காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

வளைந்து போனதொரு போர் வாளின் கதை! 21 பிப்ரவரி 2010

Filed under: அரசியல் — Mabrook @ 9:35 முப
sarath fonseka 1

சரத் பொன்சேகா

color-dotமப்றூக்
திர்பாராத ஒரு வேளையில் சரத்பொன்சேகா கைது       செய்யப்பட்டுள்ளார். ராணுவக் குற்றங்களை அவர் புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ராணுவ நீதிமன்றத்தில்தான் அவர் விசாரிக்கப்படுவார் என்கிறது அரச தரப்பு. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ராணுவ நீதிமன்றமொன்றில் விசாரணைகள் இடம்பெறும் போது, அவை தொடர்பான விபரங்கள் எவையும் பகிரங்கப் படுத்தப்படுவதில்லை!

இந்த நிலையில், பொன்சேகாவின் இந்தக் கைதானது அப்பட்டமானதோர் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்த்தரப்பினர் கூறுகின்றார்கள். ஆனால் வழமை போல் அரசு அதை அடியோடு மறுக்கிறது!
அப்படியென்றால், ஏன் இந்த கைது நடவடிக்கை என்று கேட்கிறீர்களா? அதாவது, சரத்பொன்சேகா – ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லியிருக்கின்றார், ஜனாதிபதியை கொல்லத் திட்டமிட்டிருக்கின்றார், ராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றார் என – அவர் மீது குற்றங்களை மளிகைக்கடைத் துண்டின் நீளத்துக்கு அடுக்கிக் கொண்டு போகிறது அரசு!

உண்மையாகச் சொன்னால், அரசாங்கத் தரப்புக் கூறுவது போல் – பொன்சேகா குற்றங்களைப் புரிந்திருந்தாலும் கூட, இந்தக் கைதினை பலரும் ஓர் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கின்றார்கள். காரணம் – கைது இடம்பெற்ற காலம், நேரம், இடம், சூழல் அனைத்தும் அப்படிப் பார்க்கும் படியாகத்தான் அமைந்து போயிருக்கின்றன.

சரத்பொன்சேகா ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அப்படியென்றால் அவர் சாதாரண பொதுமகன். பிறகு எப்படி அவரை ராணுவப் பொலிஸார் வந்து கைது செய்ய முடியும்? அவரை ராணுவ நீதிமன்றத்தில் எவ்வாறு நிறுத்த முடியும்? இதுவெல்லாம் தவறான நடவடிக்கைகள். இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்கள் பொன்சேகா ஆதரவாளர்கள்.

ஆனால், ‘ராணுவ சேவையிலிருந்து ஒருவர் ஓய்வு பெற்றாலும், அவர் மீது ஆறு மாத காலத்துக்கு ராணுவ சட்டமானது பிரயோகத்தில் இருக்கும்’ என்கிறார் ராணுவப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க!

அதாவது, ராணுவத்தில் கடமையாற்றும் ஒருவர், தன்னுடைய சேவையிலிருந்து நீங்கிக் கொள்கின்றார் என வைத்துக் கொள்வோம். ஆனாலும், அவ்வாறு நீங்கிக் கொண்ட தினத்தைத் தொடர்ந்து வரும் ஆறு மாத காலத்துக்கு அந்நபர் – ராணுவ வீரரொருவருக்குரிய பொறுப்புணர்வுடன் நடந்துகொள்தல் வேண்டும். அல்லாது விடின், அவர் மீது ராணுவ சட்டம் பிரயோகிக்கப்படும் என்பதே இதன் கருத்தாகும். இதன்படி பார்த்தால், ஜெனரல் பொன்சேகா – அவரின் சேவையிலிருந்து நீங்கி, இன்னும் 03 மாதங்கள் கூட ஆகவில்லை!

Mahinda - 01

மஹிந்த ராஜபக்ஷ

இந்த நிலையில்அரச தரப்புக் கூறுவது போல், ஜெனரல் பொன்சேகா மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட, அவர் கைது செய்யப்பட்ட விதம், நேரம் என்று அனைத்துமே அரசியல் யாப்புக்கு முரணான வகையில் இடம் பெற்றிருக்கின்றன என்கின்றார் ஐ.தே.கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க. இந்தக் கைது இடம்பெறுவதற்கு முன்னர் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால், நடந்தது ஒரு கைது நடவடிக்கையே அல்ல – அது ஆட்கடத்தல் என்கிறார் ஜெனரலின் மனைவியார் அனோமா பொன்சேகா!

இதேவேளை, இந்தக் கைது விவகாரமானது – உள்ளுர் முதல் உலகம் வரை ஆத்திரத்தினையும், பொன்சேகா மீது அனுதாபத்தினையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

இலங்கையிலுள்ள பௌத்தர்கள் கடவுளின் பிரதிநிதியாக பூஜித்து மதிக்கும் மகாநாயக்கர்களில் ஒருவரான மல்வத்து மகாநாயக்க தேரரே – இந்தக் கைதினை மிகவும் கோபத்துடன் கண்டித்திருக்கின்றார். இந்த நாட்டுக்காக தியாகங்கள் பலவற்றைப் புரிந்துள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவை கைது செய்திருக்கக் கூடாது என்றும், அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் கூட, அவைகளை மன்னித்து, உடனடியாக அவரை விடுவிக்க வேண்டுமென்றும் மகாநாயக்க தேரர் கூறியிருக்கின்றார்.

இதேவேளை, ஜெனரல் பொன்சேகா – இரவு வேளையில், அத்தனை அவசரமாகக் கைது செய்யப் பட்டமைக்கு காரணமாக, பலரும் பல விடயங்களைக் கூறிக் கொள்கின்றார்கள். அதில் முக்கியமானது – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குழறுபடிகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் பொன்சேகா வழக்கொன்றைத் தாக்கல் செய்யவிருந்ததாகவும், அவ்வாறு அவர் வழக்குத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காகத்தான் அரசாங்கம் இப்படி அவசர அவசரமாக அவரைக் கைது செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஆனால், அவ்வாறானதொரு வழக்கை ஜெனரல் பொன்சேகாதான் தாக்கல் செய்ய வேண்டுமென்றெல்லாம் கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அபேட்சகரும் அவ்வாறானதொரு வழக்கினைத் தாக்கல் செய்ய முடியும். அல்லது பொன்சேகா போட்டியிட்ட அன்னச் சின்னத்துக்குரிய கட்சியான புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் கூட, அவ்வாறானதொரு வழக்கைத் தாக்கல் செய்யலாம். சிலவேளை அவ்வாறானதொரு வழக்கினை பொன்சேகாதான் தாக்கல் செய்ய வேண்டுமென விரும்பினால் – அவரின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி (proxy) ஒருவரை நியமித்து அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆக, ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஆட்சேபித்து வழக்கொன்றினைத் தாக்கல் செய்யும் விடயங்களில் – ஜெனரல் பொன்சாகவின் கைது விவகாரமானது எவ்விதத்திலும் தடைகளை ஏற்படுத்தாது.

இந்த நிலையில், ராணுவ நீதிமன்றமொன்றில் ஜெனரல் பொன்சேகாவை விசாரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புகழ்பெற்ற சட்டத்தரணியான நிஸாம் காரியப்பரைத் தொடர்பு கொண்டோம். அவர் விளக்கினார்.

அதாவது, ராணுவ நீதிமன்றமொன்றில் சாதாரண நீதிபதிகள் இருப்பதில்லை. உயரதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவினர்தான் அங்கு நீதிபதி ஸ்தானத்தை வகித்து வழக்கை விசாரிப்பார்கள். அந்தக் குழுவினருக்கு உயர் தரத்தைக் கொண்ட அதிகாரியொருவர் தலைமை வகிப்பார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ராணுவ நீதிமன்றத்தில் ஒருவர் விசாரிக்கப்படும் போது, குறித்த விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர், விசாரணைக்குட்படுத்தப் படுபவரை விடவும் தரத்தில் கூடியவராக இருத்தல் வேண்டும்.

ஜெனரல் சரத்பொன்சேகாவைப் பொறுத்தவரை, அவர் நான்கு நட்சத்திர அந்தஷ்து அல்லது தராதரத்தினைக் கொண்ட ஒருவராவார்! இலங்கைப் படைகளில் இவ்வாறான தரத்தில் வேறு எவருமே இல்லை. இப்போது, நமது நாட்டில் இப்படியானதோர் உச்ச தரத்தினைப் பெற்றுள்ள ஒரேயொருவர் ஜெனரல் பொன்சேகா மட்டும்தான்.

Nizam kariyappar

நிஸாம் காரியப்பர்

அந்தவகையில் பார்த்தால், ஜெனரல் பொன்சோகவை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கும் குழுவொன்றுக்கு – இப்போதுள்ள படை உயர் அதிகாரிகளில் எவருமே தலைமை தாங்க முடியாது. ஆக, இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க வேண்டுமாயின், யாராவதொரு படை அதிகாரியை – ஜெனரல் பொன்சேகாவின் தரத்தை விடவும், உயர்த்துதல் வேண்டும். பின்னர், அவ்வாறு தரமுயர்த்தப்பட்டவரை – விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கச் செய்யலாம் என்கிறார் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்!

இவையெல்லாம்  ஒருபுறமிருக்க, ஜெனரல் பொன்சேகாவை ஏன் கைது செய்தார்கள் என்பதற்கு அரசாங்கம் – இரண்டுபட்ட காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறது.

அதாவது, சேவையிலிருந்து விடுபட்ட பிறகு – பொன்சேகா ராணுவ ரகசியங்களை வெளியிட்டார், ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்டமிட்டார், ராணுவத்துக்குள் பிளவினை உண்டு பண்ண முயற்சித்தார் என்றும், அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் எனவும்  ஒரு தரப்பார் கூறுகின்றார்கள். ஆனால், சேவைக் காலத்தில் இருந்த போது செய்த குற்றங்களுக்காகத்தான் பொன்சேகாவைக் கைது செய்துள்ளோம் என்கிறார் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க!

ஒரு கைதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்! ஆனால், இரண்டுபட்ட காரணங்கள் இருக்கக் கூடாதல்லவா?
o

(இந்தக் கட்டுரையை  14 பெப்ரவரி  2010 சுடர் ஒளி வாரமலர் பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s