காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கடவுளின் தொழிலாளிகளும், கண்ணீர் அறுவடைகளும்! 22 பிப்ரவரி 2010

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 6:50 பிப

மப்றூக்
‘கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ என்று விவசாயிகளைச் சொல்வார்கள். அவ்வாறான விவசாயிகளுக்கே இது போதாத காலமாகி விட்டது. கடந்த முறை, அவர்கள் பேரம் பேசி விற்பனை செய்த தமது நெல்லை, இம்முறை விற்பதற்கு அழுது புரண்டு, ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த போக அறுவடைக்கால ஆரம்பத்தின் போது, 65 கிலோ கிராமுடைய ஒரு மூடை நெல் 02 ஆயிரத்து 300 ரூபாவுக்கு விற்கப்பட்டது. ஆனால், அதேயளவு நெல்லை இம்முறை 1300 ரூபாய் எனும் மட்ட விலைக்கே விற்க வேண்டியுள்ளது. இதைவிடவும், அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு சந்தையில் எந்தக் கொள்வனவாளரும் தயாராக இல்லை!

கடந்த முறை உச்சத்திலிருந்த நெல்லின் விலை, இப்போது  கண்ணைக் கட்டும் வகையில் இப்படி வீழ்ச்சியடையக் காரணம் என்னவாக இருக்குமென்று  உங்களில் யாரேனும் யோசிக்கலாம். அதற்கு ஆயிரம் விடைகள் உள்ளன.

அதில் முதலாவது, காலம் நேரம் புரியாமல் அரசாங்கம் மேற்கொள்ளும் அரிசி இறக்குமதியாகும். அதாவது, உள்நாட்டு அரிசிச் சந்தையில் ஏற்படும் கேள்வியை, இறக்குமதி செய்யும் அரிசியைக் கொண்டு அரசாங்கம் நிரப்பி விடுகிறது. மட்டுமன்றி, இறக்குமதி அரிசியின் விலை – உள்நாட்டு அரிசியின் விலையிலும் குறைவாக இருக்கிறது. இதனால், உள்நாட்டு அரிசிக்கான கேள்வி ஒரேயடியாகக் குறைவடைந்து விட்டது.

ஒரு பொருளுக்கான கேள்வி குறைவடையும் போது, சாதாரணமாக அதற்குரிய விலையும் சந்தையில் வீழ்ச்சியடைந்து விடுவது வழமை. இந்த அடிப்படையில்தான் இப்போது நெல்லின் விலை விழுந்திருக்கிறது.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக என்று சொல்லி, ‘நெல்லுக்கான உத்தரவாத விலை’யொன்றினை அரசாங்கம் நிர்ணயித்து வைத்திருக்கிறது. அந்தவகையில், ஒரு கிலோகிராம் சாதாரண நெல்லுக்கான தற்போதைய உத்தரவாத விலை 28 ரூபாவாகும். அதன்படி பார்த்தால், 65 கிலோ கிராம் நிறையுடைய ஒரு மூடை நெல்லின் விலை 1820 ரூபாவாக இருக்கிறது.

ஆனால், இந்த உத்தரவாத விலை என்கின்ற விடயம் வெறுமனே பெயரளவில் மட்டும்தான். ஆகக்குறைந்தது, இந்த விலையை நிர்ணயம் செய்து வைத்துள்ள அரசாங்கமாவது நெல்லை  உத்தரவாத விலைக்கு வாங்கத் தயாராக இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையும், விசனமும் உடைய செய்திகளாகும்.

நெல்லுக்கான விலை வீழ்ச்சியடைய இன்னுமொரு காரணமும் இருக்கிறது. கடந்த காலங்களை விட – நெற் செய்கையும் அதனால் நெல்லின் உற்பத்தியும் தற்போது அதிகரித்தமையே அந்தக் காரணமாகும். அதாவது, யுத்தத்துக்குப் பின்னர் நாட்டில், குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் செய்கை பண்ணப்படாமலிருந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் மீளவும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த காலங்களை விடவும் நெல்லின் உற்பத்தி இம்முறை அதிகரித்திருக்கிறது.

அந்தவகையில், சந்தைக்கு நெல் மிகத்தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், அதைப் பேரம் பேசி விற்கத்தான் விவசாயிகளால் முடியவில்லை. காரணம், நெல்லின் நிரம்பல் சந்தையில் எக்கச்சக்கமாய் அதிகரிக்க – அதற்கான விலை வீழ்ச்சியடைந்து விட்டது.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை கிட்டத்தட்ட 01 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 01 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில், கொள்வனவாளர்கள் – அடிமாட்டு விலைக்கு நெல்லைக் கேட்டால், அத்தனை விவசாயிகளும் தலையில் துண்டு போட்டுக் கொண்டுதான் அலைய வேண்டி வரும் என்று கவலைப்படுகின்றார் – விவசாயத்தையே நம்பி வாழும் நண்பர் ஒருவர்!

நெல்லின் விலை ஒரு பக்கம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கபிலநிறத் தத்தி எனப்படுகின்ற அறக்கொட்டிப் பூச்சிகளின் தாக்கம், வயல்களில் இம்முறை அதிகரித்துப் போயுள்ளது. இதனால், இப் பூச்சியினைக் கட்டுப்படுத்துவதற்கான நாசினிகளுக்குரிய செலவு மற்றும் தெளிப்பதற்கான கூலி என்று ஒருபுறம் செலவுகள் வேறு, உச்சத்துக்குப் போய் விட்டது. இந்த லட்சணத்தில் எங்கே லாபம் பார்ப்பது என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

அறக்கொட்டிப் பூச்சிகளின் தாக்கம் இம்முறை அதிகரித்தமைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை,
0 அடிக்கடி ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை மாற்றங்கள்.
0 உரிய காலத்துக்கு விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமை.
0 குறிப்பிட்ட நாசினிக்கு அறக்கொட்டிப் பூச்சிகள் இயைபாக்கம் அடைந்தமை.
0 பணச் செலவு கருதி அறக்கொட்டிக்கு எதிரான நாசினிகளை நியம
அளவிலும் குறைவாகப் பயன்படுத்தியமை.
என்று – பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்!

இதேவேளை, அறக்கொட்டிப் பூச்சிகளுக்கான புதிய வகை நாசினிகள் சந்தையில் தற்போது அறிமுகமாகியுள்ளது என்றும், ஆனால் பழைய நாசினிகளை காலங்காலமாகப் பயன்படுத்தி வரும் விவசாயிகளில் பலர் – புதிய நாசினியைப் பிரயோகிக்கத் தயங்குகின்றார்கள் எனவும் கூறுகின்றார் – நெற்பயிர்களுக்கான ரசாயனப் பொருட்களின் விற்பனையாளரும், விவசாயக் குழுவொன்றின் பொருளாளருமான கே.எம். முனவ்வர். இவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்!

ஆனாலும், அறக்கொட்டிப் பூச்சிகளுக்கான புதிய நாசினியை பாவித்த விவசாயிகளுக்கு  நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், அவர்களின் பயிர்களில் ஏற்பட்ட நோய்த் தாக்கம் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முனவ்வர் மேலும் கூறுகின்றார்.

நெற்பயிர்களில் இந்த அறக்கொட்டிப் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளமைக்குக் கூறப்படும் மற்றொரு காரணம் சுவாரசியமானது. அது என்ன? அதிகமான பசளைப் பிரயோகம்தான் அந்தக் காரணம். எப்படி? பசளையினை அதிகம் இடுவதால், பயிர்கள் மிதமிஞ்சிய வகையில் செழிப்படைகின்றன. இவ்வாறு ‘தொக்கை’ப் பிள்ளைகள் மாதிரி மிதமிஞ்சி வளரும் பயிர்கள்  அறக்கொட்டிப் பூச்சிகளின் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாகின்றதெனச் சொல்லப்படுகிறது.

அதுசரி, இந்தக் காரணத்தில் சுவாரசியம் என்ன இருக்கிறது என்றுதானே யோசிக்கின்றீர்கள். அதாவது, நமது விவசாயிகள் நெற்பயிருக்கு பசளையினை இவ்வாறு அதிகம் பிரயோகிக்கக் காரணம், அது மானியத்தில் கிடைக்கிறது என்பதால்தானாம். சந்தை விலையில் பணம் செலுத்தி – பசளை வாங்கினால், இப்படியெல்லாம் அநியாயத்துக்கு அதிகமாக அள்ளிக் கொட்ட மாட்டார்கள் என சற்று நக்கலாகவே கூறுகின்றார் நமது நண்பரொருவர்!

விவசாயிகளுக்கான பசளையை தற்போது மானிய அடிப்படையில் அரசாங்கம் வழங்குகின்றது. 350 ரூபா எனும் மானிய விலையில் வழங்கப்படும் ஒரு அந்தர் பசளையின் சந்தை விலை – கிட்டத்தட்ட 05 ஆயிரம் ரூபாயாகும். ஆக, குறைந்த விலையில் கிடைப்பதால்தான் பசளையை இப்படி கண்மண் தெரியாமல் பிரயோகிக்கின்றார்களாம் திருவாளர் விவசாயிகள். இந்தச் செயற்பாடானது கடைசியில் அறக்கொட்டித் தாக்கத்துக்குக் காரணமாகி விடுகிறது.

எவ்வாறிருந்த போதிலும், நெல் விளைச்சல் இம்முறை பரவலாக அதிகரித்துள்ளது.

சரி, நெல்லுக்கான விலை வீழ்ந்திருப்பதென்னவோ உண்மைதான். அப்படியென்றால், அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி – விலை உயரும் போது விற்கலாம்தானே? என்று சில விவசாயிகளைக் கேட்டோம். அவர்கள் பேசினார்கள்.

அதாவது, ”கடனுக்கும், கைமாற்றுக்கும் தெரிந்தவர்களிடம் பணத்தினை வாங்கி, அந்த முதலைக் கொண்டுதான் நாங்கள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுகின்றோம். மட்டுமன்றி, களை மற்றும் பூச்சி நாசினிகள் அனைத்தையும் பெரும்பாலும் கடனுக்குத்தான் கொள்வனவு செய்கின்றோம். இதுதவிர உழவு மற்றும் அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கான கூலியும் கடன்தான்!

ஆக, நெல்லை விற்றுவரும் பணத்தில்தான் மேற்சொன்ன கடன்களையெல்லாம் அடைக்க வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தி, விரும்பிய நேரத்துக்கு விற்கும் வரையில் – கடனுதவி செய்தவர்கள் பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். அப்படி காலம் தாழ்த்துவது நியாயமுமில்லை” என்கிறார்கள் அந்த விவசாயிகள்.

இது தவிர, தற்போது நெல்லைக் களஞ்சியப்படுத்த முடியாலிருப்பதற்கு இயந்திரங்களால் அறுவடை செய்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது, இயந்திர அறுவடை ஒரேயடியாக நிகழ்வதால், நெற்களிலுள்ள ஈரத்தை உலர்த்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. எனவே, அந்த நெல்லைக் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது!

சரி, இவைகளையெல்லாம் தாண்டி – அறுவடையின் பின்னர் நெல்லை வெய்யிலில் உலர வைத்து சிலர் சேமிக்கின்றார்களல்லவா? அது மாதிரி ஏன் நீங்களும் முயற்சி செய்யக் கூடாது என்று – நாம் சந்தித்த சில விவசாயிகளிடம் விசாரித்தோம்.

‘முடியும்தான்! ஆனால், அதன்போது விவசாயிகளின் தலைகளில் மேலும் சில செலவுகளும் பிரச்சினைகளும் விழுந்து தொலைக்குமே’ என்றார்கள் அவர்கள். அவை என்ன?
•    – நெல்லை உலர வைப்பது மற்றும் மீளவும் பைகளிலிடுவதற்கான கூலிச்
செலவு.
•    – உலர வைப்பதற்கான சீரான காலநிலை கிடைப்பதிலுள்ள சிக்கல்.
•    – களஞ்சிய வசதியினைப் பெற்றுக் கொள்வதிலுள்ள பிரச்சினைகள்.
•    – களஞ்சியப்படுத்தும் காலத்தில் ஏற்படும் நிறை குறைவு.

இவைகளையெல்லாம் கணக்கிடும் போது – அகப்படும் விலைக்கு தமது நெல்லைக் கொடுத்து விட்டுப் போவதைத் தவிர – விவசாயிகளுக்கு வேறு வழிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கவலையோடு கூறுகின்றார் ஆதம் காக்கா என்கிற விவசாயி ஒருவர்!

இப்படியானதொரு நிலையில், தமது நெல்லை ஆகக்குறைந்தது – உத்தரவாத விலையிலேனும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, அண்மையில் – அக்கரைப்பற்றுப் பிரதேச விவசாயிகள் சிலர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார்கள்.

நமது நாட்டிலுள்ள பிரதான பயிர்களில் நெல் உற்பத்தியே அதிகமாக உள்ளது. உதாரணமாக, 2006 ஆம் ஆண்டு 33 லட்சத்து 41 ஆயிரத்து 922 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு 31 லட்சத்து 31 ஆயிரம் மெற்றிக் தொன் உற்பத்தியாகியுள்ளது.

ஆனால், இவ்வாறு அதிக உற்பத்தியினை இந்த நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கும் விவசாயிகளின் நலன் தொடர்பில் அரசாங்கம் காட்டி வரும் அக்கறை என்பது போதுமானதாக இல்லை என்பதே – நாம் சந்தித்த விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது.

‘நாங்கள் சேற்றில் கால் வைப்பதால்தான், நீங்கள் சோற்றில் கை வைக்கின்றீர்கள்’ என்று முன்பெல்லாம் விவசாயிகள் மற்றவர்களைப் பார்த்து பெருமையுடன் பேசி வந்தார்கள். ஆனால், இப்போது அனைத்துமே தலைகீழாகி விட்டது.

பாவம் –
கடவுளின் தொழிலாளிகள்
நெல்லை விதைத்து விட்டு,
கண்ணீரை அறுவடை செய்கிறார்கள்!


(இந்தக் கட்டுரையை 20 பெப்ரவரி 2010 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s