காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

தெ.கி.பல்கலைக்கழக பன்னாட்டு ஆய்வரங்கு: சில குட்டுக்களும், பூங்கொத்துக்களும்! 15 நவம்பர் 2009

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 9:14 பிப

மப்றூக்
‘கொழும்பு ரேடர்ஸ்’ என்று எங்களுரில் ஒரு மளிகைக் கடை இருந்தது. என் சின்ன வயதில் சகோதரியொருத்தி அந்தக் கடை இருக்கும் பகுதிதான் கொழும்பு என்று எனக்குச் சொல்லி வைத்திருந்தாள் (எனது ஊர் அம்பாறை மாவட்டத்திலுள்ளது). நானும் ‘சின்னப்புள்ளத்தனமாக’ நம்பிக்கொண்டிருந்தேன். பிறகு சின்னதாய் எனக்கு ஒரு சந்தேகம் வந்து கேட்டபோது,  “அது (தலைநகரம்) பெரிய கொழும்பு, இது சின்னக் கொழும்பு” என்று சொல்லி தப்பித்துக் கொண்டாள்.

இதனால், சகலமானவர்களும் அறிய வேண்டிய மிகச் சிறிய உண்மை யாதெனில், ஒரு பெயரை வைத்துக் கொண்டு – அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் அல்லது கொண்டுள்ளவைகளிடமெல்லாம், பெயருக்குரிய அர்த்தத்தையோ அல்லது பொருத்தத்தையோ தேட முற்படலாகாது!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை, கலை கலாசார பீடம் – மூன்று நாட்களைக் கொண்ட பன்னாட்டு ஆய்வரங்கமொன்றினை அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த அரங்கு, 26 ஆம் திகதி முடிவடைந்தது. ஏற்பாட்டாளர்கள், பேராளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று இந்த ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்களின் மொத்தத் தொகையே ஒரு 150 அல்லது 200 க்குள்தான் இருக்கும். இதில் பேராளர்களின் தொகையே அதிகமாக இருந்தது. பார்வையாளர்களாக மிக, மிகச் சொற்பமானவர்களே கலந்து கொண்டனர்.

ஆய்வரங்கின் கருப்பொருள் ‘தமிழ் பேசும் முஸ்லிம்களின் மொழி, பண்பாடு, சமூகப் பிரச்சினைகள்’ என்பதாகும். முதன் முதலாக ஒரு பல்கலைக்கழகத்தில் இவ்வாறு ஒரு சமூகத்தை மையப்படுத்தி பன்னாட்டு ஆய்வரங்கொன்று நடத்தப்பட்டமையானது இதுவே முதல் தடவை என்று கூறுகின்றார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் எஸ். பத்மநாதன். அந்தவகையில், முஸ்லிம்கள் தொடர்பான ஒரு தலைப்பினைத் தேர்வு செய்த ஆய்வரங்கின் ஏற்பாட்டுக் குழுவுக்கு ஒரு பூங்கொத்தைப் பரிசாகக் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்!

பன்னாட்டு ஆய்வரங்கமொன்றை நடத்தும் போது ஆகக்குறைந்தது அங்கு இரண்டு விடயங்களாவது சர்வதேச தரத்தில் இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்தல் வேண்டும்.
1.    நிகழ்வு ஏற்பாடுகள்
2.    சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள்

ஏற்பாடுகள்

ஆய்வரங்கின் ஏற்பாடுகள் – சில இடங்களில் மிகவும் சொதப்பலாக அமைந்து விட்டதை இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

இலங்கையிலேயே மிகவும் அதிக இடப்பரப்பைக் கொண்ட பல்கலைக்கழம் தெ.கி. பல்கலைக்கழகமாகும். சுமார் 200 ஏக்கர் விசாலத்தில் அமைந்திருக்கிறது. ஆய்வரங்கின் ஆரம்ப நாளன்று, நிகழ்வு எங்கு நடைபெறுகிறது என்பதை அறிவிக்கும் எழுத்து மூலமான குறிப்புகளோ,அல்லது நிகழ்வு நடக்கும் இடத்துக்கு வருகை தருவோரை வழிப்படுத்திக் கொண்டு செல்லக் கூடிய வகையிலான அறிவித்தல் குறியீடுகளோ அங்கு இடப்பட்டிருக்கவில்லை. இதனால், பலர் அங்குமிங்குமாக மிக நீண்ட தூரம் அலைந்து திரிந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. குறிப்பிட்ட வழியில் மட்டைத்தாள்களில் அம்புக்குறிகளை எழுதி ஆங்காங்கே ஒட்டி வைத்திருந்தாலே – அலைச்சலின்றி உரிய இடத்தை ஆட்கள் அடைந்திருப்பார்கள்.

இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் ஆயிரத்து ஐநூறு ரூபாவினைச் செலுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஆயிரம் ரூபாவாகக் குறைக்கப்பட்டது. நிகழ்வன்று ஐநூறு ரூபாவே அறவிடப்பட்டது. இந்தத் தொகையைச் செலுத்துவோருக்கு உணவு மற்றும் விழா மலர்கள் போன்றவை வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தார்கள்.

உண்மையாகவே, இந்த ஆய்வரங்கில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவேண்டும் என்கிற விருப்பங்களோடு இருந்த பலரை நாம் சந்தித்திருந்தோம். ஆனால், அதற்காகச் செலுத்த வேண்டிய தொகை 1500 ரூபாய் என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அவர்கள் பின்வாங்கி விட்டார்கள்.

‘பார்வையாளர்கள் இலவசமாகவே கலந்து கொள்ளலாம், அதேவேளை அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் அவரவரே கவனித்துக் கொள்ளவும் வேண்டும்’ என்று அறிவித்திருந்தாலே போதும். நிறையப் பார்வையாளர்கள் இந்த ஆய்வரங்கிற்கு வந்திருப்பார்கள்.

பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது – இந்த ஆய்வரங்கு அதன் நோக்கங்களில் முக்கியமானதொன்றை எட்டியிருக்கவில்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது!

அழைத்துவரப்பட்ட வெளிநாட்டு அதிதிகள்

இந்தப் பன்னாட்டு ஆய்வரங்குக்கு பிரதம விருந்தினராக வந்திருந்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். இவரைத்தான் பிரதம அதிதியாக அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்பாட்டாளர்களில் யார் முதலில் முன்வைத்தார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனாலும், மீரானின் பெயரைப் பிரேரித்தவருக்கு சில பூங்கொத்துக்களை நிச்சயம் கொடுக்கலாம். வாழ்த்துக்கள்!!

அரங்கின் ஆரம்ப நிகழ்வன்று உரையாற்றிய தோப்பில் மீரான் – ஒரு கதை சொல்வது மாதிரி தனது பேச்சை ஆரம்பித்தார்! அகஸ்தியர், ஒளவை, வள்ளுவர் போன்றோரின் பிறந்த இடங்களுக்கெல்லாம் அந்தப் பேச்சினூடாக நம்மை அழைத்துப் போய் – பின்னர் தனது சொந்த ஊரான தேங்காய்பட்டிணத்துக்குள் நம்மையெல்லாம் சற்று நேரம் வசிக்கச் செய்த மீரானின் சொல்லழகு அற்புதமானது!

இதேவேளை, இந்தியாவிலிருந்து அதிதிகளாக மு. சாயபு மரைக்கார் என்கிற பேராசிரியரையும், அவருடைய மனைவி பேராசிரியை நஸீபா பானுவையும் அழைத்து வந்த ஏற்பாட்டுக் குழுவுக்கு – வலிக்கும் படியாக சில குட்டுக்களை வைத்தே ஆக வேண்டியிருக்கிறது. அந்தப் பென்னம் பெரிய இந்தியாவில், உங்களுக்கு இவர்களா கிடைத்தார்கள்.

சாயபு மரைக்கார் – சன் டீ.வி.யின் பட்டிமன்றத்துப் பேராசிரியர் வகையறாவைச் சேர்ந்தவர் போலவே பேசினார். வெறும் கரகோசத்தையும், உணச்சிவசப்படுத்தலையும் குறிவைத்துப் பேசும் நபர். சாயபு மரைக்கார் பேசிய சில விடயங்கள் மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவை.

உதாரணமாக, உலகின் முதல் மனிதர்களான ஆதம் நபியவர்கள் (ஆதாம்) இறைவனால் இலங்கையில் இறக்கி வைக்கப்பட்டார் எனவே, அவர் பேசிய மொழி தமிழ்! ஆதமின் மனைவி ஹவ்வா (ஏவாள்) சஊதியில் இறக்கி வைக்கப்பட்டார். எனவே, அவர் அரபு மொழிதான் பேசியிருப்பார். அந்தவகையில் பார்த்தால், தமிழ் என்பது முஸ்லிம்களுக்கு தாய்மொழியல்ல, தந்தை மொழி! அவர்களின் தாய் மொழி (அதாவது தாய் ஹவ்வா பேசியது) அரபு ஆகும் என்று உளறிக் கொட்டினார் மனிதர். உணர்ச்சிவசப்பட்ட சில பார்வையாளர்கள் பேராசிரியரின் இந்த உரைக்குக் கரகோசம் வேறு – பண்ணித் தொலைத்தார்கள்.

அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும், வரலாற்று ஆதாரங்களுடனும் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதொரு அரங்கின் ஆரம்ப நிகழ்வில் வைத்து – இப்படி பத்தாம்பசலித்தனமாக, சொற்களால் கிளுகிளுப்பூட்டக் கூடிய வகையில் சாயபு மரைக்கார் பேசிக் கொண்டிருந்த போது – மேடையிலிருந்த நம்நாட்டுப் பேராசிரியர்கள் பலரின் முகத்தில் நிறையவே வெறுப்புணர்வைக் காண முடிந்தது! (படித்த மனிதர்கள் கேட்கும் பேச்சாய்யா அது?)

இதுமட்டுமல்ல, இந்திய சாதித்திய விருதினை தனது நாவலுக்காகப் பெற்றுக் கொண்ட (கவனிக்க: இந்தியாவில் எழுத்துக்காக சாகித்திய அகடெமி விருதினைப் பெறுவதென்பது ‘சும்மா’ வேலையல்ல!) தோப்பில் மீரானை யாருடனெல்லாம் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் புரிதல்களேயற்று – சாயபு மரைக்கார் தனது உரையில் உளறிக் கொண்டிருந்தார். ‘மீரான் என்கிற பெயரை வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் – தோப்பில் மீரானுக்குச் சமமாகி விட முடியாது’ – என்பது கூடவா மரைக்காருக்குத் தெரியாது. (சாயபு மரைக்காரின் உரை பற்றிக் கேள்விப்பட்ட எங்களுரைச் சேர்ந்த ‘சோத்து மீரான்’ என்பவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்.  தோப்பில் மீரானுடன் தனது பெயரையும் சாயபு மரைக்கார் ஏன் ஒப்பிட்டுப் பேசயிருக்கக் கூடாது என்பதுதான் அந்தக் கோபத்துக்கான காரணமாம்)

சாயபு மரைக்காரின் கூத்து இவைகளென்றால், ஆய்வரங்கின் இறுதி நாள் நிகழ்வில் அவர் மனைவி ஆற்றிய உரை – வெறும் கிளிப்பிள்ளைத்தனமானது. நஸீமா பானு ஒலிவாங்கியின் முன்னே வந்து நின்றார், தமிழின் முதல் வெளியீடுகள் பற்றிய பட்டிலொன்றை வாசித்தார், பின் – அவருக்கான ஆசனத்தில் போய் அமர்ந்தார். இடையிடையே தனது கணவனாரைப் பற்றிய பெருமைகளைக் கூறும் புராணங்கள் வேறு! அப்படி அவர் பெருமையடித்துப் பேசியதற்கான நியாயபூர்வத் தேவைகள் எதுவாக இருக்கும் என்று இந்தக் கட்டுரையை எழுதும்வரை யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை!

இவர்களின் கோமாளித்தனங்கள்தான் இப்படி இருந்தன. ஆனால், ஆரம்ப நிகழ்வன்று நமது பேராதனைப் பல்கலைக்கழகத் தகைசார் பேராசிரியர் எஸ். பத்மநாதன் ஆற்றிய உரையோ மிகவும் சிறப்பாக இருந்தது. வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த அந்தப் பேச்சு ஓர் ஆவணமாகும்! பேராசிரியர் பத்மநாதனுக்கு நமது பூங்கொத்துக்களும், பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்!!

கவனிக்கப்படாதவர்களும்,    கவனிப்புக்குரியவர்களும்!

தாம் நடத்துகின்ற ஆய்வரங்கில் கலந்து கொள்ளுமாறு – ஏற்பாட்டுக் குழுவினர் சிலருக்கு அழைப்பிதழ்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அழைப்புக் கிடைத்தவர்களில் கணிசமானதொரு தொகையினர் வருகை தரவில்லை என்பது வேறு கதை!

ஆனால், பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிராந்தியத்தில் வசிக்கும் மிக முக்கியமான எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், புத்திஜீவிகளும் பல்கலைக்கழகத்தாரால் இவ்வரங்குக்கு அழைக்கப்படவேயில்லை. உதாரணமாக, கவிஞர் சோலைக்கிளி (இரண்டு முறை சாகித்திய விருதுபெற்றவர்), சிறுகதையாளர் எஸ்.எல்.எம். ஹனீபா (சாகித்திய விருது பெற்றவர்), சிறுகதையாளர் உமாவரதராஜன், ஆசுகவி அன்புடீன் போன்ற பல படைப்பாளிகள் கவனிக்கப்படாமலேயே போய்விட்டார்கள்.

இதில் கவலைக்குரிய சுவாரசியம் என்னவென்றால், ஹனீபா மற்றும் சோலைக்கிளி ஆகியோரைப் பற்றி இந்த ஆய்வரங்கிலேயே கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ‘தமிழ்ச் சிறுகதையின் ஈழத்துப் பிரதிநிதி எஸ்.எல்.எம். ஹனீபா’, ‘நவீன தமிழ்க் கவிதை உருவாக்கத்தில் முஸ்லிம் கவிஞர்கள்: சோலைக்கிளியின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ஆகிய தலைப்புக்களில் அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. ஆனால், ஆய்வு செய்யப்பட்ட அந்தப் படைப்பாளிகள் காலடியில் இருந்தும் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை! (என்ன கொடும சார் இது….)

ஆய்வுக்கட்டுரைகள்: கொஞ்சம் நெல், நிறையப் பதறு!

இங்கு மொத்தமாக 94 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுமென அட்டவனைப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்துக் கட்டுரைகளையும் ஒன்பது வகைகளுக்குள் அடக்கியிருந்தார்கள்.

இந்த நிலையில், மூன்று நாட்களுக்குள் அரங்கை நடத்தி முடிக்க வேண்டியிருந்ததால், ஒரே தினத்தில், ஒரே நேரத்தில் பல அமர்வுகளை அவர்கள் நடந்தி முடிக்க வேண்டிருந்தது. இதனால், அனைத்துக் கட்டுரைகளையும் உள்வாங்கக் கூடிய சந்தர்ப்பம் எவருக்கும் கிடைக்கவில்லை. இந்த ஏற்பாட்டு முறையானது பெரியதொரு குறைதான் என்றாலும் – 03 நாட்களுக்குள் 94 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லைதான்!

சமர்ப்பிக்கப்பட்டவைகளில் நிறையக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரையொன்றுக்கான தகுதிகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை என்பது அதிகமானோரின் கருத்தாகும். சில கட்டுரைகள் பத்தாம் வகுப்புப் படிக்கும் கெட்டிக்கார மாணவனொருவனின் கட்டுரைத் தரத்தை ஒத்ததாய் இருந்தன. இன்னும் சிலவற்றில் ஏராளமான தகவல் பிழைகள்!

இங்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் கணிசமானவை ஆய்வுக் கட்டுரைகளுக்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை அரங்குக்கு வந்திருந்த துறைசார் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களே நம்மிடம் ஒப்புக்கொண்டார்கள். ”இந்த ஆய்வரங்குக்காக அனுப்பப்பட்டிருந்த கட்டுரைகளை வடிகட்டி எடுத்து, அவைகளில் தரமானவைகளை மட்டும் இதற்குப் பொறுப்பானவர்கள் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை போல் தெரிகிறது” என்று, தவறு நிகழ்ந்தமைக்கான காரணத்தையும் அவர்கள் குறித்துச் சொன்னார்கள்.

இப்படி நம்மிடம் தைரியமாகப் பேசிய அந்த விரிவுரையாளர்கள்ளூ ”பேப்பரில போடக்க எங்கட பெயர எழுத வேணாம் தம்பி” என்றும் வேண்டிக் கொண்டார்கள்.

ஏன்?

ஆமை சுர்றது மல்லாத்தி, நாங்க சொன்னா பொல்லாப்பு.
அதனால்தான்!

எவ்வாறிருந்த போதிலும், பன்னாட்டு ஆய்வரங்கொன்றில் இவ்வாறு நிறையப் பதர்களெல்லாம் பங்குகொள்வதற்கு அனுமதித்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு – புடைக்கும் படியாக சில குட்டுகள்!

இதேவேளை, சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளையெல்லாம் சேர்த்து ஒரு நூலாக அச்சில் வெளிக்கொண்டுவரப் போவதாக தெ.கி.பல்கலைக்கழகத் தரப்பார் கூறினார்கள். நல்ல முயற்சிதான். ஆனால், இதன்போது – தரமானதும், பிழைகற்றதுமான ஆய்வுக் கட்டுரைகளை மட்டும் தெரிவு செய்ய வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்!

இந்த ஆய்வரங்கின் ஏற்பாட்டுக்குழுவுக்குத் தலைவர் பேராசிரியர் ஏ. சண்முகதாஸ்! அவரின் கைநிறைய நமது பூங்கொத்துக்கள்! இந்தளவுக்காவது ஆய்வரங்கை நடத்தி முடிப்பதற்கு – பேராசிரியரின் பங்களிப்பு பெரு உதவியாக இருந்ததாய் பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

ஆய்வரங்கை நடத்துவதற்கு இணைப்பாளர்களாக இருந்து செயற்பட்டவர்கள் இருவர். ஒருவர் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கே. ரகுபரன். அடுத்தவர் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எப். சாபியா!

ஆய்வரங்கை முன்னின்று நடத்திய ‘தலை’களில் முக்கியமான ஒருவராக ரகுபரனைக் குறிப்பிடலாம்! அத்தனை விடயங்களையும் தலையில் போட்டுக் கொண்டு இவர் ஓடியோடி வேலை செய்ததைப் பார்க்க பாவமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. முக்கிய பொறுப்புக்களை எடுத்துக் கொண்டு செயற்பட வேண்டிய ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பலர் – ஆய்வரங்க நிகழ்வுகளில் அவிழ்க்காத டையுடன், ஸ்டைலாகப் புகைப்படங்களுக்குப் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தபோது – ரகுபரன் மட்டும், ஓர் ஓரத்தில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததில் தெரிந்தது, அவருடைய அர்ப்பணிப்பும் – முதிர்ச்சியும்!

நமது பூங்கொத்துக்களால் ஒரு மலர்க்கிரீடம் செய்து, அதை – மொழித்துறைத் தலைவர் ரகுபதியின் தலைக்கு மகிழ்வோடு சூட்டுகின்றோம். இதற்கு மிகவும் பொருத்தமான மனிதர் அவர்!

இறுதியாக ஒரேயொரு விடயத்தை மட்டும் சொல்ல வேண்டியிருக்கிறது! பன்னாட்டு ஆய்வரங்கங்களுக்கு இதுவரை சென்றிராதவர்கள் யாராவது – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நடத்திய மேற்படி ஆய்வரங்குக்குச் சென்றிருந்தால்ளூ ‘பன்னாட்டு ஆய்வரங்கங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்குமாக்கும்’ என்று சிலவேளை அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். ஆகவே வாசகர்களே இந்தக் கட்டுரையின் இரண்டாவது பந்தியை மீண்டுமொரு தடவை ஊன்றிப் படித்துக் கொள்ளுங்கள்!


(இந்தக் கட்டுரையை 09 நொவம்பர் 2009 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s