காற்று

அனுபவப் பகிர்வுத் தளம்

கிணறு தோண்டக் கிளம்பும் பூதங்கள்! 2 ஜூன் 2009

Filed under: பொதுவான கட்டுரை — Mabrook @ 11:23 முப

                தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொடரும் சர்ச்சைகள்…
மப்றூக்

டகங்கள் பற்றி – யார் எப்படிப் பழி சொன்னாலும், சமூகக் காவலனாகவே மக்கள் அவைகளைப் பார்க்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக அவை குரல் கொடுக்கும், அநீதிகளுக்கு ஏதிராகப் பேசும் என்று – மிகச் சாதாரண வாசகன் கூட நம்புகின்றான். ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் சுமத்தப்படுகின்ற போக்கிரித்தனமான குற்றச்சாட்டுக்களால் – அவைகள் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்தை அசைத்து விட முடியாது!


கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி – ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சர்ச்சைகளின் கூடாரம்‘ என்கின்ற தலைப்பில் நாம் எழுதிய கட்டுரைக்குப் பிறகு, அந்தப் பல்கலைக்கழகம் தொடர்பாகக் கிடைத்து வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. நம்மைத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குவோரில் மிக அதிகமானோர் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயிருப்பவர்கள் என்பதுதான் இங்கு சுவாரசியமான செய்தி!

நமக்குக் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிறைய விடயங்களை நாம் தேடினோம், பல பலபேரைச் சந்தித்தோம். அதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றியும், அதன் நிர்வாகம் தொடர்பாகவும் நமக்குக் கிடைத்த செய்திகளில் அனேகமானவை ஆரோக்கியமானவைகளாகவோ, சந்தோசம் தருபவைகளாகவோ அமையவில்லை. சில விடயங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு நல்ல பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினை விடவும் மோசமாக நடந்துள்ளது. அதன் உபவேந்தர் ஒரு சர்வதிகாரி போல இயங்கியுள்ளமை அம்பலத்துக்கு வந்தது!

அவ்வாறான ஒரு நிகழ்வு பற்றித்தான் நாம் இப்போது பேசப்போகின்றோம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு முன்னர் – யார் யாருக்கு பட்டம் வழங்குவது, முதலாம், இரண்டாந்தரங்கள் யாருக்கு, தங்கப் பதக்கங்கள் யாருக்கு வழங்குவது என்றெல்லாம் முடிவு செய்து, அந்த முடிவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி அனுமதி பெற்ற கையோடு – அந்த விபரங்களைப் புத்தகமாகவும் அச்சிட்டு முடித்து விட்டனர் பல்கலைக்கழக நிர்வாகத்தினர்.

இந்த இடத்தில் உங்களுக்கு றசீயா என்கின்ற மாணவி பற்றிக் கூற வேண்டும். இவரின் முழுப் பெயர் அஹமட் ரபீக் றசீயா நசீம் என்பதாகும். இவர் பிரயோக விஞ்ஞானத்துறை மாணவி. ஒவ்வொரு முறையும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்பவர். ஆனால், இறுதி வருடத்தில் இவர் எல்லாப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்த போதும், கணிணி மென்பொருள் – 01 (Computer Software – 01) எனும் பாடத்தில் மட்டும் சித்தியடையாமல் போய்விட்டார். இதனால் இவருக்கு பட்டம் வழங்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்து விட்டது!

உதாரணமாக ஒரு மாணவர் மொத்தமாக 10 பாடங்களைப் படிக்கின்றார் என்றால், அத்தனை பாடங்களிலும் அவர் சித்தியடைய வேண்டும். அப்போதுதான் அவருக்கு பட்டம் வழங்கப்படும். ஒன்பது பாடங்களில் சித்தியடைந்து ஒரு பாடத்தில் மட்டும் சித்தியடையவில்லை என்றால் கூட, பட்டமில்லை. இதுதான் விதி!

றசீயாவுக்கு இது தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. எந்தப் பாடத்தில் அவர் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்டதோ, அதில் மிகச் சிறந்த பெறுபேற்றினை எதிர்பார்த்திருந்தார். எனவே, தான் சித்தியடையாத பாடத்தினை மீளாய்வு செய்யும் படி பல்கலைக்கழக நிர்வாகத்தாருக்கு முறையீடு செய்தார். ஆரம்பத்தில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் றசீயாவின் தரப்பார் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சொல்லவும், ஒருவாறு மீளாய்வுக்கு சம்மதித்தார்கள்.

குறித்த பாடம் மீளாய்வு செய்யப்பட்டபோது – முதலில் வழங்கப்பட்ட புள்ளிகளை விடவும் றசீயா அதிக புள்ளிகளைப் பெற்றார். அதாவது ஆரம்பத்தில் சித்தியடையவில்லை (F)  எனக் கூறப்பட்ட பாடத்தில் பின்னர் டி (D)  தரம் பெற்று சித்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த மாணவி – இரண்டாந்தர மேல்நிலை அதாவது Second Class (Upper) சித்தியினைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை இவர் ரசாயனவியல் பாடத்தில் ஏற்கனவே மிக அதிகமான புள்ளிகளை பெற்றிருந்தார். எனவே, ரசாயனவியலில் மிகச்சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ளும் மாணவருக்கான – ‘பேராசிரியர் சுல்தான்பாவா’ ஞாபகார்த்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதியும் இவருக்குக் கிடைத்தது. ஆனால், அங்கும் ஒரு பிரச்சினை!

மேற்படி ரசாயனவியலுக்கான பதக்கத்தினை ஏற்கனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேறு ஒரு மாணவிக்கு அறிவித்து விட்டனர். அந்த மாணவியின் பெயர் எம்.எப். நூர் மதீனா. றசீயாவின் பாடம் மீளாய்வு செய்யப்படுவதற்கு முன்னர் இது நிகழ்ந்திற்று!

அப்படியென்றால் றசீயாவின் நிலை என்ன? இத்தனைக்கும் – பதக்கம் அறிவிக்கப்பட்ட மாணவி ரசாயனவியலில் பெற்றுக் கொண்ட புள்ளிகளை விடவும், றசீயாவின் புள்ளிகள் அதிகம். அப்படியென்றால் அந்தப் பதக்கம் றசீயாவுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அதுதான் நியாயமும் கூட!

ஆனால், தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தார் அந்த நியாயத்தை நிறைவேற்றவில்லை! ஏற்கனவே பதக்கம் அறிவிக்கப்பட்ட மாணவியோடு சேர்த்து – றசீயாவுக்கு ‘சுல்தான்பாவா ஞாபகார்த்தப் பதக்கத்தினை’ இணைப்பதக்கமாக வழங்கினார்கள்.

இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்தை மீறுகின்றதொரு செயலாகும். அதாவது ஒரே பாடத்தில் சமனற்ற புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இரண்டு மாணவர்களுக்கு ஒரு பதக்கத்தினை இணைப்பதக்கமாக வழங்க முடியாது! ஆனால், அதை – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் செய்து முடித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அந்தப் பட்டமளிப்பு விழா ஒருவாறு நடந்தேறி விட்டது.

இருந்தாலும் இந்த இடத்தில் நம்முன் சில ராட்சதக் கேள்விகள் முளைத்தெழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது! அந்தக் கேள்விகள்:

1. றசீயாவுக்கு முதலில் குறைவாகவும் பின்னர் அதிகமாகவும் புள்ளிகள் கிடைக்கக் காரணம் என்ன?
2. ரசாயனவியலில் அதிக புள்ளிகளைப் பெற்ற றசீயாவுக்கு மட்டுமாக
ஏன் ‘சுல்தான்பாவா ஞாபகப் பதக்கம்’ வழங்கப்படவில்லை?
3. ரசாயனவியலில் சமனற்ற புள்ளிகளைப் பெற்ற இருவருக்கு ‘சுல்தான்பாவா ஞாபகப் பதக்கத்தினை’ எவ்வாறு இணைப்பதக்கமாக வழங்க முடியும்?

இவ்விடயம் தொடர்பாக – உபவேந்தர் (இப்போது பதில் உபவேந்தர்) ஹுசைன் இஸ்மாயிலைச் சந்தித்துப் பேசினோம். மிகவும் தடுமாற்றமான பதில்களைக் கூறினார். மேற்படி இரண்டு மாணவிகளுக்கும் குறித்த பதக்கத்தினை இணைப் பதக்கமாக வழங்க முடியாது என்பதை ஆரம்பத்தில் அவர் ஒத்தும் கொண்டார்.

எவ்வாறிருந்தபோதும் – தன்னையும், தனது செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் உபவேந்தர் பேசினார். அதாவது – “நளீர் என்கிற ஒரு விரிவுரையாளரின் பிழையால் நடந்த விபரீதம்தான் இது! அந்த விரிவுரையாளரை நான் வேலையை விட்டும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருக்கின்றேன். பிரச்சினைக்குரிய அந்தப் பாடத்தில் குறித்த விரிவுரையாளர் புள்ளிகளைக் குறைத்து வழங்கி விட்டார். அவரின் அலட்சியம்தான் இந்தச் சிக்கல்கள் அனைத்துக்கும் காரணமாகும்.

இருந்தாலும் – குறித்த மாணவியின் முறையீட்டினையடுத்து, விரிவுரையாளர் குழுவொன்றை அமைத்து அந்த மாணவியின் பரீட்சைப் பத்திரத்தை நாம் திருத்தினோம். அப்போது அவரின் புள்ளிகள் அதிகமாக இருந்தன.

இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறுதற்கான மூல காரணம் – இங்கு தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமைதான். தகுதியே இல்லாதவர்களுக்கெல்லாம் விரிவுரையாளர் பதவிகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கணிணி விஞ்ஞானத்தில் பட்டதாரியாக சித்தியடைய முடியாமல் போனவர்களைத்தான் – இங்கு தகவல் தொழில் நுட்பத்துக்கான விரிவுரியாளர்களாக எடுத்து வைத்திருக்கின்றார்கள்” என்றார்.

(கவனிக்க: நாம் விசாரித்துப் பார்த்ததில் நளீர் என்கிற அந்த விரிவுரையாளரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக உபவேந்தர் கூறியதில் எவ்விதமான உண்மைகளும் இல்லை எனத் தெரியவந்தது)

சரி, நீங்கள் சொல்வது அனைத்தையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், குறித்த மாணவிக்கு புள்ளி வழங்குதல் தொடர்பில் பிழை செய்தவர்கள் நீங்கள்தான். அப்படியென்றால் உங்கள் தரப்புப் பிழையினை மறைப்பதற்காக அல்லது அதிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் இந்த இணைப்பதக்க நாடகத்தை நடத்தியிருக்கின்றீர்கள். அப்படித்தானே? என்று உபவேந்தரைக் கேட்டோம்.

நாங்கள் ஏற்கனவே, வேறொரு மாணவிக்கு குறித்த பதக்கத்தினை வழங்குவதாகத் தீர்மானித்து அந்த மாணவியின் பெயரைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அங்கீகாரத்தினையும் பெற்று விட்டோம். இது தவிர – அந்த மாணவிக்கு பதக்கம் வழங்குவதாகப் பட்டம் பெறுவோர் விபரப் புத்தகத்திலும் அச்சிட்டு விட்டோம். இதற்குப் பிறகும் அந்த மாணவிக்கு நாங்கள் பதக்கத்தினை வழங்காமல் விட்டால், அவர் நீதிமன்றம் செல்ல முடியும். எனவேதான், ஏற்கனவே அறிவிக்கப்ட மாணவிக்கும், பின்னர் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவிக்கும் சேர்த்து இணைப்பதக்கத்தினை வழங்கத் தீர்மானித்தோம் என்றார் உபவேந்தர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில்!

உண்மையாகவே, றசீயா என்கின்ற மாணவிக்குத் தனியாக வழங்க வேண்டிய பதக்கம்தான் அந்த ‘சுல்தான்பாவா ஞாபகார்த்தப் பதக்கம்’! அதை – தமது பிழையை மறைப்பதற்காகவும், தங்கள் பிழைக்காக நீதிமன்றம் செல்வதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவுமே உபவேந்தர் இந்தப் பதக்கத்தினை இரண்டு மாணவிகளுக்கும் சேர்த்து இணையாக வழங்கியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிந்தது!

இதன்மூலம், சமனற்ற புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இரண்டு மாணவிகளுக்கு இணைப்பதக்கமொன்றை வழங்கியதன் மூலமாக – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களை மீறியுமுள்ளார்.

இதையெல்லாம் ஏன் செய்தீர்கள் என்று அவரிடம் கேட்டால்; பாதிக்கப்பட்ட மாணவியான றசீயாவுக்கு மனச்சாட்சி அடிப்படையில் நிவாரணம் வழங்குவதற்காகவே இப்படிச் செய்தோம் என்று கூறுகின்றார்.

ஆனால், மனிதாபிமானத்திற்காகவோ, மனச்சாட்சிக்காகவோ சட்டம் ஒழுங்கை ஒருபோதும் மீற முடியாது என்பதை வலியுறுத்தும் வகையில் – நீதித்துறை பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளமை பற்றி நாம் மிக நன்றாகவே அறிவோம். ஆனால், இந்தச் சின்ன விடயத்தைக் கூட உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் எவ்வாறு அறியாமல் இருந்தார் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் றசீயாவுக்கு நடந்த இந்தச் சம்பவம் முதன் முறையானதல்ல! இதுபோல் ஏற்கனவே பல மாணவர்களுக்கு நடந்துள்ளது. சில மாணவர்கள் – மனித உரிமை ஆணைக்குழு, நீதிமன்றம் என்று இன்னும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

றசீயா என்கிற மாணவி விடயத்தில், பல்கலைக்கழகத்தாரின் இன்னுமொரு சிறுபிள்ளைத்தனமும் இருக்கிறது. அதாகப்பட்டது, பட்டம் பெறுவோர் விபரம் குறித்து பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களில் – சிலவற்றில் மட்டுமே, றசீயா என்கிற மாணவி – சுல்தான்பாவா ஞாபகார்த்தப் பதக்கத்தினை இணைந்து பெறுவதாக அச்சிடப்பட்டிருக்கிறது. பல புத்தகங்களில் அவரின் பெயர் இல்லை. ஏன் இப்படி எனக் கேட்டோம். றசீயாவின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு ஒரு தொகுதிப் புத்தகங்களை அச்சிட்டோம். அதில்தான் அவரின் பெயரைச் சேர்க்க முடிந்தது. அதற்கு முன்பு அச்சிட்ட புத்தகங்களில் அவரின் பெயர் இல்லை. அதுதான் இப்படியாகி விட்டது என்கிறார்கள் பல்கலைக்கழகத் தரப்பார்.

அப்படியென்றால், முன்பு அச்சடித்த புத்தகங்களையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு, பிறகு அச்சிட்ட புத்தகங்களை மட்டும் எல்லோருக்கும் வழங்கியிருக்கலாம்தானே? இதை விடுத்து, ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பற்றிய புத்தகத்தை இப்படி சைவக்கடைச் சாம்பார் நிலைக்குக் கொண்டு செல்லலாமா? என்று கேட்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவை சபை உறுப்பினர் (University Council Member)  ஒருவர்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் – சர்வதேச பாலர் பாடசாலையொன்றின் ஆண்டு விழாவொன்று நடந்து முடிந்தது. அந்த விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மேற்கண்டவாறான பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், அது இனிதே நடந்து முடிந்ததாகவும் பெற்றோர்கள் பெருமையோடு பேசிக் கொண்டார்கள்!

பூதங்கள் இன்னும் கிளம்பும்!!
0

(இந்தக் கட்டுரையை 31 மே 2009 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)

Advertisements
 

One Response to “கிணறு தோண்டக் கிளம்பும் பூதங்கள்!”

  1. ohhhh Says:

    ivai maddumalla ethanayo maanavarkalin kanavukal ithu ponru
    sitharadikappaddullana


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s