறு விரலில் அடையாளமிடலாம். சிறு விரல் இல்லா விட்டால் வேறு விரலில் அடையாளமிடலாம்.

சில வேளைகளில் இடது, வலது கைளில் விரல்களேயில்லாத ஒருவர் வாக்களிக்க வரும் போது எவ்வாறு நடந்து கொள்வது என்று நீங்கள் யோசிக்கலாம்!

அத்தகைய வாக்காளருக்குரிய – அவரது இடது அல்லது வலது கையின் நுனியொன்றில், குறித்த மை அடையாளத்தை இடலாம் என்கிறது சட்டம்!

(குறிப்பு: யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் இந்தப் பிரச்சினையானது முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது)

இடது கை பைஅத்

நல்ல விடயங்களை செய்கின்றபோது – வலது கையை அல்லது காலை முற்படுத்தும் வழக்கம் அநேகமாக எல்லா சமய, சமூகங்களிலும் இருக்கிறது.

நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் போது வலது கையை முற்படுத்துமாறு முஹம்மது நபியவர்களும் கூறியிருக்கின்றார்கள்.

இது குறித்து முஹம்மது நபியவயர்களின் மனைவியான ஆயிஷா நாயகியவர்களும் ஒரு முறை கூறியிருக்கின்றார்கள். அதாவது, நபியவர்கள் குளிக்கும்போது – முதலில், அவர்களின் வலது தோள் புறமாகவே நீரை ஊற்றுவார்கள். மேலும், நல்ல விடயங்களை ஆரம்பிக்கும் போது, அவர்கள் வலது கையையே முற்படுத்துவார்கள் என்கிற அர்த்தப்பட ஆயிஷா நாயகியவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுபோலவே, இடது கையைப் பயன்படுத்துவதற்கும் சில காரியங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ‘ஆய்’ அல்லது ‘கக்கா’ கழிவுவதென்றால் – அதற்கு இடது கைதான்! மலசல கூடத்திலிருந்து வெளியேறும் போதும் இடது காலை முற்படுத்துமாறு இஸ்லாம் கூறுகிறது.

இப்படி எல்லாச் சமயங்களும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் போது, வலது கையை முற்படுத்துமாறு கூறியிருக்கும் போது, அமைச்சர் அதாஉல்லா அதற்கு எதிர் மாறாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

விடயம் இதுதான், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் அமைச்சர் அதாஉல்லாவின் அணியொன்று களமிறங்கியிருக்கிறது. இந்த அணியில், மூன்று வேட்பாளர்கள். அமைச்சர் அதாஉல்லா, அதிபர் பஷீர் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர் அமீர் ஆகியோரே அந்த மூவருமாவர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து, முதன் முதலாக ஒரு சுவரொட்டியை வெளியிட்டார்கள். அதில் மேற்படி மூவரும் – ஒருவர் கையில், ஒருவர் – கை வைத்து ‘பைஅத்’ செய்வது போல் காட்சியளிக்கின்றார்கள். ‘பைஅத்’ என்கிற அரபுச் சொல்லுக்கு சத்தியப் பிரமாணம் என்று அர்த்தமாகும்.

இதில்தான் பிரச்சினை, அதாவது – வேட்பாளர்கள் பஷீர் மற்றும் அமீர் ஆகியோர் வலது கைகளையும், அதாஉல்லா தனது இடது
கையினையும் நீட்டியவாறு இந்த ‘பைஅத்’தை எடுத்திருக்கின்றார்கள்.

இந்தச் சுவரொட்டியைப் பார்க்கும் போதெல்லாம் – நமக்குள் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

ஒன்று: அமைச்சர் அதாஉல்லாவுக்கு மேற்படி விடயம் தொடர்பில் இஸ்லாமிய அறிவு இல்லையா?

இரண்டு: அதாஉல்லா இம்முறை தேர்தலில் போட்டியிடுவது நல்ல காரியமில்லையா?

சட்டச் சிக்கல்களும், சட்டத்தைச் சிக்கலாக்குபவர்களும்!

தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பான பிரச்சினையொன்றை நேற்றுக் காலை அட்டாளைச்சேனைப் பகுதியில் காணக் கிடைத்தது.

கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினரும், நிச்சயிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான மசூர் சின்னலெப்பையின் தலைமையில் பிரசாரக் கூட்டமொன்று
நடைபெறுவதற்காக – நேற்று தடல்புடலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில், மு.கா. தலைவர் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹசனலி உள்ளிட்ட பல ‘தலை’களும், பிரமுகர்களும் கலந்து கொள்வதாக இருந்தது.

மேற்படி கூட்டம் நடைபெறவிருந்த இடத்துக்கு அருகில் மு.காங்கிரசின் தேர்தல் காரியாலயமொன்றும் இருக்கிறது.

கூட்டத்துக்கான மேடை அமைக்கப்பட்டு, அலங்காரமெல்லாம் செய்யப்பட்ட பிறகு, திடீரென ஒரு பிரச்சினை. அதாவது, கூட்டம் நடைபெறும் வளவுக்கு அடுத்த வளவுக்காரர் ஒரு சுயேற்சைக் குழு வேட்பாளராம். அதனால், தனது வீட்டுக்கு அருகாமையில், குறித்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று – அவர் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டாராம்.

இதனால், அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாதென்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் கூறி விட்டார்கள்.

விசயம் மாகாணசபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் காதுகளை எட்டியதும், அவர் தனது சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸ் மேலிடத்தவர்களுடனெல்லாம் பேசிக் கதைத்து, கடைசியில் கல்லில் நார் உரித்த கதையாக – கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை வென்றெடுத்து விட்டார்.

இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் இதை ஒரு பிரச்சினையாகவே ஆக்கியிருக்கத் தேவையில்லை. கூட்டம் நடத்துவோருக்கு அனுமதியை ஆரம்பத்திலேயே வழங்கி முடித்திருக்கலாம்.

ஒரு வேட்பாளரின் வீடு இருக்கிறது என்பதற்காக – அதற்கருகில் மாற்றுத் தரப்பாரின் கூட்டங்களை நடத்தவே முடியாது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான வாதமாகும்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் படி, வேட்பாளரொருவரின் சாதாரணமான வதிவிடத்தை தேர்தல் அலுவலகமொன்றாகப் பயன்படுத்த முடியும் என்பது உண்மைதான். ஆனாலும், அந்த அலுவலகம் முறையாகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.

ஆனால், அந்த சுயேட்சை வேட்பாளரின் வசிப்பிடமானது, அலுவலகமாகப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆக, நாமறிய இதில் சட்டச் சிக்கல்கள் எதுவுமில்லை. சிலர் – வேண்டுமென்றே சட்டத்தைச் சிக்கலாக்கியிருக்கிறார்கள்.

(இந்தக் கட்டுரையை 27 மார்ச் 2010 ஆம் திகதிய சுடர் ஒளி பத்திரிகையிலும்  நீங்கள் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s