காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கத்தி மேல் நடப்பவர்கள்! 10 ஒக்ரோபர் 2009

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 10:39 பிப

மப்றூக்

“நான் ஓர் ஊடகவியலாளன்” என்று தம்மை அறிமுகம் செய்து கொள்ள இன்று அதிகம் பேர் விரும்புகின்றார்கள். காரணம் இந்தத் துறையில் கிடைக்கும் பிரபலமும், தனி அடையாளமும் ஆகும். அதனால், ஒரு பிராந்திய நிருபராகவாவது இந்தத் துறைக்குள் நுளைந்து கொள்ள முடியாதா என்று பலர் ஆசைப்படுகின்றார்கள்.

ஆனால், இந்தத் துறை மீதான கவர்ச்சியைப் போலவே, இதில் காணப்படும் ஆபத்துக்களும் இன்று அதிகரித்து விட்டன. ஒற்றை வரியில் சொன்னால், உலகில் மிகவும் ஆபத்தான தொழிற்துறைகளில் ஒன்றாக ஊடகத்துறை மாறியிருக்கின்றது. ஒரு காத்திரமான ஊடகவியலாளனாகச் செயற்படுவதென்பது ‘சும்மா’ வேலையல்ல. நமது கிராமத்துப் பாசையில் சொன்னால், அது – ‘மலையைப் பிளந்து மன்னாருக்கு ஏற்றுவ’தை விடவும் கடினமானதொரு காரியமாகும்’!

உதாரணமாக, உலகில் ஆசிரியத் தொழிலைச் செய்வதற்காக, வைத்தியத் தொழிலைச் செய்வதற்காக அல்லது மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளியாக இருப்பதற்காக யாராயினும் ஒருவர் கொல்லப்பட்டதாக நாம் கேள்விப் பட்டதேயில்லை. ஆனால், ஊடகத் தொழிலைச் செய்தார்கள் என்பதற்காக உலகில் ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றார்கள், தாக்கப்படுகின்றார்கள், சிறை வைக்கப்படுகின்றார்கள்!

இந்த நிலையில், இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்தும் மீண்டுமொரு தடவை அனைத்துத் தரப்பினராலும் உரத்துப் பேசப்படுகின்றது. இதற்கான அண்மைக்காலக் காரணம் என்னவென்பது பற்றி – அதிக விளக்கம் இங்கு தேவையில்லை. மேலும், ஊடகப்பணி செய்வதற்கு அச்சமும், அபாயமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இலங்கையை சர்வதேச ஊடக அமைப்புக்கள் பல – மீளவும் அடையாளப்படுத்தியுள்ளன.

ஊடகங்களுக்கு இவ்வாறு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்துவோரின் புத்தியற்ற இரும்புக் கரங்கள்  இந்தத் துறையில் ஆர்வமுடன் இயங்கிவந்த பல உயிர்களை இரக்கமின்றிக் கொன்றிருக்கின்றன, காவுகொண்டிருக்கின்றன.

நம்பினால் நம்புங்கள், கடந்த 12 வருட காலப்பகுதியில் – ஊடகவியலாளர்களும், ஊடகத்துறைப் பணியாளர்களுமென்று சுமார் 1100 பேர் அவர்களின் கடமையின் போது கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் புள்ளி விபரத்தை வைத்தே – ஊடகவியலாளர்கள் நாளாந்தம் முகம் கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஓரளவாயினும் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும்!

இந்த ஊடகவியலாளர்கள் – ஏன் கொல்லப்பட்டார்கள்? எதற்காகக் கொல்லப்பட்டார்கள்? என்பதற்கு காரணம் ஏதாவது இருக்க வேண்டுமல்லவா? IFJ எனப்படும் – ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம் (International Federation of Journalists) அதற்கான காரணத்தை இப்படிச் சொல்கிறது.

அதாவது, இறந்து போன இந்த ஊடகவியலாளர்கள் எழுதியவைகளில் அல்லது கூறியவைகளில் ஏதோவொரு விடயம் – யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை! அல்லது, மேற்படி ஊடகவியலாளர்கள் இறப்பதற்கு முன்னர் – பிழையானதோர் இடத்தில், பிழையானதொரு நேரத்தில் இருந்திருக்கின்றார்கள். அதனால்தான் இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறது IFJ.

உலகளாவிய ரீதியாக இந்த வருடம் ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை மட்டும் 25 ஊடகவியலாளர்கள் தமது கடமை நேரத்தின் போது கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு (Committee to Protect Journalists) கூறுகின்றது. இதுதவிர, கொலைக்கான காரணம் ஊர்ஜிதப்படுத்தப்படாத நிலையில் மேலும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

மேற்படி 25 பேரில் – சோமாலியாவில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா 03 பேரும், பிலிபீன்ஸ் மற்றும் இலங்கையில் தலா இரண்டு ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஏனைய ஊடகவியலாளர்கள் கொலம்பியா, இந்தோனேசியா, கென்யா, மடகஸ்கர், மெக்சிகோ, நேபாளம், ரஷ்யா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரின் மரணத்துக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும். அவர்களின் இறப்பு – நிரப்ப முடியாத இடைவெளிகளையும், ஆற்றவே முடியாத காயங்களையும் – எங்கோ, யாருக்கோ ஏற்படுத்தி விட்டிருக்கவும் கூடும். ஒவ்வொருவரின் கொலைக்குப் பின்னாலும் ஆயிரமாயிரம் வலிகளும் இருக்கும்.

இருந்தபோதும், படுகொலை செய்யப்பட்ட மேற்படி ஊடகவியலாளர்களில் – வயதில் மூத்தவர், வயதில் இளையவர் மற்றும் ஒரு பெண் என மூன்று ஊடகவியலாளர்கள் குறித்து மட்டும் – சற்றே விரிவாக இந்தக் கட்டுரை பேச முற்படுகின்றது.

முதலில் உங்களுக்கு அகுய்லாரைப் பற்றிக் கூற வேண்டும்! கொலம்பியாவைச் சேர்ந்த வானொலி ஊடகவியலாளர்தான் அகுய்லார். இறந்த போது இவருக்கு 72 வயது!

கொலம்பியாவில் இடம்பெறும் லஞ்ச நடவடிக்கைகளை தன்னுடைய செய்தி மற்றும் கட்டுரைகளில் – அகுய்லார் மிகக் கடுமையாக விமர்ச்சித்து வந்தார். அவ்வாறான லஞ்ச செயற்பாடுகளில் தொடர்புபட்ட உள்ளுர் அரசியல்வாதிகளையும், வலதுசாரி ராணுவத் துணைக்குழுக்களையும் அவர் அடையாளம் காட்டி வந்தார்.

ஊடகவியலாளர் அகுய்லாருக்கு ஏற்கனவே மரண அச்சுறுத்தல் இருந்ததாக, அவருடைய மகன் மாட்டின் கூறுகின்றார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இரண்டு வருடங்களுக்கு முன்பே எனது தந்தையாருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதற்காக அந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றோ, யாரால் விடுக்கப்பட்டது என்றோ அவர் அறிந்திருக்கவில்லை” என்கிறார்

பொருட்களை விநியோகிப்பவன் போல பாவனை செய்து கொண்டு – ஒரு நாள் மாலை 7.15 மணியளவில் ஊடகவியலாளர் அகுய்லாரின் வீட்டுக்குள் நுழைந்த கொலையாளியொருவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அகுய்லாரை மூன்று முறை சுட்டான். கீழே விழுந்த அந்த மூத்த ஊடகவியலாளர் பின்னர் எழுந்திருக்கவேயில்லை. அகுய்லார் அந்த இடத்திலேயே இறந்து போனார்!

அகுய்லாரின் கொலை தொடர்பாக தகவல்கள் வழங்குவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படுமென்று கொலம்பிய ஜனாதிபதியே கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் – கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களின் பின்னர் அதாவது, ஜுலை 10 ஆம் திகதியன்று அகுய்லாரின் கொலை தொடர்பில் உள்ளுர் போதைப் பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவனை கொலம்பிய பொலிஸார் கைது செய்தனர். உள்ளுர் அரசியல்வாதிகள் வழங்கிய பணத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் ஊடகவியலாளர் அகுய்லாரை – அவன் கொலை செய்தததாக கொலம்பிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வரிசையில் 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த மனது வலிக்கும் மற்றொரு படுகொலை, நேபாளப் பெண் ஊடகவியலாளர் உமாசிங்கினுடையது. 27 வயதுடைய உமா – பத்திரிகை, வானொலி என்று இரண்டு தளங்களிலும் ஒரு நிருபராக இயங்கி வந்தவர்!

கடந்த ஜனவரி மாதம் – ஒரு நாள் அடையாளம் தெரியாத வன்முறைக் குழுவொன்று உமாசிங்கின் வீட்டுக்குள் நுழைந்தது. அந்தக் குழுவில் கிட்டத்தட்ட 15 பேர் இருந்தார்கள். அவர்கள் ஊடகவியலாளர் உமாசிங்கை மிகக்கடுமையாகத் தாக்கி உயிரிழக்கச் செய்தார்கள். நமது பாசையில் சொன்னால் – அடித்தே கொன்றுவிட்டார்கள்!

உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களின் தகவல்களின்படி,  தலை மற்றும் உடலின் மேற்பகுதிகளில் கடுமையான காயங்களுக்குள்ளான உமா, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்து போனதாகத் தெரிகிறது.

உமாவின் கொலைக்கு – நேபாளத்தின் உள்ளுர் மாவோயிஸ்ட்களே காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அந்த நாட்டுப் பொலிஸார்.

இவ்வாறு – இந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 25 ஊடகவியலாளர்களின் பட்டியலில் மிகவும் வயது குறைந்தவரென்றால், சோமாலியாவைச் சேர்ந்த யூசுப் என்பவர்தான்! அங்குள்ள தனியார் வானொலியொன்றில் யூசுப் அறிவிப்பாளராகக் கடமையாற்றினார். அதற்கு முன்னர் நிருபராகவும் பணிபுரிந்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 04 ஆம் திகதியன்று காலை 8.00 மணியளவில், காலை நேரச் செய்தியினை வானொலியில் வாசித்து விட்டு வெளியில் வந்த போது, யாரோ சில துப்பாக்கிதாரிகளால் யூசுப் வீதியில் வைத்துச் சுடப்பட்டார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்தால் பிழைக்க வைத்திருக்கலாமாம். ஆனால், யூசுபை சுட்டவர்கள் மூன்று மணி நேரமாக – அவரை யாரும் நெருக்க முடியாதவாறு தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டேயிருந்தார்கள்.

யூசுப்பின் மனைவியும் அவரின் மூன்று குழந்தைகளும் இப்போது – ஆதரவில்லாமல் வாழ்வை அச்சத்துடன் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஊடகத்துறையில் செயற்பட்ட ஒரே காரணத்துக்காக இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் கதைகள் மிகவும் நீளமானவை, வலி நிறைந்தவை!

‘கத்தி மேல் நடப்பது’, ‘கத்தி மேல் நடப்பது’ என்று கூறுவார்களே, அதற்கு மிக நல்ல உதாரணம் – ஓர் ஊடகவியலாளராகத் தொழில் பார்ப்பதுதான்!

(இந்தக் கட்டுரையை 07 ஒக்டோபர் 2009 ஆம் திகதிய ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s