காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

சமய அறிவு இல்லாமையே குற்றங்கள் நிகழ்வதற்கான பிரதான காரணமாகும்! 20 ஜூலை 2009

Filed under: சந்திப்பு — Mabrook @ 4:20 பிப

மப்றூக்

(இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி  நூறுல் மைமூனாவுடனான  நேர்காணல்)

நூறுல் மைமூனா – அடிப்படையில் ஆளுமையுள்ள இஸ்லாமியப் பெண் இவர்! நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து விட்டால் இவரின் முகத்தில் எந்தவித உணர்வினையும் நாம் இனங்காண முடியாது. ஒரு நீதிபதியாக மிகவும் கண்டிப்பானவர். ஆனால், தனிப்பட்ட ரீதியில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

ஒரு விவசாயத் தந்தைக்கும், சாதாரண தாய்க்கும் பிறந்த ஏழு பிள்ளைகளில் ஒருவர் நூறுல் மைமூனா. சோந்த ஊர் – அம்பாரை மாவட்டத்திலுள்ள சாந்தமருதுப் பிரதேசம்.

இஸ்லாமிய நெறிமுறைகளுக்குள் வாழ வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார். அந்த வாழ்க்கை முறையின் வெற்றிபற்றி ஆழமாகப் பேசுகின்றார்.

மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வொன்று கிடைத்தது. இப்போது இவர் – மேல் நீதிமன்ற நீதிபதி!

இந்த நேர்காணலுக்காக இவரைச் சந்திக்கச் சென்றபோது – ஒரு நீதிபதி என்கிற  எந்தவித பந்தாக்களுமின்றி, இவரே நமக்குத் தேநீர் பகிர்ந்தார்.

கேள்வி: ஒரு சட்டத்தரணியாக இருப்பதற்கும் – நீதிபதியாக இருப்பதற்குமிடையிலுள்ள அனுபவ ரீதியான வேறுபாடுகள் எவை?

பதில்: சட்டத்தரணிகள் எப்போதும் தமது தரப்பாரின் நலன் தொடர்பாக மட்டுமே யோசிப்பார்கள். அப்படித்தான் யோசிக்க வேண்டியுமிருக்கிறது! ஆனால், ஒரு நீதிபதியாக ஒருபோதும் அவ்வாறு செயற்பட முடியாது.  வழக்கோடு தொடர்புடைய இரு தரப்பாரின் கருத்துகளையும் மிகக் கவனமாக நாம் கேட்க வேண்டும். குறிப்பிட்டதொரு தரப்பாரின் மீதுள்ள பிரத்தியேக ஈடுபாட்டுடன் ஒரு சட்டத்தரணி தனது வழக்கைக் கொண்டு நடத்துவது போல, நீதிபதி ஸ்தானத்திலிருந்து செயற்பட முடியாது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், ஒரு நீதிபதி எந்தத் தரப்பு மீதும் பிரத்தியேக ஈடுபாடு காட்டக்கூடாது எனும் அதேவேளை, ஒவ்வொரு தரப்பினரது கருத்துக்களையும் ஈடுபாட்டுடன் செவிமடுக்கவும் வேண்டும்!

கேள்வி: ஒருவர் நிச்சயமாக குற்றவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்று உங்கள் உள்மனம் சொல்கிறது. ஆனால், சட்ட ரீதியாக நிரூபிக்கப்படாததால், சந்தேக நபரை விடுதலை செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த நிலையிலான உங்கள் மனோநிலை பற்றிப் பேசுங்களேன்?

பதில்: ஒரு குற்றவாளி தப்பித்துச் செல்வதென்பது கவலையான விடயம்தான். ஆனாலும், சட்டப்படியே செயற்பட வேண்டியுள்ளதால் வேறெதுவும் செய்ய முடியாது! மேலும், அந்த வேளையில் நமது விருப்பு – வெறுப்புகளை வெளிக்காட்டவும் முடியாது – கூடாது!

கேள்வி: இது ஆணாதிக்க சமூக அமைப்பு. அனேகமாக ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இந்த ஆதிக்கத்துக்கெதிரான குணமொன்று இருக்கிறது. அந்தவகையில், ஆண் – பெண் தகராறுகள் வழக்குகளாய் வரும்போது, உங்களுக்குள்ளிருக்கும் ஆணாதிக்க எதிர்ப்பு மனம் செயற்படும் விதம் குறித்துச் சொல்லுங்களேன்?

பதில்: மீண்டும் நான் கூறுகிறேன், உணர்வுகளை வைத்துக்கொண்டு ஒரு போதும் நாம் தீர்ப்புகளை வழங்க முடியாது! இரண்டு தரப்பையும் முதலில் விசாரிக்க வேண்டும். சில இடங்களில் பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்களும் இருக்கின்றார்கள்!

கேள்வி: நமது சமூகத்தில் நிலவுவதாகச் சொல்லப்படும் ஆணாதிக்கம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையாகவே, நமது சமூகத்தில் நூறு வீத ஆணாதிக்கம் இருக்கின்றது எனச் சொல்வதற்குமில்லை. ஆணாதிக்கம் செலுத்தப்படாமல் சிறப்பாகக் கொண்டு செல்லப்படும் குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன. குடும்பத்திலுள்ள ஆண் – பெண்களுக்கு இடையில் விட்டுக்கொடுப்புகள் நிகழும்போது இவ்வாறான ஆதிக்கங்கள் இடம்பெறுவதற்குச் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகின்றன! மட்டுமன்றி, ஆணாதிக்கத்தைப் போலவே, நமது சமூகத்தில் பெண்ணாதிக்கம் இருப்பதையும் மறைத்து விட முடியாது!

கேள்வி: மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென நீங்கள் கருதும் சமூகக் குற்றமென்ன?

பதில்: குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கொடுமைப்படுத்துவதை ஒரு பாரதூரமான சமூகக் குற்றமாக நான் கருதுகிறேன்! அத்தோடு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் மிக மோசமானதொரு குற்றமாகும். எனவே, இவ்வாறான குற்றங்களுக்கு – சட்டத்துக்குட்பட்டு மிக அதிகமான தண்டனைகளை வழங்க வேண்டுமென்பது எனது அபிப்பிராயமாகும்!

கேள்வி: ஒரு இஸ்லாமியப் பெண் நீதிபதியாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அல்லது அசௌகரியங்களாக நீங்கள் கருதுபவைகள் எவை?

பதில்: சிரமங்கள் என்று எதுவுமேயில்லை! அல்லது, அவ்வாறான சிரமங்கள் எதையும் இதுவரை நான் முகம்கொள்ளவில்லை.

கேள்வி: எந்த வகையான குற்றங்களுக்கு இப்போதைய சட்டத்திலுள்ள தண்டனை போதாதென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: திருமணமொன்றின் போது, விவாகப் பதிவுச் சான்றிதழில் பொய்யான தகவல்களை வழங்குவதென்பது மிகக் கடுமையானதொரு குற்றமாகும்.

இஸ்லாமிய விவாகச் சட்டத்தில் இவ்வாறு பொய்யான தகவல்களை வழங்குவது குற்றமென்றும், அதற்கான தண்டனை என்னவென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனாலும், குறித்த குற்றத்துக்காக சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தண்டனையானது போதாதென்று நான் கருதுகிறேன்.

எனவே, இவ்வாறான மோசடிக்காக – இஸ்லாமிய விவாகச் சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும்!

கேள்வி: பெண்களை சாதாரணமாக கருணை மனம் கொண்டவர்கள் என்பார்கள்! தண்டனை வழங்கும் போது இந்தக் கருணை மனம் உங்களுக்குள் செலுத்தும் ஆதிக்கம் பற்றிக் கூறுங்களேன்?

பதில்: தீர்ப்பு வழங்கும் போது – இவ்வாறான மன உணர்வுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுவிட வேண்டும். அவ்வாறான நிலையில்தான் நான் தீர்ப்புகளை வழங்குகிறேன்!

கேள்வி: இயல்பான குணத்திலிருந்து இவ்வாறு விடுபடுதல் என்பது சாத்தியம்தானா?

பதில்: ஆம், எல்லா வகையான உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டுதான் தீர்ப்புகளை வழங்க வேண்டியிருக்கின்றது.

கேள்வி: நமது சமூக அமைப்பில் குற்றம் நிகழுவதற்கான அடிப்படைக் காரணம் எதுவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: முதலாவது – சமய அறிவு இல்லாமை அல்லது போதாமை! குறிப்பாக, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தெளிவான இஸ்லாமிய அறிவு இல்லாமை. அடுத்த விடயம், குறைவான படிப்பறிவு மட்டம். இன்னுமொன்று, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிழையான போட்டி மனப்பான்மை. அதாவது, எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் எனும் மனநிலை!

கேள்வி: சட்டத்தை உங்கள் துறையாகத் தெரிவு செய்தமைக்கு குறித்துச் சொல்லத்தக்க காரணங்கள் எவை?

பதில்: பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது – எனது முதலாவது விருப்பமாக கலைத்துறையையே தெரிவுசெய்தேன்! இரண்டாவது தேர்வுதான் சட்டத்துறை. அந்தவகையில் எனக்கு கலைத்துறையில் கற்க, பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நான் செல்லவில்லை. காரணம், அந்தவேளையில் அங்கு கடுமையான பகிடிவதை இடம்பெறுவதற்கான முயற்சிகள் நிகழ்வதாக அறியக் கிடைத்தது! பின்னர், கொழும்புப் பல்கலைக்கழகத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். இதனால், என்னுடைய இரண்டாவது தெரிவான சட்டத்துறையைக் கற்கும் நிலை ஏற்பட்டது!

மட்டுமன்றி, சட்டத்துறையைத் தேர்வு செய்யுமாறு எனது ஆசிரியர் ஒருவரும் என்னை ஆர்வப்படுத்திக் கொண்டிருந்தார்!

கேள்வி: ஒரு பெண், 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த இறுக்கமான சமூக அமைப்பில் இருந்து கொண்டு, சட்டத்துறையில் கால் வைப்பதென்பது அபூர்வமானதொரு விடயம்தான். நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்களே?

பதில்: உண்மைதான்! அப்போது – சிறுவயதில் நாங்கள் குர்ஆன் மதரசாக்களுக்கு செல்லும்போது, பக்கத்து வீட்டுக்காரர்களே வசை கூறுவார்கள். பெண் பிள்ளையை இப்படி மதரசாவுக்கு அனுப்பி கற்க வைக்கிறீர்களே, அவர்களை எந்தச் சபையில் வைத்து குர்ஆனை ஓத வைக்கப்போகிறீர்கள்? என்று அவர்கள் எனது தாயாரைக் கேட்பார்கள். அப்படியானதொரு காலத்திலும், சமூகத்திலும் இருந்து கொண்டுதான் நான் சட்டத்துறைக்குள் நுழைந்தேன்.

எனது தாயார் முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட ஒருவர். அவரின் ஊக்குவிப்புத்தான், எனக்கு பிரதான பலமாக இருந்தது!

என்மீது வீசப்பட்ட அத்தனை வசைகளையும், விமர்சனங்களையும் எனது குடும்பத்தார்கள் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்தும் என்னைப் படிக்க வைத்தார்கள்.

எனது மூத்த சகோதரியொருவரும் அதிபராக இருந்தவர். அவரும் இவ்வாறான கடும் விமர்சனங்களையெல்லாம் முகம் கொண்டவாறுதான் படித்து முன்னேறினார்.

இந்த விமர்சனங்களுக்கெல்லாம் காரணம் வேறொன்றுமில்லைளூ பெண்கள் படித்து என்னத்தைப் பெரிதாக சாதித்து விடப் போகிறார்கள் எனும் – அப்போதைய சமூகத்தின் மனோ நிலைதான்!

கேள்வி: சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருக்கின்றதுதான். ஆனால், அதன் மிக மெதுவான செயற்பாடுகள் காரணமாக அதிகமான காலமும், பணமும் வியரமாகின்றன. இதனால், மக்கள் அதை நாடுவதற்குத் தயங்குகின்றார்கள். இதை எப்படி நிவர்த்தி செய்யலாம்?

பதில்: நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வழக்குகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனை வழக்குகளையும் ஒரே நாளில் தீர்த்து விடவும் முடியாது. இதனால் வழக்குகள் தேக்கமடையும் நிலையொன்று உருவாகி விடுகின்றது. இதன்போதுதான் கால விரயமும், மெதுவான செயற்பாடுகளும் நிகழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக – சிறிய வழக்குகளையெல்லாம் இணக்க சபைகளில் தீர்த்துக் கொள்ளுமாறு கூறி, நாம் அனுப்பி விடுகிறோம்.

ஏனைய வழக்குகளின் போதும், சட்டத்தரணியின் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் அவைகளையும் விரைவில் தீர்த்துவிட முடியும். மேலும், வழக்குகளின்போது – குறித்த திகதியில் எதிரிகள் சமூகமளிப்பதில்லை. அதுபோலவே, சாட்சிகளும் வருவதில்லை. இதனால், அடுத்தடுத்து தவணைகள் கொடுக்க வேண்டியிருப்பதாலும் இவ்வாறு கால நேரங்கள் எடுப்பதுண்டு!

எவ்வாறிருந்த போதும், நான் – வழக்குகளை இவ்வாறு நீண்ட காலத்துக்கு இழுபட்டுச் செல்ல விடுவதில்லை!

கேள்வி: நீதிபதிகளாக இருப்பவர்கள் பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க வேண்டியநிர்ப்பந்தங்கள் இருக்கின்றதல்லவா. இது உங்களை ஒரு வட்டத்துக்குள் குறுக்கிவிடக் கூடிய, நிலைமையொன்றைத் தோற்றுவித்து விடாதா?

பதில்: உண்மையாகவே நீதிபதியாக இருப்பதென்பது சிக்கலானதொரு வாழ்க்கைதான்! ஆனாலும், இந்தப் பதவி கிடைப்பதற்கு முன்பும் பெரியதொரு தொடர்பு வட்டம் என்று எனக்கு இருந்ததில்லை! அதனால், இப்போதைய நிலைமையும், இது தோற்றுவித்து விடும் என நீங்கள் கருதுகின்ற தாக்கங்களும் இதுவரை என்னை பாதிக்கவேயில்லை!

கேள்வி: இந்தத் துறையில் நீங்கள் பெற்றுக்கொண்ட அடைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்?

பதில்: நியாயமான தீர்ப்புகளை வழங்கி, இறுதிவரை சமுதாயத்துக்கு நல்லதொரு சேவையைச் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை! வேண்டுமென்றால் – இந்த ஆசை நிறைவேறும் ஒவ்வொரு தடவையும், எனது இலக்குகளை நான் அடைந்து கொள்வதாக கருதிக் கொள்ளலாம்!

கேள்வி: நீதிமன்றம், வழக்குகள் என்பதற்கப்பால் உங்கள் நேரங்கள் எப்படியெல்லாம் கழிகின்றன? குறிப்பாக, வாசிப்பு – இலக்கிய ஈடுபாடுகள் எல்லாம் எப்படி?

பதில்: வாசிப்பதற்கு இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதேயில்லை. நாட்கள் – சட்டப் புத்தகங்களோடுதான் கழிகின்றன. நீதிமன்றம் முடிந்து வீட்டுக்கு வந்து அடுத்த நாளுக்குரிய தீர்ப்புகளையெல்லாம் எழுதி முடிக்கும் போது, ஆகக்குறைந்தது ஒவ்வொரு நாளும் இரவு 11. 30,  12. 00 மணி ஆகி விடும்! படிக்கும் காலங்களில் இருந்த இலக்கிய ஈடுபாடுகளெல்லாம் இப்போது முற்றாகவே விடுபட்டு விட்டன. அப்போதெல்லாம். கலை, கலாசாரம் மற்றும் இலக்கிய முயற்சிகளிலெல்லாம் நான்தான் முதலிடம். இப்போது – அவைகளை நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லை!

கேள்வி: சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு! ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: இல்லை! தனது வழக்கு சார்பாக சட்டத்தரணியொருவரை நியமிக்காத நபரொருவரை எடுத்தாற்போல் தண்டித்து விட முடியாது! ஏனெனில் – அவ்வாறானவர்களின் கருத்தை நீதிபதியே நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. எனவே, சட்டத்தரணியை நியமிக்காதவர்களெல்லாம் இருட்டறையில் இடறி விழுந்து விடுவார்கள் என்றெல்லாம் கூறிவிட முடியாது!

கேள்வி: யுத்தம் நடைபெறும் பகுதியொன்றில் – சட்டம் தூக்கத்தில் இருக்கும் என்றொரு வாசகமுண்டு. கூறியவரின் பெயர் ஞாபகத்திலில்லை! கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தம் நடைபெறும் பிரதேசமொன்றுக்குள் வாழ்ந்து கொண்டு, இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: சிறியதொரு தூக்கம் இருப்பதுபோல்தான் தெரிகிறது!

கேள்வி: நமது சமூகப் பெண்களிடம் கொண்டு செல்ல வேண்டிய செய்தி இப்போதைக்கு எதுவென நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்: இஸ்லாத்தில் பெண்களுக்கு நிறையவே உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியக் கோட்பாடுகளுக்குட்பட்டு நிறையவே சாதிக்க முடியும். ஆனால், நமது பெண்களில் மிக அதிகமானோர் அவ்வாறான உரிமைகளைப் பயன்படுத்துவதேயில்லை! எனவே – இந்த  நிலையிலிருந்து நமது பெண்கள் விடுபட்டு தமக்கான உரிமைகளை பயன்படுத்த முன்வர வேண்டும்.

மட்டுமன்றி, முஸ்லிம் பெண்கள் மிகக் கட்டாயமாக – கல்வி கற்பதில் ஈடுபாடு காட்ட வேண்டும். இதன் மூலம் அவர்கள் தமது குழந்தைகளையும், சமூகத்தவர்களையும் மேம்பாடடைந்தவர்களாக மாற்ற முடியும்!

0

(இந்தக் கட்டுரையை 16 ஜுலை 2009 ஆம் திகதிய வீரகேசரி வெளியீடான ‘விடிவெள்ளிபத்திரிகையிலும் காணலாம்)

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s